பெடரர் : பழி வாங்கிய சிங்கம்

 இந்த ' கொல வெறி ' அட்டகாசப் படுத்தினதாலும், அஸ்வின் வேறு தன் பங்குக்கு ஒரே போடாகப் போட்டுத் தள்ளியதாலும் , போதாக்குறைக்கு  ரஜினி ராணாவை ( வருமா வராதா? ) தூக்கி ஓரமாகப் போட்டு விட்டு ' கோச்சடையான்' இற்கு தேதி குறித்ததாலும் வந்த களேபரத்தில் கடந்த வாரம் ஒரே அமளி துமளி. இதற்கிடையில் டென்னிஸ் உலகின் 'எக்ஸ்பெண்டபில்ஸ்' மோதும் ஏ.டி.பி. தொடர் சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது.  இதில் இந்த ஆண்டு நான்கு கிராண்ட் ஸ்லாம்களையும்  கோட்டைவிட்ட பெடரர், முதல் 3 ராங் களில் இருக்கும் ஜோகோவிச், அண்டி முரே, நடால் எல்லோரையும் கடந்து கிண்ணத்தை கைப்பற்றினார். செமி பைனல் இல் நடாலை பெடரர் 6 :3 , 6:௦ என்று ஒரே அடியில் வீழ்த்தியபோது ( நடால் ரசிகர்கள் மன்னிக்க: ஆம், நடாலுக்கு ரசிகர்கள் கொஞ்சம் ஜாஸ்தி!) நடாலும் ' வை திஸ் கொலை வெறி?' என்று பெடரரை பார்த்து பாடி இருக்கக் கூடும்.இதற்கு பின்னால், (அல்லது முன்னால் )  ஒரு கதையே இருக்கு. பரம வைரிகள் மோதும் போது எப்படி இருக்கும்?  பாகிஸ்தான் இந்தியா கிரிக்கட் நடக்கும் போது , அல்லது லிவர்பூல், எவர்டன் மோதும் போது மைதானத்தில்  அனல் பறக்கும். நம்ம தல, தளபதி படம் ஒரே நாள் ரிலீஸ் ஆனா ச்சும்மா அதிருமில்ல? விளையாட்டில் நீண்ட நாள் தொடரும் பகையை ரிவால்ரி என்று சொல்லுவார்கள். அந்த ரிவால்ரி பெடரர், நடால் இடையே ஆறு வருடங்களுக்கும் மேலாக தொடர்கிறது.சிம்பு வை விட, உண்மையான  வேட்டைமன்னன்  என்றால் அது பெடரர் தான். மொத்தம் 16 கிராண்ட் ஸ்லாம்கள்; இது டென்னிஸ் முடிசூடா மன்னன் பீட் சாம்ப்ராஸ் ஐ விட 2 அதிகம்.  அவுஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யு.எஸ்.ஓபன் ( இதில் தான் சானிய மிர்சா நாகாவது சுற்று வரை முன்னேறினார் ) இந்த நான்கையும் கைப்பற்றிய ஏழு  வீரர்களில் ஒருவர். மொத்தம் 78  டைட்டில்கள் ; தொடர்ந்து  237  வாரங்கள் ( கிட்டத்தட்ட நான்கரை வருடங்கள்! )  டென்னிஸ் தரப்படுத்தலில்  அசைக்கமுடியாத நம்பர் 1  இடத்தில் இருந்தது அசுர சாதனை.தனிக்காட்டு ராஜாவாக 2003  இல் இருந்து பதக்க வேட்டையாடிக்கொண்டிருந்த பெடரருக்கு 2006  இல் சரியான போட்டியாக களம் இறங்கியவர் தான் ரபேல்  நடால். தோனி வந்த புதிதில் சிங்கம் போல ஒரு ஹெயார் ஸ்டைல் வைத்திருந்தது நினைவிருக்கிறதா? அப்படி தோளை தாண்டி நீளும் சிலுப்பிய முடியோடு வந்த ஸ்பானிஷ் புயல்.ஒரே ஆண்டில் நான்கு முக்கிய கிராண்ட் ஸ்லாம் களையும் கைப்பற்றும் பெடரரின் கனவுக்கு தடைபோட்டவர் நடால். 2006  இல் மற்ற மூன்று கிராண்ட் ச்லாம்களையும் வென்றிருந்த பெடரருக்கு பிரெஞ்சு ஓபன் ஐ மட்டும் வெல்ல முடியாது போனது. பைனலில் நடால் வென்றது தான் காரணம்.இரத்தப் படலம் 4 ,5 பாகங்களாக வெளி வந்தது போல, பெடரர்- நடால் பகையும் பின்னால் வந்த பல வருடங்களுக்கு தொடர்ந்தது. 2006  ஐத் தொடர்ந்து, 2007 , 2008 , 2011  என மூன்று வருடங்கள் பிரெஞ்சு ஓபன் இல் பைனல் இல் நடால் இடம் தோற்றார் பெடரர். விம்பிள்டன் இல்  மட்டுமே ஏழு முறை சாம்பியன் ஆனா பெடரருக்கு பிரெஞ்சு ஓபன் மட்டும் பலமுறை எட்டாக் கனியாகிப் போனதற்கு ( 2009 தவிர  ) நடால் ஐ விடவும் இன்னும் ஒரு காரணம் உண்டு. பொதுவாக பிரெஞ்சு ஓபன் எப்போதும் களிமண் தரை அல்லது கடினத் தரைகளில் தான் நடக்கும். பெடரரின் துரதிர்ஷ்டம், நடால் களிமண் தரையில் மன்னன். பெடரரோ , புல் தரையில் கில்லாடி.


அன்டி ரொடிக் , லெய்டன்   ஹெவிட்  , அகாசி என்று சிங்கங்கள் பலரையும் எளிதில் தோற்கடித்த பெடரருக்கு நடால் மட்டும் சிம்ம சொப்பனம். நடாலும்  பெடரரும்  மட்டுமே இதுவரை 26  போட்டிகளில்நேருக்கு நேர் மோதியிருக்கிரார்கள். இதில் 19  போட்டிகளில் நடாலும் ஏழு போட்டிகளில் மட்டுமே பெடரரும் ஜெயித்திருக்கிறார்கள். வேறெந்தப் போட்டியாளரையும் விட பெடரரை அதிகளவில்  வென்று திணரடித்திருப்பது  நடால் தான். 2008  பிரெஞ்சு ஓபன் பைனல்ஸில்  1:6 , 3 :6 , ௦:6  என்ற செட் கணக்கில் நடால் தோற்கடித்தது  பெடரருக்கு ஒரு கொடும் கனவாக இருந்திருக்க வேண்டும்.இந்தத் தொடர் பகையின் உச்சக்கட்டமாக 2009 அவுஸ்திரேலியன்  ஓபன் பைனல்ஸில் நடால் வென்று வெற்றிக்கிண்ணத்தை வாங்கும் பொது அடக்க மாட்டாமல் கண்ணீர் விட்டார் பெடரர். 
அப்புறம் ஜோகோவிச்    ,  அன்டி முர்ரே போல சின்னப்  பயலுங்க எல்லாம் புகுந்து கலக்கத் தொடங்கினாலும் ஜோகோவிச் ஐ 2007   யு.எஸ். ஓபன் இலும் முர்ரே ஐ 2010  அவுஸ்திரேலியன் ஓபன் இலும் வென்று இப்போதும் சிங்கம் தான் என்று காட்டிய பெடரருக்கு 2011  ஒரு மோசமான ஆண்டாக அமைந்தது. 2002  இற்கு பிறகு, ஒரு கிராண்ட் ஸ்லாம் கூட வெல்லாத ஆண்டாக இந்த ஆண்டு அமைந்தது. 

இந்த நிலையில் தான் ஆண்டின் கடைசித் தொடர் ஏ.டி.பி. வந்தது. இதில் ஒவ்வொரு ஆண்டும் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மட்டுமே மோத முடியும்.  சூப்பர் 8 என்பதால் எதிர்பார்ப்பு சூடு பிடிக்கும். பெடரர் இந்த ஆண்டில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டிருந்த சீற்றத்துடன் தொடரில் நுழைந்தார். முதல் இடத்தில் இருந்த முர்ரே காயப்பட்டு விலக  இரண்டாம் இடத்திலில் இருந்த ஜோகோவிச் உம் பாதியில் தோற்று வெளியேறினார். மூன்றாம் இடத்தில் இருந்த நடால் தான் பெடரரிடம் செமி பைனல்ஸ் இல் வசமாக மாட்டினார். 2008  பிரெஞ்சு ஓபன் பைனலில்  படு தோல்வி அடைந்ததில் பெடரருக்கு நான்கு வருடங்களாக மனதில் அணையாமல் கனன்று கொண்டிருந்த நெருப்பு அன்று கொழுந்து விட்டு எரிந்திருக்க வேண்டும். இது பெடரரும் நடாலும் மோதிக்கொள்ளும் 26  ஆவது போட்டியாக அமைந்தது. இதில் 6 :3 , 6 :0 என்ற நேர் செட் கணக்கில் வெறும் ஒரு மணித்தியாலத்தில் நடாலைப் போட்டு போட்டு பந்தாடி பைனலுக்குள் நுழைந்தது சிங்கம். 


பைனல்ஸில் எதிர்த்து விளையாடிய சோங்கோவை தோற்கடித்து சாம்பியன்ஷிப்பை பெடரர் கைப்பற்றியபோது ATP உலகத்தொடர் டைட்டிலை ஆறாவது முறையாகக் கைப்பாற்றிய சாதனையையும் செய்திருந்தார்.  
இந்தத் தொடர் பகையில் கவனிக்கப்பட வேண்டிய விடயம், இந்த ரிவால்றி, பகை எல்லாம் அது மைதானத்திற்குள் மட்டுமே. மற்றபடி, ஒருவர் திறமையை, வளர்ச்சியை அங்கீகரிக்கும், பாராட்டும் மனநிலை இருவருக்குமே இருந்தது சந்தோஷமான விடயம். மைதானத்திற்குள் கூட ஒருவரை   ஒருவர் வேண்டுமென்று  கோபப்படுத்துவது,  கீழ்த்தரமாக திட்டுவது போன்ற ' உயர்ந்த' ஐடியாக்களை எல்லாம் அவர்கள் பாவித்ததில்லை. ATP செமி பைனலில் நடாலை வென்றதுக்கு பிறகு  'பழைய'  பிரெஞ்சு ஒபெனைப் பற்றி பத்திரிகைகள் ஞாபகப்படுத்திய போதும், இனி அதைப்பற்றி யாரும் பேச வேண்டாம் என்று தீர்மானமாகக் கூறி விட்டார் 'FedEx '  என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் டென்னிஸ் மேஸ்ட்ரோ பெடரர். தோற்றபிறகு நடால் கூறியது- "அவர் இன்று என்னைவிட   மிக   நன்றாக விளையாடினார், அதை ஏற்றுக் கொள்ளுங்கள் ! "
அதே போல பெடரர் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுத  'பழைய' அவுஸ்திரேலியன் ஓபன் இல் பெடரர் சொன்னது-  " ரfபா, நீ நம்ப முடியாத அளவுக்கு விளையாடினாய்; நீ இதற்கு தகுதி உடையவன்! "உலகம் பார்த்துப்  பெருமைப்படுவது  இந்த நேர்மையான, உண்மையான விளையாட்டு வீரர்களைத் தான். ஒரு கணக்கெடுப்பில் உலகிலேயே மக்கள் அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும், மதிக்கும் மனிதர்களில் நெல்சன் மண்டேலாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தை ரோஜெர்  பெடரர் பெற்றிருக்கிறார்  என்பது  அவரது   வாழ்க்கை  தந்த  பரிசு. 


