தமிழ் சினிமாவின் சூப்பர்10 காதல்ஜோடிகள்

திரையில் என்னதான் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் பயாலஜியோடு நடித்தாலும் காதல் சில ஜோடிகளுக்கு இடையில் மட்டுமே தன் மாய வித்தையை காட்டி இருக்கிறது. பிரகாஷ்ராஜ் பாஷையில் சொன்னால், சிலரை பார்த்தவுடன் மட்டும் மனசுக்குள் பலப் எரிந்து காதுக்குள் மணி ஒலித்து வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறக்கத் தொடங்குகிறது. அது சரி, ஆனால் காதல் வந்த எல்லாரும் மணம் முடிப்பது இல்லையே..மணம் முடித்த அனைவரும் சேர்ந்து வாழ்வதும் இல்லை. திரையில் ஆயிரம் ஜோடிகள் டிஜிட்டல் வண்ணங்களில் ட்யூலிப் தோட்டத்துக்கு நடுவில் அஸ்கு லஸ்கா பாடினாலும் ஒன்றாக வாழும் வாழ்க்கை சில ஜோடிகளுக்கு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது. 

தமிழ் சினிமாவில் ஆரம்பகட்ட கிசு கிசுக்களை தாண்டி, போராட்டம், குழப்பம் எல்லாவற்றையும் கடந்து  நிஜத்திலும் ஒன்று சேர்ந்த சூப்பர் ஜோடிகளின் பட்டியல் இது.

10 ) ஜெமினி கணேசன்- சாவித்திரி

ஆடாத மனமும் ஆடுதே...

இது மிஸ்ஸியம்மா காலத்து காதல். கறுப்பு வெள்ளையில் நடந்த ரொமான்ஸ்  காவியம்.  'கண்களின் வார்த்தைகள் புரியாதோ?' என்று பைஜாமா ஜிப்பா போட்டபடி ஜெமினி ரொமான்ஸ் பார்வை பார்த்து கேட்டது சாவித்ரிக்கு மட்டுமே புரிந்தது போலும். காதல் மன்னனுக்கு நடிகையர் திலகம் சாவித்திரி  மூன்றாவது மனைவி! காதல் வரும்போது மனத்தைக் கட்டுப்படுத்த நித்யானந்தாவுக்கு கூட முடியாத போது காதல் மன்னனுக்கு அது சாத்தியமா என்ன ?!  இவர்களின் கல்யாணம், நடந்து மூன்று ஆண்டுகளின் பின்னர் சாவித்திரி லக்ஸ் சோப் விளம்பரத்துக்கு ' சாவித்திரி கணேஷ்' என்று கையொப்பமிட்ட போதே நல்லுலகுக்கு தெரிய வந்தது. விஜய சாமுண்டீஸ்வரி, சதீஷ்குமார் என்று இந்த அழகான ஜோடிக்கு இரண்டு குழந்தைகள். பிறகு ஜெமினியுடனான   மனக்கசப்பால் சாவித்ரி குடிக்கு அடிமையானதும் கோமா நிலைக்கு சென்று மீளாமலே 46  வயதில் இறந்ததும் இந்த காதல் கதையின் சோகமான இறுதி அத்தியாயம்.

09 ) மணிரத்னம்- சுஹாசினி

நீ அழகா இருக்கேன்னு நினைக்கல..லவ் பண்ணனும்னு நினைக்கல...ஆனா இதெல்லாம் நடந்திடிச்சே..!

