தமன்னா மழையில் நனைவது போல நடித்த படங்கள் ஹிட் ஆகி விட, இப்போது அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் ஒரு காட்சியிலாவது நனைவது போன்று எடுத்து விடுகிறார்களாம்.அப்போது தானே ரசிகர்களையையும் ஜொள் மழையில் குளிப்பாட்ட முடியும். தமன்னாக்கு முதலே காலங்காலமாக நடிகைகள் அனைவரையும் மழையில் நனைய வைத்து கவர்ச்சி காட்ட வைப்பது முதல் ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோ சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு சேற்றில் உருண்டு வில்லனை புரட்டி எடுப்பது முதல் மழை பல சினிமாக்களில் ஹீரோயினை விட பெரிய ரோல் செய்திருக்கிறது.
மழை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதமான நினைவுகளில் நனைய வைக்கிறது. ஊர்ப் பக்கங்களில் செம்மண் புழுதியின் மேல் பெய்து மண் வாசத்தை கிளப்பி சர்ர்ர் என்ற சத்தத்தோடு கொட்டும் மழை. இங்கே நகரங்களில் கான்க்ரீட் கட்டடங்களை நனைத்து பால்கனியில் காயப்போட்டிருக்கும் உடுப்புகளை ஈரமாக்கி அறையின் வாசல் வரை சாரலடிக்கும் மழை. யாழ்ப்பாணத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் மண் உறிஞ்சி அடுத்த நிமிஷம் வெள்ளம் வடிந்து விடும். கொழும்பில் முழுவதும் சிமென்ட் ரோடுகள், ட்ரைனேஜ் சிஸ்டம் என்று ஒரு சின்ன தூத்தலுக்கே கணுக்காலை மறைத்து வெள்ளம் நிக்கும். ஊரில் என்றால் மழைத் தண்ணியில் காலை நனைத்து விளையாடலாம். இங்கே சாக்கடை நிரம்பி மழை வெள்ளத்துடன் கலந்து விடுவதால் ஆறு லைப்பாய் போட்டு குளித்தாலும் அப்படி விளையாட முடியாது.
யாழ்ப்பாணத்தில் நிஷா புயல் நேரம் விடாது பெய்த மழையால் ஆண்டாண்டு காலம் சைக்கிளில் போய்வந்த இடம் எல்லாம் வெள்ளக்காடாக மாறி இருந்தது. வெள்ளத்தின் நடுவில் நின்ற நல்லூர் கோயில் மறக்க முடியாதது. பாரதியார் சிலை இருக்கும் சந்தியில் இருந்து பிரியும் ஐந்து தெருக்களும் முழங்கால் அளவு வெள்ளத்தில் மூழ்கி இருந்ததைப் பார்த்த போது கள்ளிக்காட்டு இதிகாசத்தின் கிளைமாக்ஸ் ஞாபகத்துக்கு வந்தது.
வைரமுத்துவின் கவிதைத் தொகுப்பு பெய்யெனப் பெய்யும் மழை. என் சுவாசக் காற்றே இல் அவர் எழுதிய பாடல் இன்றும் ஒவ்வொரு மழையின் போதும் ஞாபகம் வருகிறது.
".......மேகம் கறந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்..- வாழ
வந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்...-
கொட்டும் மழையில் நாடு ரோடில் நனையும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. சினிமாவில் மட்டும் மழையில் நனைந்து கொண்டு ஐஸ்க்ரீம் சாப்பிட விரும்புவது என்பது பப்ளி ஹீரோயிங்களுக்கான ஒரு எழுதப்படாத சாமுத்திரிகா லட்சணமாக இருந்து வருகிறது. எந்த மடையன் அந்த நேரம் ஐஸ்க்ரீம் சாபிடுவான்? சூடாக ஒரு ஆவி பறக்க யாரவது கோப்பி போட்டுக் கொடுத்தால் நல்லா இருக்கும்.
மழை படத்தில் ஜெயம் ரவியும் ஸ்ரேயாவும் நனைந்து மழை ஜோசியம் பார்த்து காதலித்தார்கள். நான் சொன்னதும் மழை வந்துச்சா என்று தனுஷ் மயங்கினார். என் மேல் விழுந்த மழைத் துளியே...இத்தனை நாளை எங்கிருந்தாய் என்று ஒவ்வொரு காதலிலும் கேட்டிருப்பார்கள். அடடா மழைடா அடை மழைடா..என்று தமன்னா ஆடினாலும் அடுத்த அடை மழை அமலா காட்டில் தான் போல.
