'பிரம்மாண்ட' ஹீரோவின் மரணத்தில் மர்மம்?





சில ஹீரோக்கள் செம ஹிட்டாகி  பாகம் ஒன்று, ரெண்டு, மூணு எல்லாம் வந்து சக்சஸ்புல்லா ஓடின சூப்பர்ஹிட் படங்கள்ல நடிச்சிருப்பாங்க. ஆனா படம் பார்த்தப்புறம் வெளில வந்ததுக்கு பிறகு அந்த ஹீரோக்களுக்கு என்ன ஆச்சு, அவங்க இப்பவும் உயிரோட இருக்காங்களா, என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க என்கிறதா யாரும் லைட்ஸ் ஆன் சுனிலுக்கு எழுதிக் கேக்கிறதில்ல. அப்புறம் சில ஹீரோக்கள் டிஸ்கவரி சானல்கள்ளேயும் ஹீரோவா பண்ணியிருக்காங்க.( எஸ்! இவங்க இமேஜ் பார்கிறதில்ல! ) அப்படி பட்ட சில ஹீரோக்களின் மறுபக்கங்கள இப்போ பார்ப்போம்.



'பிரம்மாண்ட ஹீரோ' மமத் (ஹிஹி....)

ஐஸ் ஏஜ் படத்தில ஹீரோவா நடிச்ச இந்த வூலி மமத் 10000  ஆண்டுகளுக்கு முன்பு வரையில பூமியில வாழ்ந்தாங்க. அப்புறமா மனுஷங்க இதோட எலும்புக்கும் கம்பளித் தோலுக்குமா இதை வேட்டையாடிறது ஒரு கலாச்சாரமாவே இருந்துச்சு. இப்பிடியே ஒரேயடியா  வேட்டையாடினதாலையும், இதோடவாழ்விடங்கள் குறைஞ்சு  போனதாலையும் பூமியோட தட்பவெட்ப நிலையில ஏற்பட்ட மாற்றங்களாலையும்  மமத் இனம் இந்த பூமி விட்டே மறைஞ்சு போச்சு. மனுஷன் வேட்டையாடி வேட்டையாடியே அழிச்ச இனங்களுக்குள்ள முக்கியமானது இந்த மமத். இதை இப்ப க்ளோனிங் டெக்னாலஜி மூலமா மீள உருவாக்கலாமா என்று விஞ்ஞானிகள் முயற்சி எடுத்துக்கிட்டிருக்காங்க! ஐஸ் ஏஜ் படத்தில நடிச்ச புலி கூட இப்ப பூமியில இல்லாம அழிஞ்சு போன இனம் தான்! மாமாத்தோட மரணத்துக்கு சரியான காரணம் என்ன என்கிறது இன்னமும் சரிவர தெரியாத மர்மமாவே இருக்கு.




மனுசங்கிறவன் ஒரு தீராத பசி கொண்ட விலங்கு அப்படின்னு யாரோ சொல்லியிருக்காங்க. அவன் தன்னோட பசிக்காக என்ன வேணும்னாலும் செய்யத் தயாராவே இருப்பான். அவனோட தேவைகளை அடையணும்னா அதுக்காக நம்பியார், பி.எஸ்.வீரப்பா ரேஞ்சுக்கு எதையும் செய்யத் தயங்க  மாட்டான். வெளியில டக்சீடோ  போட்டிருந்தா கூட உள்ளுக்கு அவன் இன்னும் வெறி கொண்ட மிருகம். பூமியை பற்றி கவலைப்படாம அவன் செஞ்ச வேலைகளால இன்னிக்கு மமத் மாதிரி இன்னும் நிறைய ஹீரோக்கள் ஆபத்தோட விளிம்புகள்ள இருக்காங்க. இவங்க கூட மமத் இல்லாம போன மாதிரி, மனுஷன் என்கிற வில்லனால இந்த பூமியில இருந்தே அழித்து ஒழிக்கப்படுறதுக்கான வாய்ப்புகள் நிறைய இருக்கு. அப்பிடி ஆபத்து வளையத்துக்குள்ள நின்னுகிட்டிருக்கிற சில ஹீரோக்களோட எக்ஸ்க்ளூசிவ் பேட்டி இதோ!

மலை கொரில்லா

கிங் காங்ல ஹீரோவா பண்ணினது நம்ம சொந்தக்கார தம்பி தான்..தூள் கிளப்பிட்டான்ல? இப்போ பாருங்க இவனும் நடிப்பேன்னு  அடம் பிடிக்கிறான்..முதல்ல ஹீரோ..பிறகு சி.எம்...அப்புறம் பி.எம். தான்! 


 இராட்சத பாண்டா

காலங்காத்தாலேயே உனக்கு ரொமண்டிக் மூடு வந்துடுது..பல்லு விளக்கினதுக்கு அப்புறம் லிப் டூ லிப் கிஸ் வைச்சிக்கலாம் ஓகேயா? 


