பெடரர் : பழி வாங்கிய சிங்கம்

 இந்த ' கொல வெறி ' அட்டகாசப் படுத்தினதாலும், அஸ்வின் வேறு தன் பங்குக்கு ஒரே போடாகப் போட்டுத் தள்ளியதாலும் , போதாக்குறைக்கு  ரஜினி ராணாவை ( வருமா வராதா? ) தூக்கி ஓரமாகப் போட்டு விட்டு ' கோச்சடையான்' இற்கு தேதி குறித்ததாலும் வந்த களேபரத்தில் கடந்த வாரம் ஒரே அமளி துமளி. இதற்கிடையில் டென்னிஸ் உலகின் 'எக்ஸ்பெண்டபில்ஸ்' மோதும் ஏ.டி.பி. தொடர் சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.  இதில் இந்த ஆண்டு நான்கு கிராண்ட் ஸ்லாம்களையும்  கோட்டைவிட்ட பெடரர், முதல் 3 ராங் களில் இருக்கும் ஜோகோவிச், அண்டி முரே, நடால் எல்லோரையும் கடந்து கிண்ணத்தை கைப்பற்றினார். செமி பைனல் இல் நடாலை பெடரர் 6 :3 , 6:௦ என்று ஒரே அடியில் வீழ்த்தியபோது ( நடால் ரசிகர்கள் மன்னிக்க: ஆம், நடாலுக்கு ரசிகர்கள் கொஞ்சம் ஜாஸ்தி!) நடாலும் ' வை திஸ் கொலை வெறி?' என்று பெடரரை பார்த்து பாடி இருக்கக் கூடும்.இதற்கு பின்னால், (அல்லது முன்னால் )  ஒரு கதையே இருக்கு. பரம வைரிகள் மோதும் போது எப்படி இருக்கும்?  பாகிஸ்தான் இந்தியா கிரிக்கட் நடக்கும் போது , அல்லது லிவர்பூல், எவர்டன் மோதும் போது மைதானத்தில்  அனல் பறக்கும். நம்ம தல, தளபதி படம் ஒரே நாள் ரிலீஸ் ஆனா ச்சும்மா அதிருமில்ல? விளையாட்டில் நீண்ட நாள் தொடரும் பகையை ரிவால்ரி என்று சொல்லுவார்கள். அந்த ரிவால்ரி பெடரர், நடால் இடையே ஆறு வருடங்களுக்கும் மேலாக தொடர்கிறது.சிம்பு வை விட, உண்மையான  வேட்டைமன்னன்  என்றால் அது பெடரர் தான். மொத்தம் 16 கிராண்ட் ஸ்லாம்கள்; இது டென்னிஸ் முடிசூடா மன்னன் பீட் சாம்ப்ராஸ் ஐ விட 2 அதிகம்.  அவுஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யு.எஸ்.ஓபன் ( இதில் தான் சானிய மிர்சா நாகாவது சுற்று வரை முன்னேறினார் ) இந்த நான்கையும் கைப்பற்றிய ஏழு  வீரர்களில் ஒருவர். மொத்தம் 78  டைட்டில்கள் ; தொடர்ந்து  237  வாரங்கள் ( கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள்! )  டென்னிஸ் தரப்படுத்தலில்  அசைக்கமுடியாத நம்பர் 1  இடத்தில் இருந்தது அசுர சாதனை.தனிக்காட்டு ராஜாவாக 2003  இல் இருந்து பதக்க வேட்டையாடிக்கொண்டிருந்த பெடரருக்கு 2006  இல் சரியான போட்டியாக களம் இறங்கியவர் தான் ரபேல்  நடால். தோனி வந்த புதிதில் சிங்கம் போல ஒரு ஹெயார் ஸ்டைல் வைத்திருந்தது நினைவிருக்கிறதா? அப்படி தோளை தாண்டி நீளும் சிலுப்பிய முடியோடு வந்த ஸ்பானிஷ் புயல்.ஒரே ஆண்டில் நான்கு முக்கிய கிராண்ட் ஸ்லாம் களையும் கைப்பற்றும் பெடரரின் கனவுக்கு தடைபோட்டவர் நடால். 2006  இல் மற்ற மூன்று கிராண்ட் ச்லாம்களையும் வென்றிருந்த பெடரருக்கு பிரெஞ்சு ஓபன் ஐ மட்டும் வெல்ல முடியாது போனது. பைனலில் நடால் வென்றது தான் காரணம்.இரத்தப் படலம் 4 ,5 பாகங்களாக வெளி வந்தது போல, பெடரர்- நடால் பகையும் பின்னால் வந்த பல வருடங்களுக்கு தொடர்ந்தது. 2006  ஐத் தொடர்ந்து, 2007 , 2008 , 2011  என மூன்று வருடங்கள் பிரெஞ்சு ஓபன் இல் பைனல் இல் நடால் இடம் தோற்றார் பெடரர். விம்பிள்டன் இல்  மட்டுமே ஏழு முறை சாம்பியன் ஆனா பெடரருக்கு பிரெஞ்சு ஓபன் மட்டும் பலமுறை எட்டாக் கனியாகிப் போனதற்கு ( 2009 தவிர  ) நடால் ஐ விடவும் இன்னும் ஒரு காரணம் உண்டு. பொதுவாக பிரெஞ்சு ஓபன் எப்போதும் களிமண் தரை அல்லது கடினத் தரைகளில் தான் நடக்கும். பெடரரின் துரதிர்ஷ்டம், நடால் களிமண் தரையில் மன்னன். பெடரரோ , புல் தரையில் கில்லாடி.


