ஆதலினால் காதல் செய்வீர்....!

" காதல் ஒரு பப்ளிக் டோய்லட் மாதிரி...
உள்ளே இருப்பவர்கள் எப்படா வெளியே வருவோம் என்று நினைக்கிறார்கள்...
வெளியே இருப்பவர்கள் எப்படா உள்ளே போவோம் என்று நினைக்கிறார்கள்...."

இது ஒரு வாரப்பத்திரிகையில் வெளியான நகைச்சுவைத் துணுக்கு. சிரிக்க வைத்தாலும் எல்லா காதலர்களும் அப்படி அல்ல. காதலை வரைவிலக்கணப் படுத்த எல்லோரும் முயன்றாலும் அது கைக்குள் சிக்குகிற பாடாக காணவில்லை. சங்க காலத்திலிருந்து பின் நவீனத்துவ காலம் வரை காதலை பாடாத கவிஞர்களும் இல்லை. 'காதலிக்க நேரமில்லை' , 'காதலுக்கு மரியாதை ' என்று தொடங்கி 'எங்கேயும் காதல்' வரை காதல் பற்றி வந்த படங்களின் எண்ணிக்கை எக்கச் சக்கம். ரொமாண்டிக் ஹீரோக்களுக்கும் காதலிக்கலாம் போல தோன்றுகிற ஹீரோயின்களுக்கும் தனி இடம். ' காதல் மன்னன் '(ஜெமினி- திரையிலும் நிஜத்திலும்?), 'காதல் இளவரசன்' (கமல், பிரஷாந்த்) என்று பட்டங்கள் வேறு. காதல் காட்சிகள் என்றாலே இப்பவும் மாதவன் தான் முதல் இடத்தில் என்கிறார்கள். அதே போல பக்கத்து வீட்டு பெண் இமேஜ் இருக்கிற கதாநாயகிகளுக்கும் ( கவர்ச்சி இல்லா விட்டாலும் கூட ) தனி மவுசு. ( சினேகா, அசின் ). காதல் பற்றி வந்த புத்தகங்களும் ஏராளம். மில்ஸ் அண்ட் பூன் தொடங்கி ரமணிச்சந்திரன் நாவல்கள் வரை வெளியான ரொமாண்டிக் நாவல்களும் அதிகம்.

இப்படி எல்லோரும் பேசும் அளவுக்கு காதலில் என்ன இருக்கிறது? காதலில் பல வகை. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்ணோடு கண்ணினை கலந்தற்றே என்று வருவது இன்ஸ்டன்ட் காதல். நவீன பாஷையில் சொல்லப் போனால் கண்டவுடன் மூளைக்குள் மின்குமிழ் எரியும். மனதிற்குள் மணி ஒலிக்கும். பிரிதிவிராஜ் இற்கு ஜோதிகாவைக் கண்டதும் நடந்தது மாதிரி. ( படத்தில் தான்....குடும்பத்தில் குழப்பம் உண்டு பண்ணி விடாதீர்கள் !) சிலருக்கு எக்ஸ்ட்ராவாக வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி கூட பறக்கும். ( கொலரா அறிகுறி?).

இதெல்லாம் சற்று மிகைப்படுத்தப் பட்டது போல தோன்றுகிறது. முதல் பார்வையில் ஒரு சின்ன ஈர்ப்பு ( atraction ) வரலாம். ஆனால் காதல்? பலருக்கும் கொஞ்சம் பொதுவான சந்திப்புகள் நடந்தபின்பே காதல் வருகிறது. பார்க்காத காதல், பேசாத காதல் என்று சினிமாவின் சுவாரசியமான பூச் சுற்றல்களைத் தாண்டி, படிப்பு, மதம், ஏன் ராசி, நட்சத்திரம், இதெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு அதன் பின் தைரியமாக காதலில் விழுபவர்களும் இருக்கிறார்கள். காதலிக்க அப்போது தான் தொடங்கி இருப்பவர்களை இலகுவில் கண்டுபிடித்து விடலாம். ஒவ்வொரு குறுந்தகவல் வரும் போதும் அழைப்பு வரும் போதும் முகம் பரவசம் அடையும். தனியே சென்று கதைப்பார்கள். கூட்டம் இருந்தால் ஒற்றை வார்த்தைகளில் கதைப்பார்கள். பெயர் ஒற்றை எழுத்தில் அலைபேசியில் சேமித்து வைக்கப் பட்டிருக்கும். யார் என்று கேட்டால் முரண்பாடான பதில்கள் வரும்.

பொதுவாகவே எல்லாக் காதலர்களும் ஆண் பெண் பேதம் இன்றி possasivness உடையவர்களாகவே இருக்கிறார்கள். தன் காதலி/காதலன் எதிர்ப் பாலாருடன் கதைப்பதை நிச்சயமாக வெறுக்கிறார்கள். தாங்கள் சொன்னதை சொன்ன நேரத்தில் முடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தாமதமாக வந்தமைக்கோ அல்லது தொலைபேசியில் அழைக்கும் போது பதில் அளிக்காமைக்கோ சண்டை போடாத காதலர்களை நீங்கள் கண்டிருக்கிறீர்களா?

எல்லாக் குறும்புகளும் பரவசங்களும் கொஞ்ச காலத்தில் தீர்ந்து விடும். கதைக்க வேண்டிய எல்லாவற்றையும் ஒரு வருடத்திற்கு உள்ளாகவே கதைத்து முடித்து விடுகிறார்கள். அதற்குப் பிறகு இதுவரை கவனித்திராத குறைகளும் பெரிதாகத் தென்படத் தொடங்குகிறது. இது சரி இது பிழை என்று சீர் தூக்கிப் பார்க்க முடிகிறது. கல்லூரிகளில் தொடங்கும் காதல் சில மாதம் பல்கலைக் கழகங்களில் தொடங்கும் காதல் சில வருடங்கள் என்று முடிந்த எத்தனையோ காதல் கதைகளை நீங்களும் கண்டிருக்கலாம். கல்யாணத்தில் முடிந்த காதலும் நிறைய உண்டு. கல்யாணத்தின் பின் முறிந்த காதலும் உண்டு. ஆறு , ஏழு வருடங்கள் விரட்டி விரட்டி காதலித்து , கல்யாணம் பண்ணி, பிறகு விவாகரத்து வரைக்கும் போகும் போது, எங்கு தப்பு நேர்ந்தது என்று யாருக்கும் தெரிவதில்லை. ஒரு கவிதை ( இதுவும் இரு வார இதழில் இருந்து )

"எல்லா காதலர்களும் ஒரு நாள் அழுகிறார்கள்...
சிலர் பிரிந்ததற்காக.....
சிலர் சேர்ந்ததற்காக....."


