எம்.ஜி.ஆர்- என்றைக்கும் மன்னாதி மன்னன்

கருணாநிதிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையிலான முக்கியமான ஒற்றுமை, வேற்றுமை ஒன்று என்ன தெரியுமா? தெரியா விட்டால் போனால் போகிறது, அதைக் கடைசியில் பார்க்கலாம். உண்மையில் எம்.ஜி.ஆர் இன்றைய சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், மெகா ஸ்டார், உலக நாயகன், இளைய தளபதி, சின்ன தளபதி, புரட்சித் தளபதி, ( இப்பவே கண்ணை கட்டினால் எப்படி..மற்ற மொழியில் உள்ள பட்டங்களையும் போட வேண்டாமா? ) எல்லோருக்கும் முன்னோடி. புரட்சித் தலைவர் மற்றும் பொன்மனச் செம்மல் போன்ற அடைமொழிகள் திரையில் இவர் பெயருக்கு முன்னால் போடப் பட்டாலும் மக்கள் திலகம் என்ற பேரைக் கேட்டதும் அந்த நாளில் நிஜமாகவே ச்சும்மா அதிர்ந்திருக்கும்!

கடந்த கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா கொடநாடு எஸ்டேட் இல் ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகி திரும்பவும் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருந்தாலும், இடைத்தேர்தலில் பா.. . இடம் கூட அடிவாங்கி மூன்றாம் இடத்துக்கு தள்ளப் பட்டு, கட்சி இனி தேறாது என்று சில முக்கிய தலைகளே .தி.மு.. இல் இருந்து தி.மு.. இற்கு இடம் மாறி இருந்தாலும் கடைசியில் சுனாமி போல எழுந்து மைனோரிட்டி தி.மு.. போல இல்லாமல் (!) பெரும்பான்மை ஆசனங்களோடு ஆட்சியை பிடித்ததற்கு ஸ்பெக்ட்ரம் ஐயும் மீறி இரண்டு காரணங்கள்: ஒன்று, கருப்பு எம்.ஜி.ஆர் (!); இரண்டு, நிஜமான வெள்ளை எம்.ஜி.ஆர். .தி.மு.. இற்கு இன்னும் கிராமங்களில் அசைக்க முடியாத ஓட்டு வங்கி இருக்கிறது என்று கூறுகிறார்கள். அத்தோடு, ஜெயலலிதா என்ன பாவம் பண்ணினாலும் எம்.ஜி. ஆருக்காக மக்கள் மன்னித்து விடத் தயாராகவும் இருக்கிறார்கள். சில இடங்களில் இன்னும் எம்.ஜி.ஆர் இறக்கவில்லை என்று நம்பும் ஜனங்களும் இருக்கிறார்கள். இதை
வைத்து வரும் வடிவேலு நகைச்சுவைக் காட்சி ஞாபகம் வரலாம்.எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா மேல் அசைக்க முடியாத பாசம் இருந்தது தெரியும். உண்மையில் ஜெயலிதா எம்.ஜி.ஆரின் முதல் மனைவி போலவே அச்சு அசலாக இருந்தது தான் அதற்கான காரணம். முதல் மனைவி மேல் அதிகம் அன்பு வைத்திருந்தவர் எம்.ஜி.ஆர். ஆனாலும் அவர் ஒரு வருடத்திலேயே இறக்க நேரிட்டது. இதனால் சில காலங்கள் கழித்து ஜெயலலிதாவை காண நேரிட்ட போது எம்.ஜி. ஆரிட்கு இறந்த மனைவி உயிருடன் எழுந்து வந்தது போல ஒரு இன்ப அதிர்ச்சி நேரிட்டிருக்கும். பார்கவியும் எம்.ஜி.ஆறும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சில வருடங்களுக்கு முன் குமுதம்-ஜங்க்ஷன் இதழில் வெளிவந்தபோது கீழே பெயர்கள் தராவிடில் இது எம். ஜி.ஆர்.ஜெயலலிதா ஸ்டில் என்றே நினைத்திருப்பார்கள். இதனால் 'இருவர்' படத்தில் மணிரத்னம், முதல் மனைவிக்கும் ஐஸ்வர்யா ராய் நடிக்கச் செய்திருப்பார். ( குட்டி ஐஸா குட்டி அபிஷேக்கா என்று பந்தயங்கள் தொடக்கி இருக்குமே!) கடைசியில் ஆர்.வீரப்பன் போன்றவர்கள் ஜெயலலிதாவை வெறுத்து லதாவை முன்னணிக்கு கொண்டுவர யோசித்தாலும் எம்.ஜி.ஆரால் முடியாமல் போனதற்கும் இது தான் காரணமாக இருந்திருக்கலாம்.


