இந்துவாக சாக மாட்டேன்!

இந்திய அறிஞரும் சட்டவியல் மேதையுமான அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஏன் இந்து மதத்தை வெறுத்தார்? பலருக்கும் தெரிந்திருக்கும், தெரியாதவர்கள் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருங்கள். இரண்டு பந்திகள் தாண்டியதும் காரணத்தைப் பார்ப்போம். அதற்கு முதல், அம்பேத்கருடன் சற்று பரிச்சயமாவோம்.

இந்தியர்களுக்கு அம்பேத்கரைப் பற்றி அறிமுகம் சொன்னால் அடிக்க வருவார்கள். காரணம், மிக எளிதானது. அவரைத் தெரியாதவர்கள் அங்கே இருந்தால் அது ஆச்சர்யம். அவர் இந்திய அரசியல் சாசனத்தை எழுதிய குழுவில் இடம்பெற்றிருந்தவர். தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட மக்களின் தெய்வம். முக்கியமாய், அவரும் அதே ஒதுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவரது காலம் தீண்டாமை உச்சத்தில் இருந்த காலம். அவரது காலத்தில் அவரது மக்களுக்கு பொது இடங்களில் நுழையும் உரிமை உட்பட பல உரிமைகள் மிக கடினத்தன்மையோடு மறுக்கப் பட்டிருந்தன. அம்பேத்கருக்கு கிட்டத்தட்ட தன் வாழ்க்கைக் காலம் முழுக்க அந்த உரிமைகளை வென்றெடுக்க போராட வேண்டி இருந்ததது. தனது மக்களை வழி நடத்தி சென்ற ஒரு சிறந்த தலைவனாக, மோசஸ் என்று அவரே கூறியது போல ஒரு மேய்ப்பனாக, லட்ச்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களின் ஒளி விளக்காக இருந்து இறக்கும் வரை போராடியவர்.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சிலை வைக்கப்பட்ட தலைவர். மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் 'அம்பேத்கர்' என்ற திரைப்படமும் வெளியாகி இருந்தது. இந்தியாவைத் தாண்டி இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காந்தி, எம். ஜி. ஆர்., போன்ற இந்திய தலைவர்கள் பிரபல்யம் அடைந்த அளவுக்கு அம்பேத்கர் அவர்கள் அடையவில்லை என்று தான் தோன்றுகிறது.

இனி தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கு வருவோம். அம்பேத்கர் பிறப்பால் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அப்படிப்பட்ட அவரை, இந்துவாகப் பிறந்தாலும் இந்துவாகச் சாக மாட்டேன் என்று முழங்க வைத்தது எது? வருணாஸ்ரம தர்மம்.அதாவது சாதிப் பிரிவினை. இந்து மதம் மக்களை நான்கு வகையாக பிரிக்கிறது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர். இந்தப் பாகுபாட்டின் படி சூத்திரர்கள் மிகவும் தாழ்ந்தவர்கள். தாழ்த்தப் பட வேண்டியவர்கள். அம்பேத்கர் கருத்துப் படி இந்துக்களின் நூலான பகவத் கீதை, மனுஸ்மிருதி போன்றன இந்த ஏற்றத் தாழ்வு கொண்ட சமுதாய அமைப்பையே போதிக்கின்றன. இதனால் அம்பேத்கரின் மக்கள் பல சித்திரவதைகள் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. கோயில்களுக்குள் நுழைய முடியாது. பொது இடங்களில் நீர் அள்ள முடியாது. ஏன் சில இடங்களில் தாழ்த்தப்பட்ட ஆண்களும் பெண்களும் மேல்சட்டை அணியக் கூட தடை இருந்தது.