திருமணம் வரை காத்திருக்காமலும் கருத்து வேறுபாடுகளால் பிரிகிறார்கள். அப்படிப் பிரியும் போது அது வரை காதலித்த காலங்கள் வீணடிக்கப் பட்டு விடுகின்றன. அல்லது அடுத்த முறை விடக்கூடாத பிழையை காட்டித் தந்து விட்டு செல்கின்றன. காதலர்களில் ஒருவரின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது, அபிப்பிராய பேதங்கள் மெல்ல வளர்ந்து உருவெடுத்து ஒரு கட்டத்தில் முற்றி வெடிக்கும் போது பிரிவு நேரிடுகிறது. இன்னொரு வகைப் பிரிவு தான் மிகவும் கொடுமையானது. மதம், சாதி, பணம், ஜாதகம் போன்ற பல காரணிகளில் ஏதோ ஒன்றைக் காரணம் காட்டி பெற்றோர் அனுமதி மறுக்கும் போது தான் தாங்க முடியாத துயரத்தைச் சந்திக்க நேரிடுகிறது. சிலர் தாங்கிக் கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். S.J.சூர்யா ஒருமுறை பேட்டி ஒன்றில் சொன்னது போல சிலர் alcoholic ஆகவும் சிலர் workaholic ஆகவும் மாறுகிறார்கள்.

காலம் யாருக்காகவும் காத்திருக்கப் போவது இல்லை, காதலில் வெற்றி பெற்றவர்கள், தோற்றுப் போனவர்கள், எல்லோருக்கும் சேர்த்து காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லோருக்கும் அதே அளவு நேரம், அதே அளவு மணித்துளிகள். காலம் காயங்களை மாற்றுகிறது, அல்லது அதன் தாக்கத்தை குறைக்கிறது. முடிந்து போன காதலை விட இன்னும் அழகான காதல் உங்களுக்காக எங்கேயோ காத்துக் கொண்டிருக்கக் கூடும். எனவே, மீண்டும் தலைப்பை படிக்கவும்.

( தலைப்புக்கு நன்றி, பாரதியார்,மற்றும் சுஜாதா!)

அவன்-இவன்- எவன்?

தெகிவளையில் உள்ள கொன்கோர்ட் கொழும்பில் உள்ள நல்ல தியேட்டர்களில் ஒன்று. ஒ.டி.சி., மற்றும் பல்கனி இல் இருந்து நீங்கள் படத்தைக் கண்டுகளிக்கலாம். ( ஆனால் படம் நன்றாக இருக்க வேண்டுமே!) டிஜிட்டல் ஒலிநயம் மற்றும் அளவுக்கதிகமான குளிரூட்டல். ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் ( பெயரைக் கொஞ்சம் சுருக்கக் கூடாதா...அவரின் இடையின் அளவைப் போல...) ஏரியில் விழுந்து கட்டையை பிடித்து எழும்பும் போதும் விக்ரமுடன் ஈரம் சொட்டச் சொட்ட மலையில் ஏறும் பொழுதும் பிறகு விறகு மூட்டி குளிர் காயும் போதும், படம் பார்த்தவர்களுக்கும் ஏதோ தாங்களும் தண்ணீரில் விழுந்து குளிரில் நடுங்குவது போல உணர்வு...எல்லாம் .சி. யின் புண்ணியம்! படம் முழுக்க தண்ணீரும் குளிரும் மழையும் என்று இருந்தபடியால், பார்ப்பவர்களுக்கும் ஏதோ 4D தியேட்டரில் படம் பார்த்த (f)பெக்ட் கிடைத்தது.

வழமையாக மதிய நேரக் காட்சி மூன்று மணிக்கு நடக்கும். புதுப் படங்கள் என்றால் நான்கு காட்சிகள் என்றபடியால், மூன்று மணிக்காட்சிக்கு பதில் 4.30 மணிக்கு போடுவார்கள். இந்த நேரக் குழப்பத்தால் புதுப் படம், அதுவும் பாலாவின் படம், போதாக்குறைக்கு சனிக்கிழமை வேறு என்று மூன்று மணிக்காட்சிக்கு 2 மணிக்கே நீங்கள் போய் இருந்தால் உங்களின் நிலை பரிதாபம். இன்னும் இரண்டரை மணித்தியாலங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் கதை வருவதே அபூர்வம். விஷால், ஆர்யா என்று இரு முக்கியமான ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படம், அதுவும் பாலாவின் படம் என்று எதிர்பார்ப்புகளுடன் முன் பனியா..முதல் மழையா...என்று காதோரம் பாடல் ரீங்காரம் செய்ய போய் உட்கார்ந்தவர்கள் நிச்சயம் ஏமாந்து தான் இருப்பார்கள். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் வரிசையில் இதுவும் ஒரு சீரியஸ் ஆன, பார்த்து பல நாட்கள் ஆனாலும் நெஞ்சில் தாக்கம் மிச்சமிருக்கிற படமாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்துகொண்டிருந்தால், மன்னிக்கவும்! படம் தொடங்கியதிலிருந்து, கடைசி ஒரு இருபது நிமிடம் வரை சிரிப்பு, சிரிப்பு மட்டுமே. ஆர்யா, விஷால் இருவரும் அப்பா போல பாசம் வைத்திருக்கும் ஒருவருக்கு நடக்கும் கொடூரம், அதற்கு ஹீரோக்கள் இருவரும் கொடுக்கும் தண்டனை இது தான் படத்தின் ஒரு வரிக் கதை. ( ஆங்கிலத்தில் 'one line' ). ஒரு வரிக் கதை மட்டும் அல்ல, பத்து வரி எழுதினாலும் கதை இது தான். பாலா அவர்களின் படங்களில் பொதுவாக கனமான கதை இருக்கும். இந்தப் படத்தின் கதையோ காற்று போல இருக்கிறது.