பழைய நடிகைகள் இன்றைக்கும் தங்கள் பேட்டிகளில் எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் பற்றி ஒருவரியாவது கூறாமல் இருந்ததில்லை. பத்மினி அமெரிக்க சென்று செட்டில் ஆனபோது அவரிடம் பலவருடங்களாக வேலை பார்த்த ஒப்பனையாளரை மஞ்சுளாவிடம் வேலைக்கு சேர்த்து விட்டதை பத்மினி ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். 'ஆடலுடன் பாடலை கேட்டு...' எம்.ஜி.ஆருடன் என்று பாங்கரா ஆடிய விஜயலட்சுமியை ஞாபகம் இருக்கிறதா? அந்த நாளில் ஐட்டம் நம்பர் நடனங்களுக்கு பெயர் போனவர். இப்போது அமெரிக்காவில் நிறுவனம் ஒன்றில் நிதியியல் இயக்குனராக இருக்கிறார் என்பது ஒரு இனிய ஆச்சர்யம். ஒருமுறை படப்பிடிப்பொன்றில் எல்லோரும் தாகத்தால் தவித்தபோது குளிர்பான வான் ஒன்றையே கொண்டுவந்து நிறுத்தினார் என்று கூறுவார்கள். எம்.ஜி.ஆர். மறைந்த சமயம் சரோஜா தேவி ஒரு ஹோட்டலில் உணவருந்தியபடி இருந்திருக்கிறார். அங்கு வேலை பார்த்த ஹோட்டல் சிப்பந்தி ஓடி வந்து கூறினானாம், ' அம்மா, உங்க ஜோடி போச்சும்மா...' என்று. எம்.ஜி. ஆர்.- சரோஜா தேவி போல இன்னொரு ஜோடி இன்றைக்கும் உருவாகவில்லை என்பது தான் உண்மை. இன்னொரு சுவாரசியமான சம்பவம். ஒருவர் ஒருமுறை ரிக்க்ஷா ஒன்றில் போன போது எம்.ஜி.ஆரை வாய்க்கு வந்தபடி திட்டி இருக்கிறார். ரிக்க்ஷாவில் இருந்து இறங்கியதும் அந்த ரிக்க்ஷாக்காரர் கூறி இருக்கிறார், ' நான்கிரதால ஒன்னும் பண்ணாம விட்டிருக்கேன், இதே வேற யாராவதுன்னா அடிச்சுத் துவைச்சிருப்பாங்க....மவனே நீ வந்த இந்த ரிக்க்ஷாவே எனக்கு அவர் வாங்கி தந்தது தான்யா..!'

நல்லவர்களுக்கு தான் நல்லவர். நடிகை ஒருவருடன் சேட்டை விட்ட யாரோ ஒரு நடிகரை தோட்டத்தில் மரத்தில் கட்டி வைத்து அடித்ததாகவும் ஒரு கிசு கிசு இருந்தது. திராவிடக் கொள்கை இருந்தாலும் உள்ளுக்குள் இருந்த பக்தியால் பவுடரையே திருநீறு போல நெற்றியில் மெலிதாக பூசி இருப்பார் என்று சாண்டோ சின்னப்பா தேவர் ஒருமுறை இன்னொரு நண்பரிடம் கூறினாராம்! ரஜினி எவ்வளவு மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்தாலும், வா தலைவா, வா என்று ரசிகன் கையை பிடித்து இழுத்தாலும், வருவேன், வர மாட்டேன்...வராமலும் விடுவேன்..வந்தாலும் வருவேன்..எனக்கே தெரியாது..என்று மண்டை குழம்பும் டயலாக் விடுவதோடு சரி. ஆனால் தைரியமாக அரசியலில் இறங்கி சாதனை படைத்தவர் எம்.ஜி.ஆர். தி.மு.. வில் சேர்ந்தாலும் கணக்குக் கேட்டதால் கருணாநிதியால் கட்சியை விட்டு விலக்கப்பட்டவர். ( ...ராசா...அப்பவே கணக்குக் கேட்க வேண்டிய நிலைமை தானா?! )