பனிச் சிறுத்தை


ஆமா.. ' அவரு' இருக்காரா இல்லையா? எங்களை பொடாவில புடிச்சு உள்ள போடா முடியாதில்ல? அப்புறம்  டாப்சி மாதிரி எங்களையும் யாரோ வெள்ளாவி வச்சு வெளுத்திட்டாங்களோ?!?



சுமாத்ரா காண்டாமிருகம் 

சனியன் பிடிச்சவனே.. சாப்பிடும் போது க்ளோஸ் அப் ஷாட் வைக்காதேன்னா   கேட்டா தானே? யாரு கிட்டே அசிஸ்டண்டா இருக்கிறே நீ? நீரவ் ஷா சொல்லி கொடுக்கலையா? 


ஸ்டெல்லர் கடல் சிங்கம்


' கடல் மேல் பிறக்க வைத்தான்..எங்களைக் கண்ணீரில் குளிக்க வைத்தான்..' அப்படின்னு புரட்சித் தலைவர் கரெக்டா தான் பாடியிருக்காரு.. வைச்சிருக்கிற பேரைப் பாரு..சிங்கம்..தங்கம்ன்னுட்டு..



பாந்தீரா புலி

நானும் காப்டன் மாதிரி நாக்கை மடிக்க எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்க்கிறேன்...முடிய மாட்டேங்குதே..


நீலத் திமிங்கிலம் 
அடேய் ...எகிறி  எகிறி அடிக்க நான் என்ன பீட்டர் ஹெயனாடா? லெக் பைட் எல்லாம் குடுத்தபடி போஸ் குடுக்க என்னால முடியாதுடா..விட்ருங்கடா




நட்சத்திர ஆமை 

ஆமைக் குஞ்சை அவிச்சு வைச்சிருக்கோம்னு படத்தில டயலாக்காடா வைக்கிறீங்க..இருங்க வர்ரேன்...


போலார் கரடி 


டேய்..நீ ஒருத்தனுக்கு பிறந்தவனா இருந்தா வெளில வாடா பாக்கலாம்..பி கேர்புல்..பேச்சு பேச்சா இருக்கணும்..


மேலே சொன்ன ஹீரோக்கள் எல்லாம் ரொம்ப ஆபத்தில இருக்கிறவங்க. பூமியில தங்களோட  இறுதிக் காலங்கள்ல இருக்காங்கன்னு சொல்லலாம். இவங்களோட வாழ்க்கைக்காலத்தை  மாதிரி சீரியல் மாதிரி நீடிக்கிறதும் சினிமாப் படம் மாதிரி குறுகலா முடிக்கிறதும் மனுஷங்களோட கையில தான் இருக்கு. அவன் தான் திருந்தணும்! இல்லேன்னா இந்த ஹீரோக்களை வெறும் விக்கிபீடியால மட்டும் தான் பார்க்க முடியும்! 

அப்புறம் இன்னிக்கு  புவி நாள்  (22 .04 .2012 )! 




கொழும்பில் சற்றுமுன் நிலநடுக்கம்!

 

கொழும்பில் சற்று முன்னர் 2 .20 மணியளவில் மெல்லிய நில அதிர்வு உணரப்பட்டது. அதை நேரடியாக உணரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததும் ஜென்ம சாபல்யம் அடைந்தது போல ஏதோ சாதித்த திருப்தி ஏற்பட்டது. வெரி மைல்ட் என்பதால் இப்படி வெட்டியாக உட்கார்ந்து போஸ்ட் போட முடிகிறது.இல்லாவிட்டால் நரகத்தில் இருந்து கொண்டு தான் ஹிட் அடிக்கும் தலைப்பு தேடிக்கொண்டு போலோயர்ஸ் ஐ எண்ணிக்கொண்டும் இருந்திருக்க வேண்டி வந்திருக்கும். 



வழமை போல வெட்டியாக நெட் இல் மீன் பிடித்துக் கொண்டிருந்து விட்டு ஹாயாக சரியலாம் என்று எழும்பிய போது ஹவுஸ் ஓனர் அம்மா ஐயோ ஏனப்பா இப்பிடி (f )பானை புல் ஸ்பீட் இல போட்டு வச்சிருக்கிறியள் என்று புலம்பினார். சரியாய் வேர்க்குது, அதால தான், அதோட ஸ்பீட் ஐ குறைச்சு வச்சாலும் கூட்டி வச்சாலும் ஒரே காசு தான் என்று விஞ்ஞான விளக்கம் ( சுஜாதா எங்கேயோ எப்போதோ சொன்னதாக ஞாபகம்!  ) கொடுத்து விட்டு சனியனே..உண்ட தலையில விழுறதுக்கு தான்..என்று மைன்ட் வாய்ஸ்   ஓட கட்டிலில் வந்து சாய்ந்தேன். சில நிமிடங்களில் கட்டிலின் கீழே இருந்து கட்டிலை யாரோ உலுப்புவது போல ஒரு பீலிங். 



