கொழும்பில் சற்றுமுன் நிலநடுக்கம்!

 

கொழும்பில் சற்று முன்னர் 2 .20 மணியளவில் மெல்லிய நில அதிர்வு உணரப்பட்டது. அதை நேரடியாக உணரும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததும் ஜென்ம சாபல்யம் அடைந்தது போல ஏதோ சாதித்த திருப்தி ஏற்பட்டது. வெரி மைல்ட் என்பதால் இப்படி வெட்டியாக உட்கார்ந்து போஸ்ட் போட முடிகிறது.இல்லாவிட்டால் நரகத்தில் இருந்து கொண்டு தான் ஹிட் அடிக்கும் தலைப்பு தேடிக்கொண்டு போலோயர்ஸ் ஐ எண்ணிக்கொண்டும் இருந்திருக்க வேண்டி வந்திருக்கும். வழமை போல வெட்டியாக நெட் இல் மீன் பிடித்துக் கொண்டிருந்து விட்டு ஹாயாக சரியலாம் என்று எழும்பிய போது ஹவுஸ் ஓனர் அம்மா ஐயோ ஏனப்பா இப்பிடி (f )பானை புல் ஸ்பீட் இல போட்டு வச்சிருக்கிறியள் என்று புலம்பினார். சரியாய் வேர்க்குது, அதால தான், அதோட ஸ்பீட் ஐ குறைச்சு வச்சாலும் கூட்டி வச்சாலும் ஒரே காசு தான் என்று விஞ்ஞான விளக்கம் ( சுஜாதா எங்கேயோ எப்போதோ சொன்னதாக ஞாபகம்!  ) கொடுத்து விட்டு சனியனே..உண்ட தலையில விழுறதுக்கு தான்..என்று மைன்ட் வாய்ஸ்   ஓட கட்டிலில் வந்து சாய்ந்தேன். சில நிமிடங்களில் கட்டிலின் கீழே இருந்து கட்டிலை யாரோ உலுப்புவது போல ஒரு பீலிங். கட்டிலில் ஆணிகள் சற்று லூசானால் அங்கே இங்கே புரண்டு படுக்கும் போது லேசாக ஆடுமே...அப்படி ஒரு ஒரு பீலிங். சரி மனப் பிராந்தியாக  இருக்குமோ என்று தலையைத் தூக்கி நிமிர்ந்து பார்த்தால் ஆடுவது தெரியவில்லை. திரும்பவும் கையைத் தலைக்குக் கொடுத்து படுத்த போது திரும்பவும் கட்டிலுக்கு கீழே இருந்து கட்டிலை யாரோ முழு வேகத்துடன் உலுப்புவது போல ஒரு பிரமை. நிச்சயம் இது வெறும் ஹாலுசினேஷன் தான் (ம்ம்..எங்க இருந்து தான் இந்த நேரம் பார்த்து வார்த்தைகள் வந்து முளைக்குதோ..அணையப் போற சுடர் தான் பிரகாசமா எரியுமாமே..ஹீ ஹீ..) என்று திருப்பி நிமிர்ந்து பார்த்த போது பெட் சீட் போர்வை போன்றவற்றிலும் லேசான நடுக்கம். ஸ்க்ரீன் இல் கொழுவி இருந்த ஒரு பையைப்  ஐப் பார்த்த போது அது லேசாக பட பட வென்று ஆடுவது தெரிந்தது. இத்தனைக்கும் அது ஒரு கனமான பை. ஏதும் நில நடுக்கமோ..என்று மைல்டாக ஒரு டவுட் மூளைக்குள் உதயமாக முன்னரே கற்பனை பண்ணிறதுக்கும் ஒரு அளவு வேணாமா..ஜேம்ஸ் கமரூன் ரேஞ்சிற்கா கற்பனை பண்ணுவது என்று மனசாட்சி அதட்டியது. சரி இது (f )பான் காத்து தான் சனியன் கருமத்தை கொஞ்சம் குறைத்து தொலைப்பம்  என்று எழும்பிய போது ஹவுஸ் ஓனருக்கு பயந்து குறைப்பதா என்று ஈகோ தடுத்தது. சரி குறைத்து வைப்பம் ஈகோ கூடாது என்று சித்தர்கள் சொன்னதை நினைத்து எழும்பிய போது மெல்லிய ஒரு தலை உலைஞ்சல்.  குவாட்டர் அடிச்ச மாதிரி தலை ஒரு சின்ன சுத்து..இந்த இடத்தில் தான் ஒரு ப்ளாஷ் பேக் அவசியம். அறையில் பாம்பு பல்லிகள் வர கூடிய சாத்தியக் கூறு இருக்கும் அளவுக்கு அறை சுத்தமாக இருப்பதாக இருப்பதாக ஹவுஸ் ஓனர் கருத்துத் தெரிவித்தபடியால் இன்றைக்கு எப்படியும் அறையை சுத்தப்படுத்தும் நோக்கோடு இருந்தேன். அதனால் பொருட்களை ஒழிவிக்கும் போது ஒரு பெப்சி பாட்டில் அடியில் கொஞ்சம் பிரிட்டன் சிரப்போடு கிடந்தது. ( பிரிட்டன் சிரப்- தடிமன், மற்றும் அலேர்ஜிக்கு பயன்படுத்துவது; குடித்தால் தூக்கம் சும்மா போதை மாதிரி கண்களை சுழற்றி அடிக்கும்; நல்ல டேஸ்ட் வேறு!) ஒரு துளி சிரப்புக்காக போத்தலை வைத்து இடத்தை அடைக்க வேண்டுமா என்று யோசனை வந்தது. தூக்கி வீசவும் மிடில் கிளாஸ் மனோபாவம் இடம் தரவில்லை. சனியன் போனா போகுது நாளைக்கு நாளண்டைக்கு தடிமன் வந்தாலும் குடிச்சு வைப்பம்(!) எதுக்கும் என்று முன்ஜாமீன் கணக்காக அதை குடித்து வைத்தேன். அதனால் தான், இப்போது தலை சுற்றல் இருந்த போது கூட நிலம் ஆடவில்லை பிரிடன் வேலை செய்யுது நான் தான் ஆடுகிறேன் என்று நினைத்து ஆடிக் கொண்டு இருந்து விட்டேன். போதாக்குறைக்கு ஒரு துளி சிரப் இப்படி வேலை செய்யுதே இவ்வளவு வீக் ஆகி விட்டேனே இனி மூண்டு நேரமும் முட்டைக்கோப்பி குடிச்சு உடம்பைத் தேத்த வேணும் என்று கூட நினைத்தேன். 