இவர் இருந்திருந்தால் இலங்கைப் பிரச்சனை எப்போதோ முடிந்திருக்கும் என்கிறார்கள். விடுதலைப் புலிகளின் தலைவரைக் கூப்பிட்டு யுத்தத் தளவாட வாகனக்கள் நிறைந்த வாகனம் ஒன்றைக் கொண்டு வந்து நிறுத்தி எவ்வளவு உங்களால் கொண்டு போக முடியுமோ, அவ்வளவையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாக முன்பு ஒருமுறை பத்திரிகையில் வந்தது. அந்த்தக் காலத்திலேயே இரண்டு கோடி கொடுத்தார் என்றும் கூறுகிறார்கள். புலிகள் இவரது நினைவு நாளை அனுஷ்டித்தமையே அதற்கு சாட்சி. பிரபாகரனைப் போலவே இவரும் இலக்கம்.8!

இனி, முதல் வரியில் கேட்ட கேள்வி. ஒற்றுமை, இருவருக்கும் மூன்று மனைவிகள்! வேற்றுமை, புரட்சித் தலைவருக்கு பிள்ளைகளே கிடையாது. கருணாதியோ, மக்களைப் பெற்ற மகராசன்... பிள்ளைகள் கூடியதாலேயே பின்னவருக்குப் பிரச்சனை!

கொழும்பும் குழம்பும்

உணவு ஒரு பயங்கரமான விடயம்.ஸ்ரேயாவை ஆர்த்தி ஆகவும் ஆர்த்தியை ஸ்ரேயாவாகவும் ( ஸ்லிம் என்றாலே சிம்ரன் தான், இருந்தும் ஒரு மாறுதலுக்காக! ) மாற்றும் வல்லமை படைத்தது. இந்தியன் படத்தில் கமல் நிழல்கள் ரவியிடம் சொல்லுவார் 'தேசிய ஒருமைப்பாடு என்பது இந்த நாட்டில் லஞ்சத்தில் மட்டும் தான் இருக்கு' என்று. அதே போல இலங்கையிலும் பெரும்பான்மை சிறுபான்மை பேதம் பார்க்காது ரசிக்கப்படும் ஒரே பொருள் இந்த சாப்பாடாக தான் இருக்கும்.

கொழும்பில் பல்லின மக்களும் சுபிட்சமாக (!) வாழ்வதால் இங்கு பல்லினத்துவமான உணவுகளும் கிடைக்கும். உணவு உண்மையில் அந்த இன மக்களின் வாழ்க்கை முறையை பிரதி பலிக்கிறதோ என்று தோன்றுகிறது. ( Fox சானலில் வரும் Food at 9 பார்க்கிறீர்களா? ) தமிழ் கடைகளில் யாழ்ப்பாணத்து முறையில் சமைக்கப்பட்ட உணவுகள் கிடைக்கும். அதாவது, தேங்காய்ப் பால் நிறைய சேர்த்து, நிறைய மிளகாய்த் தூள் போட்டு சமைக்கப் பட்ட உணவுகள். குழம்பை பார்த்தால் செக்க செவேல் என்று எண்ணெய் பிறந்து அங்கங்கே மிதக்கும். நளபாகம் என்றொரு அசைவக் கடை இருக்கிறது. கணவாய்ப் பிரட்டல், நெத்தலிப் பொரியல், முதல் ஆடு, கோழி போன்ற வழமையான குழம்பு வகைகளும் உறைக்க உறைக்க உங்களுக்காக காத்திருக்கும். முன்பு நாட்டுக் கோழிக் குழம்பு கூட இருந்தது. என்ன ஐந்து ரூபாய் பிரியாணி மாதிரி முழுக்க எலும்பாக இருக்கும். இப்போதும் இருக்கிறதா என்று போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்லுங்கள்.

வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதியில் யாழ் ஹோட்டல் என்று பெயருடனேயே ஒரு கடை இருக்கிறது. முன்பு ஒருமுறை டெய்லி மிர்ரர் என்ற பத்திரிகையில் கூட இதன் சுவையில் மதி மயங்கிய (!)ஒரு பெண்மணி கட்டுரை எழுதி இருந்தார். அசல் யாழ்ப்பாணத்து ரெசிபி.நண்டுக் குழம்பு, நண்டுப் பொரியல், கணவாய்க் குழம்பு இங்கு ஸ்பெஷல். இரவில் போனால் அத்தனை வகைக் கொத்து ரொட்டியும் இருக்கும். இறால்க் கொத்தில் இருந்து கணவாய்க் கொத்து வரை. நளபாகத்தை விட இரண்டு மடங்கு உறைப்புடன்! போனால் வாழை இலையில் சாப்பிடலாம். என்ன, அப்படி ஒரு கடை இருப்பதே கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் தான் தெரியும்.

கடற்கரை ஓர வீதியில் ( மரைன் டிரைவ்) இன்னுமொரு ஹோட்டல் இருக்கிறது. இதற்கும் யாழ் ரெஸ்டாரன்ட் என்று தான் பெயர். ஆனால் இது கொஞ்சம் பெரிய ஹோட்டல். அங்கு இரவில் கிடைக்கும் திருக்கைப் பிட்டுக்கு மன்னன் துட்டகைமுனு உயிரோடு இருந்தால் அம்பாந்தோட்டையை பரிசாக எழுதிக் கொடுத்திருப்பான். சுறாப் பிட்டு கூட இப்போது கிடைக்கிறது. ஹோட்டல் திறந்த ஆரம்பத்தில் கொஞ்சமாக இருந்த விலைகள் இப்போது தங்கம் விலை ஏறுவது போல கிடுகிடுவென்று ஏறி இப்போது போனால் செய்கூலி சேதாரம் கூட போட்டிருப்பார்களோ தெரியவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் ஒடியல் கூழ் குடிக்கலாம்.இங்கும் தட்டில் வட்டமாக வெட்டிப் போடப்பட்ட வாழை இலையில் கடற்கரையை ரசித்தபடி சாப்பிடலாம். அன்றைக்கு தான் சம்பளம் எடுத்தீர்கள் என்றால் மேலே குளிரூட்டிய பகுதிக்கு போய் சாப்பிடலாம்.

இதே யாழ் ஹோட்டல் இன் இன்னொரு கிளை, சென்னை வெஜிடேரியன் ரெஸ்டோரன்ட் என்ற பெயரில் இருக்கிறது. இங்கு கொஞ்சம் சாத்வீகமான தென்னிந்திய உணவுகள் கிடைக்கும். ஊத்தப்பம், மசால் தோசை, சாம்பார் வடை என்று கொஞ்சம் விட்டால் இருட்டுக்கடை அல்வாவே கிடைக்கும் போல இருக்கிறது. தமிழ் நாட்டில் தேங்காய் பால் சேர்க்க மாட்டார்கள் அல்லவா? அதனால் இங்கும் மதியத்தில் பால் விடாத குழம்பு வகைகள், கூட்டு வகைகளுடன், மோர், வடை, பாயாசத்துடன் கொஞ்சம் உறைப்பு குறைந்த உணவுகள் கிடக்கும். பின்னேரங்களில் பேல் பூரி, பானி பூரி கூட உண்டு. கொஞ்சம் தாமதாக, ( அதாவது 8 .00 மணி போல!) போனால் இரண்டு இட்டலிக்கு சொல்லி விட்டு பெரிய திரையில் கிரிக்கட் மேட்ச் பார்த்துக் கொண்டு காத்திருந்தால் சில வேளை இட்டலி வரும் போது மேட்ச் முடிந்து, சச்சினுக்கு man of the match உம் கொடுத்து விட்டிருப்பார்கள். இதே போல பம்பலப்பிட்டி சரஸ்வதி லொஜ் இற்கு போனாலும் வறுத்த முந்திரி போட உப்புமா, பூரி உடன் மதராசப் பட்டினம் போய் வரலாம்.