மணி ரத்னத்தின் படைப்புகளில் சிறந்தது ரோஜாவா பாம்பேயா என்றால் நந்தன் என்று தான் தோன்றுகிறது. இந்த ஜோடியின் அறிவாளிக் குழந்தை. இப்போது வளர்ந்து விட்ட இந்த இளைஞன், கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டராக வேலை செய்யும் அளவுக்கு மனப்பக்குவமும், அரசியலை கரைத்து குடித்த அறிவும் கொண்ட ஒரு வாரிசு நம்பர் 1. இந்த மகனை வளர்த்து எடுத்த விதத்தில் இருந்து இந்த ஜோடியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். குஷ்பூவின் கற்பு பிரச்சனையில் துணிந்து குஷ்பூவை ஆதரித்துக் கருத்து சொல்லிய ஒரே குரல் சுஹாசினியுடையது. சரியோ பிழையோ மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி சர்ச்சைகளைக் குவிக்கும் ஒரு பெண்ணுக்கு, நடிப்பு இயக்கம் வசனகர்த்தா  என்று பல தளங்களில் இயங்கும் ஒரு பெண்ணுக்கு ஏற்ற ஒரு கணவராக மணி அமைந்தது தான் இந்த ஜோடியின் அதிகம்  சக்சஸ் ஆன திருமண வாழ்க்கையின் சூட்சுமமோ என்னவோ? மணி பொதுவாக தன்  படங்களில் வைக்கும் வசன ஸ்க்ரிப்ட் போல தான் வீட்டிலும் பேசுவார் போலும்! 

08)  எம்.ஜி.ஆர்- ஜானகி 

இரத்தத்தின் ரத்தம்...?


இந்த மலைக்கள்ளன் மனத்தை திருடிய மருத நாட்டு இளவரசி, எம்.ஜி.ஆர். மேல் கொண்ட காதலால் தன் கணவரை விவாகரத்து செய்து விட்டு எம்.ஜி.ஆருடன் வாழ்க்கையை அமைத்தவர்.இருவரும் முதலமைச்சர்கள், ஜானகி தமிழ் நாட்டின் முதல் பெண் சி.எம். ( முதல் ' அம்மா?' ) ' நாடோடி மன்னன்' இல் புரட்சித் தலைவரும் எம்.என்.ராஜமும் போட்டி போட்டு கொண்டு தங்கள் சொத்தை நாட்டு  மக்களுக்கு வழங்குவார்களே, அது போல நிஜத்தில் எம்.ஜி.ஆருக்கு அமைந்த ஜோடி.

07  )  அஜித்-ஷாலினி

அது....!!!


 அஜித், தமிழ் சினிமாவின் மோஸ்ட்  ஹான்ட்சம் ஹீரோ. ஷாலினி, பேபி ஆக இருந்ததில் இருந்தே தமிழ் மக்கள் பார்த்து வளர்ந்த பக்கத்து வீட்டுப் பெண். நடித்தது ஒரே ஒரு படம். அதுக்குள் அஜித் வானத்தில் பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எப்படி எப்படி நியாயம்?! அஜித் கிசுகிசுக்கப்படாத நடிகைகள் குறைவு. ஹீராவுடன் நீண்ட காலக் காதல், சுவாதி தற்கொலைக்கு முயன்றது என்று ப்ளே பாய் இமேஜ் வைத்திருந்த  அஜித், ஷாலினியை கண்டதும் தலைகீழாக மாறி பொறுப்பான கணவனாக நல்ல அப்பாவாக மாறியது கொலிவூட் எதிர்பார்க்காத ஆச்சர்யம். வயது வித்தியாசம், வேறு மதம், அஜித் இன்  பழைய ரெகார்ட்  என்று காதலுக்கு ஆப்பு உறுதி  என்று காத்திருந்த மீடியாக்களின் வாயை மூடிவிட்டு இந்த ஜோடி நடத்தும் காதல் வாழ்வுக்கு அனோஷ்கா என்ற குட்டி தேவதை சாட்சி.  ஷாலினி ஒரு முறை சொல்லி இருந்தது, " சில நேரம் தனியா இருக்கணும் போல தோணும், சில நேரம் பிரெண்ட்ஸ் கூட  டைம் ஸ்பென்ட் பண்ணனும் எண்டு தோணும், அந்த நேரங்களில 2  பேரும் புரிஞ்சுகிட்டு     இருப்போம், எப்பவும் மத்தவங்க என்னோட தான் இருக்கணும் எண்டு 2  பேருமே நினைக்கிறது இல்ல.." 

06  ) ரோஜா- செல்வமணி 

தெலுங்கானாவை பிரிச்சாலும்  எங்களை பிரிக்க முடியாது!


