'ஆயில்'ய நட்சத்திரப் பெண்கள் ஏன் தேவை!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் இராணுவத்தினரின் காணி அபகரிப்புக்கு எதிராக அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது இராணுவத்தினர் கழிவொயில் ஊற்றித் தாக்கினர்-இது செய்தி. மகஜரைக் கையளித்து விட்டு பஸ்களில் பஸ்களில் திரும்பிக்கொண்டிருந்த போது வாகனங்களில் வந்த ராணுவத்தினர் பஸ்களை வழிமறித்து இந்த கழிவொயில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து  இனி இலங்கையில்  இருந்து வெளியாகும் முன்னணி கற்பனை நாளிதழ்கள்  மற்றும்  இணையங்களில் எதிர்காலத்தில் வெளியாகவிருக்கும் சில டுபாக்கூர் செய்திகள்:

யாழ்ப்பாணத்தில் கழிவொயிலுக்குப்  பெரும் தட்டுப்பாடு(அஸ்தமனம்)

யாழில் கழிவொயிலுக்கு திடீரெனப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.வீடுகளில் வைக்கப்பட்டிருந்த கழிவொயில் கான்களையும்  படையினர் வீடு வீடாக வந்து சேகரித்துச் சென்றதால் கடி எறும்புக்கு ஊற்றவோ,  சைக்கிள்களில் சத்தம் கேட்காமல் பூசவோ கழிவொயில்  கிடைக்காமல் மக்கள் பெரும் அவதியுறுகின்றனர். இந்த அசாதாரண தேக்கநிலையைப்  போக்க அரசாங்கம் ஆவன செய்ய வேண்டும் என யாழ்வாசி ஒருவர் நமது  நிருபரிடம் தெரிவித்தார்.

அடுத்த போராட்டத்துக்கு ஒரு முக்கிய அறிவித்தல் (இடம்புரி)

இன்னும் சில தினங்களில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் மக்கள்  அனைவரையும் மழைக்கோட்டுடன் வருமாறு மாவை சேனாதிராஜா எம்.பி. நேற்று அறிவித்தல் விடுத்துள்ளார். இந்தியன் ஒயில் கோப்பறேஷன் முக்கிய முடிவு (மண்டே  டைம்ஸ்)

நாட்டில் கழிவொயிலுக்கு ஏற்பட்டுள்ள திடீர் கிராக்கியை முன்னிட்டு தங்களது பெட்ரோல் நிலையங்களில் கழிவொயிலையும்   சந்தைப்படுத்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.ஒ.சியின் இலங்கைக்கான தலைமை அதிகாரி நேற்று பத்திரிகைகளிடம்  தெரிவித்தார்.

இலங்கைக்கான இறக்குமதிக் கொள்கையில் புதிய திருப்பம்அமைச்சர் (மண்டே லீடர்)

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சாய் எண்ணையின் அளவைக் குறைத்து இனி வரும் காலங்களில் கழிவோயில் அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் என பெட்ரோலியத் தொழில்துறைகள் அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். படையினர் பெருமளவில் கழிவொயிலைப் பயன்படுத்துவதால் இந்த தீர்மானம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் நேற்று செய்திப்பிரிவிடம் கூறினார்.இலங்கை இராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு ( www .defens.ok )

பாதுகாப்பு அமைச்சு  நேற்று புதியவர்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கான விளம்பரத்தை நேற்று வெளியிட்டது. வழமையான  உயர, நீள  அகலங்களுடன் குறிபார்த்து கழிவொயில்  ஊற்றத் தெரிந்திருப்பது மேலதிக தகமையாகக் கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

கழிவொயில்  உடன் தேவை! - படையினர் (தின உரல்)

இனி வரும் காலங்களில் மக்கள் போராட்டங்கள் அதிகம் நடைபெற இருப்பதால் கழிவோயிலும்  பெருமளவில் தேவைப்படுகிறது. இதனால் யாழ்ப்பாணத்திலும் மற்றும் முழு இலங்கையிலும் கழிவொயிலை   வீட்டில் வைத்திருப்பவர்கள் உடன் எமது படைப்பிரிவத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மீறுபவர்கள் கட்டாய கழிவொயில்  சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மேலதிக  விசாரணைக்காக பூஸாவுக்கு அனுப்பப்படுவார்கள்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி-  
மேஜர் ஜெனெரல்  மஹிந்த ஹத்துருசிங்க,
 பாதுகாப்புப் படை தலைமைச் செயலகம், 
பலாலி.இராணுவத்தின் புதிய உத்தி குறித்து ஆராய  ஹிலாரி  கிளிண்டன் அவசர  வருகை! (ஏ.பி.சி-செய்திச் சேவை )

மக்கள் போராட்டங்களைக் கலைப்பதற்கு இலங்கை இராணுவத்தினர் புதிய உத்தியொன்றை  பயன்படுத்தியுள்ளமையை அறிந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிண்டன் இலங்கைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், செலவு குறைந்ததும் இலகுவானதுமான நவீன உத்தியொன்றை இலங்கைப் படையினர் கையாண்டிருப்பதாகவும், அதுபற்றிய மேலதிக விபரங்களை அறிந்து செல்வதற்காகவே தாம் இலங்கை வந்திருப்பதாகவும் கூறினார். மேலும் இவ் இராணுவ உத்தியை அமெர்க்காவில் செயற்படுத்த  ஒபாமாவும் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் இதுகுறித்து அவர் மகிந்தவுடன் தொலைபேசியில் உரையாடுவார் என்றும் தெரிவித்தார்.

