நீளும் கயிறின் நீளம்; சில்க் ஸ்மிதா முதல் ஷாலினி வரை
அது ஏன் எப்போதும் நடிகைகள் மட்டுமே தற்கொலை செய்து கொள்கிறார்கள்? நடிகர்கள் படம் பார்க்க வருபவர்களை கொலை செய்வதோடு மட்டுமே நின்றுவிடுகிறார்கள். அண்மையில் சின்னத்திரை நடிகை வைஷ்ணவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக சக நடிகர் தேவ் ஆனந்த்துக்கு நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தது. ( வைஷ்ணவி தூக்கு போட்டு இறந்தது ஐந்து வருடங்களுக்கு முன்பு). கொஞ்சம் உற்றுப் பார்த்தால் இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போவது புரியும்.
'சில்க்' ஸ்மிதா
வறுமையான, படிக்காத ஒரு கிராமத்துப் பெண். சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, கணவனின் கொடுமை தாங்காமல் ஆந்திராவில் இருந்து ஓடி வந்து ஒரு மாவு மில்லில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது வினு சக்கரவர்த்தியின் கண்ணில் பட்டு நடிக்க அழைக்கப்பட்டவர். பிறகு நடந்தது ஊருக்கே தெரியும். அந்த கிறக்கமான கண்களும் கலரும், நீளமான கால்களும் கட்டுடலும் எல்லா மொழி ரசிகர்களையும் பைத்தியமாக்கியதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. ஒரு soft போர்னோ நடிகை என்று சொல்லப்பட்டாலும் கிடைத்த சில படங்களில் நடிப்பிலும் வசீகரித்தவர். ( உ.ம். அலைகள் ஓய்வதில்லை- ஆனந்த விகடனில் வந்த ஹாசிப் கானின் ஓவியத்தில் இருக்கும் அந்த முகத்தில் தெரியும் உணர்ச்சிகள்! )
தனக்குக் கொடுமை செய்த தன் குடும்பத்தைக் கடைசி வரை தன்னுடன் சேர்க்காமல் தனியே வாழ்ந்தவர் சில்க். ஒரு தாடிக்காரர் மட்டும் எப்போதும் கூடவே இருந்தார். ஒரு கவர்ச்சி தேவதை என்று மட்டுமே எல்லோருக்கும் தெரிந்தாலும் உதவி கேட்டு வந்த அத்தனை பேருக்கும் உதவிய அவரது இன்னொரு முகம் வெளியே தெரியாதது. இந்தக் காரணத்துக்காக தான் சாரு நிவேதிதாவும் தனது ஒரு நூலை ஸ்மிதாக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். அவருடைய பல கட்டுரைகளில் சில்க்கைப் பற்றி ( பெயர் குறிப்பிடாது) எழுதியிருக்கும் சில விடயங்கள் சுவாரசியமானவை.
450 படங்களுக்கு மேல் நடித்து,உச்சியில் இருந்த சில்க் ஸ்மிதா, முப்பதாவது வயதில் தன்னிடம் அன்பு செலுத்த யாருமே இல்லை என்று எழுதி வைத்து விட்டு தூக்குப் போட்டு செத்து போனார்.
திவ்யபாரதி
திவ்யாவின் கதை வேறு. ஸ்ரீதேவியின் சாயல் என்று பத்திரிகைகளே எழுதும் அளவுக்கு முக ஒற்றுமை. குழந்தைத்தனம் அப்பட்டமாக தெரியும் முகம். ரம்பா வந்த புதிதில் அவரது புகைப்படங்களைப் பார்த்தவர்கள் திவ்யபாரதி என்று தாங்கள் நினைத்ததாக இணையத்தளங்களில் கூறியிருப்பதைப் பார்க்கலாம். சில நேரம் பார்த்தால் மீனா போலவும் சில நேரம் ஹன்சிகா போலவும் சாயலடிக்கும் முகம். அவ்வளவு அழகு.
