ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கும் அழுவாச்சி காவியம்

கடைசியா வந்த சோகப் படங்கள் எங்கேயும் எப்போதும், மைனா, எல்லாவற்றையும் தாண்டி இப்ப ஓடிக்கொண்டிருக்கிற லேட்டஸ்ட் படம் தான் கலைஞரின் நாசக் கிளிகள். சோகம் என்றா சோகம், சோகத்தை புளிஞ்சு ஜூஸ் எடுக்கிற அளவுக்கு கடும் சோகம்.  படத்தோட டிரைலரே இப்பிடி இருந்தா மெயின் பிக்சர் எப்பிடி இருக்குமோ  என்று வயித்தில புளியை கரைக்குது. கவுண்டமணி செந்தில் இப்ப நடிச்சிருந்தா டேய் ஸ்பெக்ட்ரம் மண்டையா இவனுங்க கொசுக்கடி தாங்க முடியலடா என்று சொல்லி செல்லமா ஒரு உதை விட்டிருப்பார். 

தொண்டர்கள் சிறைக்கு போனா அது வீரம், மகள் போனா பாவமா? அதுவும் கனிமொழி ஒன்றும் கோழையான  இல்லையே! பெண்ணியம் பேசுகின்ற, தன்னம்பிக்கையுள்ள பெண் என்று அறியப்பட்டவரல்லவா? அதுவும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை செல்லவில்லையே? அல்லது ஏதாவது தான் கொண்டுள்ள கொள்கைக்காக தீவிரமாக கதைத்து அது சம்பந்தமாக புரட்சிப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டு, அதனால் சிறை சென்றிருந்தால் கூட, ' அநீதியாக சிறையிலிட்டனரே மாபாதகர்கள்' என்று குமுறலாம்.

  
பாம்பே ஜெயஸ்ரீயுடன் கனி- இப்போது திகாரில் முகாரி? 


இரண்டாம் தலைமுறை ( 2G ) கம்பியில்லா தொழில்நுட்பத்தின் அலைக்கற்றை ஒதுக்கீடு சம்பந்தமாக தரகர் நீரா ராடியாவுடன் கனிமொழி உரையாடிய டேப்கள் ஏற்கனவே வெளியாகி இருக்கின்றன. அது ஒரு வலுவான ஆதாரம். தவிரவும் ஊழல் பணம் வந்து சேர்ந்ததாக சொல்லப் பட்ட கலைஞர் டி.வி. இல் முக்கியமான பங்கு தாரர் கனி மொழி. கருணாநிதி கூறுவது போல், அப்பா சொல்லி விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக பங்குகள் வாங்க கனிமொழி என்ன 'நிலா' வா? இல்ல, கருணாநிதி என்ன 'கிருஷ்ணா'வா? ஒரு பங்கு தாரருக்கு, அதுவும் கனிமொழி போன்ற ஒரு அறிவுபூர்வமான பெண்ணுக்கு தான் பங்கு வைத்திருக்கும் நிறுவனத்தின் நிதி கைமாற்றல் பற்றிய விடயங்கள் தெரியாமல் இருந்தது என்று கூறினால் சின்னப் புள்ளைத்தனமால்ல இருக்கு? 



சி.பி.ஐ. குற்றப் பத்திரிகையில்  தான் ஒரு சாட்சியாக தான் சேர்க்கப் படுவோம் என்று கனிமொழி நம்பி இருந்ததாகவும் ஆனால் சி.பி. ஐ. தாக்கல் செய்த இரண்டாவது கு.ப. இல் தானும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டது தெரிந்ததும் கனி அப்சட் ஆகியதாகவும் தகவல்.ஏற்கனவே ஒருமுறை பிணை மனு தாக்கல் செய்தபோது நீதிபதி அதைத் தள்ளுபடி செய்து வழங்கிய தீர்ப்பில், கனி குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும்  வெளியே வந்தால் சாட்சியங்களை கலைத்து விடும் அபாயம் இருப்பதாலும் பிணை வழங்க முடியாது என்றும் கூறி இருந்தார். சில தினங்களுக்கு முன் பிணை மனு மீது தீர்ப்பு வழங்கிய டிரையல் கோர்ட் நீதிபதி ஷைனியும் கிட்டத்த்தட்ட இதைத் தான் சொல்லி இருந்தார். 

தான் ஒரு பெண் என்பதாலும், தனக்கு ஒரு சிறிய மகன் இருப்பதாலும் அந்த அடிப்படையில் பிணை வழங்குமாறு கேட்டிருந்தார் கனி மொழி. அவர் சமூகத்தின் உயர்ந்த மட்டத்தில் இருப்பதாலும் அவர் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப் படும்  ஊழல் நாட்டின் பொருளாதாரத்திலேயே பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்டதாலும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்பதாலும், சாதாரண பெண் போல அவரைக் கருத முடியாது என்று நீதிபதி கூறி இருந்தார். முற்போக்கான சிந்தனை உடைய கனிமொழி இதில்  மட்டும் பெண்கள் நலிவானவர்கள் என்ற அடிப்படையில் தரும் சலுகையைக் கோரலாமா? அண்ணன் ஸ்டாலின் மிசாவில் சிறை செல்லவில்லையா? வை.கோ. பொடாவில் ஒரு வருடத்துக்கும் மேல் சிறையில் ( தரமுன்வந்த பிணையையும் மறுத்து )  இருக்கவில்லையா? ஏன் தமிழ் நாட்டிலேயே சிறையில் வாடிய எத்தனையோ பெண்கள் இருக்கிறார்களே? அதை விடவும், பெண் என்று எதற்கு பிரிக்க வேண்டும்? 

