'ஆயில்'ய நட்சத்திரப் பெண்கள் ஏன் தேவை!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இராணுவத்தினரின் காணி அபகரிப்புக்கு எதிராக அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது இராணுவத்தினர் கழிவொயில் ஊற்றித் தாக்கினர்-இது செய்தி. மகஜரைக் கையளித்து விட்டு பஸ்களில் பஸ்களில் திரும்பிக்கொண்டிருந்த போது வாகனங்களில் வந்த ராணுவத்தினர் பஸ்களை வழிமறித்து இந்த கழிவொயில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து  இனி இலங்கையில்  இருந்து வெளியாகும் முன்னணி கற்பனை நாளிதழ்கள்  மற்றும்  இணையங்களில் எதிர்காலத்தில் வெளியாகவிருக்கும் சில டுபாக்கூர் செய்திகள்:

யாழ்ப்பாணத்தில் கழிவொயிலுக்குப்  பெரும் தட்டுப்பாடு(அஸ்தமனம்)

யாழில் கழிவொயிலுக்கு திடீரெனப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வீடுகளில் வைக்கப்பட்டிருந்த கழிவொயில் கான்களையும்  படையினர் வீடு வீடாக வந்து சேகரித்துச் சென்றதால் கடி எறும்புக்கு ஊற்றவோ,  சைக்கிள்களில் சத்தம் கேட்காமல் பூசவோ கழிவொயில்  கிடைக்காமல் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர். இந்த அசாதாரண தேக்கநிலையைப்  போக்க அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என யாழ்வாசி ஒருவர் நமது  நிருபரிடம் தெரிவித்தார்.

அடுத்த போராட்டத்துக்கு ஒரு முக்கிய அறிவித்தல் (இடம்புரி)

இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் மக்கள்  அனைவரையும் மழைக்கோட்டுடன் வருமாறு மாவை சேனாதிராஜா எம்.பி. நேற்று அறிவித்தல் விடுத்துள்ளார். 



இந்தியன் ஒயில் கோப்பறேஷன் முக்கிய முடிவு (மண்டே  டைம்ஸ்)

நாட்டில் கழிவொயிலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் கிராக்கியை முன்னிட்டு தங்களது பெட்ரோல் நிலையங்களில் கழிவொயிலையும்   சந்தைப்படுத்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.ஒ.சியின் இலங்கைக்கான தலைமை அதிகாரி நேற்று பத்திரிகைகளிடம்  தெரிவித்தார்.

இலங்கைக்கான இறக்குமதிக் கொள்கையில் புதிய திருப்பம்அமைச்சர் (மண்டே லீடர்)

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சாய் எண்ணையின் அளவைக் குறைத்து இனி வரும் காலங்களில் கழிவோயில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் என பெட்ரோலியத் தொழில்துறைகள் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். படையினர் பெருமளவில் கழிவொயிலைப் பயன்படுத்துவதால் இந்த தீர்மானம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் நேற்று செய்திப்பிரிவிடம் கூறினார்.



இலங்கை இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு ( www .defens.ok )

பாதுகாப்பு அமைச்சு  நேற்று புதியவர்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான விளம்பரத்தை நேற்று வெளியிட்டது. வழமையான  உயர, நீள  அகலங்களுடன் குறிபார்த்து கழிவொயில்  ஊற்றத் தெரிந்திருப்பது மேலதிக தகமையாகக் கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

கழிவொயில்  உடன் தேவை! - படையினர் (தின உரல்)

இனி வரும் காலங்களில் மக்கள் போராட்டங்கள் அதிகம் நடைபெற இருப்பதால் கழிவோயிலும்  பெருமளவில் தேவைப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணத்திலும் மற்றும் முழு இலங்கையிலும் கழிவொயிலை   வீட்டில் வைத்திருப்பவர்கள் உடன் எமது படைப்பிரிவத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மீறுபவர்கள் கட்டாய கழிவொயில்  சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மேலதிக  விசாரணைக்காக பூஸாவுக்கு அனுப்பப்படுவார்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி-  
மேஜர் ஜெனெரல்  மஹிந்த ஹத்துருசிங்க,
 பாதுகாப்புப் படை தலைமைச் செயலகம், 
பலாலி.



இராணுவத்தின் புதிய உத்தி குறித்து ஆராய  ஹிலாரி  கிளிண்டன் அவசர  வருகை! (ஏ.பி.சி-செய்திச் சேவை )

மக்கள் போராட்டங்களைக் கலைப்பதற்கு இலங்கை இராணுவத்தினர் புதிய உத்தியொன்றை  பயன்படுத்தியுள்ளமையை அறிந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிண்டன் இலங்கைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், செலவு குறைந்ததும் இலகுவானதுமான நவீன உத்தியொன்றை இலங்கைப் படையினர் கையாண்டிருப்பதாகவும், அதுபற்றிய மேலதிக விபரங்களை அறிந்து செல்வதற்காகவே தாம் இலங்கை வந்திருப்பதாகவும் கூறினார். மேலும் இவ் இராணுவ உத்தியை அமெர்க்காவில் செயற்படுத்த  ஒபாமாவும் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் இதுகுறித்து அவர் மகிந்தவுடன் தொலைபேசியில் உரையாடுவார் என்றும் தெரிவித்தார்.

மணப்பெண் தேவை (ஸ்ரீ லங்கா மற்றிமோனியல்.கொம்)

இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் ஆண் ஒருவருக்கு பெற்றோர் தகுந்த   மணப்பெண்ணை தேடுகின்றனர். பெண் 'ஆயில்'ய நட்சத்திரமாக இருப்பது முக்கியம்.உடன் தொடர்பு கொள்ளவும்.

கறை  நல்லது- அமைச்சர் விளக்கம் (வீரலட்டு)

அமைதிப்போராட்டத்தை மேற்கொண்ட மக்கள் மேல் இராணுவத்தினர் கழிவோயில் ஊற்றியது சரியா என நீதிக்கும் நியாயத்துக்குமான மக்கள் அமைப்பு எரிசக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் வினவிய போது, " 'கறை' நல்லது"  என அமைச்சர் தெரிவித்தார். சங்கக்கடை கூப்பன் கார்டுகள் மூலம்  இனிமேல் குடும்பங்களுக்கு தலா  இலவச சேர்(f )ப் எக்ஸல் பக்கெட்  ஒன்று வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

தெல்லிப்பழை மருத்துவமனையில்  நோயாளர் அதிகரிப்பு 

பிந்திக்கிடைத்த செய்திகளின் அடிப்படையில் தெல்லிப்பழை மனநோய் மருத்துவமனையில்  நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக மருத்துவமனையின் நம்பத்தகுந்த  வட்டாரங்களிடமிருந்து செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

(செய்தி தவிர யாவும் கற்பனை!)

படங்கள்- நன்றி-tamilwin.com 



அசத்திய பெண்களும் சொதப்பிய ஆண்களும்!

மோனிக்கா செலஸ் க்கும் மோனிக்கா லெவின்ஸ்கிக்கும் என்ன வித்தியாசம்?!? கொஞ்சம் பழைய ஜோக் இது. தெரிந்தவர்கள் சிரிக்கலாம்  தெரியாதவர்கள் மூளையைக் கொஞ்சம் கசக்கிக் கொண்டிருங்கள் இறுதியில் பார்ப்போம். அதற்கு முதலில் (f )பாஷன் சொர்க்கபுரி பாரிஸில் பிரெஞ்சு ஓபன் நடந்து முடிந்திருக்கிறது. அதிலிருந்து சில ஷொட்கள்.

மீண்டும் மரியா! 

 

மரியாவுக்கு இந்த பிரெஞ்சு ஓபன் ரொம்ப ஸ்பெஷல். அம்மாவும் தோழியும் போல்  விளையாட்டும் ஆபரேஷனும் உடன் பிறவாத சகோதரிகள்  போல. 2008  இல் தோள்பட்டையில் செய்து  கொண்ட சர்ஜரிக்குப் பிறகு எந்த கிராண்ட் ஸ்லாமையும் வெல்லாத மரியாவுக்கு இந்த  டைட்டில் ஒரு செகண்ட் இன்னிங்க்ஸின் ஆரம்பம்! இந்த பிரெஞ்சு ஓபனை வென்றதோடு இன்னொரு சாதனையும் செய்திருக்கிறார் ஷரபோவா.கேரியர் கிராண்ட் ஸ்லாம்  எனப்படும் நான்கு முக்கிய கிராண்ட் ஸ்லாம்  பட்டங்களையும் வென்றவர்கள் பட்டியலில் பத்தாவதாக இடம்பிடித்திருக்கிறார்! 



ராஜாவின் பார்வை (எ)ரானியின் பக்கம்! 




சாரா எரானி  (செல்லமாக ஸரீட்டா!)கலக்கல் அறிமுகம்.டபிள்ஸில் கிராண்ட் ஸ்லாம்  வென்றதன் மூலம் முதலாவது கிராண்ட் சலாம் வென்றிருக்கிறார் இந்த வெனிஸ் தேசத்து தேவதை. சிங்கிள்ஸ்  இலும் ஷரபோவாவுடன் பைனல்ஸ் இல் ஜோடி போட்டது ஒரு அதிரடி ஆரம்பம். பட்டம் வென்றிருந்தால் ஒரு போட்டித்தொடரில் இரண்டு கிராண்ட் ஸ்லாம்களை  வென்று சாதனை படைத்திருப்பார்!

சானியா-எங்கிருந்தாலும் வா....ழ்க !



பூபதி - சானியா ஜோடி , அபிஷேக்-ஐஸை விட ஹிட்! இம்முறை பிரெஞ்சு ஓபன் மிக்ஸ்ட் டபிள்ஸ் ஐ கைப்பற்றிய இந்த ஜோடிக்கு இது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் ! ( 2009 இல் அவுஸ்திரேலியன் ஓபன் கைவசம்). முன்பு சானியா லீக் போட்டிகளில் ஜெயிக்கும்போதே தூக்கிவைத்துக் கொண்டாடும் மீடியாக்கள் இம்முறை கிராண்ட் ஸ்லாம் வென்றும் பெரிதாகக்  கண்டுகொள்ளாதது ஏனோ? (அப்புறம் பூபதிக்கு இது எட்டாவது..அதாவது எட்டாவது கிராண்ட் ஸ்லாம்! ஸ்வேதாவுடன் டிவோர்ஸ், லாராவுடன் திருமணம் என்பதைத் தாண்டி, மகேஷ் இப்போது சாய்ரா  என்கிற குட்டி தேவதைக்கு அப்பா !)

