கொழும்பும் குழம்பும்

உணவு ஒரு பயங்கரமான விடயம்.ஸ்ரேயாவை ஆர்த்தி ஆகவும் ஆர்த்தியை ஸ்ரேயாவாகவும் ( ஸ்லிம் என்றாலே சிம்ரன் தான், இருந்தும் ஒரு மாறுதலுக்காக! ) மாற்றும் வல்லமை படைத்தது. இந்தியன் படத்தில் கமல் நிழல்கள் ரவியிடம் சொல்லுவார் 'தேசிய ஒருமைப்பாடு என்பது இந்த நாட்டில் லஞ்சத்தில் மட்டும் தான் இருக்கு' என்று. அதே போல இலங்கையிலும் பெரும்பான்மை சிறுபான்மை பேதம் பார்க்காது ரசிக்கப்படும் ஒரே பொருள் இந்த சாப்பாடாக தான் இருக்கும்.

கொழும்பில் பல்லின மக்களும் சுபிட்சமாக (!) வாழ்வதால் இங்கு பல்லினத்துவமான உணவுகளும் கிடைக்கும். உணவு உண்மையில் அந்த இன மக்களின் வாழ்க்கை முறையை பிரதி பலிக்கிறதோ என்று தோன்றுகிறது. ( Fox சானலில் வரும் Food at 9 பார்க்கிறீர்களா? ) தமிழ் கடைகளில் யாழ்ப்பாணத்து முறையில் சமைக்கப்பட்ட உணவுகள் கிடைக்கும். அதாவது, தேங்காய்ப் பால் நிறைய சேர்த்து, நிறைய மிளகாய்த் தூள் போட்டு சமைக்கப் பட்ட உணவுகள். குழம்பை பார்த்தால் செக்க செவேல் என்று எண்ணெய் பிறந்து அங்கங்கே மிதக்கும். நளபாகம் என்றொரு அசைவக் கடை இருக்கிறது. கணவாய்ப் பிரட்டல், நெத்தலிப் பொரியல், முதல் ஆடு, கோழி போன்ற வழமையான குழம்பு வகைகளும் உறைக்க உறைக்க உங்களுக்காக காத்திருக்கும். முன்பு நாட்டுக் கோழிக் குழம்பு கூட இருந்தது. என்ன ஐந்து ரூபாய் பிரியாணி மாதிரி முழுக்க எலும்பாக இருக்கும். இப்போதும் இருக்கிறதா என்று போய்ப் பார்த்து விட்டு வந்து சொல்லுங்கள்.

வெள்ளவத்தை ஸ்டேஷன் வீதியில் யாழ் ஹோட்டல் என்று பெயருடனேயே ஒரு கடை இருக்கிறது. முன்பு ஒருமுறை டெய்லி மிர்ரர் என்ற பத்திரிகையில் கூட இதன் சுவையில் மதி மயங்கிய (!)ஒரு பெண்மணி கட்டுரை எழுதி இருந்தார். அசல் யாழ்ப்பாணத்து ரெசிபி.நண்டுக் குழம்பு, நண்டுப் பொரியல், கணவாய்க் குழம்பு இங்கு ஸ்பெஷல். இரவில் போனால் அத்தனை வகைக் கொத்து ரொட்டியும் இருக்கும். இறால்க் கொத்தில் இருந்து கணவாய்க் கொத்து வரை. நளபாகத்தை விட இரண்டு மடங்கு உறைப்புடன்! போனால் வாழை இலையில் சாப்பிடலாம். என்ன, அப்படி ஒரு கடை இருப்பதே கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் தான் தெரியும்.