சிங்கள சாப்பாட்டு முறையும் ஒரு விதத்தில் தமிழ் நாட்டை ஒத்திருக்கிறது. இவர்களும் தேங்காய்ப் பால் சேர்ப்பதில்லை. ஆனாலும் பருப்புக் கறி அவ்வளவு ருசியாக இருக்கும். பயத்தங்காய், மீன் குழம்பு, எதிலுமே பால் இருக்காது. பலாக்காயை சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைக்கும் குழம்புக்கு தமிழர்களும் அடிமை. பெரிய துண்டுகளாக வெட்டி கொரக்காப் புலி ( ஐயோ, அது புளி )விட்டு வைக்கும் கறிக்குப் பொலஸ் என்று பெயர். அதுவும் நன்றாக தான் இருக்கிறது. இந்த வகை உணவுகளுக்கு ஒமேகா இன் இற்கு செல்லலாம். காதலியை அல்லது காதலனை கூட்டிக் கொண்டு செல்லுங்கள், ஏன் எனில், சாப்பாடு வரும் வரைக்கும் நீங்கள் எதிர்காலத்தை சாவகாசமாக திட்டமிடலாம்.

கொழும்பில் பத்துக் கடைகளுக்கு ஒரு கடை பாம்பே ஸ்வீட்ஸ் கடை ( இப்போது மும்பை ஸ்வீட்ஸ் என்று எழுத வேண்டுமா? ) என்று ஏதாவது புள்ளி விவரம் சொன்னால் ஆச்சரியப் படத் தேவை இல்லை. இஸ்லாமிய அன்பர்களால் நடத்தப் படும் கடை. பத்து நாளில் உடல் பருமன் அதிகரிக்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உடனே அருகில் உள்ள பாம்பே ஸ்வீட்ஸ் ஒன்றுக்கு விஜயம் செய்ய வேண்டியது தான். பிஸ்த மஸ்கட், பாதம் மஸ்கட், ஸ்பெஷல் மஸ்கட், நெய் சொட்டும் ஜிலேபி, சீனிப் பாணியில் ஊறி குண்டு குண்டாக ஹன்சிகாவின் கன்னம் போல் கிடக்கும் குலோப் ஜாமுன் என்று நாக்கில் தேன் (!) சொட்ட வைக்கும் ஐட்டங்கள் நிறைய. கொளுத்தும் வெய்யிலில் காலி வீதியில் அலைந்து விட்டு வந்து W.A.சில்வா மாவத்தையில் உள்ள கடையில் பாலூடா ( falooda ) குடிக்கும் போது சொர்க்கம் இருப்பதை நீங்கள் நம்புவீர்கள். நன்னாரி சர்பத் முதல் மில்க் ஷேக் வரை எடுக்கலாம். மென்தோல் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா? அதில் ஒரு அண்டார்டிக் கரடி வந்து கட்டிப் பிடிக்குமே, அப்படியான அனுபவம் கிடைக்கும்.

சிலர் கவலை இருந்தால் சாப்பிடாமல் கிடப்பார்கள். சிலர் கவலை வந்தால் தான் இன்னும் அதிகமாக எந்த நேரமும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். கேட்டால் வாழ்க்கையில் வேறு என்னத்தை கண்டது (!) என்று தத்துவம் வேறு சொல்லுவார்கள். சிலர் சைனீஸ், மொங்கோலியன், தாய் என்று எல்லா வித உணவுகளையும் ஒரு பிடி பிடிப்பார்கள். சிலருக்கு ஐந்து நட்ச்சத்திர ஹோட்டல் இற்கு சென்றாலும் அதே இடியப்பமும் சம்பலும் வேண்டும். ஒவ்வொரு இன மக்களுக்கும் ஒவ்வொரு வகை உணவுப் பாரம்பரியம். இலங்கையின் தமிழ் உணவுகளும் கேரளா உணவுகளும் ஒத்திருக்கும். சில வேளைகளில் ஒரே உணவுக்கு ஊருக்கு ஊர் பெயர் மாறுபடும். மட்டக்களப்பில் சுண்டல் ஆக இருப்பது யாழ்ப்பாணத்தில் வறை என்று மாறும் என்று சொல்லுவார்கள். முன்பு விடுதலைப்புலி உறுப்பினர்களைக் கேட்டால் பாம்பை பிடிப்பதிலிருந்து அதை சமைத்துப் பரிமாறுவது வரை படிமுறை படிமுறையாக விளக்கம் கொடுப்பார்கள். இன்றைக்கு ஆடிக்கூழ் குடித்தீர்களா? ( இல்லை என்றால் பெருமூச்சு விட வேண்டாம் ) சாப்பிடும் போது விரல்களால் தட்டை வழித்து நக்கி சாப்பிட்டால் அல்சர் வராது, இருந்தாலும் குணமாகும் என்று சித்தர்கள் சொல்கிறார்கள், விரும்பியவர்கள் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்!