கடுப்பேற்றிய ஆண்கள்!

அரையிறுதியில் வென்று  பைனல்ஸில் பரம வைரி  நடாலுடன் மோதுவார் என்று பரபரப்புடன் எதிர்பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டுவிட்டு செமி பைனல்ஸில் ஜோகோவிச்சிடம்  அநியாயத்துக்கு தோற்றார்  பெடரர். 


ரf பா- தி சாம்பியன் -என்னா  லுக்கு...அதான் கேம் முடிஞ்சிருச்சில்ல..?



பைனல்ஸில் ஜெயித்து கேரியர் கிராண்ட் சலாம் கைப்பற்றும் ஆவலுடன் ஜோகோவிச்சும் ஏழாவது முறை பிரெஞ்சு ஓபன் வென்று சாதனை படைக்கும் வெறியுடன் நடாலும் இறுதிப்போட்டியில் களமிறங்கி  புழுதிபறக்க மோதிக்கொண்டிருக்கும் போது பார்த்துத் தானா  அநியாயத்துக்கு மழை வந்து தொலைக்க வேண்டும்? இரண்டு நாட்களாக நடந்த பைனல்ஸில் கடைசியில் வழக்கம் போல ரபா வென்று சாதனை படைத்தார். (க்ளே  கோர்ட்டில் மன்னன் அல்லவா?) விறுவிறுப்பான ஐந்து செட் போட்டி ஒன்றை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஜவ்வு மாதிரி இரண்டு நாட்கள் நீண்ட பைனல்ஸ் ஏமாற்றமே!

பிறகு மேலே கேட்ட ஜோக்கிற்கு விடை..மோனிகா  செலஸ் டென்னிஸ் ப்ளேயர்..மோனிகா லெவின்ஸ்கி? ஹி  ஹி...(எப்போதோ குமுதத்தில் படித்தது என்று ஞாபகம். அதிலும் பதில் போட்டிருக்கவில்லை! )

எக்ஸ்ட்ரா : நேற்று பைனல்ஸ் முடிந்த பிறகு எப்.எம்.இல் ரிசல்ட் சொல்லிக்கொண்டிருந்த போது  , (கிரிக்கட்டுக்கு இடையில்  தான்) பாவம் நோவாக்! இவர்கள் பெயரை உச்சரித்த விதத்தைக் கேட்டிருந்தால் நிச்சயம்  டென்னிஸை விட்டே ஒதுங்கியிருப்பார். பிறகு நடால் எட்டாவது முறையாக பிரெஞ்சு ஓபனை கைப்பற்றினார் என்று வேறு கூசாமல் அறிவித்தார்கள்.

இடுப்புகள் ஜாக்கிரதை!

இடுப்பு என்றதும் சிம்ரன் ஞாபகத்துக்கு வந்தால் நீங்கள் சராசரித் தமிழன்.  இலியானா நினைவுக்கு  வந்தால் நீங்கள் இளைஞன். ஜோதிகா வந்தால் நீங்கள் இன்னும் குஷி மூடில் இருப்பதாக அர்த்தம். இவர்கள் யாரும் இல்லாமல் குஷ்பூ நினைவுக்கு வந்தால் உங்களை நீங்கள் ஒழுங்காக அப்டேட் பண்ணிக் கொள்ளுகிறீர்கள் என்று அர்த்தம். இடுப்பு என்றதும் நடிகைகளின் இடுப்புகள் தான் வரிசையாக மனக்கண்ணில் ஸ்லைட் ஷோ போகுமே  தவிர, எப்போதாவது உங்கள் சொந்த இடுப்பைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா ?!? ஆறாம் விரல் போல இருக்கா விட்டாலும் பரவாயில்லை ( நன்றி: பா.விஜய்) அட்லீஸ்ட் உரல் போல இல்லாமல் ஆவது இருக்க வேண்டும். அதற்காக ஆண் பெண் பேதமின்றி அனைவரும் கடைப்பிடிக்கக் கூடிய சில சிம்பிள் வழிமுறைகள் இதோ:

அன்று வந்ததும் அதே இடை..ச்சா..ச்சா..ச்சா..



ஒரு நிருபர் ஒரு நடிகையை பேட்டி எடுக்கப் போயிருக்கிறார். பேட்டியின் போது வழக்கமாக ஸ்லிம்மான நடிகைகளிடம் கேட்கப்படும் அதே கேள்வியைக் கேட்டிருக்கிறார். " நீங்கள் இவ்வளவு ஸ்லிம்மாக இருப்பதற்கு காரணம் என்ன?" அதற்கு அந்த நடிகை சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப்போன நிருபர் மயக்கம் போட்டு விழாத குறை. அப்படி அந்த நடிகை சொன்ன பதில் "அரிசி".



இதென்னடா வழமையாக எல்லோரும் அரிசிப் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்க வேண்டாம் என்று தானே சொல்லுவார்கள், இவர் என்ன கூலாக அரிசி என்று சொல்கிறார் என்று நிருபருக்கு ஆச்சர்யம்.நடிகை தொடர்ந்து சொன்னது இது தான்: " நான் ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் ஒரு கைப்பிடி அரிசியை எடுப்பேன். அதை அப்படியே தரையில் விசிறி அடிப்பேன். பிறகு குனிந்து ஒவ்வொரு மணி அரிசியாக பொறுக்கி எடுத்து மேசை ஒன்றில் வைப்பேன். இப்படி தரையில் கிடக்கும் அவ்வளவு அரிசி மணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வைப்பேன்!". எப்பூடி?

பட் இட் வில் வொர்க்! ஆனால் நீங்கள் ஏமாற்றாமல் ஒவ்வொரு அரிசியாக பொறுக்கி எடுக்க வேண்டும்.கூட்டி அள்ள கூடாது. தினமும் செய்து வரலாம். கொஞ்சம் வயதானவர்களாக இருந்தால் தலை சுற்றலாம்.யூத்தாக இருந்தால் ஊர் சுற்றலாம், தலை சுற்றாது.

இன்று வந்ததும் இதே இடை..ச்சா ச்சா..ச்சா..


அப்புறம் இது அஜித் ஒரு முறை சொன்ன டிப்ஸ். ஒவ்வொரு முறையும் சாப்பிட போவதற்கு முதல் 2  கிளாஸ் இல் வெந்நீர் எடுத்துக் கொள்ளுங்கள். ( அதாவது குடிக்கக் கூட்டிய சூட்டில் தான் ) எடுத்து விட்டு கிளாசையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்காமல் மடக் மடக்கென்று ராவாக உள்ளே அனுப்புங்கள். இப்போது நீங்கள் சாப்பிடலாம். இப்படி 3  வேளையும் வெந்நீர் குடித்த பிறகே சாப்பிட்டு வந்தால், எந்தவித எக்சர்சைசும் இல்லாமலேயே ஒரு மாதத்தில் ஒரு கிலோ முதல் 2  கிலோ வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. வெந்நீர் ஜீரனத்தைக் கூட்டுவதாலும், சாப்பிட முன்பு குடிப்பதால் நீங்கள் பாத்தி கட்டி வெட்டுவதைத் தடுப்பத்தாலும் இந்த ரிசல்ட்.

என்றும் உள்ளது ஒரே இடை..


அஜித் சொல்லாத சில டிப்ஸ்: கொள்ளு இருக்கிறதல்லவா? அதை அவித்து அந்த தண்ணியைக் குடிக்கலாம் அல்லது கொள்ளில் காஞ்சி காய்ச்சி குடிக்கலாம். யாரவது உங்களிடம் கடன் கேட்டால் கூட, 'நான் அன்றாடம் காய்ச்சி' என்று சொல்லிக் கொள்ளலாம்.


 அப்புறம் இந்த லிங்க் இல் ஷகிராவின் 'வக்கா வக்கா'  பாட்டுக்கு ஆடிய நடனத்தை கற்றுத் தரும்  வீடியோ இருக்கிறது. நீங்க மக்கா இதைப் பார்த்து ஆடி ப்ராக்டிஸ் பண்ணினீர்கள் என்றால் உங்கள் இடையும் பெல்லி டான்சுக்கு தகுந்ததாக ஆகிவிடும்.

காலை எழுந்து கோப்பி அல்லது காப்பி குடிப்பதற்கு முதல் வெது வெதுப்பான வெந்நீரில் ( வெய்ட்.. குளிக்க சொல்ல வில்லை) ஒரு டம்ளர் எடுத்து அதில் எலுமிச்சம்பழச் சாறும் கொஞ்சம் தேனும் கலந்து குடித்து வர கொஞ்சம் மெலிவீங்க! ஆனால் இதையே உல்டாவாகப் பண்ணி குளிர்ந்த தண்ணீரில் தேன் விட்டுக் குடித்தீர்கள் என்றால் தொலைந்தது! இடுப்பு அடுப்பு ஆகிவிடும் அப்புறம்.



எக்சர்சைஸ், டயட், பீருக்குத் தடா என்று சொன்னால் கேக்கவா போறீங்க. மேலே சொன்னதெல்லாம் ஈசியாகச் செய்யக்க் கூடிய (அரிசி மேட்டர் தவிர) சில குறுக்கு வழிகள். சீரோ சைஸ் வர முடியாமல் போகலாம், ஆனா பீரோ சைஸ் குறையும். சிக்ஸ் பேக் வர முடியாது போனாலும்  சிங்கள் பேக்  ஆவது வரும்!

எவர் கண்ணுக்கும் பிராப்ளம்  இந்த இடை..


 அப்புறம் நீங்க என்ன தான் பண்ணினாலும், இடுப்பை யாரும் கிள்ளி விடாமல்  பார்த்துக் கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம். இல்லாவிட்டால் கிள்ளுக் கீரை ஆகும் வாய்ப்பு அதிகம்.பெண்கள் கிள்ளுவது பொதுவாக குறைவு. அதனால் ஆண்கள் பயப்படத் தேவையில்லை. அவர்கள் இடுப்பை எல்லாம் கிள்ளுவது இல்லை, இதயத்தையே அல்லவா ஜொள்ளுகிறார்கள்.. சாரி கிள்ளுகிறார்கள். ஹி ஹி ஹி.. 


மாதுரியைக் கலக்கப்போகும் சனத்ஜெயசூரிய!