கடற்கரை ஓர வீதியில் ( மரைன் டிரைவ்) இன்னுமொரு ஹோட்டல் இருக்கிறது. இதற்கும் யாழ் ரெஸ்டாரன்ட் என்று தான் பெயர். ஆனால் இது கொஞ்சம் பெரிய ஹோட்டல். அங்கு இரவில் கிடைக்கும் திருக்கைப் பிட்டுக்கு மன்னன் துட்டகைமுனு உயிரோடு இருந்தால் அம்பாந்தோட்டையை பரிசாக எழுதிக் கொடுத்திருப்பான். சுறாப் பிட்டு கூட இப்போது கிடைக்கிறது. ஹோட்டல் திறந்த ஆரம்பத்தில் கொஞ்சமாக இருந்த விலைகள் இப்போது தங்கம் விலை ஏறுவது போல கிடுகிடுவென்று ஏறி இப்போது போனால் செய்கூலி சேதாரம் கூட போட்டிருப்பார்களோ தெரியவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் ஒடியல் கூழ் குடிக்கலாம்.இங்கும் தட்டில் வட்டமாக வெட்டிப் போடப்பட்ட வாழை இலையில் கடற்கரையை ரசித்தபடி சாப்பிடலாம். அன்றைக்கு தான் சம்பளம் எடுத்தீர்கள் என்றால் மேலே குளிரூட்டிய பகுதிக்கு போய் சாப்பிடலாம்.

இதே யாழ் ஹோட்டல் இன் இன்னொரு கிளை, சென்னை வெஜிடேரியன் ரெஸ்டோரன்ட் என்ற பெயரில் இருக்கிறது. இங்கு கொஞ்சம் சாத்வீகமான தென்னிந்திய உணவுகள் கிடைக்கும். ஊத்தப்பம், மசால் தோசை, சாம்பார் வடை என்று கொஞ்சம் விட்டால் இருட்டுக்கடை அல்வாவே கிடைக்கும் போல இருக்கிறது. தமிழ் நாட்டில் தேங்காய் பால் சேர்க்க மாட்டார்கள் அல்லவா? அதனால் இங்கும் மதியத்தில் பால் விடாத குழம்பு வகைகள், கூட்டு வகைகளுடன், மோர், வடை, பாயாசத்துடன் கொஞ்சம் உறைப்பு குறைந்த உணவுகள் கிடக்கும். பின்னேரங்களில் பேல் பூரி, பானி பூரி கூட உண்டு. கொஞ்சம் தாமதாக, ( அதாவது 8 .00 மணி போல!) போனால் இரண்டு இட்டலிக்கு சொல்லி விட்டு பெரிய திரையில் கிரிக்கட் மேட்ச் பார்த்துக் கொண்டு காத்திருந்தால் சில வேளை இட்டலி வரும் போது மேட்ச் முடிந்து, சச்சினுக்கு man of the match உம் கொடுத்து விட்டிருப்பார்கள். இதே போல பம்பலப்பிட்டி சரஸ்வதி லொஜ் இற்கு போனாலும் வறுத்த முந்திரி போட உப்புமா, பூரி உடன் மதராசப் பட்டினம் போய் வரலாம்.

சிங்கள சாப்பாட்டு முறையும் ஒரு விதத்தில் தமிழ் நாட்டை ஒத்திருக்கிறது. இவர்களும் தேங்காய்ப் பால் சேர்ப்பதில்லை. ஆனாலும் பருப்புக் கறி அவ்வளவு ருசியாக இருக்கும். பயத்தங்காய், மீன் குழம்பு, எதிலுமே பால் இருக்காது. பலாக்காயை சிறு சிறு துண்டுகளாக அரிந்து வைக்கும் குழம்புக்கு தமிழர்களும் அடிமை. பெரிய துண்டுகளாக வெட்டி கொரக்காப் புலி ( ஐயோ, அது புளி )விட்டு வைக்கும் கறிக்குப் பொலஸ் என்று பெயர். அதுவும் நன்றாக தான் இருக்கிறது. இந்த வகை உணவுகளுக்கு ஒமேகா இன் இற்கு செல்லலாம். காதலியை அல்லது காதலனை கூட்டிக் கொண்டு செல்லுங்கள், ஏன் எனில், சாப்பாடு வரும் வரைக்கும் நீங்கள் எதிர்காலத்தை சாவகாசமாக திட்டமிடலாம்.