சேது படத்தில் எத்தனையோ கட்டங்கள் கண்ணீரை வரவழைத்து இருக்கும். நந்த படத்திலும் அப்படித் தான். பிதா மகன் படத்தில் லைலா கதறும் அந்த கட்டத்தில் கண்கலங்காதவர்கள் குறைவு. சேதுவில் விக்ரம் மீண்டும் மனநல மருத்துவமனைக்கு போகும் காட்சியும், நந்தாவில் சூர்யாவின் மரணமும் துக்கம் தொண்டையை இருக்கும் கட்டங்கள். பிதாமகனில் சூர்யா இறந்து விக்ரமும் கைவிடப்பட்டு திரும்பவும் சுடுகாட்டுக்கே செல்லும் கட்டமும் அப்படியே. ஆனால், அவன்-இவனில் அப்படி மனது கனக்கும் கட்டங்களோ, கண்ணீர் வரப்பார்க்கும் காட்சிகளோ எதுவும் இல்லை. முழுவதும் நகைச்சுவைப் படமாக இருந்தாலும் கூட, அடிப்படையான கதை என்று ஒன்று இருக்க வேண்டாமா? முழு நீள நகைச்சுவைப் படங்கள் கூட ஒரு கதையோட்டத்தைத் தழுவித் தானே இருப்பது வழக்கம். உதாரணத்துக்கு காதலிக்க நேரமில்லையில் தொடக்கி பஞ்ச தந்திரம், பாஸ் () பாஸ்கரன் வரை. படம் முழுக்க ஒருவரை ஒருவர் திட்டுவதும் பிறகு பாசத்தைப் பொழிவதுமாக இருந்தால் எப்படி இருக்கும்?

படம் முழுவதும் தாராளமாக கெட்டவார்த்தைகள். தணிக்கையில் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.பெண்களின் உடல் பாகங்கள் என்றால் தானே பிரச்சனை வரும் என்றதாலோ என்னவோ, ஆண்கள், மற்றும் பொதுவான பாகங்கள் மற்றும் பல நாளாந்த வாழ்க்கையில் சொல்ல நா கூசுகிற வார்த்தைகள். நீங்களுமா பாலா? இரட்டை அர்த்தம் அல்ல, நேரடியான ஒரே அர்த்தம் தான். படத்தை கதை இல்லாமல், கொமெடியை கொண்டே நகர்த்துவது என்று முடிவு செய்த பிறகு கடைசியில் அத்தனை கொடூரம் எதற்கு?


விஷால் அற்புதமான நடிகர் என்று இந்த படத்தில் தெரிகிறது. விக்ரம் இற்கும் சூர்யாக்கும் ஒரு புதிய பரிமாணம் கிடைத்தது போல விஷாலுக்கும் கிடைக்கலாம். ஆர்யா படம் முழுக்க ரசிக்கும் படியான கலாட்டா. குடித்துவிட்டு ஜமீன்தாருடன் அடிக்கும் கொட்டத்தில் தியேட்டர் சிரிப்பில் அதிர்கிறது. விஷாலின் மாறுகண் இந்தப் படத்திற்கு அதிகப்படியான உழைப்பு. பெண் வேடத்தில் குத்தாட்டம் போடும் போது அவளவு தத்ரூபமான உடல் அசைவுகள். ஜமீன்தாராக வரும் G.M.குமார் மிகச் சிறந்த இயல்பான நடிப்பு. படம் ஆரம்பிக்கும் போது சிம்மாசனத்தில் படுத்திருந்து குழந்தை போல சிரிப்பதில் இருந்து ஒரு விஷால் ஆர்யா இருவருடனும் சிறு பிள்ளைபோல் பாசத்தைக் காட்டுவதில் இருந்து kungfu panda போல இருக்கிறார். போயும் போயும் இந்தப் படத்தில் இந்த கதைக்காக அவரை இந்தளவுக்கு சேனல் 4 ரேஞ்சுக்கு கொடுமைப் படுத்தியிருக்க வேண்டுமா? அபிதகுஜலாம்பாளை ராக் பண்ணுவதில் இருந்து, லைலாவை டப்பா உருட்டி செயின் அபகரிப்பதில் இருந்து, இன்னும் எத்தனை காலத்துக்கு ஹீரோ, ஹீரோயினை வெருட்டியே காதல் வர வழைப்பதாக பாலா காட்டப் போகிறார்?

ஒரே ஒரு கட்டத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்தாலும் சூர்யா அவ்வளவு ஹான்ட்சம். தியேட்டரில் விசில் சத்தம். ஏழாம் அறிவு எப்போது? நந்தாவில் கண்களில் சாம்பல் நிற லென்ஸ் வைத்து லைலாவிடம் உருகும் சூர்யா ஒருகணம் எல்லோர் ஞாபகத்திலும் வந்து போய் இருக்கக் கூடும். பிதாமகன் 'இளங்காற்று வீசுதே...' பாடல் இசையும் காட்சியும் இன்னும் பலருக்கு நினைவில் வந்துபோகும். அவன்-இவன் பாடல்கள் தெகிவளையில் இருந்து பம்பலப்பிட்டி வரை கூட தாங்காது போல இருக்கிறது.