இலங்கையின் கிரிக்கட் நட்சத்திரம் சனத் ஜெயசூரிய இப்போது ஒரு செலிப்ரிட்டி டான்ஸ் ஷோ  கண்டெஸ்டன்ட்!   நெட் இல் ப்ராக்டிஸ் பண்ணிய சனத், இனிமேல் ஸ்டேஜ் இல் ப்ராக்டிஸ் பண்ண இருப்பது சோனி டிவி இல் ஒளிபரப்பாகும்  "ஜலக் டிக்லா ஜா" ரியாலிட்டி டான்ஸ் ஷோவுக்காக!  மானாட மயிலாட டைப் இந்த ஷோவின் ஸ்பெஷாலிட்டி, இதில்  போட்டியாளர்கள் அனைவருமே பிரபலங்கள் என்பது தான். மோனிகா பேடியில்  இருந்து கால்பந்து பிரபலம் பெய்சுங் பூட்டியா வரை இதில் கலந்து கொண்டு துவம்சம் செய்த இந்த ஸ்டேஜில்  சீசன் 5  இல் ஆடுவதற்காக சனத்திற்கு பெரிய தொகை கைமாறியிருக்கிறது  என்கிறார்கள். 
புதிய ஜல்சா அவதாரம்:ஹி ஹி..


சனத் டான்ஸ் ஷோவில் பங்குபெறப்போகும்   விடயம் செய்தியாக வெளியாகியதுமே இணையத் தளங்களில் ரசிகர்கள்(!) கொந்தளிக்கத் தொடக்கி விட்டார்கள். டெய்லி மிரர் பத்திரிகையில் அவரது முன்னாள் ரசிகர்கள் மற்றும் இந்நாள் எனிமிகள் கூடிக் கும்மியடித்திருக்கும் கமென்ட்டுகளே அதற்கு சாட்சி.

இதில் பல கமெண்ட்டுகள் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கின்றன. சனத் எம்.பி.ஆக இருந்து கொண்டு டான்ஸ் ஆடுவது, அதுவும் இந்தியன் சானலுக்காக ஆடுவது ரசிக்கக் கண்மணிகளுக்கு பிடிக்கவில்லை போலும். தாளித்து எடுத்திருக்கிறார்கள். மக்களின் அபிமானத்தை இழந்து விட்டார், ஹீரோவிலிருந்து ஜீரோவுக்கு  சென்று விட்டார், இலங்கை எம்.பி.யாக இருந்துகொண்டு இந்தியாவின் டியூனுக்கு ஆட்டம் போடுகிறார், பணத்துக்காக **** கூடப் பண்ணுவார், விளையாட்டு வீரரில் இருந்து வர்ணனையாளர், அரசியல்வாதியில் இருந்து இப்போது டான்சர், இனிமேல் நீலப்படங்களில் நடிக்கப் போகிறாரா என்றெல்லாம் ஈவிரக்கமில்லாமல் கமெண்ட்டுகளை அள்ளிவிட்டிருக்கிறார்கள். நடனமாடும் கோமாளி, விசர், என்றெல்லாம் அடைமொழிகள் வேறு! எம்.பி யாக இருப்பவருக்கு டான்ஸ் ஆடுவதற்கு   எவ்வாறு நேரம் இருக்க முடியும், ஏற்கனவே அவர் ஒரு நல்ல டான்சர், ஏனெனில் மஹிந்தவின் தாளத்துக்கு தான் அவர் ஏற்கனவே ஆடிக்கொண்டிருக்கிறாரே! என்று ஒரு கமென்ட். சச்சினும் லாராவும் கூட இதே போல செய்வார்களா என்று ஒரு அன்பர்(!) கேட்டிருந்தார். ( கொஞ்சம் பொறுங்க  தலைவா..சச்சின் இப்ப தானே எம்.பி.யாகி இருக்கிறார்..சீசன்  6  வரட்டும் பிறகு சொல்லுவம்! )

ஆட்டத் தொடர் நாயகன்-1996 உலகக் கோப்பை

பிறகு அவரது டான்ஸ் ஐ வேறு விமர்சித்து கமெண்ட்டுகள். இடுப்பை ஆட்டுகிறார், பொம்மலாட்டம் போல இருக்கிறது,தாத்தா போல இருக்கிறார் என்று திட்டித் தீர்த்துவிட்டார்கள்.  இவருக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு நன்றி(!) வேறு கூறியிருக்கிறார்கள். அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி இவருக்கு சம்பளம் கொடுத்து எம்.பி.யாக வைத்திருக்கிறது, பேசாமல் மாத்தறையில் குப்பை அள்ளப் போகலாம்  என்று கண்மணிகள் குமுறியிருக்கிறார்கள். இதன் உச்சக்கட்டமாக சனத் ஐ  மதம் மாற்ற வேண்டும் என்றெல்லாம் கூட குரல் கொடுக்கிற அளவுக்கு விவாதம் விபரீதமாக போயிருக்கிறது! சனத்துக்கு ஆதரவாக வந்த கொஞ்ச நஞ்சக் கருத்துக்களுக்கும் மைனஸ் ஓட்டு வேறு! ரிட்டையர் ஆகி ஒழுங்காக இருந்து தொலைக்காமல் குன்சாக எதை எதையோ செய்து பார்க்கிறார் என்று பொருமித் தள்ளுகிறார்கள்.

அன்பான கணவன், அப்பா


சனத் ஆடுவது ஏனோ அவரது ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. சனத் பட்டணத்துப் பின்னணியிலிருந்து வந்தவரல்ல. அவருடைய ஆதரவாளர்கள் சொல்வது போல, சிட்டி இலிருந்து வந்த , உயர் குடும்பப் பின்னணியில் வேறு சில வீரர்கள் இந்திய நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசடர்களாக இருக்கும் போது சும்மா இருப்பவர்கள் இப்போது சனத் டான்ஸ் ஷோவில் கலந்து கொள்ளும்போது துள்ளிக் குதிப்பதற்கு காரணம், சரத் மற்ற வீரர்கள் போல ஹீரோ இமேஜைக் காப்பாற்ற முயலாமல் லுங்கியுடன் கடற்கரைகளில் நடக்கும் விழாக்களில் கலந்து கொண்டு சிம்பிளாக இருப்பது தான்  காரணமோ தெரியவில்லை. 

சின்சியர் எம்.பி.-அருகில் நாமல் ராஜபக்ஷே!

 அப்புறம் ஹைலைட்டாக, இந்த சீசனில் நடுவர்களாக வந்து சனத்தின் நடனத்தைக் கிழி கிழி கிழி....என்று கிழிக்கப் போகிறவர்கள்  பாலிவுட் இன் முன்னாள் கனவுக்கன்னி மாதுரி தீட்சித், பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் கரண் ஜோஹர் மற்றும் பிரபல கொரியோக்ராபரும் இயக்குனருமான ரெமோ டி சூசா. ஆமா..சனத் எலிமினேட்டட்  என்றால் ஒரு விரலைத் தூக்கிக் காண்பிப்பார்களோ? (#டவுட்டு) சனத்துக்கு  ஜோடியாக ஆடப்போகிறவர் இன்னும் முடிவாகவில்லையாம். எனக்கென்னவோ சனத் ஆடும் ஒரு சில நிமிட ப்ரோமோ வீடியோவில் முன்னாள் காப்டன் ஆடுவதைப் பார்த்தால் இந்நாள் காப்டன் ஆடுவது தான் நினைவுக்கு வருகிறது(ஆ..ஆங்..)பயபுள்ளைங்க வீடியோ பார்த்தத கொலைவெறியில் தான் கமென்ட் தட்டி விட்டிருக்கிறார்கள் போல தெரிகிறது.

இந்த ஸ்டெப்பையும் அங்க போட விடுவாங்களோ?!


எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சனத் இந்த ஷோவில் பங்கேற்றால் கொஞ்சம் பொழுது போகும். சிலர் கூறுவது போல, அவர் லஞ்சம் வாங்கினாரா கொள்ளை அடித்தாரா இல்லை நிலவள கங்கையில் குளிக்கும் பெண்களின் கையை பிடித்து இழுத்தாரா? டான்ஸ் ஷோவில் ஆடுறது ஒரு குத்தமாய்யா? அப்புறம் அஜய் ஜடேஜா ஆடியிருக்காக....மொஹிந்தர் அமர்நாத் ஆடியிருக்காக..மற்றும் நம்ம செலிப்ரிட்டிங்க எல்லாம் ஆடியிருக்காக....மற்ற எம்.பி.க்கள் அட்டூழியம்  பண்ணும்போதெல்லாம் வெறுமனே இருந்துவிட்டு இப்போது இதற்க்கு தாம் தூம் என்று குதிப்பது இதெல்லாம் கரெக்டா சுடுவீங்க  வீரப்பன மட்டும் விட்டுடுவீங்க என்கிற விவேக்கின் டையலாக் தான் மாடுலேஷனுடன் ஞாபகம் வருகிறது. 

 இன்னொரு பக்கம் சனத் தனது இந்த புதிய அவதாரத்தைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம். ரெகுலராக செட்டில் ரிகர்சல்  செய்து வருகிறாராம். தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் என்று சொல்லியிருக்கும் சனத், ரஜினியின் நடனத்தின் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு, அதே பாணியில் தனது நடனத்தை கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறாராம்!

நீங்க நல்லா தேத்துங்க உடம்ப...


பொழுது போகாமல் வெட்டியாக இருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் இற்கு போய் கமெண்ட்டுகளை வாசிக்கலாம். கொஞ்சம் பொழுது போகும்.

முன்னை இட்ட தீ

மே 01 அஜித்குமாரின் பிறந்த தினம் என்று தெரிந்த அளவுக்கு எனக்கு மே 31 யாழ்ப்பாணப்  பொது நூலகம்  எரிக்கப்பட்டதன் 31 ஆவது நினைவு தினம்  என்பது தெரிந்திருக்கவில்லை. சில சமூக ஊடக வலைத்தளங்களில் வந்த ஸ்டேடஸ்களை வைத்தே தெரிந்துகொள்ளவேண்டிய என் வெட்கக்கேடான நிலையை நினைக்கும் போது சுந்தரராமசாமியின் ஜே.ஜே:சில குறிப்புகளில் இடம் பெற்ற பிரபலமான பத்தி தான் நினைவுக்கு வந்தது.



