'ஆயில்'ய நட்சத்திரப் பெண்கள் ஏன் தேவை!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இராணுவத்தினரின் காணி அபகரிப்புக்கு எதிராக அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது இராணுவத்தினர் கழிவொயில் ஊற்றித் தாக்கினர்-இது செய்தி. மகஜரைக் கையளித்து விட்டு பஸ்களில் பஸ்களில் திரும்பிக்கொண்டிருந்த போது வாகனங்களில் வந்த ராணுவத்தினர் பஸ்களை வழிமறித்து இந்த கழிவொயில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து  இனி இலங்கையில்  இருந்து வெளியாகும் முன்னணி கற்பனை நாளிதழ்கள்  மற்றும்  இணையங்களில் எதிர்காலத்தில் வெளியாகவிருக்கும் சில டுபாக்கூர் செய்திகள்:

யாழ்ப்பாணத்தில் கழிவொயிலுக்குப்  பெரும் தட்டுப்பாடு(அஸ்தமனம்)

யாழில் கழிவொயிலுக்கு திடீரெனப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வீடுகளில் வைக்கப்பட்டிருந்த கழிவொயில் கான்களையும்  படையினர் வீடு வீடாக வந்து சேகரித்துச் சென்றதால் கடி எறும்புக்கு ஊற்றவோ,  சைக்கிள்களில் சத்தம் கேட்காமல் பூசவோ கழிவொயில்  கிடைக்காமல் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர். இந்த அசாதாரண தேக்கநிலையைப்  போக்க அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என யாழ்வாசி ஒருவர் நமது  நிருபரிடம் தெரிவித்தார்.

அடுத்த போராட்டத்துக்கு ஒரு முக்கிய அறிவித்தல் (இடம்புரி)

இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் மக்கள்  அனைவரையும் மழைக்கோட்டுடன் வருமாறு மாவை சேனாதிராஜா எம்.பி. நேற்று அறிவித்தல் விடுத்துள்ளார். 



இந்தியன் ஒயில் கோப்பறேஷன் முக்கிய முடிவு (மண்டே  டைம்ஸ்)

நாட்டில் கழிவொயிலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் கிராக்கியை முன்னிட்டு தங்களது பெட்ரோல் நிலையங்களில் கழிவொயிலையும்   சந்தைப்படுத்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.ஒ.சியின் இலங்கைக்கான தலைமை அதிகாரி நேற்று பத்திரிகைகளிடம்  தெரிவித்தார்.

இலங்கைக்கான இறக்குமதிக் கொள்கையில் புதிய திருப்பம்அமைச்சர் (மண்டே லீடர்)

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சாய் எண்ணையின் அளவைக் குறைத்து இனி வரும் காலங்களில் கழிவோயில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் என பெட்ரோலியத் தொழில்துறைகள் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். படையினர் பெருமளவில் கழிவொயிலைப் பயன்படுத்துவதால் இந்த தீர்மானம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் நேற்று செய்திப்பிரிவிடம் கூறினார்.



இலங்கை இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு ( www .defens.ok )

பாதுகாப்பு அமைச்சு  நேற்று புதியவர்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான விளம்பரத்தை நேற்று வெளியிட்டது. வழமையான  உயர, நீள  அகலங்களுடன் குறிபார்த்து கழிவொயில்  ஊற்றத் தெரிந்திருப்பது மேலதிக தகமையாகக் கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

கழிவொயில்  உடன் தேவை! - படையினர் (தின உரல்)

இனி வரும் காலங்களில் மக்கள் போராட்டங்கள் அதிகம் நடைபெற இருப்பதால் கழிவோயிலும்  பெருமளவில் தேவைப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணத்திலும் மற்றும் முழு இலங்கையிலும் கழிவொயிலை   வீட்டில் வைத்திருப்பவர்கள் உடன் எமது படைப்பிரிவத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மீறுபவர்கள் கட்டாய கழிவொயில்  சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மேலதிக  விசாரணைக்காக பூஸாவுக்கு அனுப்பப்படுவார்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி-  
மேஜர் ஜெனெரல்  மஹிந்த ஹத்துருசிங்க,
 பாதுகாப்புப் படை தலைமைச் செயலகம், 
பலாலி.



இராணுவத்தின் புதிய உத்தி குறித்து ஆராய  ஹிலாரி  கிளிண்டன் அவசர  வருகை! (ஏ.பி.சி-செய்திச் சேவை )

மக்கள் போராட்டங்களைக் கலைப்பதற்கு இலங்கை இராணுவத்தினர் புதிய உத்தியொன்றை  பயன்படுத்தியுள்ளமையை அறிந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிண்டன் இலங்கைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், செலவு குறைந்ததும் இலகுவானதுமான நவீன உத்தியொன்றை இலங்கைப் படையினர் கையாண்டிருப்பதாகவும், அதுபற்றிய மேலதிக விபரங்களை அறிந்து செல்வதற்காகவே தாம் இலங்கை வந்திருப்பதாகவும் கூறினார். மேலும் இவ் இராணுவ உத்தியை அமெர்க்காவில் செயற்படுத்த  ஒபாமாவும் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் இதுகுறித்து அவர் மகிந்தவுடன் தொலைபேசியில் உரையாடுவார் என்றும் தெரிவித்தார்.

மணப்பெண் தேவை (ஸ்ரீ லங்கா மற்றிமோனியல்.கொம்)

இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் ஆண் ஒருவருக்கு பெற்றோர் தகுந்த   மணப்பெண்ணை தேடுகின்றனர். பெண் 'ஆயில்'ய நட்சத்திரமாக இருப்பது முக்கியம்.உடன் தொடர்பு கொள்ளவும்.

கறை  நல்லது- அமைச்சர் விளக்கம் (வீரலட்டு)

அமைதிப்போராட்டத்தை மேற்கொண்ட மக்கள் மேல் இராணுவத்தினர் கழிவோயில் ஊற்றியது சரியா என நீதிக்கும் நியாயத்துக்குமான மக்கள் அமைப்பு எரிசக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் வினவிய போது, " 'கறை' நல்லது"  என அமைச்சர் தெரிவித்தார். சங்கக்கடை கூப்பன் கார்டுகள் மூலம்  இனிமேல் குடும்பங்களுக்கு தலா  இலவச சேர்(f )ப் எக்ஸல் பக்கெட்  ஒன்று வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

தெல்லிப்பழை மருத்துவமனையில்  நோயாளர் அதிகரிப்பு 

பிந்திக்கிடைத்த செய்திகளின் அடிப்படையில் தெல்லிப்பழை மனநோய் மருத்துவமனையில்  நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக மருத்துவமனையின் நம்பத்தகுந்த  வட்டாரங்களிடமிருந்து செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

(செய்தி தவிர யாவும் கற்பனை!)

படங்கள்- நன்றி-tamilwin.com 



Related Posts Plugin for WordPress, Blogger...