கட்டிலில் ஆணிகள் சற்று லூசானால் அங்கே இங்கே புரண்டு படுக்கும் போது லேசாக ஆடுமே...அப்படி ஒரு ஒரு பீலிங். சரி மனப் பிராந்தியாக  இருக்குமோ என்று தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தால் ஆடுவது தெரியவில்லை. திரும்பவும் கையைத் தலைக்குக் கொடுத்து படுத்த போது திரும்பவும் கட்டிலுக்கு கீழே இருந்து கட்டிலை யாரோ முழு வேகத்துடன் உலுப்புவது போல ஒரு பிரமை. நிச்சயம் இது வெறும் ஹாலுசினேஷன் தான் (ம்ம்..எங்க இருந்து தான் இந்த நேரம் பார்த்து வார்த்தைகள் வந்து முளைக்குதோ..அணையப் போற சுடர் தான் பிரகாசமா எரியுமாமே..ஹீ ஹீ..) என்று திருப்பி நிமிர்ந்து பார்த்த போது பெட் சீட் போர்வை போன்றவற்றிலும் லேசான நடுக்கம். ஸ்க்ரீன் இல் கொழுவி இருந்த ஒரு பையைப்  ஐப் பார்த்த போது அது லேசாக பட பட வென்று ஆடுவது தெரிந்தது. இத்தனைக்கும் அது ஒரு கனமான பை. ஏதும் நில நடுக்கமோ..என்று மைல்டாக ஒரு டவுட் மூளைக்குள் உதயமாக முன்னரே கற்பனை பண்ணிறதுக்கும் ஒரு அளவு வேணாமா..ஜேம்ஸ் கமரூன் ரேஞ்சிற்கா கற்பனை பண்ணுவது என்று மனசாட்சி அதட்டியது. சரி இது (f )பான் காத்து தான் சனியன் கருமத்தை கொஞ்சம் குறைத்து தொலைப்பம்  என்று எழும்பிய போது ஹவுஸ் ஓனருக்கு பயந்து குறைப்பதா என்று ஈகோ தடுத்தது. சரி குறைத்து வைப்பம் ஈகோ கூடாது என்று சித்தர்கள் சொன்னதை நினைத்து எழும்பிய போது மெல்லிய ஒரு தலை உலைஞ்சல்.  குவாட்டர் அடிச்ச மாதிரி தலை ஒரு சின்ன சுத்து..இந்த இடத்தில் தான் ஒரு ப்ளாஷ் பேக் அவசியம். 



அறையில் பாம்பு பல்லிகள் வர கூடிய சாத்தியக் கூறு இருக்கும் அளவுக்கு அறை சுத்தமாக இருப்பதாக இருப்பதாக ஹவுஸ் ஓனர் கருத்துத் தெரிவித்தபடியால் இன்றைக்கு எப்படியும் அறையை சுத்தப்படுத்தும் நோக்கோடு இருந்தேன். அதனால் பொருட்களை ஒழிவிக்கும் போது ஒரு பெப்சி பாட்டில் அடியில் கொஞ்சம் பிரிட்டன் சிரப்போடு கிடந்தது. ( பிரிட்டன் சிரப்- தடிமன், மற்றும் அலேர்ஜிக்கு பயன்படுத்துவது; குடித்தால் தூக்கம் சும்மா போதை மாதிரி கண்களை சுழற்றி அடிக்கும்; நல்ல டேஸ்ட் வேறு!) ஒரு துளி சிரப்புக்காக போத்தலை வைத்து இடத்தை அடைக்க வேண்டுமா என்று யோசனை வந்தது. தூக்கி வீசவும் மிடில் கிளாஸ் மனோபாவம் இடம் தரவில்லை. சனியன் போனா போகுது நாளைக்கு நாளண்டைக்கு தடிமன் வந்தாலும் குடிச்சு வைப்பம்(!) எதுக்கும் என்று முன்ஜாமீன் கணக்காக அதை குடித்து வைத்தேன். அதனால் தான், இப்போது தலை சுற்றல் இருந்த போது கூட நிலம் ஆடவில்லை பிரிடன் வேலை செய்யுது நான் தான் ஆடுகிறேன் என்று நினைத்து ஆடிக் கொண்டு இருந்து விட்டேன். போதாக்குறைக்கு ஒரு துளி சிரப் இப்படி வேலை செய்யுதே இவ்வளவு வீக் ஆகி விட்டேனே இனி மூண்டு நேரமும் முட்டைக்கோப்பி குடிச்சு உடம்பைத் தேத்த வேணும் என்று கூட நினைத்தேன். 