"கோட்டாறு என் வீட்டுக்கு ஒரு மைல் தூரத்தில் தான் இருக்கிறது. எனக்கு நன்றாக தெரிந்த இடம். ஆனால் அங்கு சண்டை நடந்ததாமே! எனக்குத் தெரியாது. சத்தியமாகத் தெரியாது.இப்போது அங்கு கமிஷன் மண்டிகள். மிளகாய் வத்தல் நெடி அடிக்கும். பாதசாரிகளைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் குறுக்கும் மறுக்கும் லாரிகளும் அவிழ்த்துப்போட்ட வண்டிகளுமாக இருக்கும். மணிகண்டப் பணிக்கர் கடைக்கு அடுத்த சந்து தான் சிறுநீர் கழிக்க வசதியானது. அது போல் ஏற்ற இடம் அந்தப் பிராயத்தில் கிடையாது. விதவிதமான ஆண்குறிகளைப் பார்த்து அலுத்துப் போன குழந்தைகள் அங்கு ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருக்கும். வ.பகவதிப் பெருமாள் கடையில் புடைத்த, தூசி தும்பு அகற்றிய மளிகை கிடைக்கும். நிறுவி சரியாக இருக்கும். தொலைபேசி எண் 94 . கு.பாப்புத் தரகனார் கடையில் சுத்தமான தேங்காய் எண்ணெயும் நல்லெண்ணையும் கிடைக்கும்.தொலைபேசி எண் 113 .

சண்டை நடந்ததாமே கோட்டாற்றில். எனக்குத் தெரியாது."

அன்று... 


இந்த பத்தியை சற்றே மாற்றிப் போட்டால் என்ன என்று எனக்குத் தோன்றியது.

இன்றைக்கு லைப்ரரி எரித்த நாளாமே! சத்தியமாக எனக்குத் தெரியாது. இப்போது லைப்ரரி, வாசலில் சரஸ்வதி சிலை வைத்து வரிசைக்கு குரோட்டன்கள் வைத்து வெள்ளை வெளேர் என்று பெயிண்ட் அடித்து அழகாக இருக்கிறது. ஊர்காவற்றுறையில் இருந்து டவுனுக்கு வரும்போதுதாஜ் மஹல் போல ஜம்மென்று இருக்கும். முன்னுக்குள்ள வீதியில் இரண்டு கல்லை அடுக்கி வைத்து விட்டு ஏதாவது ஒரு லேனேர்ஸ் இல் பயிலும் மாணவிகள் பழைய சாலியில் எட்டடித்துப் பழகிக்கொண்டிருப்பார்கள். பக்கத்தில்  இருக்கும் சுப்பிரமணியம்  பூங்கா கனகாலமாக சிதைந்து போய் இருந்து  சமீபத்தில்  தான்  மீளவும் திறந்து  வைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே இருக்கும் சென்ட்ரல் கொலிஜ் கிரவுண்டில் தான் பிக் மச் என்று அழைக்கப்படும் சென்ட்ரல்-செயின்ட்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் வருடந்தோறும் கிரிக்கட் போட்டி நடக்கும்.அந்த சமயங்களில் ட்ரம்ஸ் அடிகளும் மாணவர்களின் நடனங்களும் மாணவிகளின் கூச்சலுமாக மைதானத்தில் உற்சாகம் கரைபுரண்டோடு ஓடும்.பின்னுக்கு இருக்கும் துரையப்பா ஸ்டேடியத்தில் இப்போது அடிக்கடி கண்காட்சிகளும் இசைநிகழ்ச்சிகளுமாக  நடக்கிறது. யாழ்ப்பாணக் கோட்டையைக் கூட இப்போது சுற்றிப்பார்க்க அனுமதிக்கிறார்கள். முனீஸ்வரன் கோயில் மரத்தடியில் நின்று கொண்டு சுகமான காற்று வருட சைட் அடிப்பதே தனி சுகம்.

லைப்ரரி எரித்து 31  வருடங்கள் ஆகிறதாமே இன்றைக்கு. எனக்குத் தெரியாது."

இன்று...


 இன்றைக்கு சரியாக 31  வருடங்களுக்கு முதல் யாழ்.பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் மாடியில் இருந்த அறைக்குள் இருந்தார் டேவிட் பாதர். கிட்டத்தட்ட 34  மொழிகளில் பரீட்சயம் பெற்றவர். படித்தது, கேட்டது, பார்த்தது எல்லாமே பாதரின் மூளைக்குள் இருந்த பல இழுப்பரைகளில் தனியாக போட்டுப் பூட்டப்படிருக்கும். தேவையான நேரத்தில் சரியான இழுப்பறையைத் திறந்து தகவல்களை எடுப்பார். அசாத்தியமான நினைவாற்றல்.மெட்ராஸ் யூனிவேர்சிட்டியில் பி எச். டி. பரீட்சையாலராக இருந்தவர்.  அறையில் அமைதியாக இருந்த  டேவிட் பாதரைக் கீழே இருந்து சக பாதிரியார்களிடம் இருந்து வந்த அவசரமும் பதட்டமும் கலந்த அழைப்பு  எழுப்பியது.



வெளியே  பால்கனிக்கு வந்த பாதர் கண்ட காட்சி அவரை உலுக்கியது. எந்த நூலகத்தில் அவர் தமது  வாழ்வின் பல பகுதியை செலவிட்டிருப்பாரோ, எந்த நூலகத்தில் உள்ள நூல்களில் அவர் தனது ஆன்மாவைக் கரைத்துக் கொண்டிருப்பாரோ, எந்த நூலகத்தைத் தனது உயிர் போல நேசித்தாரோ அந்த நூலகம், ஆசியாவின் மிகப்பெரும் நூலகம், தீயின் நாக்குகளை தனது ஒரு லட்சம் புத்தகங்களாலும்  ஓலைச்சுவடிகளாலும் உள்வாங்கிக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஒரு கணத்தில் கண் முன்னே ஒரு தலைமுறையின் ஆத்மா, ஒரு சமூகத்தின் ஜீவன் கருகி சாம்பலாவதைக் கண்டு அதிர்ச்சியில் கனத்த மனதோடு அறைக்குள் மீண்டும் சென்றவர், திரும்பி அந்த அறையை விட்டு உயிருடன் வரவில்லை. அடுத்த நாள் காலையில் காலை உணவுக்கு பாதர் வராததை கண்ட சக அருட்தந்தை செல்வராஜா, அறைக்கு சென்று பார்த்த சமயம், டேவிட் பாதரின் உயிர் தூக்கத்திலும் துக்கத்திலும் பிரிந்திருந்தது.



இன்றும் புதிக்கப்பட்ட நூலகத்திற்கு செல்லும் போது உப்பரிகைகளில் டேவிட் பாதரின் ஆத்மா அங்கே உலவிக்கொண்டு இருக்கக் கூடும் அல்லது நூலக வளாகத்தில் வீசும் மெல்லிய காற்றில் பாதரின் மென்மையான மனதும் அந்த வலியும் கலந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் வருவதைத் தடுக்க முடியவில்லை.

அழகு...

நாத்திகனாக இருப்பதன் நன்மைகள்!

நன்மைகள்  

கமல் ஹாசன்:அன்பே சிவம் 

10)மத சின்னங்களை உடம்பு முழுக்க சுமந்து திரிய தேவையில்லை.
09)வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லத் தேவையில்லை.

08)கஷ்டப்பட்டு  மத நூல்களை நெட்டுரு போட்டு நாக்குத் தள்ளத்   தேவையில்லை. பரீட்சையில் விளக்கவுரை எழுதி முழி பிதுங்க வேண்டியிருக்காது.

07)எல்லா நாளும் எல்லா வகை உணவுகளையும் ஒரு கை பார்க்க முடியும். கடவுளையும் வஞ்சிர மீன் வறுவலையும் ஒரே சமயத்தில் நினைக்கத் தேவை இருக்காது.

06)சடங்குகளுக்கு அடிமையாக தேவையில்லை. நினைத்த நேரம் நினைத்த வேலையை நினைத்தது போல செய்ய முடியும். கூடிக் கும்மியடிக்க அவசியமில்லை.

05)நீங்கள் விரும்பிய நபரைத் திருமணம் செய்துகொள்ள  முடியும்.

04)தேவையற்ற நம்பிக்கைகளில் கவனம் கலையாது. லாரிக்கு எலுமிச்சம்பழம் கட்டத் தேவையில்லை.

03)மதத்தை காத்துக்கொள்ள யாரிடமும் சண்டைக்குப் போக  வேண்டியதில்லை.மதம் அழியுதே என்று அழவும் தேவையில்லை.

02)எல்லா மதத்தவர்களையும் ஒரே மாதிரி பார்த்து அன்பு செலுத்த  முடியும். ஆண், பெண், சாதி, குலம், கோத்திரம் பார்க்கத் தேவையில்லை.

01)மதம் பிடித்து அலையும் நோய் தாக்காது. ஹெல்தியாக இருக்க முடியும்.




தீமைகள் 

ழான் போல் சாத்தர்- ஏதிஸ்ட் எக்ஸிஸ்டென்ஷியலிஸ்ட் ( நாத்திக இருத்தல்வாதி!)

05)கடவுளுக்கு வேலையை கொடுத்து விட்டு அக்கடா என்று  உட்கார்ந்திருக்க முடியாது. பிகரைக் கரெக்ட் பண்ண கூட, உழைத்தே ஆக வேண்டும். அதே போல, பிழை விட்ட பின் நைசாக கடவுளைக் குறை சொல்ல முடியாது. முழுக்க முழுக்க தானே பொறுப்பேற்க வேண்டும்.

04)எதற்காகவும்  கடவுளைத் துணைக்குக் கூப்பிட முடியாது. கடவுளின் தோளில் சாய்ந்து அழ முடியாது. தனியே வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.

03)செண்டிமெண்ட்கள் வைத்து தைரியத்தை பூஸ்ட் பண்ணிக்கொள்ள முடியாது. தாயத்து எல்லாம் கட்ட முடியாது.

02)கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்கவோ, செய்த பிழையை மறைக்க ஐஸ் வைத்து திருப்திப்படவோ முடியாது. 

01)நிறையத் தன்னம்பிக்கை வேண்டும்!

டேர்ட்டி பிக்சர்- தமிழில் 'கில்மா படம்'?

டேர்ட்டி பிக்சர் படத்தை தமிழில் எடுக்கப் போகிறார்கள் என்று கேட்டதும் ஒரு கணம் பகீர் என்றது. காரணம், வித்யா பாலன் செய்த அந்த அருமையான கரக்டரை இங்குள்ள கொழுக் மொளுக் நடிகைகளை வைத்து கடித்துக் குதறி விடுவார்களே என்ற மரண பயம் தான். ஹன்சிகா, தாப்சி மற்றும் நமீதா, நயன்தாரா, அனுஷ்கா  போன்ற நடிகைகளை வித்யாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் ஒரு உருவமில்லா உருண்டை உருள்வதைத் தவிர்க்க முடியவில்லை. 