இதனால் தான் அம்பேத்கர் மனுஸ்மிருதியை கிழித்து தீயில் போட்டார். பகவத் கீதை மேல் உறுதி கொண்டு சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்தார். யாவும் பரம்பொருளே, அனைத்து உயிரிலும் இருப்பவன் இறைவனே என்ற சித்தாந்தத்துக்கும் தாழ்த்தப் பட்டவர்கள் நடத்தப்படும் முறைக்கும் இடையிலான முரண்பாட்டைக் கேள்வி கேட்டார். அந்த நாட்களில் கோயில்களுக்குள் பலவந்தமாக உள் நுழையும் போராட்டம் நடத்தப் பட்டுக்கொண்டு இருந்தது. அம்பேத்கர் ஒரு கட்டத்தில் அந்தப் போராட்டங்களைக் கைவிடுமாறு தன் மக்களைக் கேட்டுக் கொண்டார். கோயிலுக்குள் தெய்வம் இருந்தால் தானே உள்நுழைய வேண்டும்? தனது மக்களை சமனாக கருதாது, குறித்த பிரிவினரைத் தாழ்த்தப் பட்டவர்கள் எனக் கூறும் தெய்வம் எதற்கு? எனவே தான் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறத் தீர்மானித்தார். அவ்வாறு விலகி, தானும் தன் மக்களும் இணைந்து கொள்ள ஒரு மாற்று மார்க்கமாக அவர் தேர்ந்தெடுத்தது எதை தெரியுமா? பௌத்தம்!

யாழ்ப்பாணத்தின் ஆறுமுக நாவலர் ஒரு மனித உரிமை விரோதி என்று முதல் முதலில் கேள்விப் படுபவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கக் கூடும். அவருக்கு அங்கே நிறைய சிலைகள், அவரால் நிறுவப்பட்ட ஆதீனங்கள் நிறைய உண்டு. உண்மையில் அவரும் இந்து மதத்தின் வருணாஸ்ரம முறையையே ஆதரித்தார். சமத்துவக் கொள்கையை எதிர்த்தார். யாழ்ப்பாண மக்களை குறிப்பிடத்தக்களவில் பாழ்படுத்தி விட்டுப் போனவர்களில் அவரும் ஒருவர். பல ஊர்களில் இன்றும் சில வகுப்பைச் சேர்ந்த மக்களை வீட்டுக்குள் வர விடுவதில்லை. அப்படியே விட்டாலும் தண்ணீர் கொடுக்க மாட்டார்கள். அப்படியே கொடுத்தாலும் தாங்கள் குடிக்கும் குவளையில் கொடுக்க மாட்டார்கள். அப்படியே கொடுத்தாலும், சம்பந்தம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். இன்றும் யாழ்ப்பாணப் பத்திரிகைகளில் இந்து உயர்குல வேளாள மணப்பெண்/ மணமகனுக்கு பெற்றார் தகுந்த துணையை எதிர்பார்க்கின்றனர் போன்ற விளம்பரங்களை சர்வ சாதாரணமாக காண முடியும். சாதி ஏற்றத் தாழ்வுகளால் திருமணத்தில் இணைய முடியாது போன காதல்களும் நிறைய.

அம்பேத்கர் ஒரு வெசாகப் பௌர்ணமி தினத்தில் ஐந்து லட்சம் மக்களோடு பௌத்தத்தைத் தழுவினார். அவர் பல ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு தேர்ந்தெடுத்த ஒரு அருமையான வாழ்க்கை நெறி, சகோதரத்துவத்தையும் கருணையையும் போதிக்கின்ற ஒரு மதம், இன்று தமிழ் மக்கள் அரச மரத்தைக் கண்டாலே வெறுக்கிற அளவுக்கு ஆகிப் போனது துரதிர்ஷ்டம். 'இறைவா, உன்னைப் பின்பற்றுபவர்களிடமிருந்து என்னை காப்பாற்று !' என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உண்மையில் பௌத்தத்துக்கும் இங்கே அது தான் நடந்தது.

அம்பேத்கர் காட்டிய வழியும் இருக்கிறது, ஆறுமுக நாவலர் காட்டிய வழியும் இருக்கிறது. நடக்கப் போகின்றவை உங்கள் பாதங்கள். எனவே, எந்த வழியில் நடப்பது என்று நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.


1 Response
  1. யாழ்ப்பாண மக்களை குறிப்பிடத்தக்களவில் பாழ்படுத்தி விட்டுப் போனவர்களில் அவரும் ஒருவர் well said. i think you can write a very special article on this title


Related Posts Plugin for WordPress, Blogger...