மாவிலாற்றங்கரையில் புத்தர்-2006

இலங்கையில் நடந்து கொண்டிருந்த, அதாவது இழுபறிப்பட்டுக் கொண்டிருந்த சமாதானப் பேச்சு வார்த்தை, புலிகள் மாவிலாறு அணைக்கட்டை மூடி தண்ணீர் போக விடாமல் தடுத்ததும் முடிவுக்கு வந்து யுத்தம் மீண்டும் தொடங்கியதும் நினைவிருக்கலாம். ( அப்படி மூடாமல் இருந்திருந்தாலும் வேறு ஏதோ ஒரு விதத்தில் தொடங்கியிருக்கலாம்! ) ஒருவேளை அந்த நேரம் புத்தர் உயிரோடு இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? அல்லது என்ன சொல்லியிருப்பார்? சீரியஸாக இந்த கேள்வியை கேட்டுக் கொண்டு விடை காண வேண்டும் என்றால், புத்தர் பற்றிய ஒரு முக்கியமான மாயை முடிவுக்கு வர வேண்டும்.



புத்தர் எவ்வாறு துறவு பூண்டார்? அரண்மனையில் சொகுசாக வளர்ந்தவர், ஒரு இளைஞராக வந்ததும், நகர் வலம் சென்று பார்க்க ஆசை வந்து தேரில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த முதியவர், நோயாளி, மற்றும் ஒரு பிரேதம் இவற்றை வாழ்க்கையிலேயே முதன்முதலாக பார்த்து மனமுடைந்து, வாழ்வின் நிலையாமையை பற்றிச் சிந்தித்தார்; அரண்மனைக்குச் சென்று ஒரு நள்ளிரவுப் பொழுதில் மனைவி யசோதரையையும் மகன் ராகுலனையும் தவிக்க விட்டு சொல்லாமல் கொள்ளாமல் சந்நியாசம் கொண்டு சென்றுவிட்டார் என்று தானே பொதுவாக கூறுவார்கள். ஆனால் தற்போது சில புதிய ( அதாவது பழைய ) உண்மைகள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் கூறப்படுகின்றன.

புத்தர் முதியவர்களையோ, நோயாளிகளையோ அல்லது இறப்பையோ அதுவரைக்கும் காணவில்லை என்பது லொஜிக் சற்றும் இல்லாதிருக்கிறது என்பது இவர்களுடைய வாதம். ஏனெனில் புத்தரின் தந்தை ஒரு வயதான முதியவர். மேலும் பல முதியவர்கள் ஆலோசகர்களாகவோ, உறவினர்களாகவோ இருந்திருப்பார்கள். 29 வயது வரை வளர்ந்த சித்தார்த்தனுக்கு அதுவரையில் ஒரு தலையிடி, காய்ச்சல் கூடவா வராமல் போயிருக்கும்? அவருக்கு இல்லாவிட்டாலும், கூடியுள்ளவர்களுக்கு ஒரு வியாதியாவது வராமல் போயிருக்குமா? ஒரு மரணம் கூடவா நிகழ்ந்திருக்காது? இத்தனைக்கும், புத்தரின் அன்னையே இறந்து விட, அவரை வளர்த்தது சித்தி தான்.

புத்தரின் துறவின் மெய்யான காரணம் இது தான். புத்தர் சாக்கிய வம்சத்தைச் சேர்ந்தவர். சாக்கியர்களுக்கும் கோலியர்கள் என்று அழைக்கப்பட்ட இன்னொரு குழுவினருக்கும் இடையில் தண்ணீருக்காக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்திருக்கிறது. காவிரி, முல்லைப் பெரியார் அணைக்கட்டுகளில் பிரச்சனை நடப்பது போல. கமிஷன் வைத்து விசாரிக்கும் பழக்கம் எல்லாம் அப்போது இல்லை. ஹரி படம் மாதிரி அரிவாள், கம்பு என்று ஆயுதங்களுடன் மோதலில் இறங்கி விடுவது தான் வழக்கமாக இருந்தது.