வித்யா பாலன்: நெருங்க முடியாத தூரம் 
 
தமிழில் நடிப்பது தெரியாமல் இயல்பாக நடிக்கும் நடிகைகளின் காலம் சரிதாவுடன் முடிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. கீழ்வானம் சிவக்கும் படத்தில் சரிதாவைப் பார்த்தபோது அது ஒரு நடிப்பு என்பதே மறந்து விட்டிருந்தது. ஒரு நடிகை நன்றாக நடிக்கிறார் என்பது வேறு. வித்யாவை  இப்போது பார்க்கும் போது எல்லாம் சில்க் வேறு அவர் வேறு என்று பிரித்துணர முடிவதில்லை. சரிதாவுக்குப் பிறகு வந்த நடிகைகள் நன்றாக நடித்தார்கள். ஆனால் அந்த உயிரோட்டம் காணக் கிடைக்கவில்லை. (உ.ம்: ராதிகா) அதற்கும் பிறகு வந்த காலங்களில் அந்த நல்ல நடிப்பைக் கூடக் காண முடியவில்லை. ஓரளவுக்கு நன்றாக நடித்த நடிகைகளின்  வரிசையும்  சிம்ரனோடு நின்று விட்டது.

வித்யா இன் டேர்ட்டி பிக்சர் 


ஒரு நடிகை கொஞ்சம் நன்றாக நடித்தாலே அவர் நன்றாக நடிக்கிறார், நடிப்பில் பிச்சு உதறிவிட்டார் என்று தூக்கி வைத்துக் கொண்டாடியதில், அந்த நடிகைகளும் பிறகு பிறகு ஓவர் ஆக்ட் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். ( உ.ம்: சங்கீதா) சிம்ரன், ஜோதிகா எல்லாம் ஆலையில்லா கோடம்பாக்கத்துக்கு கிடைத்த இலுப்பைப் பூ சக்கரை. சிம்ரனைக் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்காகவும் ஜோதிகாவை சந்திரமுகி படத்துக்காகவும் தூக்கி வைத்துக் கொண்டாடியதைப் பார்க்கும் போது அரங்கேற்றம் படத்துக்காக பிரமிளாவுக்கு பத்மஸ்ரீயே கொடுத்திருக்கலாம் போலத் தோன்றுகிறது. என்ன தான் வெட்டி வீழ்த்தினாலும் கண்கள் அது செயற்கைத்தனம் என்பதை காட்டிக் கொடுத்துவிடும். கண்கள் பொய் சொல்லாத நடிகைகள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் கதாநாயகிகளை விட, ஊர்வசி, வடிவுக்கரசி, காந்திமதி  போன்ற குணச்சித்திர நடிகைகளே அதிகம்.

அரங்கேற்றம் படத்தில் பிரமிளா 


திறமையான நடிகைகள் குறைந்து போனதற்கு, அல்லது இல்லாமலேயே போனதற்கு தமிழ் சினிமாவின் போக்கும் காரணம் என்று சொல்லலாம். முழுக்க முழுக்க ஹீரோவை வணங்கும் படங்களே திரைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் போது, சரிதா, ஷோபா  போல நடிக்கும் நடிகைகளுக்கு இங்கே என்ன வேலை. வெண்ணெய்க்கட்டி, குல்பி, நாட்டுக்கட்டை போன்ற உவமானங்களை  ஈடுசெய்யக் கூடியவராகவும் ஹீரோ வந்து ரிலாக்ஸ் ஆகும் இடமாகவும் இருந்தாலே போதுமே.

சிம்ரன்: கடைசித் திறமைசாலி 


எம்.ஜி .ஆர்-சிவாஜி முதல் சிம்பு-தனுஷ் வரை ஒரு ஜோடி இருப்பது போல சாவித்திரி-சரோஜா தேவியில் இருந்து சிம்ரன்- ஜோதிகா வரை நடிகைகளுக்கான குறைந்த பட்ச மதிப்பு இருந்தது. இப்போது அதுவும் இல்லை. அதுவும் அமலா போல் டூயட் காட்சிகளில் முகத்தை வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் தலையை எங்கேயாவது கொண்டு போய் முட்டிக் கொள்ளலாம் போல இருக்கிறது. ஆனால் அவரை விட சிறந்த அழகி இப்போது யாருமில்லை.அது உண்மை. நடிகைகள் அழக் கஷ்டப் படுவார்கள். அமலா அதற்குத் தலைகீழ். இலகுவாக அழுபவர் சாதாரண  காட்சிகளில் ஏன் தடுமாறுகிறார் என்று தெரியவில்லை. ஹன்சிகாவை எல்லோரும் பேசினாலும் கீழுதட்டைக் கடித்துக் கொண்டு உதயநிதி ஸ்டாலினைப் பார்க்கும் பார்வையிலிருந்து அடுத்த படத்தில் இன்னும் தேறிவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அமலா : அழகிய பொம்மை 


தமன்னா ஆனந்தத் தாண்டவம் ஆடியதில் இருந்து அவர் ஒரு சின்ன நம்பிக்கை. டிராமா தியேட்டர் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் இருக்கலாம். த்ரிஷா விடிவியில் பண்ணியது அருமையான அன்டர்பிளே  நடிப்பு. இருந்தாலும் தமன்னாவின் தோற்றமும் த்ரிஷாவின் இமேஜ் உம் டேர்ட்டி பிக்சர் பண்ண ஒத்துக் கொள்ளாது என்று நம்பலாம்.

இந்த லட்சணத்தில் யாரை வைத்து எடுப்பார்கள் என்று தோன்றுகிறது. அனுஷ்காவை கேட்டதாக தகவல். அனுஷ்கா தோற்றத்தில் வித்யா போல ஹோம்லி ப்ளஸ் செக்ஸி என்று இருந்தாலும் அனுஷ்கா எக்ஸ்ப்ரஷன்களில் வித்யாவுக்கு கிட்டே நெருங்ககூட  முடியாது என்று சொல்லி விடலாம். அருந்ததி படத்தில் அதிகப்படியான கண் மையும்  குங்குமப்பொட்டும் அவரது குறைவான நடிப்பை ஈடுகட்டியது. பிறகு அனுஷ்காவுக்கு டான்ஸ் சுட்டுப் போட்டாலும் வராது. நோ மணி நோ ஹனி பாட்டில் அவர் ஆடியதைப் பார்த்த போது தூக்குப் போட்டுக் கொண்டு சாகலாம் போல தோன்றியது. பிந்து மாதவிக்கு அதே கண்கள். ஆனால் அதே நடிப்பு வருமா என்று தெரியவில்லை. கவர்ச்சி நடிகை என்ற ஒரே காரணத்துக்காக நமீதாவை நடிக்க வைத்தால் சில்க்குக்கு அதை விடப் பெரிய துரோகத்தைப் பண்ண முடியாது.

அருந்ததி படத்தில் அனுஷ்கா 


வித்யா படம் முழுவதும் அவ்வளவு இயற்கையாக நடித்திருந்தார். ஆரம்ப காலத்தில் சின்னப் பெண்ணாக கடையில் இருந்து சாப்பிடுவதில்  இருந்து நஸ்ருதீன் ஷா மனைவியுடன் உறவு கொள்ளும் காட்சியை சாவித் துவாரம் வழியே பார்த்து கண்ணீர் விடுவது, துஷார்  கபூருடன் போகும் போது ' ஆனா என்னை மாதிரி பொண்ணுங்கள படுக்கைக்கு மட்டும் கூட்டி போக முடியுதில்ல?' என்று கோபத்தில் கத்துவது, கடைசியில் அந்த மாதிரிப் படம் எடுக்கும் இடத்தில் போய் மாட்டிகொண்டு போலிஸ் ரெய்ட்  வரும் போது போதையில் தள்ளாடியபடி  மாடிப்படிகளில் விழுந்து தப்பிப்பது, சற்றே முதிர்ந்த தோற்றத்தில் இம்ரான் ஹஸ்மியுடன் இருந்து தண்ணியடிப்பது என்று மீண்டும் மீண்டும் வித்யாவை  நினைவுகொள்ள எக்கச்சக்க சீன்கள். உச்சத்தில் இருந்தது முதல் தரையில் வீழ்ந்தது, பெட்ரூம் சீன் இல் இருந்து இறுதியில் தொங்கிப் போன வயிறு, அதைத்த கன்னம், கண்ணுக்கு கீழே கருவளையங்கள், தோல்வி, புறக்கணிப்பால் நடுங்கும் கரங்களுடன் தம்மடிப்பது என்று வித்யா வாழ்ந்தது சில்க்கின் வாழ்க்கையை. தேசிய விருது கிடைத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. இங்கே படம் எடுக்கும் போது பெட்ரூம் சீன் இல் நடிக்கிறார் என்பதும் ஒரு பெண் சிகரட் புகைப்பதா என்றும் நடிகைகளை கேவலப்படுத்துகிறதா என்பதுமே மீடியாக்களில் பிரதானப்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது.

பிந்து மாதவி : அதே கண்கள் அதே உதடுகள் 



உள்ள நடிகைகளை சல்லடை போட்டு சலித்தால் வித்யா கரக்டருக்கு பெட்டெர் சொய்சாக தெரிபவர் ப்ரியா மணி. சில்க் போலவே கருப்பு நிறம் என்பதாலும் அந்த நீளமான கால்களும் கட்டான உடல்வாகும் என்று சில்க்கின் தோட்டத்துக்கு ஒத்துப் போகக் கூடிய நடிகை என்றால் அது ப்ரியா மட்டும் தான். இவரும் தேசிய விருது வாங்கிய நடிகை என்பதால் அந்த ஒற்றுமை வேறு. நடிப்பும் பிரச்சனை இருக்காது. வித்யா போலவே ஹோம்லி முகம் ஆனால் செக்சியான உடல் ப்ளஸ் நடிப்பு பொருத்தமாக இருக்கும்.