சோனாக்காச்சி, தொத்தாபுரம், யாழ்ப்பாணம்சிவாஜி படத்தில் ஒரு வசனம் வரும். US ரிடர்ன்  ரஜினி தமிழ்க் கலாச்சாரத்தைப் பின் பற்றி ஒழுகும் (இதுவும் தமிழ் வார்த்தை தாங்க ! ) ஒரு பெண்ணைத் தேடி வருவார். எப்படி? கோட் சூட் போட்டுக்கொண்டு புது மொடல் காரில் தமிழ் பெண்ணைத் தேடி அலைவார். அப்போது விவேக் சொல்லுவார் இங்கயும் பெண் கிடைக்காட்டி ஸ்ட்ரைட்டா யாழ்ப்பாணத்துக்கே போய் தேடலாம் என்று சொல்லுவார். 


இது ரஜனி, ஷங்கர், விவேக்கின் மன நிலை மட்டும் அல்ல. பெரும்பான்மையான தமிழர்களின் மன நிலை, யாழ்ப்பாணம் தான் ஒட்டு மொத்த தமிழ்க் கலாச்சாரத்தின் அத்தாரிட்டி என்பதும், அந்த ' பெருமை ' யாழ்ப்பாணத்துப் பெண்களின் கையில் தான் இருக்கிறது என்பதும். ' யாழ் ' என்ற அடைமொழியுடன் வரும் இணையத்தளங்கள் பலவற்றின் கருத்துப்படி பார்த்தால் , யாழ்ப்பாணமே ஆடைகள் அற்று தெருவில் விபச்சாரம் செய்து  கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடந்தது என்று கூறி பல செய்திகள் வந்தாலும் , லேட்டாக வந்ததில் லேட்டஸ்ட் ஆக வந்த செய்தி இது:

' விடுதி ஒன்றை போலிஸ் சுற்றி வளைத்ததில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 13  பேரும் விடுதி உரிமையாளரும் கைது'

இதைத் தொடர்ந்து வந்த செய்தி:

' அதில் இருவர் தாங்கள் நீண்ட காலக் காதலர்கள் என்று கூறியதை அடுத்து இருவரையும் திருமணம் செய்து திருமணப் பதிவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கூறி பிணையில் விடுவித்தார் நீதவான். '


இதற்கு சில ஊடகங்களில் வந்த அபிப்பிராயங்கள் :

' இவ்வளவு நாளும் நடவடிக்கை  எடுக்காது  இருந்த போலீசார் இப்போதாவது செயல்பட்டதில் மக்கள் பாராட்டு ' ( இதெல்லாம் கரக்டா பண்ணுவீங்க, வீரப்பனை மட்டும் விட்டுடுவீங்க..)

' ஒரு கப் டீ குடிக்க எஸ்டேட் ஐ வாங்கும் முயற்சி ' ( திருமணம் செய்ய முன்வந்ததை பகிடி பண்றாராமாம்! இதே உதாரணத்தை எத்தனை நாளைக்கு யூஸ் பண்ணுவீங்க? அதையாவது மாத்துங்கப்பா ப்ளீஸ் )

'   கள்ளத் தொடர்பு அம்பலமானதால் கல்யாணம் செய்யத் துடிக்கும் ஜோடி ' ( செய்ய முடிஞ்சவங்க செய்றாங்க - ஓ, அவனா நீயி என்று கேட்டு வேறு சிலரை  அவமானப்படுத்த விரும்பாததால் கேட்கவில்லை )

' இவங்களை எல்லாம் சுட்டுத் தள்ள ஆக்கள் இல்லை ' ( ஆங், நாட்டாமை சொம்பைத்  தூக்கிட்டு தீர்ப்பு சொல்லக் கிளம்பிட்டாரு, அப்படின்னா, கொலை, பாலியல் வல்லுறவு, ஒரு லட்சம் மக்கள் படுகொலை எல்லாம் செய்தவங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீங்க??)

சரி, நேரடியாகவே விடயத்துக்கு வருவோம், பாலியல் தொழில் என்பது பிழையா என்ன? அதுவும் இந்தக் கூப்பாடு போட்டுக் கதறும் அளவுக்கு பிழையா? இந்த 13 பேரில் பிடிபட்ட பாலியல் தொழிலாளிகள் சொல்லியிருக்கிறார்கள், வன்னிப் போரில் தங்கள் குடும்பம், உறவினர்கள் அனைவருமே இறந்ததால் சாப்பாடுக்கு என்ன செய்வது, வேறு வழி இல்லாமல் வந்தோம் என்று. இந்த 13 ஒரு துளி உதாரணம். வன்னியில் இதே போல் ஆயிரக்கணக்கான பெண்கள் இருக்கின்றார்கள். குடும்பமே கொத்துக் கொத்தாக மாண்டு போக தனித்து விடப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கணவன் இறந்து போக, 23 வயதில்  மூன்று குழந்தைகளோடு நடுத் தெருவில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் ஒரு கட்டத்தில் திருமணமாகாத இளைஞர்களை கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தத் தொடங்கியதால், அங்குள்ள இளைஞர்கள் பெரும்பாலும் 16  வயதில் எல்லாம் திருமணம் முடித்து, 20  வயதில் இரண்டு குழந்தைகளுடன் இருப்பது சர்வ சாதாரணம். அப்படியான குடும்பங்களில் கணவன் இறுதியுத்தத்தில் இறந்துபோக, அல்லது காணாமல் போக,  குழந்தைகளுடன் தனித்து விடப்படும் பெண்களில் பலரும் படிப்பைப் பாதியில் விட்டவர்கள். எந்த வேலைக்கும் இவர்களை எடுப்பதும் இல்லை.


கணவன் இல்லை, கையில் காசும் இல்லை, வேலையும் இல்லை, மூன்று குழந்தைகளும் பசித்து அழுதால், அவர்களின் பசி முக்கியமா அல்லது கலாச்சாரம் முக்கியமா? பட்டினியால் குழந்தைகளை சாக விடுவதா அல்லது பாலியல் தொழில் செய்து அழுத குழந்தைக்கு பால் கொடுப்பதா? இல்லை, நல்ல தங்காள் மாதிரி ஒவ்வொரு குழந்தைகளாக கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டு தற்கொலை செய்யச் சொல்கிறீர்களா? கமல் சொன்னது போல நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லை. நாலு குழந்தைகளின் பசியைப் போக்கும் என்றால் பாலியல் தொழிலும் தப்பில்லை.

இது வேலு நாயக்கர் நீதி


இரண்டாவது, அது ஏன் யாழ்ப்பாணம் என்றதும் உடனே எல்லா கலாசாரக் காவலர்களும் அலறித் துடித்துக் கொண்டு ஓடி வருகிறீர்கள்?  டைம்ஸ் ஒப் இண்டியா விளம்பரம் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதில் வேறு பத்திரிக்கை படித்துத் தூங்குபவர்களை டைம்ஸ் தட்டி எழுப்புவது போல, உலகம் முழுவதும், இலங்கை முழுவதும் பல விடயங்கள், உங்கள் பாஷையில் கலாசாரச் சீரழிவுகள் இடம்பெறுகின்ற போதெல்லாம் தூங்கிக்கொண்டிருக்கும் நீங்கள்  , யாழ்ப்பாணம் கொஞ்சம் மாறுகிறது  என்றதும் ஏன் உடனே விழித்துக் கொள்கிறீர்கள்? தென்னிலங்கையில் நடக்காத பாலியல் தொழிலா? கேவலம் 200  இற்கு ஆள் கிடைக்கும். இங்கே தாஜ், சினமன் கிராண்ட், ஹில்டன் இல்  ரெய்ட்   நடத்தும் 'தில்' போலிசுக்கு இருக்கிறதா? கொழும்பில் ஒரு சிறைச்சாலையில் ஒரு பாலியல் தொழில் விடுதியின் தலைவி ' லக்சரி' வசதிகளுடன் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதே...அது ஏன் ஒரு இணையதளத்தாலும் கண்டுகொள்ளப்படவில்லை?

வாழ்வதற்கே போராட்டம்...இதில் எங்கே வந்தது கலாச்சாரம்


புலம் பெயர் தமிழர்கள் தமிழ்க் கலாச்சாரத்துடன் தான் வாழ்கிறார்களா? இந்தக் கேள்வி உண்மையில் கேட்கப்படவே தேவை இல்லாத ஒன்று. தமிழே தெரியாதவர்களாய் பிள்ளைகளை வளர்க்கும் குடும்பங்கள் தான் அதிகம். தமிழும் மக்சிமம்  ஒரு நாட்டிய அரங்கேற்றத்துடன் முடிந்து விடும் போல. உடை, உணவு, பழக்கவழக்கம், வீட்டில் கதைக்கும் மொழி என த. க . மருந்துக்கும் இல்லாத தமிழர்கள் அதிகம். அங்குள்ள பெண்கள் டேட்டிங் போவதில்லையா? போதை மருந்து பாவித்துவிட்டு கத்தியால் குத்துப்பட்டு இறந்த ஆளையும் தெரியும். யாழ்ப்பாணம் மட்டுமே கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது எழுதாத சட்டமா?மூன்றாவது, புலம் பெயர் சமூகத்திலோ அல்லது கொழும்பிலோ,  பெண் பிள்ளைகள் ஆண்களுடன் கதைப்பதே இல்லையா? யாழ்ப்பாணத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கூடிக் கதைத்தால் உடனே வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி ' சீரழியும் தமிழ்க் கலாசாரம்- அபசாரம் ' என்றோ, ' யாழில் காதலர்கள் காமக் களியாட்டம்' என்றோ ' கேப்ஷன்' உம் கொடுத்து விடுகிறார்கள். இந்த சைக்காலஜியில் பல விடயங்கள் இருக்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் சுதந்தரமாகக் கதைப்பதுக்கு தடை போட்ட சமூகங்களில் தான் ஆண் பெண் இடையான நட்புறவுக்கு சாத்தியம் இல்லாது போகிறது. அதனால் தான் இப்போதும் இளைஞர்கள் கும்பலாக கூடி நின்று பெண்களைக் கேலி செய்யும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இது முன்னேறிய எந்த ஒரு சமூகத்திலும் காண முடியாத பழக்கம். ஆண்கள் முதலில் ஒரு பெண்ணை அடக்க வேண்டும், அதன் பின்பே காதல் என்பதே இங்கு சாதாரண கொள்கை. அதன் பலாபலனாக பெண்கள், குறிப்பாக அழகான பெண்கள் எங்கும் சுதந்தரமாக நடமாட முடியாமல் போனது. யாழ்ப்பாணத்தில் தனியே செல்லும் பெண்களிடம் பையன்கள் முதலில் வாய்ச் சேட்டை விடுவதும், பிறகு கைச் சேட்டை விடுவதும் தமிழ்க் கலாசாரத்தின் பிரிக்க முடியாத அம்சங்கள்.