மணப்பெண் தேவை (ஸ்ரீ லங்கா மற்றிமோனியல்.கொம்)

இலங்கை இராணுவத்தில் கடமையாற்றும் ஆண் ஒருவருக்கு பெற்றோர் தகுந்த   மணப்பெண்ணை தேடுகின்றனர். பெண் 'ஆயில்'ய நட்சத்திரமாக இருப்பது முக்கியம்.உடன் தொடர்பு கொள்ளவும்.

கறை  நல்லது- அமைச்சர் விளக்கம் (வீரலட்டு)

அமைதிப்போராட்டத்தை மேற்கொண்ட மக்கள் மேல் இராணுவத்தினர் கழிவோயில் ஊற்றியது சரியா என நீதிக்கும் நியாயத்துக்குமான மக்கள் அமைப்பு எரிசக்தித்துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிடம் வினவிய போது, " 'கறை' நல்லது"  என அமைச்சர் தெரிவித்தார். சங்கக்கடை கூப்பன் கார்டுகள் மூலம்  இனிமேல் குடும்பங்களுக்கு தலா  இலவச சேர்(f )ப் எக்ஸல் பக்கெட்  ஒன்று வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.

தெல்லிப்பழை மருத்துவமனையில்  நோயாளர் அதிகரிப்பு 

பிந்திக்கிடைத்த செய்திகளின் அடிப்படையில் தெல்லிப்பழை மனநோய் மருத்துவமனையில்  நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக மருத்துவமனையின் நம்பத்தகுந்த  வட்டாரங்களிடமிருந்து செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

(செய்தி தவிர யாவும் கற்பனை!)

படங்கள்- நன்றி-tamilwin.com அசத்திய பெண்களும் சொதப்பிய ஆண்களும்!

மோனிக்கா செலஸ் க்கும் மோனிக்கா லெவின்ஸ்கிக்கும் என்ன வித்தியாசம்?!? கொஞ்சம் பழைய ஜோக் இது. தெரிந்தவர்கள் சிரிக்கலாம்  தெரியாதவர்கள் மூளையைக் கொஞ்சம் கசக்கிக் கொண்டிருங்கள் இறுதியில் பார்ப்போம். அதற்கு முதலில் (f )பாஷன் சொர்க்கபுரி பாரிஸில் பிரெஞ்சு ஓபன் நடந்து முடிந்திருக்கிறது. அதிலிருந்து சில ஷொட்கள்.

மீண்டும் மரியா! 

 

மரியாவுக்கு இந்த பிரெஞ்சு ஓபன் ரொம்ப ஸ்பெஷல். அம்மாவும் தோழியும் போல்  விளையாட்டும் ஆபரேஷனும் உடன் பிறவாத சகோதரிகள்  போல. 2008  இல் தோள்பட்டையில் செய்து  கொண்ட சர்ஜரிக்குப் பிறகு எந்த கிராண்ட் ஸ்லாமையும் வெல்லாத மரியாவுக்கு இந்த  டைட்டில் ஒரு செகண்ட் இன்னிங்க்ஸின் ஆரம்பம்! இந்த பிரெஞ்சு ஓபனை வென்றதோடு இன்னொரு சாதனையும் செய்திருக்கிறார் ஷரபோவா.கேரியர் கிராண்ட் ஸ்லாம்  எனப்படும் நான்கு முக்கிய கிராண்ட் ஸ்லாம்  பட்டங்களையும் வென்றவர்கள் பட்டியலில் பத்தாவதாக இடம்பிடித்திருக்கிறார்! ராஜாவின் பார்வை (எ)ரானியின் பக்கம்! 
சாரா எரானி  (செல்லமாக ஸரீட்டா!)கலக்கல் அறிமுகம்.டபிள்ஸில் கிராண்ட் ஸ்லாம்  வென்றதன் மூலம் முதலாவது கிராண்ட் சலாம் வென்றிருக்கிறார் இந்த வெனிஸ் தேசத்து தேவதை. சிங்கிள்ஸ்  இலும் ஷரபோவாவுடன் பைனல்ஸ் இல் ஜோடி போட்டது ஒரு அதிரடி ஆரம்பம். பட்டம் வென்றிருந்தால் ஒரு போட்டித்தொடரில் இரண்டு கிராண்ட் ஸ்லாம்களை  வென்று சாதனை படைத்திருப்பார்!