ப்ரியா மணி: இருப்பதில் சிறந்தது 


இன்னொரு பிரச்சனை, டேர்ட்டி பிச்சர் ஹீரோயினை மையப்படுத்தி எடுத்த படம் என்றாலும் மற்ற கரக்டர்களும் சம பலம் பொருந்தியவை. வித்யா கட்டடம் என்றால் மற்றவர்கள் தூண்கள். நஸ்ருதீன் ஷா பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் கரக்டருக்கு சூர்யகாந்தாக இங்கே ரஜினிகாந்தையே நடிக்கவைக்கலாம் என்றால் அடிக்க வருவார்கள். சிவாஜியை இந்த இடத்தில் மிஸ் பண்ணுகிறோமோ என்று தோன்றுகிறது. ' ஸ்பைஸ் இட் அப்' என்று கரகரத்த குரலில் சொல்வதற்கு தாடையில் சுருக்கங்களுடன் இங்கே யாரும் நினைவுக்கு வரவில்லை. ரவிச்சந்திரன் இருந்திருந்தால் சரியாகப் பொருந்தியிருப்பார். அந்த வயது ஹீரோக்கள் யாரும் உயிருடன், துடிப்புடன் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். கொஞ்சம் ஹீரோ இமேஜ் உம் வேண்டும். பேசாமல் கமல்ஹாசன் மேக் அப் போட்டுப் பண்ணினால் என்ன? அது சாத்தியம் இல்லை என்பதால் அரவிந்தசாமி பண்ணலாம் போல தோன்றுகிறது. துஷார் கபூர் அசப்பில் ப்ருத்வி ராஜை ஞாபகப்படுத்துகிறார். அந்த கண்கள்.  சொப்ட்டான ஒரு ஆண் கரக்டருக்கு ப்ருத்வி நல்ல பொருத்தம். இல்லாவிட்டால் பிரசன்னா.ராஜேஷ் ஷர்மாவுக்கு பதிலாக செல்வ கணேஷாக ஒரு டெல்லி கணேஷ், கோட்டா சீனிவாசராவ், பெப்சி விஜயன், அல்லது ஏதோ  ஒரு தயாரிப்பாளரே  பண்ணலாம். ஏன் வினு சக்கரவர்த்தியைக் கூடக் கேட்டுப் பார்க்கலாம்.இம்ரான் ஹஸ்மிக்காக விக்ரம் நடிக்க வேண்டும் என்பது பேராசை. கணேஷ் வெங்கட்ராமன் சரியாக இருக்கும் என்பது நம்பிக்கை.அல்லது சேரன்.

அசத்திய  நஸ்ருதீன் ஷா 

இப்படி எல்லாம் செய்து கஷ்டப்பட்டு  ஒப்பேற்றி, பிறகு  மகளிர் இயக்கங்கள் கொடி பிடிக்க, வினு மீண்டும் கோர்ட்டில் தடை உத்தரவு கேட்டு கேஸ் போட, ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் பண்ண, சென்சாரில் கட் பண்ண , தமிழில் கெட்ட படம் அல்லது கில்மாப் படம் என்று டைட்டில் வைக்க என்று கஷ்டப்படுவதைக் காட்டிலும், டேர்ட்டி பிக்சரை  ரீமேக் செய்யாமல் இருப்பதே சிறந்தது.




'பிரம்மாண்ட' ஹீரோவின் மரணத்தில் மர்மம்?





சில ஹீரோக்கள் செம ஹிட்டாகி  பாகம் ஒன்று, ரெண்டு, மூணு எல்லாம் வந்து சக்சஸ்புல்லா ஓடின சூப்பர்ஹிட் படங்கள்ல நடிச்சிருப்பாங்க. ஆனா படம் பார்த்தப்புறம் வெளில வந்ததுக்கு பிறகு அந்த ஹீரோக்களுக்கு என்ன ஆச்சு, அவங்க இப்பவும் உயிரோட இருக்காங்களா, என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க என்கிறதா யாரும் லைட்ஸ் ஆன் சுனிலுக்கு எழுதிக் கேக்கிறதில்ல. அப்புறம் சில ஹீரோக்கள் டிஸ்கவரி சானல்கள்ளேயும் ஹீரோவா பண்ணியிருக்காங்க.( எஸ்! இவங்க இமேஜ் பார்கிறதில்ல! ) அப்படி பட்ட சில ஹீரோக்களின் மறுபக்கங்கள இப்போ பார்ப்போம்.



'பிரம்மாண்ட ஹீரோ' மமத் (ஹிஹி....)

ஐஸ் ஏஜ் படத்தில ஹீரோவா நடிச்ச இந்த வூலி மமத் 10000  ஆண்டுகளுக்கு முன்பு வரையில பூமியில வாழ்ந்தாங்க. அப்புறமா மனுஷங்க இதோட எலும்புக்கும் கம்பளித் தோலுக்குமா இதை வேட்டையாடிறது ஒரு கலாச்சாரமாவே இருந்துச்சு. இப்பிடியே ஒரேயடியா  வேட்டையாடினதாலையும், இதோடவாழ்விடங்கள் குறைஞ்சு  போனதாலையும் பூமியோட தட்பவெட்ப நிலையில ஏற்பட்ட மாற்றங்களாலையும்  மமத் இனம் இந்த பூமி விட்டே மறைஞ்சு போச்சு. மனுஷன் வேட்டையாடி வேட்டையாடியே அழிச்ச இனங்களுக்குள்ள முக்கியமானது இந்த மமத். இதை இப்ப க்ளோனிங் டெக்னாலஜி மூலமா மீள உருவாக்கலாமா என்று விஞ்ஞானிகள் முயற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க! ஐஸ் ஏஜ் படத்தில நடிச்ச புலி கூட இப்ப பூமியில இல்லாம அழிஞ்சு போன இனம் தான்! மாமாத்தோட மரணத்துக்கு சரியான காரணம் என்ன என்கிறது இன்னமும் சரிவர தெரியாத மர்மமாவே இருக்கு.




மனுசங்கிறவன் ஒரு தீராத பசி கொண்ட விலங்கு அப்படின்னு யாரோ சொல்லியிருக்காங்க. அவன் தன்னோட பசிக்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாராவே இருப்பான். அவனோட தேவைகளை அடையணும்னா அதுக்காக நம்பியார், பி.எஸ்.வீரப்பா ரேஞ்சுக்கு எதையும் செய்யத் தயங்க  மாட்டான். வெளியில டக்சீடோ  போட்டிருந்தா கூட உள்ளுக்கு அவன் இன்னும் வெறி கொண்ட மிருகம். பூமியை பற்றி கவலைப்படாம அவன் செஞ்ச வேலைகளால இன்னிக்கு மமத் மாதிரி இன்னும் நிறைய ஹீரோக்கள் ஆபத்தோட விளிம்புகள்ள இருக்காங்க. இவங்க கூட மமத் இல்லாம போன மாதிரி, மனுஷன் என்கிற வில்லனால இந்த பூமியில இருந்தே அழித்து ஒழிக்கப்படுறதுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு. அப்பிடி ஆபத்து வளையத்துக்குள்ள நின்னுகிட்டிருக்கிற சில ஹீரோக்களோட எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இதோ!

மலை கொரில்லா

கிங் காங்ல ஹீரோவா பண்ணினது நம்ம சொந்தக்கார தம்பி தான்..தூள் கிளப்பிட்டான்ல? இப்போ பாருங்க இவனும் நடிப்பேன்னு  அடம் பிடிக்கிறான்..முதல்ல ஹீரோ..பிறகு சி.எம்...அப்புறம் பி.எம். தான்! 


 இராட்சத பாண்டா

காலங்காத்தாலேயே உனக்கு ரொமண்டிக் மூடு வந்துடுது..பல்லு விளக்கினதுக்கு அப்புறம் லிப் டூ லிப் கிஸ் வைச்சிக்கலாம் ஓகேயா? 


பனிச் சிறுத்தை


ஆமா.. ' அவரு' இருக்காரா இல்லையா? எங்களை பொடாவில புடிச்சு உள்ள போடா முடியாதில்ல? அப்புறம்  டாப்சி மாதிரி எங்களையும் யாரோ வெள்ளாவி வச்சு வெளுத்திட்டாங்களோ?!?



சுமாத்ரா காண்டாமிருகம் 

சனியன் பிடிச்சவனே.. சாப்பிடும் போது க்ளோஸ் அப் ஷாட் வைக்காதேன்னா   கேட்டா தானே? யாரு கிட்டே அசிஸ்டண்டா இருக்கிறே நீ? நீரவ் ஷா சொல்லி கொடுக்கலையா? 


ஸ்டெல்லர் கடல் சிங்கம்


' கடல் மேல் பிறக்க வைத்தான்..எங்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்..' அப்படின்னு புரட்சித் தலைவர் கரெக்டா தான் பாடியிருக்காரு.. வைச்சிருக்கிற பேரைப் பாரு..சிங்கம்..தங்கம்ன்னுட்டு..



பாந்தீரா புலி

நானும் காப்டன் மாதிரி நாக்கை மடிக்க எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்...முடிய மாட்டேங்குதே..


நீலத் திமிங்கிலம் 
அடேய் ...எகிறி  எகிறி அடிக்க நான் என்ன பீட்டர் ஹெயனாடா? லெக் பைட் எல்லாம் குடுத்தபடி போஸ் குடுக்க என்னால முடியாதுடா..விட்ருங்கடா




நட்சத்திர ஆமை 

ஆமைக் குஞ்சை அவிச்சு வைச்சிருக்கோம்னு படத்தில டயலாக்காடா வைக்கிறீங்க..இருங்க வர்ரேன்...


போலார் கரடி 


டேய்..நீ ஒருத்தனுக்கு பிறந்தவனா இருந்தா வெளில வாடா பாக்கலாம்..பி கேர்புல்..பேச்சு பேச்சா இருக்கணும்..


மேலே சொன்ன ஹீரோக்கள் எல்லாம் ரொம்ப ஆபத்தில இருக்கிறவங்க. பூமியில தங்களோட  இறுதிக் காலங்கள்ல இருக்காங்கன்னு சொல்லலாம். இவங்களோட வாழ்க்கைக்காலத்தை  மாதிரி சீரியல் மாதிரி நீடிக்கிறதும் சினிமாப் படம் மாதிரி குறுகலா முடிக்கிறதும் மனுஷங்களோட கையில தான் இருக்கு. அவன் தான் திருந்தணும்! இல்லேன்னா இந்த ஹீரோக்களை வெறும் விக்கிபீடியால மட்டும் தான் பார்க்க முடியும்! 

அப்புறம் இன்னிக்கு  புவி நாள்  (22 .04 .2012 )! 




கொழும்பில் சற்றுமுன் நிலநடுக்கம்!