யாழின் அந்நாளைய உயர்சாதிப் பெண்கள்-கவனிக்கவும் ' உயர் சாதி ' 


காதலர்கள் பேசுவதும் கதைப்பதும் கொலைக்குற்றம் போல சித்தரிப்பதும் ஊடகங்களின் வழக்கம். ஒரு ' யாழ் ' இணையத்தளத்தில் ஒரு வீடியோ. ஒரு பூங்காவில் காதலனின் மடி மேல் காதலி. அந்த அரவணைப்பு மட்டும் தான். அவர்களுக்குத் தெரியாமல் எடுத்த வீடியோ. உதட்டோடு உதடு முத்தம் கூட இல்லை. இதைப்போட்டு ஐயோ குய்யோ என்று ஆர்ப்பாட்டமாக எழுதி இருந்தது அந்த இணையம். காதலர்களுக்குத் தெரியாமல் அவர்கள் அந்தரங்கத்தை படம் பிடித்த நீங்கள் குற்றவாளிகளா அல்லது அவர்கள் குற்ற வாளிகளா? இப்படிப் படம் எடுப்பது Voyeurism . விடுதிகளில் கள்ளத் தனமாக காமரா பொருத்தி  போர்னோ படம் எடுப்பவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காதலர்கள் ஒரு பூங்காவில் போய் முத்தம் இட்டால் கூட அதில் என்ன தவறு இருக்கிறது? கொழும்பில் சில பூங்காக்களில் காதலர்களுக்கு என்று  தனிப்பகுதி கூட இருக்கிறது. அந்தக் காதலர்கள் திருநெல்வேலிச் சந்தையில் நின்று கொண்டு இப்படி நடந்து கொண்டிருந்தாலோ அல்லது நல்லூர் கோயில் வாசலில் முத்தமிட்டிருந்தாலோ அதை பொது மக்களுக்கு இடையூறு என்று சட்டப்படி சொல்லலாம்.  மேலும் கருணாநிதி சொன்னது போல களவொழுக்கம், பூங்காக்களில் சந்தித்துக் கொள்வது  எல்லாம் சங்க இலக்கியங்களிலேயே இருந்திருக்கிறதே! தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் சீவகன் புகுந்து விளையாடாத விளையாட்டா? அதுவும் தமிழ்க் கலாச்சாரம் தானே!?!

அந்நாளைய ஆண்கள்-வேட்டியிலும் கம்பீரம்


இந்தக் கலாசாரம் என்பதே ஒரு கெட்டவார்த்தை. உண்மையில் யாழ்ப்பாணக் கலாச்சாரம் சாதி வெறி பிடித்த,  அடக்குமுறைக் கலாசாரம்.யாழ்ப்பாணக் கலாசாரம் பறிபோகுது, மேற்கத்திய கலாசாரம் ஊடுருவுது என்பவர்களுக்கு ஒரு கேள்வி. கலாசாரம் என்பது என்ன? சாரு நிவேதிதா சொன்னது போல, ஒருவன் இந்த சமூகத்தில் பிறந்திருப்பதனால் , வேலைக்குப் போவது, கல்யாணம் முடிப்பது, பிள்ளை பெற்றுக் கொள்வது எல்லாம் தான் ' இயற்கை'. இதே ஒருவன் ஆபிரிக்கப் பழங்குடி இனத்தில் பிறந்திருந்தால், அப்போது அவனுக்கு எது இயற்கை? மேலும், தமிழ்க் கலாசாரமே சிறந்தது என்று கூற முடியுமா? எந்தக் கலாசாரம் சிறந்தது எது தாழ்ந்து என்று தீர்ப்புக் கூற நாங்கள் என்ன கடவுளா? அல்லது அந்த அதிகாரத்தை எங்களுக்கு ஒப்படைத்தது யார்?

மிச்சமிருக்கும் சிரிப்பு


எது ஒழுக்கம் என்பதற்கான வரையறை என்ன? தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்டம். நெதர்லாந்தில் ஓரினச்சேர்க்கை சட்டப்படியானதே. இந்தியாவிலேயே ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இலங்கையில் நாளைக்கே பாலியல் தொழில் சட்டமாக்கப் பட்டால், எல்லா பா.தொழிலாளர்களும் உங்கள் பாஷையில் ஒழுக்க சீலர்களே. யார் ஒழுக்கமானவன், யார் ஒழுக்கம் கெட்டவன் என்பதை வெறும் நாட்டு எல்லைகளும், காலமும், அரசாங்கமுமே முடிவு செய்கின்றன. அன்று  கோவணம், பிறகு வேட்டி கலாசாரம்,  நேற்று பான்ட், இன்று அரைப்பக்கம் பின்புறம் தெரியும் லோ ஹிப் ஜீன்ஸ் தான் கலாசாரம். ஆனால், பெண்களுக்கு மட்டும் எங்கேயும் எப்போதும் சேலை மட்டுமே தமிழ்க் கலாசாரம். ( உபயம்- யாழ் அரசாங்க அதிபர் )

போகும் தூரம் போவோம் நாளைமுதலில் உண்மையாகவே யாழ்ப்பாணத்தில் பற்றி எரிகின்ற பிரச்சனைகள் இருக்கின்றன. யுத்தத்தால் தனிமரமாக நிற்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் என்ன செய்து தரப்போகின்றோம்? எப்படியான ஒரு வேலை வாய்ப்பை வழங்க இருக்கின்றோம்? காணமால் போன ஆயிரக்கணக்கான ஆண்களின் கதி என்ன? இறுதிச் சண்டையில் ஒரு பாதிரியார் தலைமையில் சரணடைத நூற்றுக் கணக்கான போராளிகளுக்கு நடந்தது என்ன? காணாமல் போன கணவனை மீட்டுத் தருவதாகக் கூறி, அந்தப் பெண்ணை ஒரு அரசியல் கட்சி அலுவலகத்துக்கு கூட்டிச் சென்று மூன்று நாட்கள் வைத்திருந்து விட்டு திரும்பக் கொண்டு வந்து இறக்கி விட்டுப் போன கொடூரம் யாருக்காவது தெரியுமா? இனி அந்தப் பெண்ணின் மன நிலை எவ்வாறு இருக்கும்? இன்னொரு அரசியல் கட்சி உறுப்பினர் சைப்பிரசில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 36  பேரிடம் கோடிகளில்  நிதி மோசடி செய்தது தெரியுமா? அதில் ஒருவரின் மனைவி கடன் தாளாது தற்கொலைக்குச் சென்றது இணையங்களில் வெளிச்சத்துக்கு வந்ததா? முள்ளி வாய்க்கால் அவலங்களுக்கு பின்னான மக்கள் வாழ்க்கையின் உண்மை நிலை பத்தில் ஒரு பங்காவது வெளி வந்ததா? ஏ  9  பாதை 2006  இல் மூடப்பட்ட பின் தலைவிரித்தாடிய அகோரப் பஞ்சத்தின் நிழல்களாவது ஊடகங்களால் வெளியே தெரிந்ததா? அப்போது கூட தமிழினத்தைக் காப்பாற்றும் பணியில் இறங்கி, தணிக்கைக்கும், எமேகேன்சிக்கும் பயப்படாது செய்திகளை வழங்கி வீரச்சாவு அடைந்திருக்கலாமே? டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்காது இறந்த பையன், நல்லூர் திருவிழாவில் காணாமல் போன ஆறு வயதுச் சிறுமி, வலிகாமத்தில் காணமல் போய் பிறகு சடலமாக கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட இளம் பெண், ஆசிரியர்களின் கவனக்குறைவால் சுற்றுலா சென்றபோது பஸ் சக்கரங்களில் நசுங்கி இறந்த  6  வயது ஏழைச் சிறுவன் எல்லோரும்  மீடியாக்களால் மறக்கப் பட்டு ஏழை பாலியல் தொழிலாளிகளும் அப்பாவிக் காதலர்களுமே முதல் பக்கங்களில் கரிசனையோடு கவனிக்கப்படுகிறார்கள்.

எதிர்காலம் - நம்பிக்கை துளிர் விடுகிறது-வாழ  விடுங்கள் 

கலாச்சாரமும் வெங்காயமும்...

நீளும் கயிறின் நீளம்; சில்க் ஸ்மிதா முதல் ஷாலினி வரை

நீளும் கயிறின் நீளம்; சில்க் ஸ்மிதா முதல் ஷாலினி வரை

அது ஏன் எப்போதும் நடிகைகள் மட்டுமே தற்கொலை  செய்து  கொள்கிறார்கள்? நடிகர்கள் படம் பார்க்க வருபவர்களை கொலை செய்வதோடு மட்டுமே நின்றுவிடுகிறார்கள். அண்மையில் சின்னத்திரை நடிகை வைஷ்ணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சக நடிகர் தேவ் ஆனந்த்துக்கு  நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தது. ( வைஷ்ணவி தூக்கு போட்டு இறந்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு). கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போவது புரியும்.

'சில்க்' ஸ்மிதா


வறுமையான, படிக்காத ஒரு கிராமத்துப் பெண். சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, கணவனின் கொடுமை தாங்காமல் ஆந்திராவில் இருந்து ஓடி வந்து ஒரு மாவு மில்லில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது வினு  சக்கரவர்த்தியின் கண்ணில் பட்டு நடிக்க அழைக்கப்பட்டவர். பிறகு நடந்தது ஊருக்கே தெரியும். அந்த கிறக்கமான கண்களும் கலரும், நீளமான கால்களும் கட்டுடலும் எல்லா மொழி ரசிகர்களையும் பைத்தியமாக்கியதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஒரு soft  போர்னோ நடிகை என்று சொல்லப்பட்டாலும் கிடைத்த சில படங்களில் நடிப்பிலும் வசீகரித்தவர். ( உ.ம். அலைகள் ஓய்வதில்லை- ஆனந்த விகடனில் வந்த ஹாசிப் கானின் ஓவியத்தில் இருக்கும் அந்த முகத்தில் தெரியும் உணர்ச்சிகள்! )தனக்குக்   கொடுமை  செய்த  தன்  குடும்பத்தைக்  கடைசி வரை தன்னுடன் சேர்க்காமல் தனியே வாழ்ந்தவர் சில்க். ஒரு தாடிக்காரர் மட்டும் எப்போதும் கூடவே இருந்தார். ஒரு கவர்ச்சி தேவதை என்று மட்டுமே எல்லோருக்கும் தெரிந்தாலும் உதவி கேட்டு வந்த அத்தனை பேருக்கும் உதவிய அவரது இன்னொரு முகம் வெளியே தெரியாதது. இந்தக் காரணத்துக்காக தான் சாரு நிவேதிதாவும் தனது ஒரு நூலை ஸ்மிதாக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். அவருடைய பல கட்டுரைகளில் சில்க்கைப் பற்றி ( பெயர் குறிப்பிடாது) எழுதியிருக்கும் சில விடயங்கள்  சுவாரசியமானவை.