சரி எண்டு (f ) பான் ஐ ஓப்  பண்ண எழுந்தால் அப்பார்ட்மென்ட் வாசலில் கதவு தட்டப்படும் சத்தம். செக்யூரிட்டி அப்போது தான் வீடுகளுக்கு இண்டர்கோம் இல் அறிவிக்கத் தொடக்கி இருந்தார். வெளியில் எட்டிப்பார்த்தபோது ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் எல்லோரும் படிகளை அடைத்துக் கண்டும் லிப்ட் ஐ நெருக்கிக்  கொண்டும் இறங்குவதை காண முடிந்தது. எல்லோரும் போட்ட போட்ட உடுப்புகளோடு. இங்கே என் வீட்டுப் பெண்மணி ஏதோ கட்டடமே குலுங்கத் தொடங்கியது போல அவசரப் படுத்தியதால் செருப்பை மட்டும் போட்டுக் கொண்டு கீழே இறங்கினேன். 




கீழே போனால் பலரும் நில நடுக்கத்தை உணரவில்லை. அறிவித்தல் கொடுத்ததால் மட்டுமே கீழே  இறங்கி வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. நான் நேரே கண்டு கேட்டு உணர்ந்திருந்ததால்  அங்கே சில வினாடிகளில் நான் ஹீரோவாக்கப் பட்டேன். பழையபடி கட்டிலில் படுத்தது முதல் ஆடியது வரை ரிப்பீட்டு! பிறகு வேறு சிலரும் உணர்ந்திருக்கிறார்கள். சிலர் வீட்டில் டி.வி. லேசாக ஆடியிருக்கிறது. என்னைப் போலவே படுத்திருந்த சிலர் கட்டில் ஆடியதை உணர்ந்திருக்கிறார்கள். வங்கிகளில் கணனிகள் ஆடியிருக்கின்றன. மானாட மயிலாட ரேஞ்சிற்கு அவை ஆடியதைக் கண்ட அலுவலர் தானும் எழும்பியதில் அவருக்கும் தலை   ஆடியதில் கீழே மயங்கி விழுந்திருக்கிறார். 

என்னைப் போல கீழே வந்து நின்ற என் நண்பனும் அவன் தங்கையும் நானும் கதைத்துக் கொண்டிருந்தபோது தோன்றியது, அடடா...கலியாணம் கட்டாமல் சாகப் போகிறோமே என்று. நண்பன் சமீபத்தில்  திருமணம் முடித்தவன்! இப்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது கூட அந்த நண்பன் கோல் எடுத்து தற்போது மீண்டும் அதிர்ந்ததாகவும் மறுபடி கீழே வரவும் என்றும் சொன்னான்.மறுபடியுமா? மேலே போகாமல் இருப்பதற்கு கீழே போய் தான் ஆக வேண்டும்.

மெல்லிய  நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது என்று அறிவித்த போது, என்னைத் தொடர்பு கொண்டு, அப்படியா? ஓகே, என்று ஏதோ மழை வரப் போகிறது என்ற ரேஞ்சிற்கு கேட்டுக்கொண்டவர்களையும் , நான் பாட்டுப் போட்டு விட்டு பைலா ஆடியதால் தான் நில அதிர்வு வந்தது என்று ஈவிரக்கம் இல்லாமல் கமென்ட் அடித்த நண்பர்களையும், நீ ஜன்னலால் குதிச்சிட்டியா? என்று கொலைவெறித்தனமாக கொமன்ட் சென்சே இல்லமால் கேட்ட அன்பு உள்ளங்களையும், எல்லாம் முடிந்து இவ்வளவு நேரம் கழித்து இப்போது தான் "சுனாமி அலெர்ட்" என்று சின்னப்புள்ளைத் தனமாக மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கும் நல்லிதயங்களையும், தூங்கப் போகிறேன், ஐந்து மணிக்கு எழும்பும் போது நீ உயிரோடு இருந்தால் கதைக்கிறேன் என்று சொல்லிய பாச மலர்களையும்  இக்கணத்தில் நினைவு கூர்ந்து நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.  ( இப்போது சுனாமி சரியாக 4 .15  இற்கும் 4 .45  இற்கும் இடையில் கொழும்பைத்  தாக்கும் என்று ரூபவாகினி சானலில்   கத்திக் கொண்டிருப்பதால் என்னுடைய இறுதி ஆசை: இந்த ப்ளாக்கில் குறைந்தது 10  கமென்ட்டுகளும் 30  போலோஎர்ஸ் உம்  இருக்க வேண்டும் என்பது. ஹீ ஹீ..)


இலங்கை அமைச்சர்கள் கலக்கும் காமடி டைம்!