செம்பருத்தி போல இருந்தா யாருக்கு தான் பிடிக்காது? அண்ணன்களுக்கு மத்தியில்   செல்லமாக வளர்ந்த  ரோஜாவை தன் வீட்டு தோட்டத்தில் நட செல்வமணிக்கு ஆசை வந்தது போலும். தன்னை அறிமுகப்படுத்திய செல்வமணியை நீண்ட காலமாக காதலித்து வந்த ரோஜாவும் செல்வமணியும் ஒரு கட்டத்தில்  பல பிரச்சனைகளால் பிரிந்து விட முடிவெடுத்து ஒரு பொது நிகழ்ச்சி ஒன்றில் பிரிவை அறிவித்து விட முடிவெடுத்திருக்கிறார்கள். அப்போது அந்த நிகழ்ச்சிக்கு வந்த பாரதி ராஜா, மேடையில் வைத்து இருவரின் ஆடை தலைப்புகளையும் முடிந்து கலாட்டா செய்ததும், அறிவிக்க நினைத்திரிந்த முடிவை அறிவிக்க முடியாது போனதாக ரோஜா ஒரு பேட்டியில்  சொல்லி இருந்தார்.  தெலுங்கு தேச அரசியலில் தீவிரம் காட்டிய ரோஜாவுக்கு  செல்வமணி ஒரு பெரிய பலம். 

05 )  குஷ்பூ- சுந்தர்

கடவுளே  இவங்க இன்னிக்கு கற்பு பத்தி ஏதும் சொல்லாம இருக்கணுமே...?!


காமடி படங்களாக எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்த சுந்தர்.சி. , தான் ஒரு அதிரடி ஆக்க்ஷன் படத்தை தன் வீட்டுக்குள்ளேயே இயக்க வேண்டி வரும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். திருமணத்துக்கு முன்னரான உறவு குறித்து கருத்து சொன்ன குற்றத்துக்காக செருப்பு மாலை, விளக்குமாறுகளோடு தமிழகமே கூச்சல் போட்ட போதும், 27  வழக்குகளை சந்திக்க வேண்டி வந்த போதும் சுந்தர் உள்ளத்தை அள்ளித் தா என்று கேட்டது தப்போ என்று சிந்திக்காமல் குஷ்புவுக்கு தோள் கொடுத்தது தான் இந்த திருமண வாழ்வின் சக்சஸ்.  குஷ்பு பிரபுவிடம் சகஜமாக பழகும் ஒரு அழகான சூழலை ஏற்படுத்தி  இருப்பதை பார்க்கும் போது, டாக்டர் ஷாலினியின் பாஷையில் சொன்னால், சுந்தர் ஒரு 'ஆல்பா ' ஆண். ஒரு வார்த்தை தமிழ் தெரியாமல் வந்து இன்று மதம், மொழி, ஊர் என்று முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலில் வாழ்க்கையை அமைத்து சந்தோஷமாக வாழும் குஷ்பூ - சுந்தர் காதல் ஒரு அழகான ஓவியம். 

04  )  தேவயானி- ராஜகுமாரன் 

'அபி'யும் நானும்....


அழகான நடிகைகள் ஹான்ட்சம்மான , சக்சஸ்புல்லான  இயக்குனரை காதலிப்பது வழமை, அது அமலா போல்-விஜய் வரை தொடர்கிறது. ஆனால் ஒரே ஒரு வெற்றிப்படம் மட்டுமே கொடுத்த, உருவத்தில் தனக்கு சற்றும் பொருத்தமில்லாத, வேறு மொழி பேசுகின்ற, வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இயக்குநருக்காக, வீட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி மதில் ஏறி  தாண்டி வந்து இயக்குனர் ராஜகுமாரனை கைப்பிடித்த வித்தியாசமான காதல் இது. அதுவும் அவர் ஒரு உதவி இயக்குனராக மட்டும் இருந்த நிலையிலேயே  காதல் தொடங்கியது தன் இன்னும் வியக்க வைக்கிறது. ராஜகுமாரன் தன்னிடம் இல்லாதவைகளை எல்லாம் அன்பால் நிரப்பி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பிரபலமான, பிசியான   நடிகை- பிரபலம் அற்ற கணவன் என்னும் போது வழமையாக வரும் எந்த வித ஈகோ மோதல்களும் இல்லாமல் இனிய இரண்டு பெண் குழந்தைகளோடு இந்த ஜோடி  நடத்தும் வாழ்க்கை ஒரு உதாரணம் . 'காதலுடன்' படம் ப்ளாப்  ஆனாலும் இந்த ஜோடி சூப்பர்  ஹிட் ! 