அப்படி தான் ஒரு முறை ரோகினி ஆற்றங்கரையில் சாக்கியர்களும் கோலியர்களும் நதி நீருக்காக படை திரட்டிக்கொண்டு சண்டைக்குத் தயாராக நின்றார்கள். இதில் புத்தருக்கும் ( அப்போது சித்தார்த்தன் , சாக்கியர் தலைவனின் மகன், இளைஞன் ) படை வீரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் :

" போர்வீரர்களே ! எதற்காக நீங்கள் ஒருவரை ஒருவர் கொல்லத் தயார் நிலையில் நிற்கிறீர்கள்? "

"எங்களது வறண்ட பூமிக்கு நீர் வேண்டும். அதற்காக தான்"

" அப்படி எனில் மதிப்பு குறைந்த தண்ணீருக்காக அதிக மதிப்பு வாய்ந்த இரத்தத்தை வீணாக்கலாமா? " கேட்டார் புத்தர்.

" இல்லை...வீணாக்கக் கூடாது " என்றார்கள் இருசாராரும்.

" அப்படிஎன்றால், ஆயுதங்களை எரிந்து விட்டு அமைதியாக உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்" என்றார் புத்தர்.

( நன்றி: அருணன், தர்மமும் சங்கமும்)

மேலும், இந்த நதி நீர் யுத்தம் நடந்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு வந்த போது சித்தார்த்தனும் அதில் போரிட்டே ஆக வேண்டிய சூழல் வந்தது. இல்லையென்றால் அவரது குடும்பம் நாடு கடத்தப் படும். இப்படி ஒரு இக்கட்டான நிலையிலும் தான் போரில் ஈடுபடுவது நடக்கவே முடியாத, தன்னால் எக்காலத்திலும் இயலாத ஒரு காரியம் என்று சித்தார்த்தன் கருதியதாலும், குடும்பத்தின் மேல் தண்டனை சுமத்தப் படுவதைத் தடுக்கவும், ஏற்கனவே மூப்பு, பிணி, சாக்காடுகளால் மனம் பாதிப்புற்றிருந்த சித்தார்த்தன் துறவறம் என்ற முடிவை எடுத்தார்.


இப்போது, கற்பனை செய்து பாருங்கள். ரோகினி ஆற்றுக்கு பதிலாக மாவிலாறு. சாக்கியர்களுக்கும் கோலியர்களுக்கும் பதிலாக புலிகளும் இராணுவமும்! புத்தர், தான் அன்று சொன்னதையே திரும்பவும் சொல்லி இருப்பார். கேட்கும் பக்குவம் இவர்களுக்கும் இருந்திருக்காது, அன்று இல்லாததைப் போலவே. புத்தர் மீண்டும் ஒருமுறை துறவறம் பூண்டிருப்பார். இன்னும் எத்தனை தரம் தண்ணீருக்காக செந்நீர் ஓடுவதைத் தடுக்க அவர் துறவறம் ஏற்க வேண்டுமோ? பாவம் புத்தர்.




சங்கக்கார- நிஜத்திலும் ஒரு அதிரடி இன்னிங்க்ஸ்?

சங்கக்கார என்றால் எல்லோருக்கும் தெரியும். இலங்கை அணிக்கு சில மாதங்கள் முன்பு வரை கப்டனாக இருந்தவர். இந்த தடவை இலங்கை அணி இரண்டாம் இடம் பிடித்த உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியவர். நல்ல விக்கெட் காப்பாளர். ஒரு நாள் போட்டிகளில் பத்து செஞ்சரிகளும் டெஸ்ட் இல் இருபத்து நான்கு செஞ்சரிகளும் அடித்திருப்பவர். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டில் ICC இன் தலை சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரருக்குரிய விருதை வென்றவர். டெஸ்ட் இல் அதிகபட்சமாக 287 ஓட்டங்களைப் பெற்றவர். ஆனால் அவர் இப்போது சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது மேற்கூறிய எந்த விடயங்களுக்காகவும் அல்ல. பழமையான கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்ட Marylebone கிரிக்கெட் கிளப் இற்காக புகழ் பெற்ற லோட்ஸ் அரங்கில் வைத்து அவர் ஆற்றிய உரை தான் சமீபத்தில் அவரை ஒரு சர்ச்சைக்குரிய வீரராக அடையாளம் காட்டியிருக்கிறது.