 450  படங்களுக்கு மேல் நடித்து,உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா, முப்பதாவது வயதில் தன்னிடம் அன்பு செலுத்த யாருமே இல்லை என்று எழுதி வைத்து விட்டு தூக்குப்  போட்டு செத்து போனார்.

திவ்யபாரதி 


திவ்யாவின் கதை வேறு. ஸ்ரீதேவியின் சாயல் என்று பத்திரிகைகளே எழுதும் அளவுக்கு முக ஒற்றுமை. குழந்தைத்தனம் அப்பட்டமாக தெரியும் முகம். ரம்பா வந்த புதிதில் அவரது புகைப்படங்களைப் பார்த்தவர்கள் திவ்யபாரதி என்று தாங்கள் நினைத்ததாக இணையத்தளங்களில் கூறியிருப்பதைப் பார்க்கலாம். சில நேரம் பார்த்தால் மீனா போலவும் சில நேரம் ஹன்சிகா போலவும் சாயலடிக்கும் முகம். அவ்வளவு அழகு.

ஹிந்தியில் நிறைய படங்களுக்கு ஒப்பந்தமாகி, பிறகு எல்லாவற்றில் இருந்தும் தூக்கப்பட்டு, பிறகு தெலுங்குப் படம் ஒன்றில் அறிமுகமாகி ( பொப்பிலி ராஜு ) ஹிட் அடித்து, பிறகு மீண்டும் ஹிந்திக்கு போய், அங்கு மள மள வென்று படங்களில் நடித்து பல ஹிட்களைக் கொடுத்து வேக வேகமாக உச்சிக்கு போனவர். அப்போதே மீடியாக்களிடம் காட்டுத்தனமான, பைத்தியக்காரப் பெண் என்று நல்ல பேர் (!)  வாங்கி     இருந்தவர். கோவிந்தாவின் படத்தில் இருந்து தூக்கப்பட்டதால் ஒருமுறை தற்கொலைக்கு  முயன்றவர். ஷாருக்கானின் முதல் படத்தின்   ஹீரோயின்! கோவிந்தா, அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி  என்று அந்நாளைய முன்னணி ஹீரோக்கள் அனைவரோடும் ஜோடி போட்ட ஒரு மாஸ் ஹீரோயின். 


பிரபல பத்திரிகை வரிசைப்படுத்தியதில், மாதுரி தீட்சித், ஸ்ரீதேவிக்கு அடுத்து மூன்றாம் இடம் பிடித்தவர். சஜித் என்ற சினிமா தயாரிப்பாளரைக் காதலித்தார். ஒரு நாள் தன்னுடைய அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஐந்தாம் மாடியில் உள்ள தன் வீட்டில் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளர், அவரது கணவர், வேலை செய்யும் பெண் மூவருடனும் கதைத்து கொண்டு இருக்கும் போது,  தன் வீட்டு ஜன்னலில் உட்கார்ந்திருந்தவர், அந்த ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து நொறுங்கினார். மூவரும் திரும்பி பார்க்கும் போது கீழே விழுந்து கொண்டிருந்தார். 

கண் இமைக்கும் நேரத்தில் அவரது பளபளக்கும்  வாழ்க்கை, முன்னேறும் கனவு எல்லாம் முடிவுக்கு வந்தது. நடந்து விபத்தா, தற்கொலையா, கொலையா என்ற குழப்பம் இன்னும் இருந்தாலும், சாட்சிகளை வைத்து தற்கொலை என்று வழக்கு மூடப்பட்டது. அவர் நடிக்க இருந்த 10  இற்கும் மேற்பட்ட படங்களை ஸ்ரீதேவி, மனிஷா கொய்ராலா, தபு போன்ற பிரபல நடிகைகள் நடித்தனர்.  இறக்கும் போது திவ்யபாரதிக்கு வயது வெறும் 19 .

ஷோபா'பசி' படத்துக்காக தேசிய விருது, மற்றும்  ஊர்வசி விருது பெற்ற நடிகை. முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் தங்கை. நிழல் நிஜமாகிறது படத்தில் கமலுடனும் நடித்தார். அமைதியான அழகு. மூடு பனி போன்ற வித்தியாசமான கதைக்களங்களின் கதாநாயகி. எக்ஸ்ட்ரா திறமை நடிப்பில்.  பாலு மகேந்திராவின் 'அழியாத கோலங்கள்'  நாயகி. அதுவே அவரை அழித்த கோலத்தின் முதல் புள்ளி. 'அங்கிள்' என்று தான் கூப்பிட்ட பாலு மகேந்திராவைக் காதலித்தார். பாலுவுக்கு அப்போது ஏற்கனவே  திருமணமாகி இருந்தது. அவரைத் திருமணம் செய்யவும் முடியாமல் விடவும் முடியாமல் தவித்த ஷோபா, தான் போட்ட முடிச்சை அவிழ்க்கத் தெரியாமல் தூக்குக் கயிறின் முடிச்சைப் போட்டுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது வெறும் 18 .

( பாலு மகேந்திரா பல வருடங்களுக்கு பிறகு மௌநிகாவை  மணந்து கொண்டது தெரிந்திருக்கலாம் )'Fatafat '  ஜெயலக்ஷ்மிபாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதையில் தாய் காதலிக்கும் ஆணையே  தானும் காதலிக்கும் மகளாக நடித்தவர். ரஜினியுடன் 'ஆறில் இருந்து அறுபது வரை' படத்தில் ஜோடி. அந்த நாளில்  முதமைச்சராக  இருந்த எம்.ஜி.ஆரின் மருமகனைக் காதலித்த ஜெயலக்ஷ்மி, அந்த காதல் நிறைவேறாத சோகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரதியுஷாஆந்திராவைச் சேர்ந்த பிரதியுஷா, தமிழிலும் விஜயகாந்த், சத்யராஜ் ஜோடியாக ஓரிரு படங்களில் நடித்தார் . ஆந்திரா  பிஸ்னஸ் புள்ளியின் மகனான சித்தார்த்த ரெட்டியைக் காதலித்து அந்த காதலுக்கு ரெட்டி வீட்டில் எதிர்ப்பு வலுத்த நிலையில், ஒரு நாள் காருக்குள் காதலனும் பிரதியுஷாவும் கோக கோலாவில் பூச்சி மருந்தைக் கலந்து அருந்த, காதலன் ரெட்டி பிழைத்துக் கொண்டார், பிரதியுஷா இறந்தார். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இருந்தாலும், இறுதியில் தற்கொலை என்று முடிவானது. தற்கொலைக்குத் தூண்டியதாக சித்தார்த்த ரெட்டிக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது.


மோனல் 

தமிழகத்தின் முன்னால் கனவுக்கன்னி சிம்ரனின் தங்கை. 'மானாட மயிலாட' புகழ் கலா மாஸ்டரின் ஒன்று விட்ட தம்பி பிரசன்னாவைக் காதலித்தார். காதல் கல்யாணத்தில் முடியாத சோகத்தில் மோனல் தூக்கில் தொங்க நேர்ந்தது. பிறகு சிம்ரன் கலா மாஸ்டர், மும்தாஜ் எல்லோருடனும் பகைத்தது தெரிந்த விடயம். இதில் இன்னொரு சோகம், மோனலுடன் ஜோடியாக 'பார்வை ஒன்றே போதுமே' இல் நடித்த குணாலும் சில வருடங்களுக்கு பிறகு மாடியில் இருந்து குதித்து இறந்தார். 'திருடிய இதயத்தை திருப்பிக்கொடுத்து விடு காதலா...' என்று மோனல் இந்தப் படத்தில்  பாடுவார். அது கடைசி வரைக்கும் அவருக்கு கிடைக்கவில்லை.


 'கோழி கூவுது' விஜி கன்னட நடிகை. ' கோழி கூவுது' என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். ஒரு சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறால் படுத்த படுக்கையாக இருந்து மீண்டிருந்தார். இவரும் ரமேஷ் என்ற, ஏற்கனவே திருமணமான இயக்குனரைக் காதலித்தார். விஜியுடன் திருமணம் செய்து கொள்ளாது உறவைத் தொடர்வதிலேயே இயக்குனருக்கு விருப்பம் இருந்தது. ஒரு நாள் விஜி, விஜியின் தந்தை, ரமேஷ், ரமேஷின் மனைவி நான்கு பெரும் கூடி பேச்சு வார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய விஜி, சொன்னதை செய்தும் காட்டினார். இவர் நாடியதும் கயிறைத் தான்.

லக்ஷ்மிஸ்ரீ

' ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு' என்று ரஜினி ' தர்மயுத்தம்' படத்தில் தன் தங்கையைப் பார்த்துப்  பாடுவாரே நினைவிருக்கிறதா? அந்த மஞ்சள் நிலவும்  ஒருநாள் தற்கொலை செய்து கொண்டது. லக்ஷ்மிஸ்ரீ, தான் சேர்ந்து வாழ்ந்த நபர் வீட்டில் இருக்கும் போதே தூக்குப் போட்டுக் கொண்டார்.விஜயஸ்ரீகருப்பு வெள்ளை காலத்து கவர்ச்சி நடிகை. மலையாளத்தில் பிரேம் நசீர்  ஜோடியாக நிறையப் படங்களில் நடித்தவர். இவரும் ஒரு நாள் தூக்கில் தொங்கினார். காரணம் தெரியவில்லை.


சின்னத்திரை நடிகைகள்

வைஷ்ணவிசண் டி.வி. 'கொண்டாட்டம்' நிகழ்ச்சியில் காமெடி க்ளிப்பிங்க்ஸ்  போட்டு சிரிக்க வைத்த வைஷ்ணவி மனைவி சீரியலில் நடித்த போது தேவ் ஆனந்தைக் காதலித்தார். தேவ் ஏற்கனவே திருமணமானவர். ஒருநாள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, மின்விசிறியில் தூக்கப் போட்டுக் கொண்டார் வைஷ்ணவி. இதற்காக இவர் பயன்படுத்தியது, முன்பு ஒரு பிறந்தநாளின் போது நண்பிகள் அனைவரும் கை எழுத்துப் போட்டு பரிசாகத் தந்த  துப்பட்டா ஒன்று.


ஷோபனா


வடிவேலுவுடன் சில படங்களில் ஜோடியாகவும் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ' மீண்டும் மீண்டும் சிரிப்பு' தொடரில் சில வருடங்களாகவும் சிரிக்க வைத்த ஷோபனா, மூன்று மாதங்களாக தொடர்ந்து தாக்கிய ச்சிக்குன் குனியாவின் தீவிரம் தந்த மன உளைச்சலால் தூக்குப் போட்டுக் கொண்டார்.

ஷாலினிமலையாளத்தில் மயூரி என்று அறியப்பட்ட நடிகை.அழகான பெரிய சலனப்படுத்தும் கண்கள். 'சலனம்' தொடர் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது. குமுதத்தில்  ஆடை அணிவது பற்றி தந்த டிப்ஸ் இல், எந்த ஆடை அணிந்தாலும் தன்னம்பிக்கையோடு ஸ்மார்ட் ஆக இருப்பது முக்கியம் என்று சொன்ன ஷாலினி, ஒருநாள் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலி, அதே குமுதத்தில்  இவர் இறந்த பிறகு இவருக்காக ஒரு கவிதை எழுதினார்.