03 )  என்.எஸ்.கிருஷ்ணன்- டி.ஏ.மதுரம் 

உன் மேல நான் மயங்கி ஒரு வாரம் ஆச்சுதடி..!


இருவரின் பெயரையும் தனித் தனியே பிரித்து சொல்ல முடியாத அளவுக்கு சினிமாவில் சேர்ந்தே பாப்புலரரான ஜோடி. ஆனால் இவர்களின் காதலின் சிறப்புக்கு அதுவல்ல காரணம். இன்பத்தில் சேர்ந்திருப்பது சாதாரணமானது. என்.எஸ்.கிருஷ்ணன் லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த காலங்களில் கணவரின் விடுதலைக்காக மதுரம் நிகழ்த்திய போராட்டம் ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலை  விட உயர்வானது. அதனால் தான் என்.எஸ்.கே. மனைவி இறந்த பிறகு ஒரு தூபி எழுப்பினார். இருவருக்கும் பிறந்த குழந்தை இறந்த பிறகு, மதுரத்துக்கு குழந்தை இல்லாமல் போக, தன் தங்கை வேம்பு வை தன் கணவருக்கே திருமணம் முடித்து வைத்தார் மதுரம். ( மதுரம்-வேம்பு; பெயரில் என்ன ஒரு வேற்றுமை!) 

02 )   சூர்யா- ஜோதிகா

கலாபக் காதலி...!

' ஒளி மயமான '  நடிகருக்கும் ' ஒளி மயமான'  நடிகைக்கும் இடையே நெருக்கம் என்று ' உயிரிலே கலந்தது' படத்தில் நடிக்கும் போது வந்த அந்த வீக்கான கிசு கிசுவை சிவகுமார் கூட நம்பி இருக்க மாட்டார். ' சூர்யா போல நைஸ் ஆ பேசற ஜென்டில்மேன் ஐ இண்டஸ்ட்ரில பார்த்ததே இல்ல' என்று ஜோ பெட்டி கொடுக்கும் போது கூட தமிழ் கூறும் நல்லுலகம் நம்பவில்லை. நெருக்கம் நட்பாகி ' காக்க காக்க' வில் காதலானதும்   தான் உலகம் விழித்துக் கொண்டது. ஜோதிகாவுக்கு அக்கா இருவருமே நடிகைகள், வேறு மாநிலம், அதிலும் தாய் ஒரு முறை விவாகரத்து பெற்றவர். சிவகுமார் குடும்பமோ வெகு பாரம்பரியமான மார்க்கண்டேயர் குடும்பம்.  கிளம்பிய கடுமையான எதிர்ப்பை சமாளித்து, பெற்றார் சம்மதத்துடன் திருமணம் செய்வதற்காக கிட்டத்தட்ட 4  வருடங்கள் காதலித்து, நீண்ட காலப் போராட்டத்துக்கு பிறகு ஜோ என் மகள் என்று அதே சிவகுமார் வாயால் சொல்ல வைத்தது இந்த காதல் ஜோடியின் மன உறுதிக்கு கிடைத்த வெற்றி.முழு தமிழ் நாடும் இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என்று விரும்பியது. இன்று நொடிக்கு நூறு  முறை ஜோ ஜோ என்று புகழ் பாடும் சூர்யா, தியாவை  இடுப்பில்  தூக்கியபடி வளம் வரும் ஜோ, அப்புறம் லேட்டஸ்ட் வரவு தேவ், கார்த்தி திருமணத்தில் பொறுப்பான அண்ணன் அண்ணி பதவி என்று இந்த அழகான ஜோடியின்  வாழ்க்கை " ஜில்லுன்னு ஒரு காதல் "!