சரி எண்டு (f ) பான் ஐ ஓப்  பண்ண எழுந்தால் அப்பார்ட்மென்ட் வாசலில் கதவு தட்டப்படும் சத்தம். செக்யூரிட்டி அப்போது தான் வீடுகளுக்கு இண்டர்கோம் இல் அறிவிக்கத் தொடக்கி இருந்தார். வெளியில் எட்டிப்பார்த்தபோது ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் எல்லோரும் படிகளை அடைத்துக் கண்டும் லிப்ட் ஐ நெருக்கிக்  கொண்டும் இறங்குவதை காண முடிந்தது. எல்லோரும் போட்ட போட்ட உடுப்புகளோடு. இங்கே என் வீட்டுப் பெண்மணி ஏதோ கட்டடமே குலுங்கத் தொடங்கியது போல அவசரப் படுத்தியதால் செருப்பை மட்டும் போட்டுக் கொண்டு கீழே இறங்கினேன். 
கீழே போனால் பலரும் நில நடுக்கத்தை உணரவில்லை. அறிவித்தல் கொடுத்ததால் மட்டுமே கீழே  இறங்கி வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. நான் நேரே கண்டு கேட்டு உணர்ந்திருந்ததால்  அங்கே சில வினாடிகளில் நான் ஹீரோவாக்கப் பட்டேன். பழையபடி கட்டிலில் படுத்தது முதல் ஆடியது வரை ரிப்பீட்டு! பிறகு வேறு சிலரும் உணர்ந்திருக்கிறார்கள். சிலர் வீட்டில் டி.வி. லேசாக ஆடியிருக்கிறது. என்னைப் போலவே படுத்திருந்த சிலர் கட்டில் ஆடியதை உணர்ந்திருக்கிறார்கள். வங்கிகளில் கணனிகள் ஆடியிருக்கின்றன. மானாட மயிலாட ரேஞ்சிற்கு அவை ஆடியதைக் கண்ட அலுவலர் தானும் எழும்பியதில் அவருக்கும் தலை   ஆடியதில் கீழே மயங்கி விழுந்திருக்கிறார். 