அந்த உரையில் அவர் பல விடயங்களைக் குறிப்பிட்டிருந்தாலும், இலங்கைக் கிரிக்கட் சபையில் நிலவும் அரசியல் பற்றி அவர் வெளிப்படையாக குறிப்பிட்டது தான் இலங்கையிலுள்ள அரசியல் வாதிகளுக்கு மூக்கின் மேல் கோவத்தை வரவழைத்திருக்கிறது. கிட்டத்தட்ட வளர்த்த கடா மார்பில் பாய்ந்த்தது போல எரிச்சலை அது அவர்களுக்கு ஏற்படுத்தி விட்டிருப்பது புரிகிறது. வரிந்து கட்டிக் கொண்டு விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே விசாரணைக்கு உத்தரவிட்டது வரை பல கூத்துக்கள் அரங்கேறி இருக்கின்றன.உரை ஆற்றிய பிறகு இலங்கையிலுள்ள அனைத்து மொழிப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் இடம் பிடித்தார் சங்கக்கார.



பல துறைகளில் அரசியல் தலையீடுகள், தனி நபர் அரசியல் இடம் பெறுவது ஒன்றும் புதிதல்ல. அதற்கு இலங்கையோ, அதன் கிரிக்கெட் துறையோ விதி விலக்கல்ல. ஆனாலும், ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் துறையில் அரசியல் புகுந்து அதை சீரழித்தால் அதைக்கொட சகித்துக் கொள்ளலாம், ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட்டை விட ஏகப்பட்ட அடையாளங்கள் இருக்கன்றன. இலங்கை போன்ற ஒரு வறிய, சாபக்கேடு பிடித்த நாட்டுக்கு உலக அரங்கில் இருக்கும் ஒரே ஒரு புகழ், அடையாளம் என்றால் அது கிரிக்கெட் தான். அதில் மட்டும் தான் no.1 இடத்தை ஒரு முறையாவது பெற முடிந்தது. இப்போதும் no.2 தான். அப்படி இருக்கும் ஒரு விளையாட்டிலும் ஊழல், அடியாள் சண்டைகள் என்று இருந்தால் எப்படி இருக்கும்?

அந்த ஆதங்கத்தைத் தான் சங்கக்கார வெளிப்படுத்தி இருந்தார். 1996 இல் உலகக் கோப்பைக்குள் இருந்த போது உரிய அடையாளத்தை பெறுவதே சிரமமாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார். கிரிக்கட் சபையில் இருக்கின்ற பிரச்சனைகள் விளையாட்டு வீரர்களைக் கூட கெடுத்து விடுவதால் வீரர்களை ஒருங்கிணைத்து விளையாடுவதும், மாறி மாறி வந்து போகும் சபைகளோடு ஒரு சமநிலையைப் பேணுவதும் எவ்வளவு கடினமானது என்று கூறியிருக்கும் அவர், அரசியலாக்கப்பட்ட தெரிவுகளால் 1999 இல் முதல் சுற்றிலேயே வெளியேற நேர்ந்தது என்றும் வருத்தப் பட்டிருக்கிறார். கை கலப்புகள் கூட இடம் பெறும் கிரிக்கெட் சபையின் வருடாந்தக் கூட்டங்களை பற்றி அவர் விமர்சித்ததும் பலருக்கும் உச்சக் கட்ட ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கலாம்.