சானியா-எங்கிருந்தாலும் வா....ழ்க !பூபதி - சானியா ஜோடி , அபிஷேக்-ஐஸை விட ஹிட்! இம்முறை பிரெஞ்சு ஓபன் மிக்ஸ்ட் டபிள்ஸ் ஐ கைப்பற்றிய இந்த ஜோடிக்கு இது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் ! ( 2009 இல் அவுஸ்திரேலியன் ஓபன் கைவசம்). முன்பு சானியா லீக் போட்டிகளில் ஜெயிக்கும்போதே தூக்கிவைத்துக் கொண்டாடும் மீடியாக்கள் இம்முறை கிராண்ட் ஸ்லாம் வென்றும் பெரிதாகக்  கண்டுகொள்ளாதது ஏனோ? (அப்புறம் பூபதிக்கு இது எட்டாவது..அதாவது எட்டாவது கிராண்ட் ஸ்லாம்! ஸ்வேதாவுடன் டிவோர்ஸ், லாராவுடன் திருமணம் என்பதைத் தாண்டி, மகேஷ் இப்போது சாய்ரா  என்கிற குட்டி தேவதைக்கு அப்பா !)

கடுப்பேற்றிய ஆண்கள்!

அரையிறுதியில் வென்று  பைனல்ஸில் பரம வைரி  நடாலுடன் மோதுவார் என்று பரபரப்புடன் எதிர்பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போட்டுவிட்டு செமி பைனல்ஸில் ஜோகோவிச்சிடம்  அநியாயத்துக்கு தோற்றார்  பெடரர். 


ரf பா- தி சாம்பியன் -என்னா  லுக்கு...அதான் கேம் முடிஞ்சிருச்சில்ல..?பைனல்ஸில் ஜெயித்து கேரியர் கிராண்ட் சலாம் கைப்பற்றும் ஆவலுடன் ஜோகோவிச்சும் ஏழாவது முறை பிரெஞ்சு ஓபன் வென்று சாதனை படைக்கும் வெறியுடன் நடாலும் இறுதிப்போட்டியில் களமிறங்கி  புழுதிபறக்க மோதிக்கொண்டிருக்கும் போது பார்த்துத் தானா  அநியாயத்துக்கு மழை வந்து தொலைக்க வேண்டும்? இரண்டு நாட்களாக நடந்த பைனல்ஸில் கடைசியில் வழக்கம் போல ரபா வென்று சாதனை படைத்தார். (க்ளே  கோர்ட்டில் மன்னன் அல்லவா?) விறுவிறுப்பான ஐந்து செட் போட்டி ஒன்றை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஜவ்வு மாதிரி இரண்டு நாட்கள் நீண்ட பைனல்ஸ் ஏமாற்றமே!

பிறகு மேலே கேட்ட ஜோக்கிற்கு விடை..மோனிகா  செலஸ் டென்னிஸ் ப்ளேயர்..மோனிகா லெவின்ஸ்கி? ஹி  ஹி...(எப்போதோ குமுதத்தில் படித்தது என்று ஞாபகம். அதிலும் பதில் போட்டிருக்கவில்லை! )

எக்ஸ்ட்ரா : நேற்று பைனல்ஸ் முடிந்த பிறகு எப்.எம்.இல் ரிசல்ட் சொல்லிக்கொண்டிருந்த போது  , (கிரிக்கட்டுக்கு இடையில்  தான்) பாவம் நோவாக்! இவர்கள் பெயரை உச்சரித்த விதத்தைக் கேட்டிருந்தால் நிச்சயம்  டென்னிஸை விட்டே ஒதுங்கியிருப்பார். பிறகு நடால் எட்டாவது முறையாக பிரெஞ்சு ஓபனை கைப்பற்றினார் என்று வேறு கூசாமல் அறிவித்தார்கள்.

இடுப்புகள் ஜாக்கிரதை!

இடுப்பு என்றதும் சிம்ரன் ஞாபகத்துக்கு வந்தால் நீங்கள் சராசரித் தமிழன்.  இலியானா நினைவுக்கு  வந்தால் நீங்கள் இளைஞன். ஜோதிகா வந்தால் நீங்கள் இன்னும் குஷி மூடில் இருப்பதாக அர்த்தம். இவர்கள் யாரும் இல்லாமல் குஷ்பூ நினைவுக்கு வந்தால் உங்களை நீங்கள் ஒழுங்காக அப்டேட் பண்ணிக் கொள்ளுகிறீர்கள் என்று அர்த்தம். இடுப்பு என்றதும் நடிகைகளின் இடுப்புகள் தான் வரிசையாக மனக்கண்ணில் ஸ்லைட் ஷோ போகுமே  தவிர, எப்போதாவது உங்கள் சொந்த இடுப்பைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா ?!? ஆறாம் விரல் போல இருக்கா விட்டாலும் பரவாயில்லை ( நன்றி: பா.விஜய்) அட்லீஸ்ட் உரல் போல இல்லாமல் ஆவது இருக்க வேண்டும். அதற்காக ஆண் பெண் பேதமின்றி அனைவரும் கடைப்பிடிக்கக் கூடிய சில சிம்பிள் வழிமுறைகள் இதோ:

அன்று வந்ததும் அதே இடை..ச்சா..ச்சா..ச்சா..ஒரு நிருபர் ஒரு நடிகையை பேட்டி எடுக்கப் போயிருக்கிறார். பேட்டியின் போது வழக்கமாக ஸ்லிம்மான நடிகைகளிடம் கேட்கப்படும் அதே கேள்வியைக் கேட்டிருக்கிறார். " நீங்கள் இவ்வளவு ஸ்லிம்மாக இருப்பதற்கு காரணம் என்ன?" அதற்கு அந்த நடிகை சொன்ன பதிலைக் கேட்டு ஆடிப்போன நிருபர் மயக்கம் போட்டு விழாத குறை. அப்படி அந்த நடிகை சொன்ன பதில் "அரிசி".இதென்னடா வழமையாக எல்லோரும் அரிசிப் பக்கம் தலைவைத்துக் கூடப் படுக்க வேண்டாம் என்று தானே சொல்லுவார்கள், இவர் என்ன கூலாக அரிசி என்று சொல்கிறார் என்று நிருபருக்கு ஆச்சர்யம்.நடிகை தொடர்ந்து சொன்னது இது தான்: " நான் ஒவ்வொரு நாளும் காலை எழுந்ததும் ஒரு கைப்பிடி அரிசியை எடுப்பேன். அதை அப்படியே தரையில் விசிறி அடிப்பேன். பிறகு குனிந்து ஒவ்வொரு மணி அரிசியாக பொறுக்கி எடுத்து மேசை ஒன்றில் வைப்பேன். இப்படி தரையில் கிடக்கும் அவ்வளவு அரிசி மணிகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வைப்பேன்!". எப்பூடி?

பட் இட் வில் வொர்க்! ஆனால் நீங்கள் ஏமாற்றாமல் ஒவ்வொரு அரிசியாக பொறுக்கி எடுக்க வேண்டும்.கூட்டி அள்ள கூடாது. தினமும் செய்து வரலாம். கொஞ்சம் வயதானவர்களாக இருந்தால் தலை சுற்றலாம்.யூத்தாக இருந்தால் ஊர் சுற்றலாம், தலை சுற்றாது.

இன்று வந்ததும் இதே இடை..ச்சா ச்சா..ச்சா..


அப்புறம் இது அஜித் ஒரு முறை சொன்ன டிப்ஸ். ஒவ்வொரு முறையும் சாப்பிட போவதற்கு முதல் 2  கிளாஸ் இல் வெந்நீர் எடுத்துக் கொள்ளுங்கள். ( அதாவது குடிக்கக் கூட்டிய சூட்டில் தான் ) எடுத்து விட்டு கிளாசையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்காமல் மடக் மடக்கென்று ராவாக உள்ளே அனுப்புங்கள். இப்போது நீங்கள் சாப்பிடலாம். இப்படி 3  வேளையும் வெந்நீர் குடித்த பிறகே சாப்பிட்டு வந்தால், எந்தவித எக்சர்சைசும் இல்லாமலேயே ஒரு மாதத்தில் ஒரு கிலோ முதல் 2  கிலோ வரை குறைய வாய்ப்பு இருக்கிறது. வெந்நீர் ஜீரனத்தைக் கூட்டுவதாலும், சாப்பிட முன்பு குடிப்பதால் நீங்கள் பாத்தி கட்டி வெட்டுவதைத் தடுப்பத்தாலும் இந்த ரிசல்ட்.

என்றும் உள்ளது ஒரே இடை..


அஜித் சொல்லாத சில டிப்ஸ்: கொள்ளு இருக்கிறதல்லவா? அதை அவித்து அந்த தண்ணியைக் குடிக்கலாம் அல்லது கொள்ளில் காஞ்சி காய்ச்சி குடிக்கலாம். யாரவது உங்களிடம் கடன் கேட்டால் கூட, 'நான் அன்றாடம் காய்ச்சி' என்று சொல்லிக் கொள்ளலாம்.


 அப்புறம் இந்த லிங்க் இல் ஷகிராவின் 'வக்கா வக்கா'  பாட்டுக்கு ஆடிய நடனத்தை கற்றுத் தரும்  வீடியோ இருக்கிறது. நீங்க மக்கா இதைப் பார்த்து ஆடி ப்ராக்டிஸ் பண்ணினீர்கள் என்றால் உங்கள் இடையும் பெல்லி டான்சுக்கு தகுந்ததாக ஆகிவிடும்.