 

கொழும்பில் சற்று முன்னர் 2 .20 மணியளவில் மெல்லிய நில அதிர்வு உணரப்பட்டது. அதை நேரடியாக உணரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததும் ஜென்ம சாபல்யம் அடைந்தது போல ஏதோ சாதித்த திருப்தி ஏற்பட்டது. வெரி மைல்ட் என்பதால் இப்படி வெட்டியாக உட்கார்ந்து போஸ்ட் போட முடிகிறது.இல்லாவிட்டால் நரகத்தில் இருந்து கொண்டு தான் ஹிட் அடிக்கும் தலைப்பு தேடிக்கொண்டு போலோயர்ஸ் ஐ எண்ணிக்கொண்டும் இருந்திருக்க வேண்டி வந்திருக்கும். 



வழமை போல வெட்டியாக நெட் இல் மீன் பிடித்துக் கொண்டிருந்து விட்டு ஹாயாக சரியலாம் என்று எழும்பிய போது ஹவுஸ் ஓனர் அம்மா ஐயோ ஏனப்பா இப்பிடி (f )பானை புல் ஸ்பீட் இல போட்டு வச்சிருக்கிறியள் என்று புலம்பினார். சரியாய் வேர்க்குது, அதால தான், அதோட ஸ்பீட் ஐ குறைச்சு வச்சாலும் கூட்டி வச்சாலும் ஒரே காசு தான் என்று விஞ்ஞான விளக்கம் ( சுஜாதா எங்கேயோ எப்போதோ சொன்னதாக ஞாபகம்!  ) கொடுத்து விட்டு சனியனே..உண்ட தலையில விழுறதுக்கு தான்..என்று மைன்ட் வாய்ஸ்   ஓட கட்டிலில் வந்து சாய்ந்தேன். சில நிமிடங்களில் கட்டிலின் கீழே இருந்து கட்டிலை யாரோ உலுப்புவது போல ஒரு பீலிங். 



கட்டிலில் ஆணிகள் சற்று லூசானால் அங்கே இங்கே புரண்டு படுக்கும் போது லேசாக ஆடுமே...அப்படி ஒரு ஒரு பீலிங். சரி மனப் பிராந்தியாக  இருக்குமோ என்று தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தால் ஆடுவது தெரியவில்லை. திரும்பவும் கையைத் தலைக்குக் கொடுத்து படுத்த போது திரும்பவும் கட்டிலுக்கு கீழே இருந்து கட்டிலை யாரோ முழு வேகத்துடன் உலுப்புவது போல ஒரு பிரமை. நிச்சயம் இது வெறும் ஹாலுசினேஷன் தான் (ம்ம்..எங்க இருந்து தான் இந்த நேரம் பார்த்து வார்த்தைகள் வந்து முளைக்குதோ..அணையப் போற சுடர் தான் பிரகாசமா எரியுமாமே..ஹீ ஹீ..) என்று திருப்பி நிமிர்ந்து பார்த்த போது பெட் சீட் போர்வை போன்றவற்றிலும் லேசான நடுக்கம். ஸ்க்ரீன் இல் கொழுவி இருந்த ஒரு பையைப்  ஐப் பார்த்த போது அது லேசாக பட பட வென்று ஆடுவது தெரிந்தது. இத்தனைக்கும் அது ஒரு கனமான பை. ஏதும் நில நடுக்கமோ..என்று மைல்டாக ஒரு டவுட் மூளைக்குள் உதயமாக முன்னரே கற்பனை பண்ணிறதுக்கும் ஒரு அளவு வேணாமா..ஜேம்ஸ் கமரூன் ரேஞ்சிற்கா கற்பனை பண்ணுவது என்று மனசாட்சி அதட்டியது. சரி இது (f )பான் காத்து தான் சனியன் கருமத்தை கொஞ்சம் குறைத்து தொலைப்பம்  என்று எழும்பிய போது ஹவுஸ் ஓனருக்கு பயந்து குறைப்பதா என்று ஈகோ தடுத்தது. சரி குறைத்து வைப்பம் ஈகோ கூடாது என்று சித்தர்கள் சொன்னதை நினைத்து எழும்பிய போது மெல்லிய ஒரு தலை உலைஞ்சல்.  குவாட்டர் அடிச்ச மாதிரி தலை ஒரு சின்ன சுத்து..இந்த இடத்தில் தான் ஒரு ப்ளாஷ் பேக் அவசியம். 



அறையில் பாம்பு பல்லிகள் வர கூடிய சாத்தியக் கூறு இருக்கும் அளவுக்கு அறை சுத்தமாக இருப்பதாக இருப்பதாக ஹவுஸ் ஓனர் கருத்துத் தெரிவித்தபடியால் இன்றைக்கு எப்படியும் அறையை சுத்தப்படுத்தும் நோக்கோடு இருந்தேன். அதனால் பொருட்களை ஒழிவிக்கும் போது ஒரு பெப்சி பாட்டில் அடியில் கொஞ்சம் பிரிட்டன் சிரப்போடு கிடந்தது. ( பிரிட்டன் சிரப்- தடிமன், மற்றும் அலேர்ஜிக்கு பயன்படுத்துவது; குடித்தால் தூக்கம் சும்மா போதை மாதிரி கண்களை சுழற்றி அடிக்கும்; நல்ல டேஸ்ட் வேறு!) ஒரு துளி சிரப்புக்காக போத்தலை வைத்து இடத்தை அடைக்க வேண்டுமா என்று யோசனை வந்தது. தூக்கி வீசவும் மிடில் கிளாஸ் மனோபாவம் இடம் தரவில்லை. சனியன் போனா போகுது நாளைக்கு நாளண்டைக்கு தடிமன் வந்தாலும் குடிச்சு வைப்பம்(!) எதுக்கும் என்று முன்ஜாமீன் கணக்காக அதை குடித்து வைத்தேன். அதனால் தான், இப்போது தலை சுற்றல் இருந்த போது கூட நிலம் ஆடவில்லை பிரிடன் வேலை செய்யுது நான் தான் ஆடுகிறேன் என்று நினைத்து ஆடிக் கொண்டு இருந்து விட்டேன். போதாக்குறைக்கு ஒரு துளி சிரப் இப்படி வேலை செய்யுதே இவ்வளவு வீக் ஆகி விட்டேனே இனி மூண்டு நேரமும் முட்டைக்கோப்பி குடிச்சு உடம்பைத் தேத்த வேணும் என்று கூட நினைத்தேன். 

சரி எண்டு (f ) பான் ஐ ஓப்  பண்ண எழுந்தால் அப்பார்ட்மென்ட் வாசலில் கதவு தட்டப்படும் சத்தம். செக்யூரிட்டி அப்போது தான் வீடுகளுக்கு இண்டர்கோம் இல் அறிவிக்கத் தொடக்கி இருந்தார். வெளியில் எட்டிப்பார்த்தபோது ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் எல்லோரும் படிகளை அடைத்துக் கண்டும் லிப்ட் ஐ நெருக்கிக்  கொண்டும் இறங்குவதை காண முடிந்தது. எல்லோரும் போட்ட போட்ட உடுப்புகளோடு. இங்கே என் வீட்டுப் பெண்மணி ஏதோ கட்டடமே குலுங்கத் தொடங்கியது போல அவசரப் படுத்தியதால் செருப்பை மட்டும் போட்டுக் கொண்டு கீழே இறங்கினேன். 




கீழே போனால் பலரும் நில நடுக்கத்தை உணரவில்லை. அறிவித்தல் கொடுத்ததால் மட்டுமே கீழே  இறங்கி வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. நான் நேரே கண்டு கேட்டு உணர்ந்திருந்ததால்  அங்கே சில வினாடிகளில் நான் ஹீரோவாக்கப் பட்டேன். பழையபடி கட்டிலில் படுத்தது முதல் ஆடியது வரை ரிப்பீட்டு! பிறகு வேறு சிலரும் உணர்ந்திருக்கிறார்கள். சிலர் வீட்டில் டி.வி. லேசாக ஆடியிருக்கிறது. என்னைப் போலவே படுத்திருந்த சிலர் கட்டில் ஆடியதை உணர்ந்திருக்கிறார்கள். வங்கிகளில் கணனிகள் ஆடியிருக்கின்றன. மானாட மயிலாட ரேஞ்சிற்கு அவை ஆடியதைக் கண்ட அலுவலர் தானும் எழும்பியதில் அவருக்கும் தலை   ஆடியதில் கீழே மயங்கி விழுந்திருக்கிறார். 

என்னைப் போல கீழே வந்து நின்ற என் நண்பனும் அவன் தங்கையும் நானும் கதைத்துக் கொண்டிருந்தபோது தோன்றியது, அடடா...கலியாணம் கட்டாமல் சாகப் போகிறோமே என்று. நண்பன் சமீபத்தில்  திருமணம் முடித்தவன்! இப்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது கூட அந்த நண்பன் கோல் எடுத்து தற்போது மீண்டும் அதிர்ந்ததாகவும் மறுபடி கீழே வரவும் என்றும் சொன்னான்.மறுபடியுமா? மேலே போகாமல் இருப்பதற்கு கீழே போய் தான் ஆக வேண்டும்.

மெல்லிய  நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது என்று அறிவித்த போது, என்னைத் தொடர்பு கொண்டு, அப்படியா? ஓகே, என்று ஏதோ மழை வரப் போகிறது என்ற ரேஞ்சிற்கு கேட்டுக்கொண்டவர்களையும் , நான் பாட்டுப் போட்டு விட்டு பைலா ஆடியதால் தான் நில அதிர்வு வந்தது என்று ஈவிரக்கம் இல்லாமல் கமென்ட் அடித்த நண்பர்களையும், நீ ஜன்னலால் குதிச்சிட்டியா? என்று கொலைவெறித்தனமாக கொமன்ட் சென்சே இல்லமால் கேட்ட அன்பு உள்ளங்களையும், எல்லாம் முடிந்து இவ்வளவு நேரம் கழித்து இப்போது தான் "சுனாமி அலெர்ட்" என்று சின்னப்புள்ளைத் தனமாக மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கும் நல்லிதயங்களையும், தூங்கப் போகிறேன், ஐந்து மணிக்கு எழும்பும் போது நீ உயிரோடு இருந்தால் கதைக்கிறேன் என்று சொல்லிய பாச மலர்களையும்  இக்கணத்தில் நினைவு கூர்ந்து நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.  ( இப்போது சுனாமி சரியாக 4 .15  இற்கும் 4 .45  இற்கும் இடையில் கொழும்பைத்  தாக்கும் என்று ரூபவாகினி சானலில்   கத்திக் கொண்டிருப்பதால் என்னுடைய இறுதி ஆசை: இந்த ப்ளாக்கில் குறைந்தது 10  கமென்ட்டுகளும் 30  போலோஎர்ஸ் உம்  இருக்க வேண்டும் என்பது. ஹீ ஹீ..)