இந்துவாக சாக மாட்டேன்!

இந்திய அறிஞரும் சட்டவியல் மேதையுமான அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஏன் இந்து மதத்தை வெறுத்தார்? பலருக்கும் தெரிந்திருக்கும், தெரியாதவர்கள் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருங்கள். இரண்டு பந்திகள் தாண்டியதும் காரணத்தைப் பார்ப்போம். அதற்கு முதல், அம்பேத்கருடன் சற்று பரிச்சயமாவோம்.

இந்தியர்களுக்கு அம்பேத்கரைப் பற்றி அறிமுகம் சொன்னால் அடிக்க வருவார்கள். காரணம், மிக எளிதானது. அவரைத் தெரியாதவர்கள் அங்கே இருந்தால் அது ஆச்சர்யம். அவர் இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய குழுவில் இடம்பெற்றிருந்தவர். தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களின் தெய்வம். முக்கியமாய், அவரும் அதே ஒதுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவரது காலம் தீண்டாமை உச்சத்தில் இருந்த காலம். அவரது காலத்தில் அவரது மக்களுக்கு பொது இடங்களில் நுழையும் உரிமை உட்பட பல உரிமைகள் மிக கடினத்தன்மையோடு மறுக்கப் பட்டிருந்தன. அம்பேத்கருக்கு கிட்டத்தட்ட தன் வாழ்க்கைக் காலம் முழுக்க அந்த உரிமைகளை வென்றெடுக்க போராட வேண்டி இருந்ததது. தனது மக்களை வழி நடத்தி சென்ற ஒரு சிறந்த தலைவனாக, மோசஸ் என்று அவரே கூறியது போல ஒரு மேய்ப்பனாக, லட்ச்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் ஒளி விளக்காக இருந்து இறக்கும் வரை போராடியவர்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சிலை வைக்கப்பட்ட தலைவர். மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் 'அம்பேத்கர்' என்ற திரைப்படமும் வெளியாகி இருந்தது. இந்தியாவைத் தாண்டி இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காந்தி, எம். ஜி. ஆர்., போன்ற இந்திய தலைவர்கள் பிரபல்யம் அடைந்த அளவுக்கு அம்பேத்கர் அவர்கள் அடையவில்லை என்று தான் தோன்றுகிறது.

இனி தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கு வருவோம். அம்பேத்கர் பிறப்பால் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அப்படிப்பட்ட அவரை, இந்துவாகப் பிறந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன் என்று முழங்க வைத்தது எது? வருணாஸ்ரம தர்மம்.அதாவது சாதிப் பிரிவினை. இந்து மதம் மக்களை நான்கு வகையாக பிரிக்கிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர். இந்தப் பாகுபாட்டின் படி சூத்திரர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள். தாழ்த்தப் பட வேண்டியவர்கள். அம்பேத்கர் கருத்துப் படி இந்துக்களின் நூலான பகவத் கீதை, மனுஸ்மிருதி போன்றன இந்த ஏற்றத் தாழ்வு கொண்ட சமுதாய அமைப்பையே போதிக்கின்றன. இதனால் அம்பேத்கரின் மக்கள் பல சித்திரவதைகள் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. கோயில்களுக்குள் நுழைய முடியாது. பொது இடங்களில் நீர் அள்ள முடியாது. ஏன் சில இடங்களில் தாழ்த்தப்பட்ட ஆண்களும் பெண்களும் மேல்சட்டை அணியக் கூட தடை இருந்தது.