ஹிந்தியில் நிறைய படங்களுக்கு ஒப்பந்தமாகி, பிறகு எல்லாவற்றில் இருந்தும் தூக்கப்பட்டு, பிறகு தெலுங்குப் படம் ஒன்றில் அறிமுகமாகி ( பொப்பிலி ராஜு ) ஹிட் அடித்து, பிறகு மீண்டும் ஹிந்திக்கு போய், அங்கு மள மள வென்று படங்களில் நடித்து பல ஹிட்களைக் கொடுத்து வேக வேகமாக உச்சிக்கு போனவர். அப்போதே மீடியாக்களிடம் காட்டுத்தனமான, பைத்தியக்காரப் பெண் என்று நல்ல பேர் (!) வாங்கி இருந்தவர். கோவிந்தாவின் படத்தில் இருந்து தூக்கப்பட்டதால் ஒருமுறை தற்கொலைக்கு முயன்றவர். ஷாருக்கானின் முதல் படத்தின் ஹீரோயின்! கோவிந்தா, அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி என்று அந்நாளைய முன்னணி ஹீரோக்கள் அனைவரோடும் ஜோடி போட்ட ஒரு மாஸ் ஹீரோயின்.
பிரபல பத்திரிகை வரிசைப்படுத்தியதில், மாதுரி தீட்சித், ஸ்ரீதேவிக்கு அடுத்து மூன்றாம் இடம் பிடித்தவர். சஜித் என்ற சினிமா தயாரிப்பாளரைக் காதலித்தார். ஒரு நாள் தன்னுடைய அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஐந்தாம் மாடியில் உள்ள தன் வீட்டில் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளர், அவரது கணவர், வேலை செய்யும் பெண் மூவருடனும் கதைத்து கொண்டு இருக்கும் போது, தன் வீட்டு ஜன்னலில் உட்கார்ந்திருந்தவர், அந்த ஐந்தாம் மாடியில் இருந்து கீழே விழுந்து நொறுங்கினார். மூவரும் திரும்பி பார்க்கும் போது கீழே விழுந்து கொண்டிருந்தார்.
கண் இமைக்கும் நேரத்தில் அவரது பளபளக்கும் வாழ்க்கை, முன்னேறும் கனவு எல்லாம் முடிவுக்கு வந்தது. நடந்து விபத்தா, தற்கொலையா, கொலையா என்ற குழப்பம் இன்னும் இருந்தாலும், சாட்சிகளை வைத்து தற்கொலை என்று வழக்கு மூடப்பட்டது. அவர் நடிக்க இருந்த 10 இற்கும் மேற்பட்ட படங்களை ஸ்ரீதேவி, மனிஷா கொய்ராலா, தபு போன்ற பிரபல நடிகைகள் நடித்தனர். இறக்கும் போது திவ்யபாரதிக்கு வயது வெறும் 19 .
ஷோபா
'பசி' படத்துக்காக தேசிய விருது, மற்றும் ஊர்வசி விருது பெற்ற நடிகை. முள்ளும் மலரும் படத்தில் ரஜினியின் தங்கை. நிழல் நிஜமாகிறது படத்தில் கமலுடனும் நடித்தார். அமைதியான அழகு. மூடு பனி போன்ற வித்தியாசமான கதைக்களங்களின் கதாநாயகி. எக்ஸ்ட்ரா திறமை நடிப்பில். பாலு மகேந்திராவின் 'அழியாத கோலங்கள்' நாயகி. அதுவே அவரை அழித்த கோலத்தின் முதல் புள்ளி. 'அங்கிள்' என்று தான் கூப்பிட்ட பாலு மகேந்திராவைக் காதலித்தார். பாலுவுக்கு அப்போது ஏற்கனவே திருமணமாகி இருந்தது. அவரைத் திருமணம் செய்யவும் முடியாமல் விடவும் முடியாமல் தவித்த ஷோபா, தான் போட்ட முடிச்சை அவிழ்க்கத் தெரியாமல் தூக்குக் கயிறின் முடிச்சைப் போட்டுக் கொண்டார். அப்போது அவருக்கு வயது வெறும் 18 .