காலை எழுந்து கோப்பி அல்லது காப்பி குடிப்பதற்கு முதல் வெது வெதுப்பான வெந்நீரில் ( வெய்ட்.. குளிக்க சொல்ல வில்லை) ஒரு டம்ளர் எடுத்து அதில் எலுமிச்சம்பழச் சாறும் கொஞ்சம் தேனும் கலந்து குடித்து வர கொஞ்சம் மெலிவீங்க! ஆனால் இதையே உல்டாவாகப் பண்ணி குளிர்ந்த தண்ணீரில் தேன் விட்டுக் குடித்தீர்கள் என்றால் தொலைந்தது! இடுப்பு அடுப்பு ஆகிவிடும் அப்புறம்.எக்சர்சைஸ், டயட், பீருக்குத் தடா என்று சொன்னால் கேக்கவா போறீங்க. மேலே சொன்னதெல்லாம் ஈசியாகச் செய்யக்க் கூடிய (அரிசி மேட்டர் தவிர) சில குறுக்கு வழிகள். சீரோ சைஸ் வர முடியாமல் போகலாம், ஆனா பீரோ சைஸ் குறையும். சிக்ஸ் பேக் வர முடியாது போனாலும்  சிங்கள் பேக்  ஆவது வரும்!

எவர் கண்ணுக்கும் பிராப்ளம்  இந்த இடை..


 அப்புறம் நீங்க என்ன தான் பண்ணினாலும், இடுப்பை யாரும் கிள்ளி விடாமல்  பார்த்துக் கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம். இல்லாவிட்டால் கிள்ளுக் கீரை ஆகும் வாய்ப்பு அதிகம்.பெண்கள் கிள்ளுவது பொதுவாக குறைவு. அதனால் ஆண்கள் பயப்படத் தேவையில்லை. அவர்கள் இடுப்பை எல்லாம் கிள்ளுவது இல்லை, இதயத்தையே அல்லவா ஜொள்ளுகிறார்கள்.. சாரி கிள்ளுகிறார்கள். ஹி ஹி ஹி.. 


மாதுரியைக் கலக்கப்போகும் சனத்ஜெயசூரிய!

இலங்கையின் கிரிக்கட் நட்சத்திரம் சனத் ஜெயசூரிய இப்போது ஒரு செலிப்ரிட்டி டான்ஸ் ஷோ  கண்டெஸ்டன்ட்!   நெட் இல் ப்ராக்டிஸ் பண்ணிய சனத், இனிமேல் ஸ்டேஜ் இல் ப்ராக்டிஸ் பண்ண இருப்பது சோனி டிவி இல் ஒளிபரப்பாகும்  "ஜலக் டிக்லா ஜா" ரியாலிட்டி டான்ஸ் ஷோவுக்காக!  மானாட மயிலாட டைப் இந்த ஷோவின் ஸ்பெஷாலிட்டி, இதில்  போட்டியாளர்கள் அனைவருமே பிரபலங்கள் என்பது தான். மோனிகா பேடியில்  இருந்து கால்பந்து பிரபலம் பெய்சுங் பூட்டியா வரை இதில் கலந்து கொண்டு துவம்சம் செய்த இந்த ஸ்டேஜில்  சீசன் 5  இல் ஆடுவதற்காக சனத்திற்கு பெரிய தொகை கைமாறியிருக்கிறது  என்கிறார்கள். 
புதிய ஜல்சா அவதாரம்:ஹி ஹி..


சனத் டான்ஸ் ஷோவில் பங்குபெறப்போகும்   விடயம் செய்தியாக வெளியாகியதுமே இணையத் தளங்களில் ரசிகர்கள்(!) கொந்தளிக்கத் தொடக்கி விட்டார்கள். டெய்லி மிரர் பத்திரிகையில் அவரது முன்னாள் ரசிகர்கள் மற்றும் இந்நாள் எனிமிகள் கூடிக் கும்மியடித்திருக்கும் கமென்ட்டுகளே அதற்கு சாட்சி.

இதில் பல கமெண்ட்டுகள் படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கின்றன. சனத் எம்.பி.ஆக இருந்து கொண்டு டான்ஸ் ஆடுவது, அதுவும் இந்தியன் சானலுக்காக ஆடுவது ரசிக்கக் கண்மணிகளுக்கு பிடிக்கவில்லை போலும். தாளித்து எடுத்திருக்கிறார்கள். மக்களின் அபிமானத்தை இழந்து விட்டார், ஹீரோவிலிருந்து ஜீரோவுக்கு  சென்று விட்டார், இலங்கை எம்.பி.யாக இருந்துகொண்டு இந்தியாவின் டியூனுக்கு ஆட்டம் போடுகிறார், பணத்துக்காக **** கூடப் பண்ணுவார், விளையாட்டு வீரரில் இருந்து வர்ணனையாளர், அரசியல்வாதியில் இருந்து இப்போது டான்சர், இனிமேல் நீலப்படங்களில் நடிக்கப் போகிறாரா என்றெல்லாம் ஈவிரக்கமில்லாமல் கமெண்ட்டுகளை அள்ளிவிட்டிருக்கிறார்கள். நடனமாடும் கோமாளி, விசர், என்றெல்லாம் அடைமொழிகள் வேறு! எம்.பி யாக இருப்பவருக்கு டான்ஸ் ஆடுவதற்கு   எவ்வாறு நேரம் இருக்க முடியும், ஏற்கனவே அவர் ஒரு நல்ல டான்சர், ஏனெனில் மஹிந்தவின் தாளத்துக்கு தான் அவர் ஏற்கனவே ஆடிக்கொண்டிருக்கிறாரே! என்று ஒரு கமென்ட். சச்சினும் லாராவும் கூட இதே போல செய்வார்களா என்று ஒரு அன்பர்(!) கேட்டிருந்தார். ( கொஞ்சம் பொறுங்க  தலைவா..சச்சின் இப்ப தானே எம்.பி.யாகி இருக்கிறார்..சீசன்  6  வரட்டும் பிறகு சொல்லுவம்! )