01  ) கமல்-கௌதமி

அபிராமிங்கிறதுக்கு  பதிலா  கௌதமின்னு வச்சிருக்கணும் !

 இரண்டு மனங்களுக்கு இடையில் உருவாகும் நேசமும் காதலும் திருமணம் என்ற ஒரு ஏற்பாட்டால்  மட்டுமே முழுமை அடையுமா? ஒருவரைக் காதலிக்கிறோம், அளவில்லாமல் அன்பு செய்கின்றோம் என்றால் , அந்த அன்பிற்கு இடையில் திருமணம் என்ற சட்ட ஏற்பாடு, அல்லது சம்பிரதாயம் எங்கிருந்து வந்து முளைக்கும்? திருமணம் செய்யவில்லை என்ற ஒரு காரணத்துக்காக இருக்கின்ற காதல் இல்லை என்று ஆகி விடுமா? ஏற்கனவே இரண்டு திருமணங்களின் பிரிவின் பின் கமலும், ஒரு விவாகரத்தின் பின் கௌதமியும், இருவரின் குழந்தைகளோடும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது, குறிப்பாக இந்த உறவில் அவர்களின் குழந்தைகள் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் சந்தோஷமாக வாழ்வது, எழுத்தில் விவாகப்பதிவு வைத்திருக்கும், அம்மி மிதித்து தாலி கட்டி வாழ்பவர்களிடம் கூட காண முடியாதது.   கௌதமி கான்சர் வந்து சிகிச்சையில் இருந்த காலகட்டத்திலும், திருமணம் என்ற பந்தம் இல்லாத காரணத்தால் இலகுவாக விலகிச் சென்றுவிட முடியும் என்ற போதிலும், கூடவே இருந்து கமல் தோள் கொடுத்து, சிகிச்சை முறையின் ஒவ்வொரு படிநிலையையும் ஒளிப்பதிவு செய்து, கௌதமி மீண்டும் பழைய வாழ்க்கைக்கு பொலிவோடு மீண்டு வர துணை நின்றதுக்கு காரணம், இருவரும் மற்றவர் நம்மவர் என்று நினைத்தது தான். சமூகத்தின் எதிர்ப்புக்களுக்காக சமரசம் செய்ய  போலியான முகமூடிகள் அணியாமல் விட்டதற்காக இந்த அபூர்வக் காதலர்களுக்கு முதல் இடம்.

காதலை கழட்டிவிட அரிய 10 வழிகள்

காதலை சொல்ல முரளி எவ்வளவு கஷ்டப்பட்டரோ அதை விட கஷ்டம் காதலை முறிக்கிறது. காதலுக்கு உள்ள போறது கூட போயிடலாம்..கொஞ்சம் ஹார்ட் வொர்க் பண்ண வேணும், ஆனா இந்த காதலை விட்டு வெளிய வர ஹாட் வொர்க் பண்ணாதே..! அதால இந்த வலண்டைன்ஸ்  டே சிறப்பு வாரத்தில காதலில் சொதப்புவது எப்படி எண்டு ஒரு அறிய 1o வழிகள்..காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு என்னத்துக்கும் எதிர்காலத்தில யூஸ்  ஆவுமே..?!? ( சில ஐடியாக்கள் உருவானவை, சில ஐடியாக்கள் உருவப் பட்டவை )10 ) பேஸ்புக் இல் ' இட்ஸ் காம்ப்ளிகேடட்'   எண்டு ஸ்டேடஸ் போடவும். எப்பிடியும் உங்க லவர் இற்கு மூணாவதா ஒருத்தி இருக்கிறாளா,  நயன்தாரா மாதிரி என்ட்ரி குடுக்கிறாளா  எண்டு மூக்கு வேர்த்திடும். பிறகென்ன..கொஞ்ச நாளில சண்டை ஆரம்பிச்சிடும்.