( பாலு மகேந்திரா பல வருடங்களுக்கு பிறகு மௌநிகாவை மணந்து கொண்டது தெரிந்திருக்கலாம் )
'Fatafat ' ஜெயலக்ஷ்மி
பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதையில் தாய் காதலிக்கும் ஆணையே தானும் காதலிக்கும் மகளாக நடித்தவர். ரஜினியுடன் 'ஆறில் இருந்து அறுபது வரை' படத்தில் ஜோடி. அந்த நாளில் முதமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரின் மருமகனைக் காதலித்த ஜெயலக்ஷ்மி, அந்த காதல் நிறைவேறாத சோகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரதியுஷா
ஆந்திராவைச் சேர்ந்த பிரதியுஷா, தமிழிலும் விஜயகாந்த், சத்யராஜ் ஜோடியாக ஓரிரு படங்களில் நடித்தார் . ஆந்திரா பிஸ்னஸ் புள்ளியின் மகனான சித்தார்த்த ரெட்டியைக் காதலித்து அந்த காதலுக்கு ரெட்டி வீட்டில் எதிர்ப்பு வலுத்த நிலையில், ஒரு நாள் காருக்குள் காதலனும் பிரதியுஷாவும் கோக கோலாவில் பூச்சி மருந்தைக் கலந்து அருந்த, காதலன் ரெட்டி பிழைத்துக் கொண்டார், பிரதியுஷா இறந்தார். கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இருந்தாலும், இறுதியில் தற்கொலை என்று முடிவானது. தற்கொலைக்குத் தூண்டியதாக சித்தார்த்த ரெட்டிக்கு ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது.
மோனல்
தமிழகத்தின் முன்னால் கனவுக்கன்னி சிம்ரனின் தங்கை. 'மானாட மயிலாட' புகழ் கலா மாஸ்டரின் ஒன்று விட்ட தம்பி பிரசன்னாவைக் காதலித்தார். காதல் கல்யாணத்தில் முடியாத சோகத்தில் மோனல் தூக்கில் தொங்க நேர்ந்தது. பிறகு சிம்ரன் கலா மாஸ்டர், மும்தாஜ் எல்லோருடனும் பகைத்தது தெரிந்த விடயம். இதில் இன்னொரு சோகம், மோனலுடன் ஜோடியாக 'பார்வை ஒன்றே போதுமே' இல் நடித்த குணாலும் சில வருடங்களுக்கு பிறகு மாடியில் இருந்து குதித்து இறந்தார். 'திருடிய இதயத்தை திருப்பிக்கொடுத்து விடு காதலா...' என்று மோனல் இந்தப் படத்தில் பாடுவார். அது கடைசி வரைக்கும் அவருக்கு கிடைக்கவில்லை.
'கோழி கூவுது' விஜி
கன்னட நடிகை. ' கோழி கூவுது' என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். ஒரு சத்திர சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறால் படுத்த படுக்கையாக இருந்து மீண்டிருந்தார். இவரும் ரமேஷ் என்ற, ஏற்கனவே திருமணமான இயக்குனரைக் காதலித்தார். விஜியுடன் திருமணம் செய்து கொள்ளாது உறவைத் தொடர்வதிலேயே இயக்குனருக்கு விருப்பம் இருந்தது. ஒரு நாள் விஜி, விஜியின் தந்தை, ரமேஷ், ரமேஷின் மனைவி நான்கு பெரும் கூடி பேச்சு வார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய விஜி, சொன்னதை செய்தும் காட்டினார். இவர் நாடியதும் கயிறைத் தான்.
லக்ஷ்மிஸ்ரீ
' ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு' என்று ரஜினி ' தர்மயுத்தம்' படத்தில் தன் தங்கையைப் பார்த்துப் பாடுவாரே நினைவிருக்கிறதா? அந்த மஞ்சள் நிலவும் ஒருநாள் தற்கொலை செய்து கொண்டது. லக்ஷ்மிஸ்ரீ, தான் சேர்ந்து வாழ்ந்த நபர் வீட்டில் இருக்கும் போதே தூக்குப் போட்டுக் கொண்டார்.