இலங்கைப் பாராளுமன்றம் பெருமையுடன் வழங்கும் சித்திரைப் புதுவருட சிறப்பு நிகழ்ச்சிகள்! காணத்தவறாதீர்..! வரும் நந்தன வருடப் பிறப்பன்று சிலோன் டி.வி. இல் ஒளிபரப்பாகவுள்ள இலங்கை அமைச்சர்கள் கலந்து சிறப்பிக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளின் முன்னோட்டமே இது. ( எச்சரிக்கை: மன நோய் அற்றவர்கள், இதயம் பலமுடன் இருப்பவர்கள் எவரும் இதை பார்க்க வேண்டாம். சானலை மாற்றி சன். டி.வி.இல் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம்  பார்க்கவும்-நிர்வாகம் )



நள்ளிரவு 12 .௦௦- அதிகாலை 04 .௦௦ மணி 

பக்திப் பூமாலை  

பிரித் ஓதலுடன்  தொடங்கும் இந்நிகழ்ச்சியில் பிரதமரும் சமய விவகார அமைச்சருமாகிய டி.எம்.ஜெயரட்ன, கிளிநொச்சிக்கு  புத்தர் எப்போது விஜயம் செய்தார் என்பது பற்றியும் A9 வீதியெங்கும் உள்ள ஆல மரங்களில் புத்தர் எப்போது இளைப்பாறினார் என்பது பற்றியும் பிரசங்கம் நிகழ்த்துவார். சிவன் கோயில்களில் இரவோடிரவாக புத்தர் சிலைகள் வந்து உட்கார்ந்திருக்கும் கலியுக அதிசயம் பற்றிய விளக்கவுரையும் இடம்பெறும். இதன் போது புத்த விகாரையை இடித்து அந்த இடத்தில் உருத்திரபுரம் சிவநகர் சிவன் கோயில் கட்டப்பட்டது பற்றிய ஆவணப்படமும் காண்பிக்கப்படும். 



அதிகாலை 04.00 -08 .௦௦ மணி  

பாவிகள் ஆயிரம் 

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கும் சுய முன்னேற்ற நிகழ்ச்சி.  இதில் பாரம்பரிய கைத்தொழில்களான ஆட்கடத்தல், கொலை, கொள்ளை, வல்லுறவு போன்றவற்றில் ஈடுபட்டு வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பதை அமைச்சர் அவர்கள் விளக்குவர். மேலும் சிறுதொழில் முன்னேற்றத்தின் போது பத்திரிக்கை அலுவலகங்களினுள் புகுந்து அடித்துடைப்பது, மணல் கொள்ளையில் ஈடுபட்டு தொழிலை விஸ்தரிப்பது போன்ற அறிவுரைகளும் நிகழ்ச்சியில் இடம்பெறும். 



காலை 08 .௦௦- 10 .௦௦ மணி  

உது எது அது 

அட்டகாசமான காமடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உங்கள் அபிமான காமடியன் தோட்டத்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க. " ஸ்ரீலங்காவில் ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு ரூ.2500  போதும்" , " மூன்று பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.7500  இற்குள் பட்ஜெட் போட முடியும்" போன்று இவர் அடிக்கும்  டைமிங் ஜோக்குகளால் ப்ரோக்ராம் டி.ஆர்.பி. எகிறப்போவது உறுதி.


காலை 10 .00  - நண்பகல் 12 .00 மணி 

ஹோம் டெரர் ஹோம் 

ஜனாதிபதி மற்றும் பல முக்கிய துறைகளின் அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, தனது குடும்பத்தோடு பங்குபெறும் நிகழ்ச்சி.  யார் வென்றாலும் பரிசு அந்த குடும்பத்துக்குள்ளேயே போய் சேரும் என்பது தான் இதன் சிறப்பு. பாது காப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, ஷிராந்தி ராஜபக்ஷ, யோஷித ராஜபக்ஷ, ரோஹித ராஜபக்ஷ ஆகியோர் பங்கு பெறுவார்கள். இதன்போது க.போ.தா. பாஸ் பண்ணாமல் ஜனாதிபதியாவது, லோ கொலிஜ் இல் ஏ.சி. அறைக்குள் இருந்து பரீட்சை எழுதுவது, 8  பாடங்களில் சராசரி 98  புள்ளிகள் வாங்குவது போன்ற கடினாமான போட்டிகள் இடம்பெறும்.




நண்பகல் 12 .00  - 2 .00  மணி  

கொல்வதெல்லாம் உண்மை  

கேடி நம்பர் 1 சீசன் டைட்டில் வின்னர்  பொதுசனத் தொடர்பாடல் துறை அமைச்சர் மேர்வின்  சில்வா  தொகுப்பாளர் நவி பிள்ளை அம்மாவிடம் மனம் திறக்கிறார். சமுர்த்தி உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்தது, சிரச சானலுக்குள் அடியாட்களுடன் புகுந்து  ஊழியர்களைத் தாக்கியது, ஜெனிவா சென்று உண்மையை சொன்ன மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலார்களின் கை கால்களை உடைப்பேன் என்று அனல் கக்கியது என்று தனது சாதனைகள் பற்றி மனம் திறக்கிறார். 