09 )  லவர் கால் பண்ணிற நேரமா பார்த்து உங்க மொபைல் இல கஸ்டமர் கேர் இற்கு போன் பண்ணி பேசுங்க. நீங்க நாலை அழுத்தி, மூணை அழுத்தி ,ஏழை அழுத்திறதுக்குள்ள அங்க அவங்களுக்கு வெய்டிங் எண்டு போகும்.. பிறகென்ன..உங்க ஏழரை விலக போகுது எண்டு அர்த்தம்! 

08  ) முதல்ல  பைக் இற்கு பெட்ரோல் போடுறத நிப்பாட்டுங்க..அவங்க அப்பன் வீட்டு காசா?! எங்க போகணுமாம்? எல்லாத்துக்கும் பப்ளிக் டிரான்ஸ்போர்ட்  யூஸ் பண்ண பழகுங்கப்பா..கொழும்பு எண்டா 155 பஸ் இல இல ஏத்தி அவங்கள எங்கயாவது கூட்டிப்போனீ ங்க எண்டா உங்க காதலும் ரிவேர்ஸ்  கியர்ல  போகும். மத்த இடங்களிலையும் அப்பிடி இரு பஸ் சேர்விஸ் இருக்காதா என்ன?


07  ) ' மயக்கம் என்ன?' பார்த்தீங்க இல்ல? உங்க பிரெண்ட் ஐ போல யாரு மச்சான்? அப்பிடி ஒரு பிரெண்ட் ஐஉங்க லவர் இற்கு இன்ட்ரடியூஸ்  பண்ணி வையுங்க...இதுக்கு தான் சொல்றது ஒவ்வொரு பிரெண்ட் உம் தேவை மச்சான்! 

06 ) எப்பவாவது கவிதை எழுதி இருக்கீங்களா? என்னது, கவிதை படிக்கிற பழக்கமே இல்லையா? குட்..அப்ப ஒரு பேனா பேபர் எடுத்து எழுதுங்க.. அண்ணன் அறிவுமதி, மு.மேத்தா எல்லாரும் தலை குனிஞ்சு நிக்கிற அளவுக்கு, நா.முத்துக்குமார் , வைரமுத்து எல்லாரும் இரத்தக்கண்ணீர் வடிக்கிற அளவுக்கு  நீங்க காதல் கவிதைகளா வடிங்க.. இடை இடையில மானே தேனே..பொன் மானே எல்லாம் போட்டுக்கணும்.. உங்க கவிதை..ஹைக்கூ..இல்ல காவியம்னே வச்சுக்கலாம்..அதை எடுத்து நீட்டுங்க..நைட் படிச்சிட்டு காலைல உங்களுக்கு கால் வரும் அவங்க கிட்ட இருந்து..உங்க காதில ப்ளட் வரும், பஞ்சு ரெடியா வச்சுகோங்க. அப்புறமா உங்களுக்கு காதல்ரத்து நோட்டீஸ் வரும்.