இதனால் தான் அம்பேத்கர் மனுஸ்மிருதியை கிழித்து தீயில் போட்டார். பகவத் கீதை மேல் உறுதி கொண்டு சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தார். யாவும் பரம்பொருளே, அனைத்து உயிரிலும் இருப்பவன் இறைவனே என்ற சித்தாந்தத்துக்கும் தாழ்த்தப் பட்டவர்கள் நடத்தப்படும் முறைக்கும் இடையிலான முரண்பாட்டைக் கேள்வி கேட்டார். அந்த நாட்களில் கோயில்களுக்குள் பலவந்தமாக உள் நுழையும் போராட்டம் நடத்தப் பட்டுக்கொண்டு இருந்தது. அம்பேத்கர் ஒரு கட்டத்தில் அந்தப் போராட்டங்களைக் கைவிடுமாறு தன் மக்களைக் கேட்டுக் கொண்டார். கோயிலுக்குள் தெய்வம் இருந்தால் தானே உள்நுழைய வேண்டும்? தனது மக்களை சமனாக கருதாது, குறித்த பிரிவினரைத் தாழ்த்தப் பட்டவர்கள் எனக் கூறும் தெய்வம் எதற்கு? எனவே தான் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறத் தீர்மானித்தார். அவ்வாறு விலகி, தானும் தன் மக்களும் இணைந்து கொள்ள ஒரு மாற்று மார்க்கமாக அவர் தேர்ந்தெடுத்தது எதை தெரியுமா? பௌத்தம்!

யாழ்ப்பாணத்தின் ஆறுமுக நாவலர் ஒரு மனித உரிமை விரோதி என்று முதல் முதலில் கேள்விப் படுபவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கக் கூடும். அவருக்கு அங்கே நிறைய சிலைகள், அவரால் நிறுவப்பட்ட ஆதீனங்கள் நிறைய உண்டு. உண்மையில் அவரும் இந்து மதத்தின் வருணாஸ்ரம முறையையே ஆதரித்தார். சமத்துவக் கொள்கையை எதிர்த்தார். யாழ்ப்பாண மக்களை குறிப்பிடத்தக்களவில் பாழ்படுத்தி விட்டுப் போனவர்களில் அவரும் ஒருவர். பல ஊர்களில் இன்றும் சில வகுப்பைச் சேர்ந்த மக்களை வீட்டுக்குள் வர விடுவதில்லை. அப்படியே விட்டாலும் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். அப்படியே கொடுத்தாலும் தாங்கள் குடிக்கும் குவளையில் கொடுக்க மாட்டார்கள். அப்படியே கொடுத்தாலும், சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். இன்றும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் இந்து உயர்குல வேளாள மணப்பெண்/ மணமகனுக்கு பெற்றார் தகுந்த துணையை எதிர்பார்க்கின்றனர் போன்ற விளம்பரங்களை சர்வ சாதாரணமாக காண முடியும். சாதி ஏற்றத் தாழ்வுகளால் திருமணத்தில் இணைய முடியாது போன காதல்களும் நிறைய.

அம்பேத்கர் ஒரு வெசாகப் பௌர்ணமி தினத்தில் ஐந்து லட்சம் மக்களோடு பௌத்தத்தைத் தழுவினார். அவர் பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு தேர்ந்தெடுத்த ஒரு அருமையான வாழ்க்கை நெறி, சகோதரத்துவத்தையும் கருணையையும் போதிக்கின்ற ஒரு மதம், இன்று தமிழ் மக்கள் அரச மரத்தைக் கண்டாலே வெறுக்கிற அளவுக்கு ஆகிப் போனது துரதிர்ஷ்டம். 'இறைவா, உன்னைப் பின்பற்றுபவர்களிடமிருந்து என்னை காப்பாற்று !' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உண்மையில் பௌத்தத்துக்கும் இங்கே அது தான் நடந்தது.

அம்பேத்கர் காட்டிய வழியும் இருக்கிறது, ஆறுமுக நாவலர் காட்டிய வழியும் இருக்கிறது. நடக்கப் போகின்றவை உங்கள் பாதங்கள். எனவே, எந்த வழியில் நடப்பது என்று நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.


Related Posts Plugin for WordPress, Blogger...