நண்பகல் 2 .௦௦ - மாலை 04.௦௦ 

சிறப்பு நீயா? பேயா ? 

"அமைச்சர் பதவியைத் துஷ்பிரயோகம் செய்பவரா நீங்கள்? நீயா பேயா? வில் கலந்து  கொள்ள..."என்று ஸ்க்ரீன் இல் ஓடிய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்ட தொழில்துறை  மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு பங்குபற்றுனராக வருவதை விட கெஸ்ட்டாக வரும் அளவுக்கு தகுதி இருப்பதாக சானல் கருதியதால், அவர் நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிக்கின்றார். இதன் போது  பதவின் செல்வாக்கைப் பயன் படுத்தி எவ்வளவு காணிகளை அபகரிக்கக முடியுமோ அபகரிப்பது, மனித உரிமை அலுவலகங்களில் வேலை செய்பவர்களை கொலை செய்வது, பின்பு அந்த கொலை வழக்கைத் தனது செல்வாக்கால தாமதப் படுத்துவது எல்லாம் சரியே என்று கூறி தனது கருத்தை முன்வைக்கிறார். 



மாலை 04 .௦௦- 07.௦௦ மணி

சிறப்புத் திரைப்படம்- " ஜெனிவாவில் சொதப்புவது எப்படி? "

வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஹீரோவாக நடித்து வெளிவந்து சில மாதங்களேயான புத்தம் புதுத் திரைப்படம். வில்லன் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையைத் தோற்கடிக்க ஹீரோ எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் அதில் அவர் தோல்வியடைந்து கதறுவதும் தான் படம் முழுக்க வருகிறது. இதில் ஹீரோ நாடு நாடாக அலைந்து சிறப்பு மீட்டிங் வைத்து காலில் விழுந்து கதறும் எமோஷனல் காட்சிகள் பிரமாதமாகப் படமாக்கப் பட்டிருக்கின்றன. ஹீரோவின் நண்பனாக நடித்து அவரைக் கைவிடும் நண்பனாக எஸ் .எம்.கிருஷ்ணா நடித்திருக்கிறார். இறுதியில் நண்பனின் தந்தை மன்மோகன்சிங் என்பவர் கடிதம் எழுதி மன்னிப்புக் கேட்டு கண் கலங்கும் இடம் டச்சிங். சுவிட்சர்லாந்தில்  சில  பாடல் காட்சிகள் படமாக்கப் பட்டிருக்கின்றன. இறுதியில் ஹீரோ " அந்த 4  பேருக்கு நன்றி..." என்று சோகமாகப் பாடிக்கொண்டு நாடு திரும்பி "கற்றதும் பெற்றதும்" என்று நாவல் எழுதுவதோடு படம் முடிகிறது. 


மாலை 07 .௦௦ - இரவு 09 .00 மணி 

 படுக்கலாம் வாங்க !

கால்நடை, கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான்  கற்பழிக்கும்...சாரி தொகுத்தளிக்கும் மிட் நைட் மசாலா டைப் ப்ரோக்ராம் இது. வயது வந்தவர்களுக்கு மட்டுமே. வெளி நாடுகளில் ஹோட்டல்களில் பெண்களோடு சேட்டை விடுவது, கையைப் பிடித்து இழுத்து தகாத முறையில் நடப்பது, அவர்களோடு சில்மிஷம் செய்து கில்மா வேலைகள் பார்ப்பது, பாரில் விடிய விடிய ஊத்திக் கொண்டு ஹோட்டல் ஊழியர்களோடு தகராறு பண்ணுவது மாதிரியான சகல லீலைகளும் கற்று தரப்படும். போனசாக ' பொண்ணைக் கையப் பிடிச்சு இழுத்தியா?' மாதிரியான காமடி கிளிப்பிங்க்சும் இந்த நிகழ்ச்சியில் உண்டு. 