கொழும்பில் பத்துக் கடைகளுக்கு ஒரு கடை பாம்பே ஸ்வீட்ஸ் கடை ( இப்போது மும்பை ஸ்வீட்ஸ் என்று எழுத வேண்டுமா? ) என்று ஏதாவது புள்ளி விவரம் சொன்னால் ஆச்சரியப் படத் தேவை இல்லை. இஸ்லாமிய அன்பர்களால் நடத்தப் படும் கடை. பத்து நாளில் உடல் பருமன் அதிகரிக்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உடனே அருகில் உள்ள பாம்பே ஸ்வீட்ஸ் ஒன்றுக்கு விஜயம் செய்ய வேண்டியது தான். பிஸ்த மஸ்கட், பாதம் மஸ்கட், ஸ்பெஷல் மஸ்கட், நெய் சொட்டும் ஜிலேபி, சீனிப் பாணியில் ஊறி குண்டு குண்டாக ஹன்சிகாவின் கன்னம் போல் கிடக்கும் குலோப் ஜாமுன் என்று நாக்கில் தேன் (!) சொட்ட வைக்கும் ஐட்டங்கள் நிறைய. கொளுத்தும் வெய்யிலில் காலி வீதியில் அலைந்து விட்டு வந்து W.A.சில்வா மாவத்தையில் உள்ள கடையில் பாலூடா ( falooda ) குடிக்கும் போது சொர்க்கம் இருப்பதை நீங்கள் நம்புவீர்கள். நன்னாரி சர்பத் முதல் மில்க் ஷேக் வரை எடுக்கலாம். மென்தோல் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா? அதில் ஒரு அண்டார்டிக் கரடி வந்து கட்டிப் பிடிக்குமே, அப்படியான அனுபவம் கிடைக்கும்.

சிலர் கவலை இருந்தால் சாப்பிடாமல் கிடப்பார்கள். சிலர் கவலை வந்தால் தான் இன்னும் அதிகமாக எந்த நேரமும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். கேட்டால் வாழ்க்கையில் வேறு என்னத்தை கண்டது (!) என்று தத்துவம் வேறு சொல்லுவார்கள். சிலர் சைனீஸ், மொங்கோலியன், தாய் என்று எல்லா வித உணவுகளையும் ஒரு பிடி பிடிப்பார்கள். சிலருக்கு ஐந்து நட்ச்சத்திர ஹோட்டல் இற்கு சென்றாலும் அதே இடியப்பமும் சம்பலும் வேண்டும். ஒவ்வொரு இன மக்களுக்கும் ஒவ்வொரு வகை உணவுப் பாரம்பரியம். இலங்கையின் தமிழ் உணவுகளும் கேரளா உணவுகளும் ஒத்திருக்கும். சில வேளைகளில் ஒரே உணவுக்கு ஊருக்கு ஊர் பெயர் மாறுபடும். மட்டக்களப்பில் சுண்டல் ஆக இருப்பது யாழ்ப்பாணத்தில் வறை என்று மாறும் என்று சொல்லுவார்கள். முன்பு விடுதலைப்புலி உறுப்பினர்களைக் கேட்டால் பாம்பை பிடிப்பதிலிருந்து அதை சமைத்துப் பரிமாறுவது வரை படிமுறை படிமுறையாக விளக்கம் கொடுப்பார்கள். இன்றைக்கு ஆடிக்கூழ் குடித்தீர்களா? ( இல்லை என்றால் பெருமூச்சு விட வேண்டாம் ) சாப்பிடும் போது விரல்களால் தட்டை வழித்து நக்கி சாப்பிட்டால் அல்சர் வராது, இருந்தாலும் குணமாகும் என்று சித்தர்கள் சொல்கிறார்கள், விரும்பியவர்கள் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்!

1 Response
  1. நாவில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்களே..நன்றாக உள்ளது.நாம் எங்கு போய் சாப்பிடுவோம்?(ur bd party?)


Related Posts Plugin for WordPress, Blogger...