தனது வழமையான பாணியில் இருந்து வேறுபட்டு புதிய படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் பாலா. ஆனால் ஷேக்ஸ்பியருக்கு சோகம் தான் விசேஷம் என்பது போல பாலா, பாலாவாக இருப்பது தானே அழகு. நகைச்சுவைப் படங்கள் எடுப்பதற்கு தான் சிம்பு தேவன் இல் இருந்து M.ராஜேஷ் வரை இருக்கிறார்களே. அப்படி வித்தியாசமான, நகைச்சுவைப் படமாகவே எடுத்தாலும், அதிலும் பாலா என்கிற முத்திரையின் தரம் கெடாமல் பார்த்துக் கொள்வது தானே அழகு. இல்லா விட்டால், ட்ரைலர் இல் ஆவது எதையாவது காட்டி எதிபார்ப்பைக் குறைத்திருக்க வேண்டாமா? ( பாலா இவ்வளவு விரைவாக படத்தை முடித்ததுமே உங்களுக்கு ஒரு மெல்லிய சந்தேகம் வந்திருக்க வேண்டாமா?!) முழு நீள நகைச் சுவையையை எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு ஒருவேளை படம் ஒரு விருந்தாக இருக்கக் கூடும். மற்றபடி, பாலாவின் அடுத்த படத்துக்காக ஆவலுடன் காத்திருக்க வேண்டியது தான்.

குற்றப் பத்திரிகை

கமலின் மற்றுமொரு தீர்க்கதரிசனம் அன்னா ஹசாரே வடிவில் உண்மையாகி இருந்தது. ( அன்பே சிவம் படத்தில் சுனாமி பற்றி கதைத்ததுக்கு பிறகு உண்மையான சுனாமி வந்தது ஞாபகம் இருக்கிறதா? ) அன்னா ஹசாரே இந்தியாவில் ஊழலுக்கு எதிரான லோக் பால் குழுவை அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார். இந்திய அரசும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உறுதியளித்தது. ஹசாரே ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். இந்தியன் படத்திலும் கமல் சுபாஷ் சந்திர போஸ் இன் இராணுவத்தில் இருந்த வீரர். அது மறந்தாலும் கப்பல் ஏறிப் போயாச்சு பாடல் இன்னும் மறந்திருக்காது. ஹசாரே வெள்ளை நிற கதர் உடுப்பும் அதே உஜாலா வெள்ளை கொங்கிரஸ் தொப்பியுமாக அசல் இந்தியன் தாத்தா போலவே இருப்பார். அவரது போராட்டம் மக்கள் எழுச்சியைத் தூண்டி காந்தியவதமும் அகிம்சை முறைப் போராட்டமும் இன்னமும் காலாவதியாகிவிடவில்லை என்று புரியவைத்தது. சேனாபதிக்கும் ஹசாரேக்கும் இருந்த பெரிய வித்தியாசம் அவர் கத்தியைத் தூக்கி மற்றவர்களைக் களைஎடுத்தார். இவர் பட்டினி என்ற கத்தியால் தன்னைத் தானே கொல்லத் துணிந்தார். அவரது உண்ணாவிரதத்துக்கு கிடைத்த வெற்றி மாபெரும் வெற்றியாக இந்திய ஊடகங்களால் கொண்டாடப்பட்டது. விகடன் ஹசாரே () இந்தியன் தாத்தா என்று ஒரு குறுந்தொடரும் வெளியிட்டது.

பிறகு நடந்தது தான் கவலைக்குரியது. ராம்தேவ் பாபா என்கிற கோடிக்கணக்கான சொத்துக்களை வைத்திருக்கும் யோகா குரு கறுப்புப் பணத்தை ஒழிக்க உண்ணாவிரதம் இருக்க முனைந்ததும் போலிஸ் வந்து அவரை பலவந்தமாக அகற்றியதும் நீங்களும் பத்திரிகையில் பார்த்திருப்பீர்கள். இதனால், அடுத்ததாக முகேஷ் அம்பானியும் வந்து உண்ணாவிரதம் இருப்பாரோ என்று சந்தேகம் எழுகிறது.

அடுத்த வல்லரசு நாடாக முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்தியாவில் நிலைமை இவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்றால் அடுத்த போர்க்குற்ற வாளியாக முயற்சி செய்து கொண்டிருக்கும் இலங்கையில் நிலவரம் எப்படி இருக்கும் என்று யோசிக்கும் போதே உங்களுக்கும் திகிலாக இருக்கக் கூடும். இலங்கையில் கறுப்புப் பணம் இருந்தாலும் இந்தியா அளவுக்கு அது பொருளாதாரத்தில் ( அப்படி ஒன்று இருந்தால் தானே என்று நீங்கள் முணுமுணுப்பது தெரியும்) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாருக்கும் தோன்றாது ஏனெனில் இங்கே இந்தியா மாதிரி சுவிஸ் வங்கியில் பில்லியன்களாக பத்துக்கும் அளவுக்கு பெரிய பண முதலைகள் பலர் இல்லை. அம்பானி, இன்(f)போசிஸ் நாராயணமூர்த்தி போன்றவர்களுடன் ஒப்பிட்டால் இங்கு இருப்பவர்கள் வெறும் பாரைமீன்கள். ஆனால், ஊழல், லஞ்சம் இரண்டும் பத்து மதன்கள் வந்தாலும் கார்ட்டூன் போட முடியாத அளவுக்கு எல்லாத் துறைகளிலும் வியாபித்து நிற்கின்றன.

அந்நியன் படத்தில் விக்ரம் நாட்டு நடப்பை பார்த்து விட்டு கோபமும் ஆற்றாமையுமாக தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றுவாரே நினைவிருக்கிறதா? அதே மாதிரி இப்போது கிடாரத்தில் தண்ணீரை அள்ளித் தலையில் ஊற்றினாலும் கவலை தீராது. மற்ற எந்த துறையில் லஞ்சம் இருந்தாலும் உங்களால் கொஞ்சமேனும் சகித்துக் கொள்ள முடியும், ஆனால் போலிஸ் துறையில் லஞ்சம் கொடுத்துத் தான் காரியம் சாதிக்க முடியும் என்றால் உங்களுக்கும் இயலாமை மனதில் கனக்கும். உதாரணத்துக்கு, வெளிநாட்டில் இருந்து வரும் தமிழர்கள் யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் என்றால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றாக வேண்டும். அதை வழங்குவதற்கு என்று முறையான ஒரு அலுவலகக் கட்டமைப்போ, சரியான நடைமுரைகோ கியியாது. கொஞ்சம் காசு கொடுத்தால், அன்று மாலையே அனுமதிப் பத்திரம் உங்கள் தொலைநகல் தேடி வந்து சேரும். காசு கொடுக்காவிட்டாலோ, அது சூப்பர் ஸ்டார் மாதிரி. எப்போது வரும் எப்படி வரும் என்று யாராலயும் சொல்ல முடியாது. ஆனால் வர வேண்டிய நேரத்துக்கு சரியாக வந்தும் சேராது. என்னத்தைக் கன்னையா பாஷையில் சொல்வதென்றால் வரும்....ஆனா வராது... அந்த அலுவலகத்தில் பணி புரிபவர்கள் அனைவரும் இராணுவத்தினர் மற்றும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். அனுமதி எடுக்க என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கே தெரியாதது தான் சோகம். " நீ எவளவு குடுத்தநீ?" " அதை விடக் குறைஞ்ச ரேட் இல நான் எடுத்து தாறன்" போன்ற உரையாடல்களையும் நீங்கள் கேட்க முடியும்.