அன்டி ரொடிக் , லெய்டன்   ஹெவிட்  , அகாசி என்று சிங்கங்கள் பலரையும் எளிதில் தோற்கடித்த பெடரருக்கு நடால் மட்டும் சிம்ம சொப்பனம். நடாலும்  பெடரரும்  மட்டுமே இதுவரை 26  போட்டிகளில்நேருக்கு நேர் மோதியிருக்கிரார்கள். இதில் 19  போட்டிகளில் நடாலும் ஏழு போட்டிகளில் மட்டுமே பெடரரும் ஜெயித்திருக்கிறார்கள். வேறெந்தப் போட்டியாளரையும் விட பெடரரை அதிகளவில்  வென்று திணரடித்திருப்பது  நடால் தான். 2008  பிரெஞ்சு ஓபன் பைனல்ஸில்  1:6 , 3 :6 , ௦:6  என்ற செட் கணக்கில் நடால் தோற்கடித்தது  பெடரருக்கு ஒரு கொடும் கனவாக இருந்திருக்க வேண்டும்.இந்தத் தொடர் பகையின் உச்சக்கட்டமாக 2009 அவுஸ்திரேலியன்  ஓபன் பைனல்ஸில் நடால் வென்று வெற்றிக்கிண்ணத்தை வாங்கும் பொது அடக்க மாட்டாமல் கண்ணீர் விட்டார் பெடரர். 
அப்புறம் ஜோகோவிச்    ,  அன்டி முர்ரே போல சின்னப்  பயலுங்க எல்லாம் புகுந்து கலக்கத் தொடங்கினாலும் ஜோகோவிச் ஐ 2007   யு.எஸ். ஓபன் இலும் முர்ரே ஐ 2010  அவுஸ்திரேலியன் ஓபன் இலும் வென்று இப்போதும் சிங்கம் தான் என்று காட்டிய பெடரருக்கு 2011  ஒரு மோசமான ஆண்டாக அமைந்தது. 2002  இற்கு பிறகு, ஒரு கிராண்ட் ஸ்லாம் கூட வெல்லாத ஆண்டாக இந்த ஆண்டு அமைந்தது. 