இரவு 09 .௦௦- 11 .௦௦ மணி 

நீங்களும் கொல்லலாம் ஒரு கோடி 

நான்கு துறைகளின் அமைச்சரும் நாட்டின் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொகுத்து வழங்கும்  மெகா ஹிட் அடிக்கப்போகும் நிகழ்ச்சி இது. கேட்கப்பட இருக்கும் கேள்விகளுக்கான சில உதாரணம் :

1 )  இறுதி யுத்தத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள்? 
a) 4 
b) 6 
c)10  
d) யாருமே கொல்லப்படவில்லை

2 ) இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளி வாய்க்கால் பகுதியில் எத்தனை விதமான ஆயுதங்கள் பிரயோகிக்கப்பட்டன?

a) இறுதியில் யுத்தமே நடைபெறவில்லை
b) யுத்தத்தில் ஆயுதங்களே பாவிக்கப்படவில்லை
c) பதில் சொன்னால் நான் நாட்டைக் காட்டிக் கொடுத்த துரோகி
d) முள்ளிவாய்க்கால் தூத்துக்குடி  பக்கம், ஈரோடு பக்கம்னா இருக்கு?  
  
இந்த அட்டு ஜோக்குக்கெல்லாம் நான்  சிரிக்கணுமா? ஆள விடுங்கப்பா..!



இரவு 11 .௦௦-நள்ளிரவு 12 .௦௦ மணி 

ஒரு வார்த்தை ஒரு அச்சம் 

இறுதியில் நாட்டு மக்கள் போன் போட்டு கெட்ட கெட்ட வார்த்தைகளில் சானலைத் திட்டும்  நிகழ்ச்சி இடம்பெறும். 

மிஸ் பண்ணிடாதீங்க..!

(யாவும்  கற்பனை! )

தமன்னாவும் ராசியான மழையும்

தமன்னா மழையில் நனைவது போல நடித்த படங்கள் ஹிட் ஆகி விட, இப்போது அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் ஒரு காட்சியிலாவது நனைவது போன்று எடுத்து விடுகிறார்களாம்.அப்போது தானே ரசிகர்களையையும்  ஜொள் மழையில் குளிப்பாட்ட முடியும். தமன்னாக்கு முதலே காலங்காலமாக நடிகைகள் அனைவரையும் மழையில் நனைய வைத்து கவர்ச்சி காட்ட வைப்பது முதல் ஆக்ஷன்   காட்சிகளில் ஹீரோ சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு சேற்றில் உருண்டு வில்லனை புரட்டி எடுப்பது முதல் மழை பல சினிமாக்களில் ஹீரோயினை விட பெரிய ரோல் செய்திருக்கிறது.



மழை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதமான நினைவுகளில் நனைய வைக்கிறது. ஊர்ப் பக்கங்களில் செம்மண் புழுதியின் மேல் பெய்து மண் வாசத்தை கிளப்பி சர்ர்ர் என்ற சத்தத்தோடு கொட்டும் மழை. இங்கே நகரங்களில் கான்க்ரீட் கட்டடங்களை நனைத்து பால்கனியில் காயப்போட்டிருக்கும் உடுப்புகளை ஈரமாக்கி அறையின் வாசல் வரை சாரலடிக்கும் மழை. யாழ்ப்பாணத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் மண் உறிஞ்சி அடுத்த நிமிஷம் வெள்ளம் வடிந்து விடும். கொழும்பில் முழுவதும் சிமென்ட் ரோடுகள், ட்ரைனேஜ்  சிஸ்டம் என்று  ஒரு சின்ன தூத்தலுக்கே கணுக்காலை மறைத்து வெள்ளம் நிக்கும். ஊரில் என்றால் மழைத் தண்ணியில் காலை நனைத்து விளையாடலாம். இங்கே சாக்கடை நிரம்பி மழை வெள்ளத்துடன் கலந்து விடுவதால் ஆறு லைப்பாய் போட்டு குளித்தாலும் அப்படி விளையாட முடியாது.





யாழ்ப்பாணத்தில் நிஷா புயல் நேரம் விடாது பெய்த மழையால் ஆண்டாண்டு காலம் சைக்கிளில் போய்வந்த இடம் எல்லாம் வெள்ளக்காடாக மாறி இருந்தது. வெள்ளத்தின் நடுவில் நின்ற நல்லூர் கோயில் மறக்க முடியாதது.  பாரதியார் சிலை இருக்கும் சந்தியில் இருந்து பிரியும் ஐந்து தெருக்களும் முழங்கால் அளவு வெள்ளத்தில் மூழ்கி இருந்ததைப் பார்த்த போது கள்ளிக்காட்டு இதிகாசத்தின் கிளைமாக்ஸ் ஞாபகத்துக்கு வந்தது.


வைரமுத்துவின்  கவிதைத் தொகுப்பு பெய்யெனப் பெய்யும் மழை. என் சுவாசக் காற்றே இல் அவர் எழுதிய பாடல் இன்றும் ஒவ்வொரு மழையின் போதும் ஞாபகம் வருகிறது.

".......மேகம் கறந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்..- வாழ
வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்...-
நீ கண்கள் மூடி கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய்.."