பொருட்களைத் திருடியவர்கள் கைத்தொலைபேசியில் பொருட்களைப் பறி கொடுத்தவர்களிடமே கதைத்துக் கொண்டு உல்லாசமாகத் திரிவதும் காவல் துறையால் அந்த இலக்கத்தைப் பின்தொடர்ந்து கூட திருடர்கள் இருக்கும் இடத்தைப் பிடிக்க முடியாது இருப்பதும் இங்கு மட்டுமே இருக்கும் அதிசயம். இந்தியாவில் இருக்கும் ( தனக்கு சொந்தமில்லாத ) காணியை விற்ற ஒருவரிடம் இருந்து அந்த பத்திரங்களைக் கைப்பற்றி உரிமையாளரிடம் கொடுப்பதற்கு என்ன ரேட் தெரியுமா? இந்திய மதிப்பில் சுமார் பதினைந்து லட்சம் ருபாய்! பணம் தருவதற்கு சம்மதித்த படியால், இப்போது குற்ற விசாரணைப் பிரிவு, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு, என அனைத்து உள் பிரிவுகளும் இப்போது காணியை விற்றவரின் பின்னால்! அன்புச் செல்வன் IPS., ஆறுச் சாமி AC, துரை'சிங்கம்' AC, வோல்டர் வெற்றிவேல், அலெக்ஸ் பாண்டியன், ராகவன் போல காவல் துறை அதிகாரிகள் எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் ஆகக் கூடும்.

ஹசாரே போல இங்கும் யாராவது உண்ணாவிரதம் இருந்தால் நல்லது என்று யோசிக்கிறீர்களா? இந்தியாவில் என்றால் கொஞ்சம் யோசித்து விட்டு பிறகு கோரிக்கைக்குத் தலைசாய்த்து விடுவார்கள். ஜூஸ் குடித்து உண்ணாவிரதத்தை முடிக்கலாம். மிஞ்சி மிஞ்சிப் போனால் கண்ணீர் புகை அடித்து ஆளைத் தூக்கிக் கொண்டு போய் மருத்துவமனையில் படுக்க வைப்பார்கள். இங்கு என்றால், ஹசாரேயின் வீட்டைத் தேடிஅவரது உடையின் நிறத்திலேயே ஒரு வாகனம் வந்திருக்கும். அதை விட பேசாமல் நீங்களும் உண்ணாவிரத யோசனையைக் கைவிட்டு, கொன்கோட் இல் மாவீரன் பார்த்து விட்டு வந்து வீட்டில் ஒரு குட்டித் தூக்கம் போடுவதே சிறந்தது!

மண்டை ஓட்டுக் குகையும் மாயாவியும்

தனிமையில் துணைவர இப்போது எல்லோருக்குமே பல விடயங்கள் இருக்கின்றன. பேஸ்புக் ( தமிழ் அன்பர்கள் மொழியில் முகப் புத்தகம். அப்படி என்றால் twitter தமிழில் எவ்வாறு எழுதுவது? கூவி என்றா? ) மற்றும் இணையம், அரட்டை, தம், தண்ணீர், பண்பலைகள், தியேட்டரில் புதுப் படம் என்று நிறைய இருக்கிறது. ஆனால், இந்த வசதி எதுவும் கிடைத்திராத குழந்தைப் பருவங்களில் பலருக்கும் கதைகள் தான் துணையாக இருந்திருக்கும். சிலர் பிறக்கும் போதே கதை சொல்லுபவர்களும் பிறந்து விடுகிறார்கள் அவர்களுக்காகவே. பலருக்கும் கதாபாத்திரங்கள் புத்தகங்களில் இருந்து நேரடியாக எழுந்து வந்து உலாவுவார்கள்.

நீங்களும் சிறிய குழந்தையாக இருந்த போது பெட் டைம் ஸ்டோரீஸ் ( இதை நிச்சயம் தமிழ்ப் படுத்த முடியாது ) என்ற தலைப்பில் சில வழுக்கல் அட்டைப் புத்தகங்களைக் கண்டிருப்பீர்கள். இந்தக் கதைகளில் வருபவர்கள் பெரும்பாலும் ஆங்கிலக் கதாநாயகர்கள், நாயகிகள். மதராசப் பட்டினம் எமி ஜாக்சன் போல ஒரு மெல்லிய அழகி சின்ட்ரெல்லா. இவளைத் தேடி ஒற்றைக் கால் செருப்புடன் அலையும் இளவரசன். நாயகி கூந்தலை அவிழ்க்க, அதைப் பிடித்து மாடிகளைக் கடந்து வரும் இன்னொரு இளவரசன். உறங்கும் அழகியும் அவளுக்கு உதவி செய்யும் குள்ளர்களும் என்று அது ஒரு விசித்திர உலகம். இளவரசன் வந்து முத்தமிட்டு எழுப்பும் வரை மீளாத் துயிலில் இருக்கும் இளவரசி. அவரை விதைகளைக் கொண்டு வந்து விதைத்ததும் அவரைக் கொடி வானை முட்ட முளைத்து அதில் ஒரு மாளிகை, அதில் நிறையப் பணத்துடன் இருக்கும் ஒரு சூனியக்காரி. இந்தக் கதைகளில் ஒரு அடிப்படை விடயம், இதில் எல்லாவற்றிலுமே சூனியக்காரிகள் இருப்பார்கள். இவர்கள் அழகிய யுவதிகளைக் கொடுமைப் படுத்துபவர்களாகவும் சிறுவர்களை அடுப்பில் உட்கார வைத்து சமைத்து சாப்பிடுபவர்களாகவும் இருப்பார்கள். இந்தக் கதைகளைக் கேட்டே பலரும் இரவில் எழுந்து அலறி ஓடியிருக்கக் கூடும்.