இதில் பல மரணங்களுக்கு   காதலும்  பாசமும்  காரணமாக இருந்திருப்பது தெரிகிறது. வாழ வைக்கும் சக்தி கொண்ட அன்பு, இவர்கள் விடயத்தில் மட்டும் உயிரை வாங்கும் தன்மை கொண்டதாக தலைகீழாக  மாறிப் போனது ஏன்? எத்தனையோ பெண்கள் தற்கொலை செய்திருப்பினும், இவர்கள் நடிகைகள் என்றதால் மட்டுமே இந்த மரணங்களும்  வெளியில் பிரபலமகின்றனவா? தற்கொலை என்பது கோழைகள் எடுக்கும் வீரமான முடிவா அல்லது வீரர்கள் எடுக்கும் கோழைத்தனமான முடிவா? பதில்கள் தெரியாவிட்டாலும், தூக்குக் கயிறு மேலும் நீளாது இருந்தாலே போதும்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கும் அழுவாச்சி காவியம்

கடைசியா வந்த சோகப் படங்கள் எங்கேயும் எப்போதும், மைனா, எல்லாவற்றையும் தாண்டி இப்ப ஓடிக்கொண்டிருக்கிற லேட்டஸ்ட் படம் தான் கலைஞரின் நாசக் கிளிகள். சோகம் என்றா சோகம், சோகத்தை புளிஞ்சு ஜூஸ் எடுக்கிற அளவுக்கு கடும் சோகம்.  படத்தோட டிரைலரே இப்பிடி இருந்தா மெயின் பிக்சர் எப்பிடி இருக்குமோ  என்று வயித்தில புளியை கரைக்குது. கவுண்டமணி செந்தில் இப்ப நடிச்சிருந்தா டேய் ஸ்பெக்ட்ரம் மண்டையா இவனுங்க கொசுக்கடி தாங்க முடியலடா என்று சொல்லி செல்லமா ஒரு உதை விட்டிருப்பார். 

தொண்டர்கள் சிறைக்கு போனா அது வீரம், மகள் போனா பாவமா? அதுவும் கனிமொழி ஒன்றும் கோழையான  இல்லையே! பெண்ணியம் பேசுகின்ற, தன்னம்பிக்கையுள்ள பெண் என்று அறியப்பட்டவரல்லவா? அதுவும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்லவில்லையே? அல்லது ஏதாவது தான் கொண்டுள்ள கொள்கைக்காக தீவிரமாக கதைத்து அது சம்பந்தமாக புரட்சிப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு, அதனால் சிறை சென்றிருந்தால் கூட, ' அநீதியாக சிறையிலிட்டனரே மாபாதகர்கள்' என்று குமுறலாம்.

  
பாம்பே ஜெயஸ்ரீயுடன் கனி- இப்போது திகாரில் முகாரி? 


இரண்டாம் தலைமுறை ( 2G ) கம்பியில்லா தொழில்நுட்பத்தின் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக தரகர் நீரா ராடியாவுடன் கனிமொழி உரையாடிய டேப்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. அது ஒரு வலுவான ஆதாரம். தவிரவும் ஊழல் பணம் வந்து சேர்ந்ததாக சொல்லப் பட்ட கலைஞர் டி.வி. இல் முக்கியமான பங்கு தாரர் கனி மொழி. கருணாநிதி கூறுவது போல், அப்பா சொல்லி விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக பங்குகள் வாங்க கனிமொழி என்ன 'நிலா' வா? இல்ல, கருணாநிதி என்ன 'கிருஷ்ணா'வா? ஒரு பங்கு தாரருக்கு, அதுவும் கனிமொழி போன்ற ஒரு அறிவுபூர்வமான பெண்ணுக்கு தான் பங்கு வைத்திருக்கும் நிறுவனத்தின் நிதி கைமாற்றல் பற்றிய விடயங்கள் தெரியாமல் இருந்தது என்று கூறினால் சின்னப் புள்ளைத்தனமால்ல இருக்கு? சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில்  தான் ஒரு சாட்சியாக தான் சேர்க்கப் படுவோம் என்று கனிமொழி நம்பி இருந்ததாகவும் ஆனால் சி.பி. ஐ. தாக்கல் செய்த இரண்டாவது கு.ப. இல் தானும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டது தெரிந்ததும் கனி அப்சட் ஆகியதாகவும் தகவல்.ஏற்கனவே ஒருமுறை பிணை மனு தாக்கல் செய்தபோது நீதிபதி அதைத் தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பில், கனி குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும்  வெளியே வந்தால் சாட்சியங்களை கலைத்து விடும் அபாயம் இருப்பதாலும் பிணை வழங்க முடியாது என்றும் கூறி இருந்தார். சில தினங்களுக்கு முன் பிணை மனு மீது தீர்ப்பு வழங்கிய டிரையல் கோர்ட் நீதிபதி ஷைனியும் கிட்டத்த்தட்ட இதைத் தான் சொல்லி இருந்தார். 

தான் ஒரு பெண் என்பதாலும், தனக்கு ஒரு சிறிய மகன் இருப்பதாலும் அந்த அடிப்படையில் பிணை வழங்குமாறு கேட்டிருந்தார் கனி மொழி. அவர் சமூகத்தின் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாலும் அவர் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் படும்  ஊழல் நாட்டின் பொருளாதாரத்திலேயே பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டதாலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதாலும், சாதாரண பெண் போல அவரைக் கருத முடியாது என்று நீதிபதி கூறி இருந்தார். முற்போக்கான சிந்தனை உடைய கனிமொழி இதில்  மட்டும் பெண்கள் நலிவானவர்கள் என்ற அடிப்படையில் தரும் சலுகையைக் கோரலாமா? அண்ணன் ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லையா? வை.கோ. பொடாவில் ஒரு வருடத்துக்கும் மேல் சிறையில் ( தரமுன்வந்த பிணையையும் மறுத்து )  இருக்கவில்லையா? ஏன் தமிழ் நாட்டிலேயே சிறையில் வாடிய எத்தனையோ பெண்கள் இருக்கிறார்களே? அதை விடவும், பெண் என்று எதற்கு பிரிக்க வேண்டும்? 

" சட்டம் எழுதியாயிற்று. எல்லாச் சாதியும்
கோயிலுக்குள் வர.
எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை."
- கனிமொழி 
பிணை மறுக்கப்பட்டதும் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தாராம். ராசாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார். அதைப் பார்த்ததும் கனிமொழியும் அழுதார். ராஜாவின் மனைவி பரமேஸ்வரியும் அழுதார். ஐந்து மாதங்கள் சிறையில் இருந்ததற்கே இந்த படம் காட்டினால், பதினெட்டு, இருபது வருடங்களாக சிறையில் இருப்பவர்களின் பெற்றோர்கள் தற்கொலை அல்லவா செய்ய வேண்டும்? சோனியா காந்தி வேறு கரிசனையுடன் விசார்த்ததாகவும், 'பிணையில் செல்வது ஒருவரது இயற்கை உரிமை ' என்று கருத்து தெரிவித்திருப்பதாகவும் செய்திகள். அப்படி என்றால் அவர் அப்சல் குரு, அஜ்மல் கசாப், நளினி போன்றவர்களுக்கும் பிணை வழங்கப்படாதது பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. அவர்களுக்கும் வழங்கி இருந்திருக்க வேண்டும் என்று கூற முன்வருவாரா? சட்டப்படியான முறையில் செய்யப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு ( பிணை மனு தள்ளுபடி) ' இனி என் வாழ்க்கை திஹாரிலேயே கழியட்டும், இனி எந்த துன்பமும் என்னை எதுவும் செய்ய முடியாது ' என்று சௌகார் ஜானகி ரேஞ்சுக்கு உருக்கமான டயலாக்குகள் விடுவதும் மிகப் பரிதாபமாக முகத்தை வைத்ததுக் கொள்வதும் தான் காமடி. நித்யானந்தாவே எவ்வளவு சிரித்த முகத்துடன் போலீசுடன் நீதி மன்றத்துக்கு ஏதோ கெஸ்ட் ஹவுசுக்கு போவது போல போய் வந்தார்?! நீங்கள் சன் டி.வி.. யில் பார்க்கவில்லையா?!? சிபு சோரன் போல மெகா ஊழல் அரசியல் வாதிகள் எல்லாம் எவ்வளவு தில் ஆக ஒலிம்பிக் மெடல் வாங்க செல்லும் கம்பீரத்தோடு போகும் போது நீங்கள் இப்படி உடைந்து போகலாமா? 


கனி மொழிக்கும் ராசாத்தி அம்மாளுக்கும் சில ஆறுதல் வார்த்தைகள். இந்த ஊழல், வழக்கு, விசாரணை எல்லாம் எத்தனை நாளுக்கு? சந்தானம் பாணியில் சொன்னால் ' இப்பிடி போயிட்டு அப்பிடி வந்திடலாம்!" ( கையை  ஆட்டி படிக்கவும்). மேலும், சிறை செல்லுவது தானே ஒரு நல்ல அரசியல் வாதிக்கு பேசிக்  குவாலிபிகேஷன்? அது பகத் சிங் போல சென்றால் என்ன, வடிவேலு கணக்காக ' நானும்  ஜெயிலுக்கு போறன்..நல்ல பார்த்துக்குங்க' என்று போனால் என்ன?  ஆனானப்பட்ட போபார்ஸ் பீரங்கி வழக்கையே மறந்து விட்டு , அவர் மகனையே அடுத்த பிரமதராக்க பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா கிலோ கணக்கில தங்கம், ஆயிரக்கணக்கில  சேலை, செருப்பு, மணிக்கூடு வைச்சிருந்ததையே மக்கள் மறந்து அவர் முதலமைச்சராயும் ஆகியாச்சு. இந்த 40  பில்லியன்  எல்லாம் எம்மாத்திரம். இப்பவே தி.மு.க.வின் தவிர்க்க முடியாத சக்தி என்று பத்திரிகைகள் எழுத தொடங்கி விட்டார்கள். பத்மநாப கோயில்ல ஆறாவது அறை ஏழாவது அறை எல்லாம் திறந்தா மக்களும் இதை மறந்து விடுவார்கள். உங்கள் அறை எண் 6  இன் கதவும் திறந்து வழி விடக்கூடும். 

எதுவுமே நடக்காட்டி போனா கூட நீங்கள் கவலைப்படத் தேவையே இல்லை. இலங்கைப் போரையே உண்ணாவிரதம் இருந்து தடுத்து நிறுத்தியவர் உங்கள் அப்பா. அவர் மனைவி, துணைவி, மற்றும் ஏர் கூலர்கள் சகிதம் உண்ணாவிரதம்  இருந்து எப்படியும் உங்களை வெளியில் கொண்டு வந்து விடுவார். 

இறுதியாக, கனி மொழியின் ஒரு அற்புதமான கவிதை:

"பாவ விமோசனத்திற்கு
ராமனுக்காக  காத்திராதே..
அவன் சீதையின்
அக்னிப் பிரவேச ஆயத்தங்களில் 

ஆழ்ந்திருக்கிறான்.."