மழைக்கும் ஒவ்வொரு மூட் உண்டு. ஹோலி பண்டிகை நேரங்களை பெய்யும் போது வண்ணங்கள் கரைந்து ஒழுக ஒரு சந்தோஷம். சாவு வீடுகளில் பெய்யும் போது அது ஒரு துயரத்தின் அடையாளம். எல்லாருடைய கண்ணீரையும் சேர்த்துக்கொண்டு அது அழுவது போல ஒரு பொங்கி வழியும் துயரம். மனம் பாரமாக இருக்கும் நேரங்களில் ஜன்னல் கம்பிகளுக்கு அப்பால் தாழ்வாரங்களின் வழியே பெய்து ஒழுகும் மழை நீர் மனத்தின் கண்ணீரின் மறு வடிவம். எல்லா மழையையும் மறந்தாலும் 1996 இல் இடம்பெயர்த்து போன போது ஜன வெள்ளத்துக்கு நடுவில் பெய்து நாவற்குழி யில் இருக்கும் நாமம் போன்ற மண்ணை சேறாக்கி, தாகத்துக்கு தண்ணீர் கொடுத்து அத்தனை மக்களுக்காகவும் சேர்ந்து அழுத மழையை மறக்க முடிவதில்லை.
அந்தி மழை பொழிகிறது..ஒவ்வொரு
துளியிலும் உன் முகம் தெரிகிறது...அற்புதமான ஒரு காதல் வரி. மழை நின்ற
பின்னும் தூறல் போல உன்னை மறந்த பின்னும் காதல்..மன நிலையை படம் பிடித்துக்
காடும் கண்ணாடி வரிகள். " குடைக்குள் மழை" அருமையான டைட்டில். புது வெள்ளை
மழை..அந்தி மழை..அமுத மழை..இவை எல்லாம் கவிஞர்கள் கண்டு பிடித்த மழையின்
ஜாதிகள்.அப்புறம் " நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை..நீருக்குள் மூழ்குது தாமரை.." இந்த வரிகளைக் கேட்கும் போதே சட்டென்று வானிலை மாறக்கூடும்.
முன்பு மழையை ரசித்தல் என்பது ஒரு சந்தோஷமான நிகழ்வாக இருந்தது, அந்த மழை எத்தனை பேரைக் கண்ணீர் விட வைக்கிறது என்ற சிந்தனை இல்லாமல். சாரு நிவேதிதா ஒரு முறை மழை நேரங்களில் தனது தாய் படும் பாட்டை விளைக்கி எழுதி இருப்பதை படித்தால் கண்ணில் கண்ணீர் வரும். ஒழுகும் வீடு, தரையெல்லாம் ஊறலால் ஈரமாகி, கூரை வழி சிந்தும் வெள்ளம் நிற்கும் வீடு, உணவு இல்லாத நிலை, வெளியில் போய் உழைக்கவும் முடியாத அடை மழை நேரங்களில் மழை ஒரு நரகம். விறகு எரியாது. அனுபவித்த பல விடயங்களை அந்த எழுத்து வழி மீட்டி பார்க்க முடிந்தது. சாரு சொல்லுவது போல கதகதப்பான பங்களாவின் உள்ளே இருந்து முந்திரிப்பருப்பு கொறித்துக் கொண்டு ரசிப்பவர்களுக்கு வேண்டுமானால் மழை ஒரு சொர்க்கம், இலக்கியத்தின் ஊற்று. மழை தரும் வேதனையை தினம் அனுபவிப்பர்களுக்கு அது ஒரு நரகம்.
மழை வெளி உலகின் அழுக்குகளை மட்டும் அல்ல மனதின் அழுக்குகளையும் கரைத்துக் கழுவி எப்போதும் போல ஓடிக் கொண்டே இருக்கிறது.
இதெல்லாம் ஒரு வயசு :-), எங்களுக்குப் பழசு :-(
சில விசயங்களுக்கு வயசு ஒரு மேட்டரே இல்லை.. :)
நீங்க சொல்லுறது சரிதான் எண்டாலும் 'ஒத்துக்கொள்ள மாட்டமில்ல? "