கொஞ்சம் வளர்ந்ததும் அம்புலிமாமா, பாலமித்ரா போன்ற புத்தகங்கள் புழக்கத்துக்கு வந்திருக்கும். நீங்களும் அம்புலிமாமா வேதாளத்துக்கு அந்த நாளில் ஒரு ரசிகராக இருந்திருக்கக் கூடும். அம்புலி மாமாவில் எப்பவும் அந்தத் தொடர்கதைக்கு ஒரே படம் தான். விக்ரமாதித்தன் ஒரு கையில் வாளுடன் தோளில் வேதாளத்தைச் சுமந்து செல்லும் படம். விக்ரமாதித்தன் மட்டும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வர்ணத்தில் உடை அணிந்திருப்பார். வேதாளம் நீட்டி முழக்கி கதை சொல்லி விட்டு ஏதோ கல்லூரி பேராசிரியர் போல கேள்வி கேட்கும். விடை தெரிந்திருந்தும் பதில் சொல்லாவிட்டால் மண்டை வெடித்து சுக்கு நூறாகி விடும் என்று ஆர்.டி.எக்ஸ். வைக்கப் போவது போல மிரட்டல் வேறு. விக்ரமன் ஒவ்வொரு முறையும் சரியான பதில் சொல்லி விடுவதால் வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறி விடும். தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் அடுத்த வாரம் வந்து வேதாளத்தைச் சுமந்து கொண்டு போவார். விக்ரமன் மௌனம் கலைத்தால் வேதாளத்தைக் கொண்டு செல்ல முடியாது, அதே நேரம் பதில் தெரிந்தால் சொல்லியே ஆக வேண்டும். இப்படி ஒரு சிக்கலான புரிந்துணர்வு ஒப்பந்தம்! எப்படா மன்னனுக்கு பதில் தெரியாமல் போகும் என்று வாரா வாரம் குழந்தைகள் காத்திருந்தது தான் மிச்சம்.பாலமித்ராவில் ஒரு தொடர்கதை வந்தது சிலருக்கு இன்னும் நினைவிருக்கலாம். ஒரு ஆண், அவனுக்கு கோபம் வந்தால், கொரில்லாவாக மாறி விடுவான். அவன் குடித்த ஒரு மருந்தின் விளைவு. இந்த கதையைத் திருடித் தான் ஹோலிவுட் இல் 'ஹல்க்' படத்தை எடுத்தார்களா என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம்!

கொஞ்சம் வளர்ந்து பள்ளிக் கூட நூலகங்களுக்கு செல்லத் தொடங்கி கொஞ்சம் உலகம் பிடிபடத் தொடங்கியதும் பலரும் முதலில் அடிமையாவது கொமிக்ஸ் புத்தகங்களுக்கு தான். ( அதாவது 'காமிக்ஸ்') ராணி கொமிக்ஸ் உங்களில் அநேகமானவர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆகியிருக்கும். நீங்களும் மாயாவியின் ரசிகராக இருந்திருக்கக் கூடும். இந்த மாயாவி முகமூடியை கழட்டுவதில்லை. மண்டை ஒட்டுக் குகையில் வசிப்பார். இவர் முஷ்டியால் அடித்தால், அடிபட்ட இடத்தில் மாயாவியின் மோதிரத்தில் இருக்கும் மண்டை ஓட்டுச் சின்னம் பதியும். காட்டு வாசிகளின் நண்பன். ஹீரோ என்ற குதிரையில் டெவில் என்ற நாயையும் கூட்டிக் கொண்டு இவர் காடுகளுக்கு நடுவில் பறக்கும் ஸ்டைலே தனி. அநியாயம் செய்பவர்கள், கடல் கொள்ளையர்கள், கொலை செய்யத் திட்டமிடுபவர்கள் எல்லோருக்கும் மாயாவி ஒரு சிம்ம சொப்பனம். காட்டுக்குள்ளே மாயாவி மலை முகடு, அலெக்சாண்டர் பயன் படுத்திய தங்கக் கோப்பை, சீசரின் வாள் எல்லாம் இருக்கும் ஒரு பொக்கிஷ அறை எல்லாம் உண்டு. அமெரிக்க ஜனாதிபதி லூக்கா ( ஒபமா மாதிரி தான் இருப்பார்!) கூட மாயாவிடம் தான் உதவி கேட்பார். டயானா என்று ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள், ரெக்ஸ் என்று ஒரு இளவரசன் என்று மாயாவிக்குக் குடும்பமும் உண்டு. யாருக்காவது ஆபத்து என்றால் முரசு அறைந்து காற்றில் செய்தியைப் பறக்க விடுவார்கள். சாகாவரம் பெற்றவர் என்று எதிரிகள் அலறுவார்கள். ( உண்மையில் மாயாவிகள் பரம்பரையாக வருகிறார்கள். இது எதிரிகளுக்கு தெரியாது !)