ஜொனி ட்ரி நுயன் இன் மிரட்டல் அடி - ஏழாம் அறிவு

ஏழாம் அறிவு பார்த்து விட்டு வெளியே வந்த போது ஒருத்தர் ' ஏழாம் அறிவு- மூன்றாம் அறிவு' என்று சொல்லிக் கொண்டிருந்தார். விமர்சனத்தில் பஞ்ச் வைக்கிறாராமாம்! பஞ்ச் வைக்க இவர் என்ன குமுதமா?! செம கடுப்பு போலும்.

விமர்சனம் எல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சு. கதை என்ன? அதுவும் தெரிஞ்சிருக்கும். காஞ்சிபுரத்தில இருந்து சீனா போன போதி தர்மன், அங்க இருந்த மக்களை தாக்கிய ஒரு கொடிய நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கிறார். இப்போது சீனா இந்தியாவில் மீண்டும் அதே நோயை  பரப்ப முயற்சிக்கிறது. அதை  தடுக்கும்  வல்லமை போதி தர்மன் வம்சாவழியில் வந்த சூர்யாவிடம் ஒளிந்திருக்கிறது. இதற்காக சூர்யாவைத் தேடிக் கண்டு பிடித்து அவரிடம் இருக்கும் போதி தர்மனின் திறமைகளை வெளிக்கொணர ( தமிழ்! ) முயற்ச்சிக்கிறார் டி.என். ஏ. சமாச்சாரங்களில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாணவி சுருதி. இந்தியாவில் நோயை பரப்பவும் இந்த   ஆராய்ச்சியை தடுப்பதற்காக  சுருதியைக் கொல்ல சீனாவில் இருந்து வரும் வில்லன் தான் ஜொனி  ட்ரி நுயன் (கலக்கிட்டீங்க !).  

போதி தர்மன் என்கிற ஒரு பாத்திரத்தை ஹீரோ ஆக்கியது ஓகே. ஆனால் படம் முழுக்க அவர் என்ன செய்தார், எங்கு வாழ்ந்தார், 1600  வருடங்களுக்கு முதல் சீனா போனார், மருந்து கண்டு பிடித்தார் என்றெல்லாம் திருப்பி திருப்பி ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டுமா? இதென்ன டோக்யூமேன்றியா?! விக்கி பீடியாவில் உள்ள போதி தர்மரின் படத்தை கூடவா அப்படியே உருவ வேண்டும்?! அந்த அளவுக்கு ஆராய்ச்சி செய்ய சோம்பல் போல. இதுக்காக இங்க இருந்து பஸ் பிடிச்சு போய் சினிசிட்டி  வாசலில  இரும்புக்  கூண்டுகளுக்கு நடுவில சிங்கங்கள்  மாதிரி  லைன் இல நின்று மழையில நனைஞ்சு  கஷ்டப்பட தேவையே இல்லை. சிம்பிள் ஆக விக்கிபீடியாவில கொஞ்சம் தேடினாலே போதுமே?!

சூர்யா. போதி தர்மனாக வரும்போது மட்டும் அந்த கண்களும் மீசையும் கம்பீரம். மத்தபடி காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல் எல்லாம் அயன், ஆதவன். பெரிதாக வேலையும் இல்லை படத்தில். காதல் காட்சிகளில் கண்களில் ரொமான்ஸ் வழிந்தாலும் ஆழமில்லாத காட்சிகள், ஒட்டாத ஜோடி என்று அதுவும் வீண். வெள்ளை வெளேர் என்று சுருதி. இந்த படம் அவருக்கு லக் ( அல்லது லெக் ).சைஸ் 4 ஆம். ஐயோ  !  நடிக்க முயற்சித்தாலும் செயற்கைத்தனம் தெரியும் கண்கள். முகம் சிவக்க அழும் போதும் தாடையை இறுக்கி முறைக்கும் போதும் மட்டும் கொஞ்சம் அப்பா. கவர்ச்சி   காட்டினாலும்  பார்க்க  ஒன்றும் இல்லை. கொஞ்ச  செக்கன்கள்  வந்தாலும் அபிநயாவின் பார்வையில் ஓராயிரம் கவிதைகள் எழுதலாம்.  
படத்தின் நிஜ ஹீரோ ஜொனி  ட்ரி நுயன். படம் முழுக்க அட்டகாசம்  பண்ணும் சைனீஸ் வில்லன். கேர்லஸ் ஆக நடக்கும் அந்த நடை, ஹிப்னோடிச பார்வை, அதிரடி ஆக்க்ஷன். இடைவேளைக்கு பிறகு ஸ்ருதியை இவர் துரத்த ஆரம்பித்த பின்பு தான் படத்தில் விறுவிறுப்பு. வில்லன் ஸ்ருதியை தேடுவதும் வழியில் அகப்படுபவர்களிடம் இருந்து தகவல் கேட்டபின் அவர்களைக் கொல்லுவதும் டேர்மிநேட்டரை  ஞாபகப்படுத்துகிறது. ( டெர்மிநேட்டர்  3  போலவே இங்கும் ஒரு கல்லறை சந்திப்பு! ) எந்திரன் 2  எடுத்தால் இவரை வில்லனாக போடலாம். டாடா சுமோ, அடியாட்கள் பட்டாளத்துக்கு நடுவில் நின்று கர்ச்சிக்கும் வழக்கமான தமிழ் சினிமா சோதா  வில்லன்களுக்கு  நடுவில் ஒத்தை ஆளாக    நின்று குங் பூவில்  பின்னி   எடுக்கும் வில்லன். சூர்யாவுக்கு சிக்ஸ் பக்  என்றால்  இவருக்கு  மல்டிபில்  பக்ஸ். ( படத்தில் காட்டவில்லை!) என்ன, பெயரை ஒரு முறை சொல்லுவதற்குள் வைரஸ் காய்ச்சலே வந்து விடுகிறது. 

அழுத்தமான ஒரு மனதைத் தொடும் கதையோ, சுவாரசியமான சம்பவங்களோ, மெல்லிய நகைச்சுவையோ எதுவுமே இல்லாத ஒரு டெலி பிலிம் மாதிரி இருக்கிறது படம். அஜித் ஒரு முறை பேட்டியில் சொல்லி இருந்தார். கதைகள் இதயத்தில் இருந்து வர வேணும், மண்டைக்குள் இருந்து வரக்கூடாது என்று. இது முருகதாஸ் மண்டைக்குள் போட்டு அறிவு ஜீவித்தனமாக சிந்தித்து, இடையே கொஞ்சம் தமிழ், ( உ.ம். ல, ள வித்தியாசம் இல்லாமல் டப்பிங் பேசி உயிரை வாங்கும் சுருதி)   நாட்டுப்பற்று ( சீனாக்காரன் கெட்டவன் + கொஞ்சம் இலங்கை ) எல்லாம் போட்டு எடுத்த கதை. ' நான் மகான் அல்ல ' படத்தின் பல வசனங்களில் நகைச்சுவை உணர்ச்சியும் ஆழமும் இருந்தது. இத்தனைக்கும் அது ஒரு வன்முறை கலந்த படம். அது எதுவுமே இல்லாத வெகு சாதாரணமான வசனங்கள் இந்த படத்தில். ஒரு கேள்வி- எதுக்கு பிட்டு படம் மாதிரி எல்லா படத்திலையும் இலங்கை-தமிழ் என்று ஏதோ கொஞ்சம் சேர்க்க வேண்டும்? முடிந்தால்  ஒரு முழு நீள படம் எடுக்க வேண்டியது தானே??( கன்னத்தில் முத்தமிட்டால் மாதிரி அல்ல- ஓரளவுக்கு காற்றுக்கென்ன வேலி மாதிரி)

மார்ஷல் ஆட்ஸ் சீகுவேன்சில் காற்றில் சருகுகள்   சேர்ந்து   ஒரு பந்தாக   மாற்றி    அதை வீசுவது   போல காட்சியை  ஸ்டார் மூவிஸில் போட்ட   ஒரு பழைய   ஜெட்   லி   படத்தில் பார்த்ததாக ஞாபகம். அதே போல கொலையான ஹீரோவை மம்மி மாதிரி பாண்டேஜ் போட்டு கட்டி வைப்பது, பண்டேஜ் அவிழ்ந்து அவர் நினைவு திரும்போது வீரனாக மாறியிருப்பது  எல்லாம் குங் பூ ஹொஸ்டல்  ( அதாங்க மிரட்டல் அடி )படத்தில் ஏற்கனவே பார்த்தாச்சே!

ஷங்கர் படமும் சமூகத்துக்கு மெசெஜ் சொல்லும் பான்டசி தான் என்றாலும், ரியாலிட்டி இற்கும் பான்டசி இற்கும் இடையான ஒரு சரிவிகித கலவை இருக்கும். அந்த விகிதம் சரியா இருக்கும். இது வரலாற்றுப் படமாவும் இல்லாம பான்டசியாவும் இல்லாம, ரியாலிட்டியாவும் இல்லாம கா. பூ. சமாசாரம் போல வெளிப்படையா தெரிவது தான் பெரிய பலவீனம். மல்டிபிள் பெர்சனாலிட்டி, கருட புராணத்தைக் கூட ஏற்றுக் கொள்ள முடிந்தவர்களால் ஏதோ சாரிக்கு பிளவுஸ் எடுப்பது போல டி.என்.ஏ. மட்ச்சிங் இருந்தால் மட்டும் திறமைகளும் அப்படியே இருக்கும் என்பது கொஞ்சம் இடிக்கும்.

' காதல் பொய்யம்மா' பாட்டில் வரும் கடத்தின் இசை  மட்டும் ஏதோ செய்கிறது.  யெலோ ஏலமா..தலை ஆட்டலாம். மற்றபடி   'என்னமோ   ஏதோ' எல்லாம் செய்ய  வைக்கும் பாட்டுகள் இல்லை.

முருகதாசுக்கு ஒரு சின்ன கேள்வி- ரமணா இந்தியனை கொஞ்சம் அங்க இங்க மாற்றி எடுத்தீங்கள், கஜினி-ஒப் கோர்ஸ், மொமெண்டோ படத்தின் தழுவல் ( உங்க பாஷையில் இன்ஸ்பிரேஷன்). ஏழாம் அறிவு- நிறைய படங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சம். உ.ம். ஷாலின்    டெம்பிள் , குங் பூ ஹொஸ்டல்.எப்ப சொந்தமா ஒரு கதையை எடுக்க போறீங்க?      


7 ஆம்  அறிவு- 7  ஒ' க்ளாக் பிளேட்?
வேலாயுதம்v.ஏழாம் அறிவு-முந்துவது யார்?சில பேர் ஏழாம் அறிவு பார்த்திருப்பீங்க ஆனா வேலாயுதம் பார்த்திருக்க மாட்டீங்க, சில பேருக்கு வேலாயுதம் டிக்கட் கிடைச்சிருக்கும், ஆனா ஏழாம் அறிவை மிஸ் பண்ணிருப்பாங்க, சில பேரோ ரொம்ப பாவம், ரெண்ணு படத்தையுமே பார்த்திருக்க முடியாம யு டியூப் இல விரல் தேய தேடிக்கிட்டுருப்பாங்க. பட், ரெண்ணு படத்தையுமே பாத்தவங்களால தான் கரக்டா எது பெட்டர்னு சொல்ல முடியும்.