" சட்டம் எழுதியாயிற்று. எல்லாச் சாதியும்
கோயிலுக்குள் வர.
எந்நாடு போனாலும்
தென்னாடு உடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள்
மட்டும் ஆவதே இல்லை."
- கனிமொழி 




பிணை மறுக்கப்பட்டதும் கருணாநிதி அதிர்ச்சி அடைந்தாராம். ராசாத்தி அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார். அதைப் பார்த்ததும் கனிமொழியும் அழுதார். ராஜாவின் மனைவி பரமேஸ்வரியும் அழுதார். ஐந்து மாதங்கள் சிறையில் இருந்ததற்கே இந்த படம் காட்டினால், பதினெட்டு, இருபது வருடங்களாக சிறையில் இருப்பவர்களின் பெற்றோர்கள் தற்கொலை அல்லவா செய்ய வேண்டும்? சோனியா காந்தி வேறு கரிசனையுடன் விசார்த்ததாகவும், 'பிணையில் செல்வது ஒருவரது இயற்கை உரிமை ' என்று கருத்து தெரிவித்திருப்பதாகவும் செய்திகள். அப்படி என்றால் அவர் அப்சல் குரு, அஜ்மல் கசாப், நளினி போன்றவர்களுக்கும் பிணை வழங்கப்படாதது பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. அவர்களுக்கும் வழங்கி இருந்திருக்க வேண்டும் என்று கூற முன்வருவாரா? 



சட்டப்படியான முறையில் செய்யப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு ( பிணை மனு தள்ளுபடி) ' இனி என் வாழ்க்கை திஹாரிலேயே கழியட்டும், இனி எந்த துன்பமும் என்னை எதுவும் செய்ய முடியாது ' என்று சௌகார் ஜானகி ரேஞ்சுக்கு உருக்கமான டயலாக்குகள் விடுவதும் மிகப் பரிதாபமாக முகத்தை வைத்ததுக் கொள்வதும் தான் காமடி. நித்யானந்தாவே எவ்வளவு சிரித்த முகத்துடன் போலீசுடன் நீதி மன்றத்துக்கு ஏதோ கெஸ்ட் ஹவுசுக்கு போவது போல போய் வந்தார்?! நீங்கள் சன் டி.வி.. யில் பார்க்கவில்லையா?!? சிபு சோரன் போல மெகா ஊழல் அரசியல் வாதிகள் எல்லாம் எவ்வளவு தில் ஆக ஒலிம்பிக் மெடல் வாங்க செல்லும் கம்பீரத்தோடு போகும் போது நீங்கள் இப்படி உடைந்து போகலாமா? 


கனி மொழிக்கும் ராசாத்தி அம்மாளுக்கும் சில ஆறுதல் வார்த்தைகள். இந்த ஊழல், வழக்கு, விசாரணை எல்லாம் எத்தனை நாளுக்கு? சந்தானம் பாணியில் சொன்னால் ' இப்பிடி போயிட்டு அப்பிடி வந்திடலாம்!" ( கையை  ஆட்டி படிக்கவும்). மேலும், சிறை செல்லுவது தானே ஒரு நல்ல அரசியல் வாதிக்கு பேசிக்  குவாலிபிகேஷன்? அது பகத் சிங் போல சென்றால் என்ன, வடிவேலு கணக்காக ' நானும்  ஜெயிலுக்கு போறன்..நல்ல பார்த்துக்குங்க' என்று போனால் என்ன?  ஆனானப்பட்ட போபார்ஸ் பீரங்கி வழக்கையே மறந்து விட்டு , அவர் மகனையே அடுத்த பிரமதராக்க பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஜெயலலிதா கிலோ கணக்கில தங்கம், ஆயிரக்கணக்கில  சேலை, செருப்பு, மணிக்கூடு வைச்சிருந்ததையே மக்கள் மறந்து அவர் முதலமைச்சராயும் ஆகியாச்சு. இந்த 40  பில்லியன்  எல்லாம் எம்மாத்திரம். இப்பவே தி.மு.க.வின் தவிர்க்க முடியாத சக்தி என்று பத்திரிகைகள் எழுத தொடங்கி விட்டார்கள். பத்மநாப கோயில்ல ஆறாவது அறை ஏழாவது அறை எல்லாம் திறந்தா மக்களும் இதை மறந்து விடுவார்கள். உங்கள் அறை எண் 6  இன் கதவும் திறந்து வழி விடக்கூடும். 

எதுவுமே நடக்காட்டி போனா கூட நீங்கள் கவலைப்படத் தேவையே இல்லை. இலங்கைப் போரையே உண்ணாவிரதம் இருந்து தடுத்து நிறுத்தியவர் உங்கள் அப்பா. அவர் மனைவி, துணைவி, மற்றும் ஏர் கூலர்கள் சகிதம் உண்ணாவிரதம்  இருந்து எப்படியும் உங்களை வெளியில் கொண்டு வந்து விடுவார். 

இறுதியாக, கனி மொழியின் ஒரு அற்புதமான கவிதை:

"பாவ விமோசனத்திற்கு
ராமனுக்காக  காத்திராதே..
அவன் சீதையின்
அக்னிப் பிரவேச ஆயத்தங்களில் 

ஆழ்ந்திருக்கிறான்.."





2 Responses
  1. please tell some thing about jeyalalitha


  2. ஒன்னே விட ஒன்னு பெட்டரா தெரியும்..
    ஒரு கோட்டுக்கு அருகே
    இன்னொரு பெரிய கோடு போட்ட
    அந்த கோடு சின்ன கோடு ஆகிவிடும்.

    மறதி ஒன்று இல்லை என்றால்
    மக்கள் வாழ முடியாது..
    மற்றவர்களையும் வாழ வைக்க மாட்டார்கள்.


Related Posts Plugin for WordPress, Blogger...