இந்த மாயாவியின் பூர்வீகமும் மேலைத் தேசம் தான். (f)பாந்தம் மெனஸ் என்று திரைப்படமும் 97-98 காலப் பகுதியில் வந்து அங்கே பெரிய வெற்றி. இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு கௌ போய்ஸ் எனப்படுகின்ற குதிரைப் பண்ணை வைத்திருக்கும் இளைஞர்களின் கதைகள் கொமிக்சாக வரும். அதைத் தேடி எல்லோரும் ஓடுவார்கள். இந்தக் கதைகள் பெரும்பாலும் அமெரிக்காவின் டெக்சாஸ், அரிசோனா மாநிலங்களில் நடக்கும். வில்லன்கள் பெரும்பாலும் செவ்விந்தியர்களாக இருப்பார்கள். அதிலும் நவஜோக்கள், அபாச்சேக்கள் என்று பிரிவுகள் உண்டு. டெக்ஸ் வில்லர் மற்றும் டைகரின் கதைகள் கொமிக்ஸ் உலகில் பிரசித்தம். 'இரத்தப் படலம்' பெரும்பாலானோரின் கொமிக்ஸ் சேகரிப்புக்களில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். கிட்டத் தட்ட இதுவும் பழி வாங்கும் அத்தியாயங்கள் நிறைத்த இரத்தச் சரித்திரம். அதே போல நகைச் சுவை கௌ போயாக வரும் லக்கி லுக்கின் கதைகளுக்கு சிரிக்க என்று ஒரு நாள் ஒதுக்க வேண்டி வரும். " டால்டன் நகரம்" , நீங்கள் கவலையில் அமிழ்ந்திருக்கும் போது படிக்க வேண்டிய புத்தகம்.

கொமிக்ஸ் இன் சிறப்பு என்ன என்றால், ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கும். மாண்ட்ரேக் என்றால் மாயாஜால விரும்பிகளுக்கு பிடிக்கும். ஜேம்ஸ் போண்ட் அதிரடி மற்றும் சாகசப் பிரியர்களுக்கு. இரும்புக்கை மாயாவியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவரின் ஒரு கரம் உலோகத்தால் ஆனது. நினைத்த போது உருவத்தை மறைத்துக் கொள்ளும் ஆற்றல் இவருக்கு உண்டு. அப்படி மறைந்திருக்கும் வேளையில் இவரின் உலோகக் கை மட்டும் அந்தரத்தில் மிதப்பது போல பார்ப்பவர்களின் கண்களுக்குத் தெரியும் !

நீங்களும் உங்கள் குழந்தைப் பருவங்களில் இந்தக் கதாபாத்திரங்கள் பலவற்றை உங்கள் மானசீக ஹீரோக்களாக கொண்டிருந்திருக்கக் கூடும். இந்த வினோத உலகம் குழந்தைகளுக்கு மட்டுமே பிரத்தியேகமானது. இந்தப் பருவத்தில் நெருங்கியிருக்கும் இந்த ஹீரோக்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களிடமிருந்து விலகி, அடுத்த குழந்தைகளைத் தேடித் போய் விடுகிறார்கள். மாயாவியும் ஹாரி போர்டரும் இருந்த இடத்தை தல யும் தளபதியும் வந்து பிடித்து விடுகிறார்கள் போலும்! உங்கள் வீட்டுப் பழைய புத்தக மூட்டைகளுக்குள்ளும் பக்கங்கள் கிழிந்து பூச்சி அரித்த ஒரு அம்புலி மாமாவோ லயன் கொமிக்ஸ் ஒன்றோ ஒளிந்து இருந்து நீங்கள் தூசு தட்டும் சமயங்களில் திடீரென்று வெளிப் படக் கூடும். அவற்றை மீண்டும் தொட்டு வாசிக்கும் தருணங்களில் உங்கள் வயதும் குறைந்து, 'தங்கக் கடற்கரையில் ஒருவர் காத்திருக்கிறார் ' என்று குரன் ( மாயாவியின் உதவி ஆள்) மாயாவிக்கு முரசு அறைந்து அறிவிக்கும் சத்தம் உங்கள் காதுகளுக்குள்ளும் மீண்டும் லேசாகக் கேட்கலாம்!

காடுகளின் தேசம்

கிளிநொச்சியும் முல்லைத்தீவும் வறண்டு போய் காய்ந்து கருகி இருக்கும் நகரங்கள் என்று நீங்கள் இதுவரை நினைத்திருந்தால் ஏமாந்து போவீர்கள். நீங்கள் ஏற்கனவே அதாவது யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிக்கு முதல் அங்கு சென்றவராக இருந்தால் வித்தியாசத்தை உணர முடியும். அல்லது பக்கத்தில் அவ்வாறு போய் வந்தவரை வைத்திருக்க வேண்டும்.

முல்லைத்தீவில் வீதிக்கு இரண்டு பக்கமும் பெரிய காடுகள். மணலாறுக் காட்டின் தொடர்ச்சி இந்தக் காடுகள். இங்கே தான் இந்திய அமைதிப்படையின் கடைசிச் சண்டைகள் இடம்பெற்றதாக கூறுகிறார்கள். அடர்ந்த, உயர்ந்த இந்த மரங்கள் தான் அந்த நேரங்களில் கெரில்லாப் போர் முறையின் முக்கிய காரணியாக இருந்திருக்கக் கூடும். மரங்களுக்குக் குறுக்கே வயர்களை கட்டி அதில் கண்ணிகளை வைத்திருந்தது வழி பெரிதும் பரிச்சயமில்லாத போர் வீரர்களுக்கு சவாலாக இருந்திருக்கலாம். சில இடங்களில் வீதியின் அருகாமையில் மட்டும் தேக்கு மரக் காடுகள். சரியான இடைவெளிகளை நடப்பட்டு, முறையாக பராமரித்ததில் நீண்டு வளர்ந்து நெடிதுயர்ந்து (எவ்வளவு கடினமான தமிழ் வார்த்தை!) நிற்கும் தேக்கு மரங்கள். இடையிடையில் எங்கிருந்தோ ஓடி வரும் நீரோடைகள். பாலத்துக்கு கீழே பாறைகளை வழுக்கல் பாறைகளாக்கி, மணலை குவித்து, அதன் மேலாக ஓடிச் செல்லும் மண்ணிற நீர்.

சில இடங்களுக்கு போக இப்போது அனுமதி கிடைப்பதில்லை. தூரத்தில் நந்திக் கடல் தெரிகிறது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்லுக்கு போக முடியும். ( தண்ணீரில் விளக்கெரிப்பதாக கூறிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அந்தக் கோயில் தான்! ) சில இடங்களில் வீதியின் இரு பக்கமும் களப்பு நீர் ஓடி தேங்கிப் போய் நிற்பதனால் அதில் குப்பையாக தாமரைப் பூக்கள்...வெள்ளை, சிவப்பு நிறத்தில் பச்சை இலைகளோடு ஒரு போர்வை போர்த்தியது போல் பூத்துக் கிடக்கின்றன. ஊதா நிறத்தில் அல்லிகள் வேறு.