இந்த நிலையில் தான் ஆண்டின் கடைசித் தொடர் ஏ.டி.பி. வந்தது. இதில் ஒவ்வொரு ஆண்டும் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மட்டுமே மோத முடியும்.  சூப்பர் 8 என்பதால் எதிர்பார்ப்பு சூடு பிடிக்கும். பெடரர் இந்த ஆண்டில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்த சீற்றத்துடன் தொடரில் நுழைந்தார். முதல் இடத்தில் இருந்த முர்ரே காயப்பட்டு விலக  இரண்டாம் இடத்திலில் இருந்த ஜோகோவிச் உம் பாதியில் தோற்று வெளியேறினார். மூன்றாம் இடத்தில் இருந்த நடால் தான் பெடரரிடம் செமி பைனல்ஸ் இல் வசமாக மாட்டினார். 2008  பிரெஞ்சு ஓபன் பைனலில்  படு தோல்வி அடைந்ததில் பெடரருக்கு நான்கு வருடங்களாக மனதில் அணையாமல் கனன்று கொண்டிருந்த நெருப்பு அன்று கொழுந்து விட்டு எரிந்திருக்க வேண்டும். இது பெடரரும் நடாலும் மோதிக்கொள்ளும் 26  ஆவது போட்டியாக அமைந்தது. இதில் 6 :3 , 6 :0 என்ற நேர் செட் கணக்கில் வெறும் ஒரு மணித்தியாலத்தில் நடாலைப் போட்டு போட்டு பந்தாடி பைனலுக்குள் நுழைந்தது சிங்கம். 


பைனல்ஸில் எதிர்த்து விளையாடிய சோங்கோவை தோற்கடித்து சாம்பியன்ஷிப்பை பெடரர் கைப்பற்றியபோது ATP உலகத்தொடர் டைட்டிலை ஆறாவது முறையாகக் கைப்பாற்றிய சாதனையையும் செய்திருந்தார்.  
இந்தத் தொடர் பகையில் கவனிக்கப்பட வேண்டிய விடயம், இந்த ரிவால்றி, பகை எல்லாம் அது மைதானத்திற்குள் மட்டுமே. மற்றபடி, ஒருவர் திறமையை, வளர்ச்சியை அங்கீகரிக்கும், பாராட்டும் மனநிலை இருவருக்குமே இருந்தது சந்தோஷமான விடயம். மைதானத்திற்குள் கூட ஒருவரை   ஒருவர் வேண்டுமென்று  கோபப்படுத்துவது,  கீழ்த்தரமாக திட்டுவது போன்ற ' உயர்ந்த' ஐடியாக்களை எல்லாம் அவர்கள் பாவித்ததில்லை. ATP செமி பைனலில் நடாலை வென்றதுக்கு பிறகு  'பழைய'  பிரெஞ்சு ஒபெனைப் பற்றி பத்திரிகைகள் ஞாபகப்படுத்திய போதும், இனி அதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் என்று தீர்மானமாகக் கூறி விட்டார் 'FedEx '  என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் டென்னிஸ் மேஸ்ட்ரோ பெடரர். தோற்றபிறகு நடால் கூறியது- "அவர் இன்று என்னைவிட   மிக   நன்றாக விளையாடினார், அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ! "
அதே போல பெடரர் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுத  'பழைய' அவுஸ்திரேலியன் ஓபன் இல் பெடரர் சொன்னது-  " ரfபா, நீ நம்ப முடியாத அளவுக்கு விளையாடினாய்; நீ இதற்கு தகுதி உடையவன்! "உலகம் பார்த்துப்  பெருமைப்படுவது  இந்த நேர்மையான, உண்மையான விளையாட்டு வீரர்களைத் தான். ஒரு கணக்கெடுப்பில் உலகிலேயே மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும், மதிக்கும் மனிதர்களில் நெல்சன் மண்டேலாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை ரோஜெர்  பெடரர் பெற்றிருக்கிறார்  என்பது  அவரது   வாழ்க்கை  தந்த  பரிசு. 


Related Posts Plugin for WordPress, Blogger...