05  )  உங்க லவர் இற்கு உண்மையா இருக்கணும் பாஸ் நீங்க. பெர்பியூம்   போடுறத முதல்ல நிறுத்துங்க. உங்க டிரஸ் ஐ எத்தின நாளைக்கு ஒரு தடவை தோய்க்கிறீங்க எண்டத அவங்களுக்கு சொல்லுங்க. நீங்க கல்வின் க்லீன் , ஜாக்கி தான் போடுறீங்க எண்டு அநியாயத்துக்கு நம்பிட்டு இருப்பாங்க. நீங்க பட்டாபட்டி தான் என்றத முதல்ல தெரியப்படுத்துங்க. அப்புறம் உங்க பாங்க் புக், சாலரி ஷீட் எல்லாத்தையும் அவங்க கிட்ட காமிங்க.04 ) அப்புறம்..நீங்க மாறணும்..எல்லாத்தையும் மாத்தணும்..ஆஅ..ஆ..கமல் எபக்ட் போட்டது காணும். உங்க டிரெஸ்ஸிங் சென்ஸ் ஐ நீங்க மாத்தணும். இதுக்கு நீங்க டோலிவுட் படங்களா பாக்கணும். இல்லாட்டி ' ஒரு கூடை சன்லைட்' பாட்டில நம்ம ரஜினிகாந்த் போட்டிருப்பாரே, அந்த மாதிரி ஒரு கலர் காம்பினேஷன் இல டிரஸ் பண்ணனும். புருவத்தில கம்மல் போட்டுக்கலாம். ஒரு பீர்  டின்      எடுத்து கம்மலா    போட்டுக்கலாம். இந்த மாதிரி.. த்ரிஷா , நயன் மட்டும் தான் டாட்டூ குத்துவாங்களா?!? நீங்களும்  உங்க கேர்ல் பிரெண்ட் பேரை ( இப்ப இருக்கிறவங்க இல்லை! ) உங்க பாறாங்கல் மார்பில பச்சை குத்திகோங்க!03 ) லவர் ஐ சினிமா  பார்க்க கூட்டி போவீங்க இல்ல..? ஆனந்தத்தொல்லை பட டிக்கட் இப்பவே ரிசேர்வ் பண்ணி வைச்சு கூட்டி போங்க! இல்லாட்டி, பாருங்க இப்ப விஜய் காவலன், நண்பன் எண்டு அடக்கி வாசிக்கிறார்.. கொஞ்சம் பொறுங்க, எப்பிடியும் கொஞ்ச நாளில மெட்ராஸ் இல ரவுடிங்க அட்டகாசம் அதிகம் ஆய்டும்..அப்ப அவர் கிராமத்தில இருந்து அரிவாளோட ரவுடிங்கள அழிக்க புறப்பட மாட்டாரா? அந்த டைம் இல வேட்டைக்காரன், சுறா இந்த மாதிரி படங்களா நடிப்பார். அந்த டைம் பார்த்து அவங்களை  விஜய் படத்துக்கு கூட்டிப்போநீங்க எண்டா அவங்க உங்கள மறக்கவே மாட்டாங்க..அதாவது மறந்தும் கல்யாணம் பண்ண மாட்டாங்க.


02 ) பேசாம நேர போய் அவங்க அம்மா அப்பா கால்ல தடார்னு விழுந்து எங்களை எப்பிடியாவது சேர்த்து வைங்க எண்டு கேளுங்க. அப்ப உங்க லவர்  தானாவே உங்களை வேணாம் எண்டு சொல்லிடுவாங்க..ஏன்னா..நிறைய பொண்ணுங்க எப்பிடியும் நம்ம காதலை அம்மா அப்பா பிரிச்சு வைச்சிடுவாங்க எண்ட நம்பிக்கையில தான் லவ் பண்ணவே தொடங்கிறாங்க..


 01  ) கடைசி ஒரே வழி தான் இருக்கு... ஏதாவது ஒரு ஹாஸ்பிடல்ல இருந்து உங்களுக்கு கிளிசாரினோ லூகேமியனா இலியானோ போபியா அப்பிடின்னு ஒரு எய்ட்ஸ் ஐ விட பயங்கரமா ஒரு வியாதி இருக்கு, இன்னும் எண்ணி முப்பது  நாள் தான் இருக்கு, அதுக்குள்ளே உனக்கு தாலி கட்டி ஒரு நாளாவது உனக்கு கணவனா வாழ்ந்து பாக்கணும் எண்டு டைலாக் விடுங்க. அவங்க அடுத்த நிமிஷம் அப்பீட் ஆகிடுவாங்க!


என்ன பாஸ்..இவ்வளவு பண்ணியும் முடியலையா..!  அப்புறம் கமல், சித்தார்த், பிரபு தேவா இவங்கள வாழ்க்கையில பாலோ பண்ண முடியாட்டியும் ட்விட்டர் இலாவது  பாலோ பண்ணுங்க.... அதுக்கு அப்புறமும் உங்க தலையில அப்பிடி எழுதி இருந்தா நாம ப்ளாக் எழுதி அதை மாத்தவா முடியும்?! எனி வே லக்கி பாஸ் நீங்க.. இப்பிடி ஒரு பொண்ணு கிடைக்க நீங்க குடுத்து வைச்சிருக்கணும்..என்ஜாய்!


Related Posts Plugin for WordPress, Blogger...