என்னைப் போல கீழே வந்து நின்ற என் நண்பனும் அவன் தங்கையும் நானும் கதைத்துக் கொண்டிருந்தபோது தோன்றியது, அடடா...கலியாணம் கட்டாமல் சாகப் போகிறோமே என்று. நண்பன் சமீபத்தில்  திருமணம் முடித்தவன்! இப்போது சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இப்போது கூட அந்த நண்பன் கோல் எடுத்து தற்போது மீண்டும் அதிர்ந்ததாகவும் மறுபடி கீழே வரவும் என்றும் சொன்னான்.மறுபடியுமா? மேலே போகாமல் இருப்பதற்கு கீழே போய் தான் ஆக வேண்டும்.

மெல்லிய  நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது என்று அறிவித்த போது, என்னைத் தொடர்பு கொண்டு, அப்படியா? ஓகே, என்று ஏதோ மழை வரப் போகிறது என்ற ரேஞ்சிற்கு கேட்டுக்கொண்டவர்களையும் , நான் பாட்டுப் போட்டு விட்டு பைலா ஆடியதால் தான் நில அதிர்வு வந்தது என்று ஈவிரக்கம் இல்லாமல் கமென்ட் அடித்த நண்பர்களையும், நீ ஜன்னலால் குதிச்சிட்டியா? என்று கொலைவெறித்தனமாக கொமன்ட் சென்சே இல்லமால் கேட்ட அன்பு உள்ளங்களையும், எல்லாம் முடிந்து இவ்வளவு நேரம் கழித்து இப்போது தான் "சுனாமி அலெர்ட்" என்று சின்னப்புள்ளைத் தனமாக மெசேஜ் அனுப்பிக் கொண்டிருக்கும் நல்லிதயங்களையும், தூங்கப் போகிறேன், ஐந்து மணிக்கு எழும்பும் போது நீ உயிரோடு இருந்தால் கதைக்கிறேன் என்று சொல்லிய பாச மலர்களையும்  இக்கணத்தில் நினைவு கூர்ந்து நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.  ( இப்போது சுனாமி சரியாக 4 .15  இற்கும் 4 .45  இற்கும் இடையில் கொழும்பைத்  தாக்கும் என்று ரூபவாகினி சானலில்   கத்திக் கொண்டிருப்பதால் என்னுடைய இறுதி ஆசை: இந்த ப்ளாக்கில் குறைந்தது 10  கமென்ட்டுகளும் 30  போலோஎர்ஸ் உம்  இருக்க வேண்டும் என்பது. ஹீ ஹீ..)


3 Responses
  1. Riyas Says:

    ரண களத்திலும் ஒரு கிளு கிளுப்பு.. உங்கள் இறுதி ஆசை நிறைவேறட்டும்..  2. நான் ஒரு கமெண்ட் போட்டா 10 கமெண்ட் போட்ட மாதிரி! ஹா,ஹா!


Related Posts Plugin for WordPress, Blogger...