ஆட்டத் தொடர் நாயகன்-1996 உலகக் கோப்பை

பிறகு அவரது டான்ஸ் ஐ வேறு விமர்சித்து கமெண்ட்டுகள். இடுப்பை ஆட்டுகிறார், பொம்மலாட்டம் போல இருக்கிறது,தாத்தா போல இருக்கிறார் என்று திட்டித் தீர்த்துவிட்டார்கள்.  இவருக்கு ஓட்டுப் போட்டவர்களுக்கு நன்றி(!) வேறு கூறியிருக்கிறார்கள். அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி இவருக்கு சம்பளம் கொடுத்து எம்.பி.யாக வைத்திருக்கிறது, பேசாமல் மாத்தறையில் குப்பை அள்ளப் போகலாம்  என்று கண்மணிகள் குமுறியிருக்கிறார்கள். இதன் உச்சக்கட்டமாக சனத் ஐ  மதம் மாற்ற வேண்டும் என்றெல்லாம் கூட குரல் கொடுக்கிற அளவுக்கு விவாதம் விபரீதமாக போயிருக்கிறது! சனத்துக்கு ஆதரவாக வந்த கொஞ்ச நஞ்சக் கருத்துக்களுக்கும் மைனஸ் ஓட்டு வேறு! ரிட்டையர் ஆகி ஒழுங்காக இருந்து தொலைக்காமல் குன்சாக எதை எதையோ செய்து பார்க்கிறார் என்று பொருமித் தள்ளுகிறார்கள்.

அன்பான கணவன், அப்பா


சனத் ஆடுவது ஏனோ அவரது ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. சனத் பட்டணத்துப் பின்னணியிலிருந்து வந்தவரல்ல. அவருடைய ஆதரவாளர்கள் சொல்வது போல, சிட்டி இலிருந்து வந்த , உயர் குடும்பப் பின்னணியில் வேறு சில வீரர்கள் இந்திய நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசடர்களாக இருக்கும் போது சும்மா இருப்பவர்கள் இப்போது சனத் டான்ஸ் ஷோவில் கலந்து கொள்ளும்போது துள்ளிக் குதிப்பதற்கு காரணம், சரத் மற்ற வீரர்கள் போல ஹீரோ இமேஜைக் காப்பாற்ற முயலாமல் லுங்கியுடன் கடற்கரைகளில் நடக்கும் விழாக்களில் கலந்து கொண்டு சிம்பிளாக இருப்பது தான்  காரணமோ தெரியவில்லை. 

சின்சியர் எம்.பி.-அருகில் நாமல் ராஜபக்ஷே!

 அப்புறம் ஹைலைட்டாக, இந்த சீசனில் நடுவர்களாக வந்து சனத்தின் நடனத்தைக் கிழி கிழி கிழி....என்று கிழிக்கப் போகிறவர்கள்  பாலிவுட் இன் முன்னாள் கனவுக்கன்னி மாதுரி தீட்சித், பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் கரண் ஜோஹர் மற்றும் பிரபல கொரியோக்ராபரும் இயக்குனருமான ரெமோ டி சூசா. ஆமா..சனத் எலிமினேட்டட்  என்றால் ஒரு விரலைத் தூக்கிக் காண்பிப்பார்களோ? (#டவுட்டு) சனத்துக்கு  ஜோடியாக ஆடப்போகிறவர் இன்னும் முடிவாகவில்லையாம். எனக்கென்னவோ சனத் ஆடும் ஒரு சில நிமிட ப்ரோமோ வீடியோவில் முன்னாள் காப்டன் ஆடுவதைப் பார்த்தால் இந்நாள் காப்டன் ஆடுவது தான் நினைவுக்கு வருகிறது(ஆ..ஆங்..)பயபுள்ளைங்க வீடியோ பார்த்தத கொலைவெறியில் தான் கமென்ட் தட்டி விட்டிருக்கிறார்கள் போல தெரிகிறது.

இந்த ஸ்டெப்பையும் அங்க போட விடுவாங்களோ?!


எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சனத் இந்த ஷோவில் பங்கேற்றால் கொஞ்சம் பொழுது போகும். சிலர் கூறுவது போல, அவர் லஞ்சம் வாங்கினாரா கொள்ளை அடித்தாரா இல்லை நிலவள கங்கையில் குளிக்கும் பெண்களின் கையை பிடித்து இழுத்தாரா? டான்ஸ் ஷோவில் ஆடுறது ஒரு குத்தமாய்யா? அப்புறம் அஜய் ஜடேஜா ஆடியிருக்காக....மொஹிந்தர் அமர்நாத் ஆடியிருக்காக..மற்றும் நம்ம செலிப்ரிட்டிங்க எல்லாம் ஆடியிருக்காக....மற்ற எம்.பி.க்கள் அட்டூழியம்  பண்ணும்போதெல்லாம் வெறுமனே இருந்துவிட்டு இப்போது இதற்க்கு தாம் தூம் என்று குதிப்பது இதெல்லாம் கரெக்டா சுடுவீங்க  வீரப்பன மட்டும் விட்டுடுவீங்க என்கிற விவேக்கின் டையலாக் தான் மாடுலேஷனுடன் ஞாபகம் வருகிறது. 

 இன்னொரு பக்கம் சனத் தனது இந்த புதிய அவதாரத்தைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருக்கிறாராம். ரெகுலராக செட்டில் ரிகர்சல்  செய்து வருகிறாராம். தனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் என்று சொல்லியிருக்கும் சனத், ரஜினியின் நடனத்தின் ஸ்டைலால் ஈர்க்கப்பட்டு, அதே பாணியில் தனது நடனத்தை கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறாராம்!

நீங்க நல்லா தேத்துங்க உடம்ப...


பொழுது போகாமல் வெட்டியாக இருப்பவர்கள் கீழே உள்ள லிங்க் இற்கு போய் கமெண்ட்டுகளை வாசிக்கலாம். கொஞ்சம் பொழுது போகும்.

முன்னை இட்ட தீ

மே 01 அஜித்குமாரின் பிறந்த தினம் என்று தெரிந்த அளவுக்கு எனக்கு மே 31 யாழ்ப்பாணப்  பொது நூலகம்  எரிக்கப்பட்டதன் 31 ஆவது நினைவு தினம்  என்பது தெரிந்திருக்கவில்லை. சில சமூக ஊடக வலைத்தளங்களில் வந்த ஸ்டேடஸ்களை வைத்தே தெரிந்துகொள்ளவேண்டிய என் வெட்கக்கேடான நிலையை நினைக்கும் போது சுந்தரராமசாமியின் ஜே.ஜே:சில குறிப்புகளில் இடம் பெற்ற பிரபலமான பத்தி தான் நினைவுக்கு வந்தது."கோட்டாறு என் வீட்டுக்கு ஒரு மைல் தூரத்தில் தான் இருக்கிறது. எனக்கு நன்றாக தெரிந்த இடம். ஆனால் அங்கு சண்டை நடந்ததாமே! எனக்குத் தெரியாது. சத்தியமாகத் தெரியாது.இப்போது அங்கு கமிஷன் மண்டிகள். மிளகாய் வத்தல் நெடி அடிக்கும். பாதசாரிகளைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் குறுக்கும் மறுக்கும் லாரிகளும் அவிழ்த்துப்போட்ட வண்டிகளுமாக இருக்கும். மணிகண்டப் பணிக்கர் கடைக்கு அடுத்த சந்து தான் சிறுநீர் கழிக்க வசதியானது. அது போல் ஏற்ற இடம் அந்தப் பிராயத்தில் கிடையாது. விதவிதமான ஆண்குறிகளைப் பார்த்து அலுத்துப் போன குழந்தைகள் அங்கு ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருக்கும். வ.பகவதிப் பெருமாள் கடையில் புடைத்த, தூசி தும்பு அகற்றிய மளிகை கிடைக்கும். நிறுவி சரியாக இருக்கும். தொலைபேசி எண் 94 . கு.பாப்புத் தரகனார் கடையில் சுத்தமான தேங்காய் எண்ணெயும் நல்லெண்ணையும் கிடைக்கும்.தொலைபேசி எண் 113 .

சண்டை நடந்ததாமே கோட்டாற்றில். எனக்குத் தெரியாது."

அன்று... 


இந்த பத்தியை சற்றே மாற்றிப் போட்டால் என்ன என்று எனக்குத் தோன்றியது.