ஊர் தான் அழகே தவிர மக்களின் வாழ்க்கை சிறிய வீடுகளுக்குள் முடங்கிப் போய் இருக்கிறது. நாலு தடி நட்டுக் கிடுகு வேய்வதை வீடு என்று நீங்கள் ஒத்துக் கொண்டால் அது வீடு. அரசாங்க வீட்டுத் திட்ட வேலைகளும் நடக்கிறது. நீங்கள் முல்லைத்தீவு வீதியில் பயணித்தவராக இருந்தால் மீண்டும் அடுத்த ஜென்மத்தில் தான் அங்கே செல்ல விரும்புவீர்கள். வீதி அமைப்பதற்காக ஜாக்கி சானின் சொந்தக் காரர்கள் ( அது தான் சீனாவைச் சேர்ந்தவர்கள்) வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடிசைகளுக்குப் பின்னும் கொஞ்ச கொஞ்ச இடங்களில் மக்கள் நட்டிருக்கும் வெண்டி, பயறு, கத்தரிச் செடிகள் பூத்திருக்கின்றன. அங்கே பூத்திருப்பது செடிகள் மட்டும் அல்ல, அவர்களின் நம்பிக்கையும் தான்.

முல்லைத்தீவைப் போலவே கிளிநொச்சியும் செழிப்பான மற்றுமொரு நகரம். நிறையக் குளங்கள். பெயர் தெரிந்த பெரிய குளங்களில் இருந்து பெயர் தெரியாத, அங்கங்கே தேங்கி நிற்கும் குட்டைகள் வரை தண்ணீர் தண்ணீர். ( பாலு மகேந்திரா படத்துக்கு நேர் எதிராக). இரணை மடுக் குளத்து நீர் ( இராணுவம் முன்னேறிய பொது புலிகள் அணைக்கட்டைத் திறந்து விட்டதாகக் கூறிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் குளம் தான்!) வீதியின் ஒரு பக்கத்தில் அகலமான ஒரு வாய்க்காலாக ஓடி வருகிறது. பிரதான வீதியில் இருந்து சிறு வீதி பிரியும் போது அந்தச் சிறிய வீதியின் இரு பக்கங்களிலும் மஞ்சள் நதி போல ஓடி வருகிறது. அடர்ந்த காட்டு மரங்கள், நீர்த் தாவரங்கள், என எல்லாவற்றையும் தாண்டி பச்சை வெளியாக இருக்கும் வயல்களில் போய் நெல்லின் காலை நனைக்கிறது. ஒரு பழைய படத்தில் பிரஷாந்த், சைக்கில் ஒன்றை உருட்டிய படி ' அட இங்கே பார் தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்....' என்று பாடியபடி வருவார் ஞாபகம் இருக்கிறதா? அந்த பாடல் காட்சியில் வரும் இடம் போலவே அத்தனை பசுமையும் நீரோடைகளும்.

பிரதான வீதியில் இருந்து பிரியும் அந்த சிறு வீதியில் இருக்கும் ஒரு ஒழுங்கையில் ஒரு இல்லம். அதை நடத்தி வரும் கன்னியாஸ்திரி ஒரு சிறிய உருவம். சின்ன மோட்டார் சைக்கிள் ஓடுகிறார். வயதானவர். யுத்தக் காலத்தில் கடைசி நேரம் வரையும் இருந்து பிறகு இல்லத்தில் இருக்கும் பிள்ளைகளுடன் இடம் பெயர்ந்து புனர்வாழ்வு முகாமில் இருந்து இப்போது மீண்டும் அதே பழைய இடத்தில் அதே இல்லத்தில் இன்னும் அதிக பிள்ளைகளுடன் இருக்கிறார். கிணற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுத்து குளியலறைக்கு சுமந்து செல்லும் பிள்ளைகள். ( குழாய் மற்றும் மோட்டார் வசதி இல்லாததால்) அவர்களுடைய பொது மண்டபத்தில் அத்தனை அமைதி. அப்படி ஒரு சுத்தம். உயரத்தில் ஒரு மேடையில் மேரி குழந்தை இயேசுவின் கையை பிடித்தபடி நிற்கிறார். பணப் பற்றாக் குறை இருந்தாலும் உரிய நேரத்தில் அந்த பணத்தை இறைவன் அனுப்பி வைப்பான் என்று அந்த கன்னியாஸ்திரி அம்மையார் அமைதியாக புன்னகைக்கிறார். சிறு பிள்ளை போல் ஓடியாடி வேலை பார்க்கும் இன்னொரு கன்னியாஸ்திரி, கண்ணாடி அணிந்த தலைமை கன்னியாஸ்திரி என்று அந்த இடம் ஒரு விதமான பரிசுத்தமான இடமாக இருக்கிறது. காற்றில் ஒரு மெல்லிய சோகம் பரவினது போன்ற அமைதி அந்த இடத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தக் கன்னியாஸ்திரி முன்பு இல்லத்துப் பிள்ளைகளுடன் புனர்வாழ்வு முகாமில் இருந்த போது இவருக்கு கன்னியாஸ்திரி என்ற சலுகையில் கொஞ்சம் கூடுதல் உணவு கிடைக்குமாம். அந்த நேரம் அங்கே கடும் உணவுப் பஞ்சம் இருந்தது. இவர் தனக்குக் கிடைக்கும் உணவை , உணவுக்காக அழும் மிகவும் வயது குறைந்த பிள்ளைகளுக்கு கொடுத்து விடுவாராம் என்று கூறினார்கள். கேட்கும் போது இவ்வளவு பசுமையும் தண்ணீரும் செழிப்பும் இந்த மாதிரி உள்ளங்களுக்காகத் தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

எவ்வளவு அழகான செழிப்பான இடம் என்று கூறும் போது அதற்காக தானே இத்தனை சண்டையும் என்று திருப்பிக் கேட்கிறார்கள். உண்மை தானோ?
Related Posts Plugin for WordPress, Blogger...