இலங்கை அமைச்சர்கள் கலக்கும் காமடி டைம்!

இலங்கைப் பாராளுமன்றம் பெருமையுடன் வழங்கும் சித்திரைப் புதுவருட சிறப்பு நிகழ்ச்சிகள்! காணத்தவறாதீர்..! வரும் நந்தன வருடப் பிறப்பன்று சிலோன் டி.வி. இல் ஒளிபரப்பாகவுள்ள இலங்கை அமைச்சர்கள் கலந்து சிறப்பிக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளின் முன்னோட்டமே இது. ( எச்சரிக்கை: மன நோய் அற்றவர்கள், இதயம் பலமுடன் இருப்பவர்கள் எவரும் இதை பார்க்க வேண்டாம். சானலை மாற்றி சன். டி.வி.இல் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம்  பார்க்கவும்-நிர்வாகம் )



நள்ளிரவு 12 .௦௦- அதிகாலை 04 .௦௦ மணி 

பக்திப் பூமாலை  

பிரித் ஓதலுடன்  தொடங்கும் இந்நிகழ்ச்சியில் பிரதமரும் சமய விவகார அமைச்சருமாகிய டி.எம்.ஜெயரட்ன, கிளிநொச்சிக்கு  புத்தர் எப்போது விஜயம் செய்தார் என்பது பற்றியும் A9 வீதியெங்கும் உள்ள ஆல மரங்களில் புத்தர் எப்போது இளைப்பாறினார் என்பது பற்றியும் பிரசங்கம் நிகழ்த்துவார். சிவன் கோயில்களில் இரவோடிரவாக புத்தர் சிலைகள் வந்து உட்கார்ந்திருக்கும் கலியுக அதிசயம் பற்றிய விளக்கவுரையும் இடம்பெறும். இதன் போது புத்த விகாரையை இடித்து அந்த இடத்தில் உருத்திரபுரம் சிவநகர் சிவன் கோயில் கட்டப்பட்டது பற்றிய ஆவணப்படமும் காண்பிக்கப்படும். 



அதிகாலை 04.00 -08 .௦௦ மணி  

பாவிகள் ஆயிரம் 

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கும் சுய முன்னேற்ற நிகழ்ச்சி.  இதில் பாரம்பரிய கைத்தொழில்களான ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, வல்லுறவு போன்றவற்றில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதை அமைச்சர் அவர்கள் விளக்குவர். மேலும் சிறுதொழில் முன்னேற்றத்தின் போது பத்திரிக்கை அலுவலகங்களினுள் புகுந்து அடித்துடைப்பது, மணல் கொள்ளையில் ஈடுபட்டு தொழிலை விஸ்தரிப்பது போன்ற அறிவுரைகளும் நிகழ்ச்சியில் இடம்பெறும். 



காலை 08 .௦௦- 10 .௦௦ மணி  

உது எது அது 

அட்டகாசமான காமடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உங்கள் அபிமான காமடியன் தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க. " ஸ்ரீலங்காவில் ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.2500  போதும்" , " மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.7500  இற்குள் பட்ஜெட் போட முடியும்" போன்று இவர் அடிக்கும்  டைமிங் ஜோக்குகளால் ப்ரோக்ராம் டி.ஆர்.பி. எகிறப்போவது உறுதி.


காலை 10 .00  - நண்பகல் 12 .00 மணி 

ஹோம் டெரர் ஹோம் 

ஜனாதிபதி மற்றும் பல முக்கிய துறைகளின் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, தனது குடும்பத்தோடு பங்குபெறும் நிகழ்ச்சி.  யார் வென்றாலும் பரிசு அந்த குடும்பத்துக்குள்ளேயே போய் சேரும் என்பது தான் இதன் சிறப்பு. பாது காப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ஷிராந்தி ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் பங்கு பெறுவார்கள். இதன்போது க.போ.தா. பாஸ் பண்ணாமல் ஜனாதிபதியாவது, லோ கொலிஜ் இல் ஏ.சி. அறைக்குள் இருந்து பரீட்சை எழுதுவது, 8  பாடங்களில் சராசரி 98  புள்ளிகள் வாங்குவது போன்ற கடினாமான போட்டிகள் இடம்பெறும்.




நண்பகல் 12 .00  - 2 .00  மணி  

கொல்வதெல்லாம் உண்மை  

கேடி நம்பர் 1 சீசன் டைட்டில் வின்னர்  பொதுசனத் தொடர்பாடல் துறை அமைச்சர் மேர்வின்  சில்வா  தொகுப்பாளர் நவி பிள்ளை அம்மாவிடம் மனம் திறக்கிறார். சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்தது, சிரச சானலுக்குள் அடியாட்களுடன் புகுந்து  ஊழியர்களைத் தாக்கியது, ஜெனிவா சென்று உண்மையை சொன்ன மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலார்களின் கை கால்களை உடைப்பேன் என்று அனல் கக்கியது என்று தனது சாதனைகள் பற்றி மனம் திறக்கிறார். 


நண்பகல் 2 .௦௦ - மாலை 04.௦௦ 

சிறப்பு நீயா? பேயா ? 

"அமைச்சர் பதவியைத் துஷ்பிரயோகம் செய்பவரா நீங்கள்? நீயா பேயா? வில் கலந்து  கொள்ள..."என்று ஸ்க்ரீன் இல் ஓடிய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்ட தொழில்துறை  மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு பங்குபற்றுனராக வருவதை விட கெஸ்ட்டாக வரும் அளவுக்கு தகுதி இருப்பதாக சானல் கருதியதால், அவர் நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார். இதன் போது  பதவின் செல்வாக்கைப் பயன் படுத்தி எவ்வளவு காணிகளை அபகரிக்கக முடியுமோ அபகரிப்பது, மனித உரிமை அலுவலகங்களில் வேலை செய்பவர்களை கொலை செய்வது, பின்பு அந்த கொலை வழக்கைத் தனது செல்வாக்கால தாமதப் படுத்துவது எல்லாம் சரியே என்று கூறி தனது கருத்தை முன்வைக்கிறார். 



மாலை 04 .௦௦- 07.௦௦ மணி

சிறப்புத் திரைப்படம்- " ஜெனிவாவில் சொதப்புவது எப்படி? "

வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஹீரோவாக நடித்து வெளிவந்து சில மாதங்களேயான புத்தம் புதுத் திரைப்படம். வில்லன் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையைத் தோற்கடிக்க ஹீரோ எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் அதில் அவர் தோல்வியடைந்து கதறுவதும் தான் படம் முழுக்க வருகிறது. இதில் ஹீரோ நாடு நாடாக அலைந்து சிறப்பு மீட்டிங் வைத்து காலில் விழுந்து கதறும் எமோஷனல் காட்சிகள் பிரமாதமாகப் படமாக்கப் பட்டிருக்கின்றன. ஹீரோவின் நண்பனாக நடித்து அவரைக் கைவிடும் நண்பனாக எஸ் .எம்.கிருஷ்ணா நடித்திருக்கிறார். இறுதியில் நண்பனின் தந்தை மன்மோகன்சிங் என்பவர் கடிதம் எழுதி மன்னிப்புக் கேட்டு கண் கலங்கும் இடம் டச்சிங். சுவிட்சர்லாந்தில்  சில  பாடல் காட்சிகள் படமாக்கப் பட்டிருக்கின்றன. இறுதியில் ஹீரோ " அந்த 4  பேருக்கு நன்றி..." என்று சோகமாகப் பாடிக்கொண்டு நாடு திரும்பி "கற்றதும் பெற்றதும்" என்று நாவல் எழுதுவதோடு படம் முடிகிறது. 


மாலை 07 .௦௦ - இரவு 09 .00 மணி 

 படுக்கலாம் வாங்க !

கால்நடை, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்  கற்பழிக்கும்...சாரி தொகுத்தளிக்கும் மிட் நைட் மசாலா டைப் ப்ரோக்ராம் இது. வயது வந்தவர்களுக்கு மட்டுமே. வெளி நாடுகளில் ஹோட்டல்களில் பெண்களோடு சேட்டை விடுவது, கையைப் பிடித்து இழுத்து தகாத முறையில் நடப்பது, அவர்களோடு சில்மிஷம் செய்து கில்மா வேலைகள் பார்ப்பது, பாரில் விடிய விடிய ஊத்திக் கொண்டு ஹோட்டல் ஊழியர்களோடு தகராறு பண்ணுவது மாதிரியான சகல லீலைகளும் கற்று தரப்படும். போனசாக ' பொண்ணைக் கையப் பிடிச்சு இழுத்தியா?' மாதிரியான காமடி கிளிப்பிங்க்சும் இந்த நிகழ்ச்சியில் உண்டு. 



இரவு 09 .௦௦- 11 .௦௦ மணி 

நீங்களும் கொல்லலாம் ஒரு கோடி 

நான்கு துறைகளின் அமைச்சரும் நாட்டின் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொகுத்து வழங்கும்  மெகா ஹிட் அடிக்கப்போகும் நிகழ்ச்சி இது. கேட்கப்பட இருக்கும் கேள்விகளுக்கான சில உதாரணம் :

1 )  இறுதி யுத்தத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்? 
a) 4 
b) 6 
c)10  
d) யாருமே கொல்லப்படவில்லை

2 ) இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் பகுதியில் எத்தனை விதமான ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டன?

a) இறுதியில் யுத்தமே நடைபெறவில்லை
b) யுத்தத்தில் ஆயுதங்களே பாவிக்கப்படவில்லை
c) பதில் சொன்னால் நான் நாட்டைக் காட்டிக் கொடுத்த துரோகி
d) முள்ளிவாய்க்கால் தூத்துக்குடி  பக்கம், ஈரோடு பக்கம்னா இருக்கு?  
  
இந்த அட்டு ஜோக்குக்கெல்லாம் நான்  சிரிக்கணுமா? ஆள விடுங்கப்பா..!



இரவு 11 .௦௦-நள்ளிரவு 12 .௦௦ மணி 

ஒரு வார்த்தை ஒரு அச்சம் 

இறுதியில் நாட்டு மக்கள் போன் போட்டு கெட்ட கெட்ட வார்த்தைகளில் சானலைத் திட்டும்  நிகழ்ச்சி இடம்பெறும். 

மிஸ் பண்ணிடாதீங்க..!

(யாவும்  கற்பனை! )

Related Posts Plugin for WordPress, Blogger...