இன்றைக்கு லைப்ரரி எரித்த நாளாமே! சத்தியமாக எனக்குத் தெரியாது. இப்போது லைப்ரரி, வாசலில் சரஸ்வதி சிலை வைத்து வரிசைக்கு குரோட்டன்கள் வைத்து வெள்ளை வெளேர் என்று பெயிண்ட் அடித்து அழகாக இருக்கிறது. ஊர்காவற்றுறையில் இருந்து டவுனுக்கு வரும்போதுதாஜ் மஹல் போல ஜம்மென்று இருக்கும். முன்னுக்குள்ள வீதியில் இரண்டு கல்லை அடுக்கி வைத்து விட்டு ஏதாவது ஒரு லேனேர்ஸ் இல் பயிலும் மாணவிகள் பழைய சாலியில் எட்டடித்துப் பழகிக்கொண்டிருப்பார்கள். பக்கத்தில்  இருக்கும் சுப்பிரமணியம்  பூங்கா கனகாலமாக சிதைந்து போய் இருந்து  சமீபத்தில்  தான்  மீளவும் திறந்து  வைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே இருக்கும் சென்ட்ரல் கொலிஜ் கிரவுண்டில் தான் பிக் மச் என்று அழைக்கப்படும் சென்ட்ரல்-செயின்ட்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் வருடந்தோறும் கிரிக்கட் போட்டி நடக்கும்.அந்த சமயங்களில் ட்ரம்ஸ் அடிகளும் மாணவர்களின் நடனங்களும் மாணவிகளின் கூச்சலுமாக மைதானத்தில் உற்சாகம் கரைபுரண்டோடு ஓடும்.பின்னுக்கு இருக்கும் துரையப்பா ஸ்டேடியத்தில் இப்போது அடிக்கடி கண்காட்சிகளும் இசைநிகழ்ச்சிகளுமாக  நடக்கிறது. யாழ்ப்பாணக் கோட்டையைக் கூட இப்போது சுற்றிப்பார்க்க அனுமதிக்கிறார்கள். முனீஸ்வரன் கோயில் மரத்தடியில் நின்று கொண்டு சுகமான காற்று வருட சைட் அடிப்பதே தனி சுகம்.

லைப்ரரி எரித்து 31  வருடங்கள் ஆகிறதாமே இன்றைக்கு. எனக்குத் தெரியாது."

இன்று...


 இன்றைக்கு சரியாக 31  வருடங்களுக்கு முதல் யாழ்.பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் மாடியில் இருந்த அறைக்குள் இருந்தார் டேவிட் பாதர். கிட்டத்தட்ட 34  மொழிகளில் பரீட்சயம் பெற்றவர். படித்தது, கேட்டது, பார்த்தது எல்லாமே பாதரின் மூளைக்குள் இருந்த பல இழுப்பரைகளில் தனியாக போட்டுப் பூட்டப்படிருக்கும். தேவையான நேரத்தில் சரியான இழுப்பறையைத் திறந்து தகவல்களை எடுப்பார். அசாத்தியமான நினைவாற்றல்.மெட்ராஸ் யூனிவேர்சிட்டியில் பி எச். டி. பரீட்சையாலராக இருந்தவர்.  அறையில் அமைதியாக இருந்த  டேவிட் பாதரைக் கீழே இருந்து சக பாதிரியார்களிடம் இருந்து வந்த அவசரமும் பதட்டமும் கலந்த அழைப்பு  எழுப்பியது.வெளியே  பால்கனிக்கு வந்த பாதர் கண்ட காட்சி அவரை உலுக்கியது. எந்த நூலகத்தில் அவர் தமது  வாழ்வின் பல பகுதியை செலவிட்டிருப்பாரோ, எந்த நூலகத்தில் உள்ள நூல்களில் அவர் தனது ஆன்மாவைக் கரைத்துக் கொண்டிருப்பாரோ, எந்த நூலகத்தைத் தனது உயிர் போல நேசித்தாரோ அந்த நூலகம், ஆசியாவின் மிகப்பெரும் நூலகம், தீயின் நாக்குகளை தனது ஒரு லட்சம் புத்தகங்களாலும்  ஓலைச்சுவடிகளாலும் உள்வாங்கிக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஒரு கணத்தில் கண் முன்னே ஒரு தலைமுறையின் ஆத்மா, ஒரு சமூகத்தின் ஜீவன் கருகி சாம்பலாவதைக் கண்டு அதிர்ச்சியில் கனத்த மனதோடு அறைக்குள் மீண்டும் சென்றவர், திரும்பி அந்த அறையை விட்டு உயிருடன் வரவில்லை. அடுத்த நாள் காலையில் காலை உணவுக்கு பாதர் வராததை கண்ட சக அருட்தந்தை செல்வராஜா, அறைக்கு சென்று பார்த்த சமயம், டேவிட் பாதரின் உயிர் தூக்கத்திலும் துக்கத்திலும் பிரிந்திருந்தது.இன்றும் புதிக்கப்பட்ட நூலகத்திற்கு செல்லும் போது உப்பரிகைகளில் டேவிட் பாதரின் ஆத்மா அங்கே உலவிக்கொண்டு இருக்கக் கூடும் அல்லது நூலக வளாகத்தில் வீசும் மெல்லிய காற்றில் பாதரின் மென்மையான மனதும் அந்த வலியும் கலந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் வருவதைத் தடுக்க முடியவில்லை.

அழகு...
Related Posts Plugin for WordPress, Blogger...