முதல்ல சூலாயுதம், சாரி வேலாயுதம். படத்தோட கதை என்னன்னா, விஜய் ஒரு பால் காரரா வர்றாரு. அவரோட பாச மலர் தங்கச்சி சரண்யா மோகன். இவரை ஊர் பெரிய மனுஷன் முத்துப் பாண்டி ஐ லவ் யூடா செல்லம்ன்னு துரத்திக்கிட்டு திரியறாரு. ஆனா சரண்யாவோ விஜயோட பிரெண்டு ஓட்டேரி நரியை ஒரு தலையா காதலிக்கிறாங்க. ஓட்டேரி நரியோட அப்பா பெரிய மாட்டுப் பண்ணை வைச்சிருக்காரு. விஜய் தங்கச்சிக்காக ஓட்டேரி நரியை பொண்ணு கேக்க, சீ..பையன் கேக்க போனப்போ நரியோட அப்பா சனியன் சகடை விஜயை நிக்க வைச்சி அவமானப் படுத்தி அனுப்பிடறாரு. ஒங்கிட்ட ஒரு மாடு தான் இருக்கு, என்கிட்டே மாட்டு பண்ணையே இருக்கு ன்னு கேலி பண்னறாரு. ஒடனே விஜய்க்கு ரோஷம் வந்து, "நான் ஒரு மாடு வைச்சிருக்கிறது நூறு மாடு வைச்சிருக்கிறதுக்கு சமம்" அப்டின்னு பஞ்ச் டயலாக் பேசறாரு.

"இதோ பார், இன்னும் ஒரு வருஷத்தில உன்கிட்ட இருக்கிற மாடுகளை விட ஒரு மாடு அதிகமா வாங்கி காட்டறேண்டா! " அப்படின்னு சவால் விட்டுட்டு வந்திடறார். விஜயோட பஞ்ச் டைலாக் ல ஈர்க்கப்பட்ட ஹன்சிகா விஜயை லவ் பண்ண ஆரம்பிக்கிறா.

அன்னிக்கு ராத்திரியே சனியன் சகடை பான்பராக் ரவியோட கூட்டு சேர்ந்து விஜய் வச்சிருந்த ஒரே ஒரு மாட்டையும் திருடறார். அந்த மாடு காணாம போன அதிர்ச்சில விஜயோட குடும்பம் சூசைட் பண்ணி செத்து போகுது. விஜய் தனி ஆளா மாட்டை தேடி கண்டு பிடிக்க புறப்படறார்.

அப்புறமா விஜய் டி கடையில பேப்பர் பார்த்துகிட்டிருக்கும் போது பேப்பர் இல ஒரு ஸ்கூப் நியூஸ். என்னன்னா, சென்னையில ஒரு அதிசய மாடு, 'அம்மா' ன்னு கத்தறதுக்கு பதிலா 'ங்ணா' அப்படின்னு கத்தறதுன்னு. உடனே விஜய் அந்த நியூஸ் பேப்பர் கம்பனியத் தேடி சென்னைக்கு புறப்படறாரு.அங்கன வந்தப்புறம் தான் தெரியுது அந்த நியூஸ் போட்ட ரிப்போர்டர் ஜெனிலியான்னு. ஜெனிலியாவைக் கூட்டிகிட்டு அந்த மாட்டை தேடி விஜய் போறார். அந்த மாடு இப்போ ராமராஜன் கஸ்டடியில இருக்குது. லோக்கல் ஏரியா வில்லங்க கிஷோர், சுமன் ஆளுங்க அந்த மாட்டை ராமராஜன் கிட்டேயிருந்து புடுங்கிடறாங்க. விஜய் அந்த லோக்கல் ரவுடிங்க கிட்டயிருந்து சென்னையை காப்பாத்தரதுக்கோசரம் ஒரு அருவாப் பட்டறையில வேலைக்கு சேர்ந்து வேலாயுதம், சூலாயுதம்ன்னு பல ஆயுதங்களை தயார் பண்ணிக்கிறாரு. "ங்ணா, சிங்கம் சிங்கிளா வரும், மாடு மந்தையா தான் வரும் " , " என்ன தான் 'தல' க்கு வாட்ச் கட்டி விடுரதுன்னாலும் 'கையில' தான் கட்டி விடனும்" அப்படின்னு பஞ்ச் டைலாக் பறக்க விடுறாரு. கடைசியில அவர் சென்னைக்கு மோட்சம் வாங்கி கொடுத்தாரா, தன்னோட மாட்டை கண்டு பிடிச்சாரா, சனியன் சகடையோட விட்ட சவால்ல ஜெயிச்சாரா என்கிறது தான் கிளைமாக்சே. இதில ட்விஸ்ட்டு என்னன்னா, விஜய் ஒரு சி.பி.ஐ. போலீஸ் ஆபீசர்ங்கிறது தான்.
அடுத்ததா ஏழாம் அறிவு படத்தை பார்க்காதவங்களுக்காக அந்த படத்தோட கதை. இவங்க மொத்தம் நாலு பேர். புத்தரோட அப்பிரசெண்டுக. போதி தர்மன், போதி அருச்சுனன், போதி வீமன், போதி நகுலன். இவங்களுக்கு வீரம்னா என்னன்னே தெரியாது. எப்பவுமே ஒண்ணா தான் திரிவாங்க. இவங்களை நாலு போரையும் நாலு திக்கா பிரிச்சு அனுப்பிடறாரு புத்தர். இதில போதி தர்மன் சூர்யா சைனாக்கு போறாரு. அங்க போய் புரூஸ் லீ கிட்ட குங் பூ கத்துக்கிறாரு நம்ம சூர்யா. சிக்ஸ் பேக் ஏத்தி பேர் பாடி காட்டறாரு. அப்பாலிக்கா ஜாக்கி சான், ஜெட் லீ கடைசியா குங் பூ பண்டா வரைக்கும் எல்லாருக்கும் குங் பூ கத்துத் தராரு. இவர்கிட்டே நிறைய ஸ்டூடண்ட்ஸ் போனதால பொறாமைப்பட்ட குங் பூ மாஷ்டருங்க எல்லாருமா ஒண்ணா சேர்ந்து சூர்யாவைக் கொன்னு சீனாவோட மஞ்சள் நதியில தூக்கி போடறாங்க.

அப்போ செத்து போன சூர்யா வோட பிரேதாத்மா இப்போ சென்னையில மறுபிறவி எடுத்து வளர்றது. சுருதி பயோ மெடிக்கல் காலேஜ்ல படிக்கறா. அதே காலேஜ்ல சூர்யாவும் அவளை கரெக்ட் பன்னறதுக்காகவே சேர்றாரு.அப்போ அவருக்கு சில நேரங்கள்ல நார்மல் மெமரி லாஸ் ஆகுது. அந்த சமயங்கள்ல அவருக்கு எதிர்காலத்தில நடக்க போறது எல்லாம் இப்பவே தெரியுது. உதாரணமா, சுருதி இந்த செமெஸ்டர்ல 2 சப்ஜக்ட் அரியர்ஸ் வைக்கபோறா, நாளைக்கு காலேஜ் காண்டீன்ல போண்டா போடுவாங்களா மெதுவடை போடுவாங்களா, தி.மு.க. இல நாளைக்கு அரெஸ்ட் ஆகபோறது வீரபாண்டி ஆறுமுகமா பொன்முடியா மாதிரியான இம்ப்பார்டன்ட் மட்டேர்ஸ் எல்லாம் முன்கூட்டியே தெரிஞ்சுக்கிற ஒரு சூப்பர் பவர் சூர்யாக்கு இருக்குங்கறது அவருக்கு தெரிய வருது.

ஒரு வாட்டி சூர்யா வச்சிருந்த நவரத்ன ஆயில்ல வழுக்கி விழுந்து ஸ்ருதிக்கு ஆக்சிடன்ட் ஆகுது. அப்போ ஸ்ருதியை அவங்க அம்மா வீடு இருக்கற காஞ்சிபுரத்துக்கு கூட்டிட்டு போறார் சூர்யா. அங்க போனப்புறம் அவருக்கு பழைய நினைப்பு எல்லாம் வருது. அப்பிரசெண்டா இருந்தது, மொக்கை படம் எல்லாம் நடிச்சு வெறுப்பேத்தினது , சரோஜா தேவியோட சோப்பு டப்பா வித்தது, ஜோ வும் தானும் வெறும் பிரெண்ட்ஸ் தான்னு பேட்டி கொடுத்தது, லைலாவோட நாலு படம் பண்ணினது, எல்லாம் நினைவுக்கு வருது.

லாஸ்டா சீனாவுல வச்சு தன்னை போட்டு தள்ளினாங்க என்கிறதும் நினைவுக்கு வருது. கொலை பண்ணின மாஸ்டர்ஸ் எல்லாத்தையும் பழி வாங்க திருப்ப சீனாவுக்கு புறப்படறாரு சூர்யா. அந்த மாஸ்டர்ஸ் எல்லாம் இப்போ பீட்டர் ஹெயன், கனல் கண்ணன், அனல் அரசு, ராம்போ ராஜ்குமார், கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர் ஆக மறுபிறவி எடுத்து கோடம்பாக்கத்தில சுத்தி கிட்டிருக்கிறது அவருக்கு தெரிய வருது. இவங்களை அழிக்க ஸ்ருதியோட ஹெல்ப் ல பயோ மெடிக்கல் வப்பன் அதாவது உயிராயுதம் தயார் பண்ணறார் சூர்யா. அவ்வளவு பேரையும் உக்கார வச்சு சிவ குமாரை சங்க காலப் பாடல்களை பற்றியும் கம்ப ராமாயணத்தை பற்றியும் நான் ஸ்டாப்பாக ஸ்பீச் பண்ண வைக்கிறாரு சூர்யா. அந்த உயிர் ஆயுதத்தை தாக்கு பிடிக்க முடியாம மாஸ்டர்ஸ், இதுக்கு வேலாயுதமே பெட்டர்ன்னு போயிடறாங்க.

ரெண்டு படத்தோட கதையும் கேட்டீங்க இல்லையா, இப்ப நீங்களே மார்க் போட்டுகோங்க. உங்களுக்கே இப்போ தெரிஞ்சிருக்கும் எந்த படம் ரேஸ் ல முந்துது அப்டீன்னுட்டு.

( ஹி..ஹி..ரெண்டு படத்துக்குமே டிக்கட் கிடைக்காததால இப்படி ரூம் போட்டு உக்காந்து கதையை யோசிக்க வேண்டியது ஆய்டிச்சு....சாரிங்ணா ...!)

கிறீஸ்மனிதர்கள்-முனி- பார்ட்- 3?