விஜயஸ்ரீ
கருப்பு வெள்ளை காலத்து கவர்ச்சி நடிகை. மலையாளத்தில் பிரேம் நசீர் ஜோடியாக நிறையப் படங்களில் நடித்தவர். இவரும் ஒரு நாள் தூக்கில் தொங்கினார். காரணம் தெரியவில்லை.
சின்னத்திரை நடிகைகள்
வைஷ்ணவி
சண் டி.வி. 'கொண்டாட்டம்' நிகழ்ச்சியில் காமெடி க்ளிப்பிங்க்ஸ் போட்டு சிரிக்க வைத்த வைஷ்ணவி மனைவி சீரியலில் நடித்த போது தேவ் ஆனந்தைக் காதலித்தார். தேவ் ஏற்கனவே திருமணமானவர். ஒருநாள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து, மின்விசிறியில் தூக்கப் போட்டுக் கொண்டார் வைஷ்ணவி. இதற்காக இவர் பயன்படுத்தியது, முன்பு ஒரு பிறந்தநாளின் போது நண்பிகள் அனைவரும் கை எழுத்துப் போட்டு பரிசாகத் தந்த துப்பட்டா ஒன்று.
ஷோபனா
வடிவேலுவுடன் சில படங்களில் ஜோடியாகவும் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் ' மீண்டும் மீண்டும் சிரிப்பு' தொடரில் சில வருடங்களாகவும் சிரிக்க வைத்த ஷோபனா, மூன்று மாதங்களாக தொடர்ந்து தாக்கிய ச்சிக்குன் குனியாவின் தீவிரம் தந்த மன உளைச்சலால் தூக்குப் போட்டுக் கொண்டார்.
ஷாலினி
மலையாளத்தில் மயூரி என்று அறியப்பட்ட நடிகை.அழகான பெரிய சலனப்படுத்தும் கண்கள். 'சலனம்' தொடர் இவருக்கு பெயர் வாங்கித் தந்தது. குமுதத்தில் ஆடை அணிவது பற்றி தந்த டிப்ஸ் இல், எந்த ஆடை அணிந்தாலும் தன்னம்பிக்கையோடு ஸ்மார்ட் ஆக இருப்பது முக்கியம் என்று சொன்ன ஷாலினி, ஒருநாள் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலி, அதே குமுதத்தில் இவர் இறந்த பிறகு இவருக்காக ஒரு கவிதை எழுதினார்.
இதில் பல மரணங்களுக்கு காதலும் பாசமும் காரணமாக இருந்திருப்பது தெரிகிறது. வாழ வைக்கும் சக்தி கொண்ட அன்பு, இவர்கள் விடயத்தில் மட்டும் உயிரை வாங்கும் தன்மை கொண்டதாக தலைகீழாக மாறிப் போனது ஏன்? எத்தனையோ பெண்கள் தற்கொலை செய்திருப்பினும், இவர்கள் நடிகைகள் என்றதால் மட்டுமே இந்த மரணங்களும் வெளியில் பிரபலமகின்றனவா? தற்கொலை என்பது கோழைகள் எடுக்கும் வீரமான முடிவா அல்லது வீரர்கள் எடுக்கும் கோழைத்தனமான முடிவா? பதில்கள் தெரியாவிட்டாலும், தூக்குக் கயிறு மேலும் நீளாது இருந்தாலே போதும்.
ஒரு நொடி துணிவு தற்கொலை...
நடிகைகளின் மாயவாழ்வின் நிஜக்கோலம் பரிதாபமே..
நல்ல அலசல்..
போராடத்தான் வாழ்க்கை என்பதை
புரிந்து கொண்டால் வாழலாம்.
புரிந்து கொண்டவர்கள் வாழ்கிறார்கள்.
புரிந்து கொள்ள வில்லையானால்
கயிறு விலை ஏறி விடும்.
நிறைய பேருக்கு இடுகாட்டில் இடமிருக்காது.
அருமையான கட்டுரை..
தொகுத்தளித்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்..