கொட்டும் மழையில் நாடு ரோடில் நனையும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. சினிமாவில் மட்டும் மழையில் நனைந்து கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட விரும்புவது என்பது பப்ளி ஹீரோயிங்களுக்கான ஒரு எழுதப்படாத சாமுத்திரிகா லட்சணமாக இருந்து வருகிறது. எந்த மடையன் அந்த நேரம் ஐஸ்க்ரீம் சாபிடுவான்? சூடாக ஒரு ஆவி பறக்க யாரவது கோப்பி போட்டுக் கொடுத்தால் நல்லா இருக்கும்.



மழை படத்தில் ஜெயம் ரவியும் ஸ்ரேயாவும்   நனைந்து மழை ஜோசியம் பார்த்து  காதலித்தார்கள். நான் சொன்னதும் மழை வந்துச்சா   என்று தனுஷ் மயங்கினார். என் மேல் விழுந்த மழைத் துளியே...இத்தனை நாளை எங்கிருந்தாய் என்று ஒவ்வொரு காதலிலும் கேட்டிருப்பார்கள். அடடா மழைடா அடை மழைடா..என்று தமன்னா ஆடினாலும் அடுத்த அடை மழை அமலா காட்டில் தான் போல.




மழைக்கும் ஒவ்வொரு மூட் உண்டு. ஹோலி பண்டிகை நேரங்களை பெய்யும் போது வண்ணங்கள் கரைந்து ஒழுக ஒரு சந்தோஷம். சாவு வீடுகளில் பெய்யும் போது அது ஒரு துயரத்தின் அடையாளம். எல்லாருடைய கண்ணீரையும் சேர்த்துக்கொண்டு அது அழுவது போல ஒரு பொங்கி வழியும் துயரம். மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் ஜன்னல் கம்பிகளுக்கு அப்பால் தாழ்வாரங்களின் வழியே பெய்து ஒழுகும் மழை நீர் மனத்தின் கண்ணீரின் மறு வடிவம். எல்லா மழையையும் மறந்தாலும் 1996  இல் இடம்பெயர்த்து போன போது ஜன வெள்ளத்துக்கு நடுவில் பெய்து நாவற்குழி யில் இருக்கும் நாமம் போன்ற மண்ணை சேறாக்கி, தாகத்துக்கு தண்ணீர் கொடுத்து அத்தனை மக்களுக்காகவும் சேர்ந்து அழுத மழையை மறக்க முடிவதில்லை.



 அந்தி மழை பொழிகிறது..ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...அற்புதமான ஒரு காதல் வரி. மழை நின்ற பின்னும் தூறல் போல உன்னை மறந்த பின்னும் காதல்..மன நிலையை படம் பிடித்துக் காடும் கண்ணாடி வரிகள். " குடைக்குள் மழை" அருமையான டைட்டில். புது வெள்ளை மழை..அந்தி மழை..அமுத மழை..இவை எல்லாம் கவிஞர்கள் கண்டு பிடித்த மழையின் ஜாதிகள்.அப்புறம் " நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..நீருக்குள் மூழ்குது தாமரை.." இந்த வரிகளைக் கேட்கும் போதே சட்டென்று வானிலை மாறக்கூடும்.



முன்பு மழையை ரசித்தல் என்பது ஒரு சந்தோஷமான நிகழ்வாக இருந்தது, அந்த மழை எத்தனை பேரைக் கண்ணீர் விட வைக்கிறது என்ற சிந்தனை இல்லாமல். சாரு நிவேதிதா ஒரு முறை மழை நேரங்களில் தனது தாய் படும் பாட்டை விளைக்கி எழுதி இருப்பதை படித்தால் கண்ணில் கண்ணீர் வரும். ஒழுகும் வீடு, தரையெல்லாம் ஊறலால் ஈரமாகி, கூரை வழி சிந்தும் வெள்ளம் நிற்கும் வீடு, உணவு இல்லாத நிலை, வெளியில் போய் உழைக்கவும் முடியாத அடை மழை நேரங்களில் மழை ஒரு நரகம். விறகு எரியாது. அனுபவித்த பல விடயங்களை அந்த எழுத்து வழி மீட்டி பார்க்க முடிந்தது. சாரு சொல்லுவது போல கதகதப்பான பங்களாவின் உள்ளே இருந்து முந்திரிப்பருப்பு கொறித்துக் கொண்டு ரசிப்பவர்களுக்கு வேண்டுமானால் மழை ஒரு சொர்க்கம், இலக்கியத்தின் ஊற்று. மழை தரும் வேதனையை தினம் அனுபவிப்பர்களுக்கு அது ஒரு நரகம்.




மழை வெளி உலகின் அழுக்குகளை மட்டும் அல்ல மனதின் அழுக்குகளையும் கரைத்துக் கழுவி எப்போதும் போல ஓடிக் கொண்டே இருக்கிறது.



Related Posts Plugin for WordPress, Blogger...