துட்டகைமுனு மன்னனின் ஆவி கிறீஸ் மனிதர்களில் உடலில்!
இலங்கையை கலக்கி அடித்த மர்ம மனிதன் விவகாரம் ( கிறீஸ் மனிதன் ) ஒருவாறு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடங்கிய நாள் முதலாக சும்மா எக்ஸ் மென், spider man ரேஞ்சுக்கு பப்ளிசிட்டியுடன் இலங்கையிலிருந்து வெளியாகும் அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கங்களில் வரும் அத்தனை செய்திகளிலும் இடம்பிடித்து மக்களின் நெஞ்சை (?) விட்டு நீங்காத இடம் பிடித்து விட்டான் இந்த கிறீஸ் மனிதன். ( செல்லமாக கிறீஸ் பூதம் மற்றும் கிறீஸ் யக்கோ!)

ஒருபடியாக இந்த கி.பூ. இன் அட்டகாசங்கள் கொஞ்சம் ஓய்ந்து விட்டாலும், அதைச் சுற்றியுள்ள மர்மங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. வந்தான், வென்றான் என்ற போதிலும், ஏன் வந்தான் எதற்கு வந்தான் என்ற கேள்விகள் இன்னும் விடை அளிக்கப்படாமலேயே இருக்கின்றன. கி.பூ. பற்றிய ஒரு சின்ன மீள்பார்வை இப்போது பார்ப்போம்.

1. முதலில் மலையகப் பகுதிகளில் ஆங்காங்கே தென்பட்டான். பெண்களின் நெஞ்சில் கீறி இரத்தக் காயம் ஏற்படுத்தி விட்டு ஓடி மறைந்தான். அமைச்சர் கிறீஸ் பூதம் அல்ல கிறீஸ் ஆசாமிகளின் வேலையே இது என்று சாதித்தார். உடம்பு முழுவதிலும் பூசப்பட்ட கிறீஸ். இது தான் அவன் அடையாளம்.மக்கள் ஒருவனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொழுதிலும் போலிஸ் அவனை விடுவித்தது.

2. பிறகு கிழக்கு நோக்கி நகர்ந்தான். ஊரணி பகுதி, மற்றும் பல இடங்களில் தோன்றினான். பொதுவாக பெண்களை காயப்படுத்தினான்.

3. மெல்ல மெல்ல மன்னார், புத்தளம் போன்ற இடங்களிலும் தரிசனம் தந்தான். இருட்டில் மறைந்திருப்பது, வெளியில் வரும் பெண்களைக் கூரிய உலோகத்தால் கீறி காயப் படுத்துவது தொடர்ந்தது.

4. இறுதியாக, யாழ்ப்பாணத்தில் தன் உச்சக்கட்ட திறமையுடன் தரிசனம் தந்து, மக்கள் இரவில் உறங்கவே முடியாத நிலையை ஏற்படுத்தினான். குடாநாடு முழுவதும் கொந்தளித்தது. இறுதியில் 102 பொதுமக்கள் கைது செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

5. கிழக்கில் 54 வயது மனிதர் நேரடியாக கிறீஸ் பூதத்துடன் கட்டிப் புரண்டார். அவர் சொன்ன அடையாளம்: உடம்பு முழுவதையும் இறுக்கிப் பிடித்த கருப்பு உடை, காலில் ஸ்ப்ரிங் போன்ற ஒன்று இணைக்கப்பட்ட பூட்ஸ், வலது கையை நீட்டினால் விரியும் கூரிய நீண்ட உலோக நகங்கள். சடுதியாக ஓடி மறையக் கூடிய ஆற்றல். கைகலப்பின் இறுதியில் அவருக்கு உலோகத்தால் கீறிய காயங்கள்.

6. கிறீஸ் மனிதனை மக்கள் துரத்தி ஓடிய போது சிறிது தூரத்தில் தயாராக நின்ற வாகனத்தில் ஏறி தப்பிப்பது வழக்கம். அல்லது அந்த இடத்தில் பிரசன்னம் தரும் இராணுவம் அவனை காப்பாற்றும் அல்லது தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செல்லும்.

7. யாழ்ப்பாணத்தில் கிறீஸ் மனிதன் தன் uniform அணிந்து கொள்ளக்கூட மினக்கடவில்லை போல. டி-சேர்ட் இலும் சாரத்திலும் காட்சி தந்து கலவரப்படுத்தினான். நாவாந்துறையில் மக்கள் துரத்தியபோது அருகிலிருந்த காவலரணுக்குள் புகுந்து டி-சேர்ட் கழற்றிப் போட்டு விட்டு பின்பக்கம் வழியாக கூலாக தப்பித்தனர் மர்ம மனிதர்கள். கோவத்தில் இராணுவ பொருட்களை சேதமாக்கிய மக்களை வீடு புகுந்து அடித்து இழுத்து வந்து காவலரணில் அடைத்தது இராணுவம்.

8. வதந்திகள்: நாட்டின் தனைவருக்கு வந்திருக்கும் நோயை குணப்படுத்த பரிகாரம் தேடியே இந்த இரத்த சேகரிப்பு வேலைகள் நடைபெறுவதாகக் கூறப்பட்டது. கீறிக் காயமேட்படுத்திய கிறீஸ் மனிதன் 'sponge' மூலம் அந்த இரத்தத்தை உறிஞ்சி எடுத்துச் செல்வதாகவும் சொல்லப்பட்டது. துட்டகைமுனு மன்னனின் வாள் மற்றும் கிரீடம் அடங்கிய புதையலை கைப்பற்றுவதட்காகவே இந்த இரத்தாபிஷேகம் என்றும் வதந்தி கிளம்பியது. மேலும், கிறீஸ் மனிதனாக வருவது சீனர்கள் என்றும், அதை மறைப்பதற்காகவே கிறீஸ் பூசினார்கள் என்பதும் இன்னொரு சுவாரசியமான வதந்தி. சில நாட்களுக்கு முன் தமிழ் பத்திரிக்கை ஒன்றில் வந்து ஜோக்:

" கிறீஸ் மனிதனை ஏர்போர்ட் இல கண்டவையாம்"
" ...அப்படியா?? பிறகு என்ன நடந்தது? "
" பிறகென்ன...அவன் பிளேன் இல ஏறி தன்ட நாட்டுக்கே போட்டானாம் "

9. பேஸ்புக்கில் கிறீஸ் பூதத்திற்கு 3000 இரசிகர்கள்: கூத்துக்களின் உச்சக்கட்டமாக இது நடந்தது. அந்த 3000 பேர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப் போவதாக குற்றப் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில கேள்விகள்:

1) மர்ம மனிதன் புகுந்த பகுதிகள் அனைத்துமே சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள். அதே போல மர்ம மனிதனாக பிடிபட்ட அனைவருமே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்.

2) கிறீஸ் பூதம் எனத் தென்பட்டவர்கள் அனைவருக்கும் மன நோய் என்று சான்று கொடுக்கப் பட்டது. அவர்கள் அத்தனை பேருக்கும் இராணுவ முகாமிற்குள் ஓடி ஒளியும் ஒரே விதமான மன நோயா? மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்துக்கு கும்பலாக பஸ் இல் டிக்கட் எடுத்து போய் இறங்கி பெண்களின் இரத்தம் எடுக்கும் அளவுக்கு ஒரே விதமாக சிந்திக்கத் தெரிந்த மனநோயாளர்களா?

3) கிரீஸ் பூதத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிய அரச திணைக்களம் ஒன்றில் வேலை புரியும் பெண் ஒருவரை மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு அவருக்கும் மன நோய் என்று சான்றிதழ் வழங்கப் பட்டது. பணியில் இருக்கும் ஒருவருக்கு இதுபோன்று பொய் சான்றிதழ் வழங்கினால் அவரின் எதிர்காலம் என்ன? கிறீஸ் பூதத்திற்கும் மன நோய், கிறீஸ் பூதத்தால் தாக்கப் பட்டவருக்கும் மன நோய் என்றால், இலங்கை மக்கள் முழுப்பேருக்கும் மன நோய் பிடித்து விட்டதா? அல்லது அங்கொடை மருத்துவமனையின் மன நோயாளிகள் அனைவரும் திறந்து விடப்பட்டிருக்கிறார்களா?

4) சரியான நேரம், சரியான இடத்தில் இராணுவ வாகனங்கள் தென்பட்டு, கி.பூ. கலைத்துச் செல்லும் மக்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு, கி. பூ. வாகனத்தில் இல் ஏற்றிச் செல்லும் மர்மம் என்ன?

5) யாழ்ப்பாணத்தில் கிறீஸ் பூதங்கள் கருப்பு உடை அணியாததன் காரணம் என்ன? அவை உண்மையிலேயே கிறீஸ் பூதங்கள் தானா??

6) யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதனாகப் பிடிபட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட தென்பகுதி இளைஞர் தனஞ்சய, மன நோயாளி அல்ல என்றும் கே.கே.எஸ். வீதியில் உள்ள கடை ஒன்றில் திருத்த வேலைக்காக வந்தவர் என்றும், குறித்த சம்பவத்துக்கு பிறகே மன நோயாளியாக மாறியுள்ளார் என்றும் அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னால் உள்ள மர்மம் என்ன?

7) சடுதியாக மர்ம மனிதர்கள் நடமாட்டம் குறைந்து போனதன் காரணம் என்ன?

8) இருபது, முப்பது வருடங்களின் முன்னும் கிறீஸ் மனிதர்களின் கதை நடந்திருக்கிறதாம். அப்படியானால் இப்போது நடப்பது Grease Man - season 2 வா?

இந்த மர்மங்கள் உடனடியாக துலங்குவதட்கான சாத்தியங்கள் குறைவு என்ற போதிலும் நிச்சயம் வெளிவராமல் போகாது . எனவே அவை வெளிப்படும் வரை இதைப் பயன்படுத்தி நன்மை அடைவதற்கான சில ஆலோசனைகள்:
குற்றம்-நடந்தது என்ன ? போன்ற த்ரில்லர் நிகழ்ச்சிகள் தயாரித்து, ஓட்டிக் கொண்டிருக்கும் அரச தொலைக்காட்சிகளையும் மக்கள் பார்க்க வைக்கலாம் .
• " I am the Grease man" என்று அச்சிடப்பட்ட டி-சேர்ட்கள், பாக், நோட் புக், grease man மொடல் ஷூக்கள், கை உறைகள் போன்றவற்றைத் தயாரித்து விக்கலாம் .
அலுவலகம் செல்ல முடியாதவர்கள் கிறீஸ் பூதம் கடத்தியதாக நாடகமாடலாம். ( உண்மைக் கதை).
• Grease Man . Civilians கேம் ஒன்று வடிவமைக்கலாம். இந்த கேம் இல் கிறீஸ் மனிதனால் தாக்கப் படுபவர்கள் மன நோயாளியாக மாறுவார்கள். கேம் இறுதியில் கிறீஸ் மனிதனும் மன நோயாளியாகி இறுதியில் மறைந்தும் போவான் என்பது தான் இந்த கேம் இன் தனிச்சிறப்பு. ( என்ன ரெடியா? )

( பி.கு: தலைப்பு- எவ்வளவோ வதந்தி வந்திட்டுது- நாங்கள் ஒரு வதந்தி கூட பரப்பேல எண்டா எப்பிடி?!? ஹீ ஹீ...& கவனத்திற்கு :படத்தில் இருப்பவர் து.கை. மன்னன் அல்ல! )
Related Posts Plugin for WordPress, Blogger...