இது இன்னுமொரு சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறது. இம்முறை இரண்டாம் இடம் வரைக்கும் இலங்கை அணியை அழைத்துச் சென்ற ஒரு தலைவர், உடனடியாக, கட்டு நாயக்கா விமானத் தளத்தில் கால் வைக்காத குறையாக பதவி விலக வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவுக்கு அரசியலும் ஊழலும் அவரை விசனமடையச் செய்திருக்கிறதா என்றும் தோன்றுகிறது. அதைவிட , அவர் பதவி விலகியதும் எழுந்த ஒரு தகவல் தான் இன்னும் சுவாரசியமானது. டில்ஷான் இப்போது சிறப்பான போர்ம் இல் இருப்பதால் ( உலகக்கோப்பையிலும் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக இருந்தார்) அவரை அணியின் தலைவராக்க தீர்மானித்த போது டில்ஷான் ஒரு 'தூய சிங்கள பௌத்தர் ' அல்ல என்று கூறி மறுக்கப் பட்டதாம்! பிறகு ஏதோ ஒரு நல்ல வேளை, புத்தரே வந்து கனவில் கூறினாரோ என்னவோ, அவரையே தலைவராக்கி விட்டார்கள்.(பிறகு என்ன ரன்தீவ் இற்கா கொடுக்க முடியும்? பிறகு நோ-போல் போட்டு யாரையும் செஞ்சரி அடிக்க விடாமல் பண்ணி விடுவார்! ) தூய சிங்கள பௌத்தர் இல்லாத காரணத்துக்காக அவரை இனி வெள்ளாவி வைத்தா வெளுக்க முடியும்?

ஒரு பெரிய உரையின் மிகச் சில பந்திகளை மட்டும் வைத்துக் கொண்டே அவரைப் பற்றி, அவர் சொன்னது சரி என்றோ, பிழை என்றோ விவாதிக்கிறார்கள். இந்த சர்ச்சைக்குரிய பகுதியால் சில முக்கியமான பகுதிகள் அமுங்கிப் போய் விட்டன. 1983 கலவரத்தின் போது சில தமிழ்க்குடும்பங்களை கலவரக்காரர்களுக்கு ஒளித்து வீட்டில் வைத்திருந்தது பற்றியோ , லாகூர் தாக்குதலுக்கு பிறகு கொழும்பு வந்தபோது தனக்கும் ஒரு இராணுவ படைவீரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் ( நான் சாவதற்கு தயாராக இருக்கிறேன்- ஆனால் நீங்கள் ஒரு ஹீரோ- உங்கள் உயிர் அப்படியல்ல என்று கூறிய படைவீரனைப் பார்த்து, தன் உயிர் எந்த விதத்தில் அவனது உயிரை விட உயர்வாக முடியும் என்று தான் சிந்தித்ததாக குறிப்பிடுகிறார். ) பற்றியோ அவர் கூறியதற்காக யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இலங்கையர்கள் பொதுவாக எல்லோரும் ஒருமித்து இலங்கை அணியை ஆதரிப்பதில்லை. தமிழர்கள் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். முஸ்லிம் மக்கள் பாகிஸ்தான் அணிக்கு. அதை விட தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா என்று ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். சிங்கள மக்கள், மற்றும் பிற இனங்களில் இருந்து கொஞ்சப் பேர் மட்டுமே இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவார்கள். இதே இந்தியாவில் பாகிஸ்தானை ஆதரிக்கும் முஸ்லிம்களைப் பார்க்க முடியுமா?

சங்கக்கார சொன்ன இறுதி வரிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் சொன்னது இது தான்; " நான் ஒரு தமிழன்; நான் ஒரு சிங்களவன்; நான் ஒரு முஸ்லிம்; நான் ஒரு பறங்கி; எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஒரு ஸ்ரீ லங்கன் என்பதில் பெருமையடைகிறேன் ".

இந்த உரைக்காக தான் MCC வரலாற்றில் இரண்டாவது முறையாக , 1500 பேர் ஒருவருக்காக எழுந்து நின்று கைதட்டினார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...