முன்னை இட்ட தீ

மே 01 அஜித்குமாரின் பிறந்த தினம் என்று தெரிந்த அளவுக்கு எனக்கு மே 31 யாழ்ப்பாணப்  பொது நூலகம்  எரிக்கப்பட்டதன் 31 ஆவது நினைவு தினம்  என்பது தெரிந்திருக்கவில்லை. சில சமூக ஊடக வலைத்தளங்களில் வந்த ஸ்டேடஸ்களை வைத்தே தெரிந்துகொள்ளவேண்டிய என் வெட்கக்கேடான நிலையை நினைக்கும் போது சுந்தரராமசாமியின் ஜே.ஜே:சில குறிப்புகளில் இடம் பெற்ற பிரபலமான பத்தி தான் நினைவுக்கு வந்தது."கோட்டாறு என் வீட்டுக்கு ஒரு மைல் தூரத்தில் தான் இருக்கிறது. எனக்கு நன்றாக தெரிந்த இடம். ஆனால் அங்கு சண்டை நடந்ததாமே! எனக்குத் தெரியாது. சத்தியமாகத் தெரியாது.இப்போது அங்கு கமிஷன் மண்டிகள். மிளகாய் வத்தல் நெடி அடிக்கும். பாதசாரிகளைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் குறுக்கும் மறுக்கும் லாரிகளும் அவிழ்த்துப்போட்ட வண்டிகளுமாக இருக்கும். மணிகண்டப் பணிக்கர் கடைக்கு அடுத்த சந்து தான் சிறுநீர் கழிக்க வசதியானது. அது போல் ஏற்ற இடம் அந்தப் பிராயத்தில் கிடையாது. விதவிதமான ஆண்குறிகளைப் பார்த்து அலுத்துப் போன குழந்தைகள் அங்கு ஆனந்தமாக விளையாடிக்கொண்டிருக்கும். வ.பகவதிப் பெருமாள் கடையில் புடைத்த, தூசி தும்பு அகற்றிய மளிகை கிடைக்கும். நிறுவி சரியாக இருக்கும். தொலைபேசி எண் 94 . கு.பாப்புத் தரகனார் கடையில் சுத்தமான தேங்காய் எண்ணெயும் நல்லெண்ணையும் கிடைக்கும்.தொலைபேசி எண் 113 .

சண்டை நடந்ததாமே கோட்டாற்றில். எனக்குத் தெரியாது."

அன்று... 


இந்த பத்தியை சற்றே மாற்றிப் போட்டால் என்ன என்று எனக்குத் தோன்றியது.

இன்றைக்கு லைப்ரரி எரித்த நாளாமே! சத்தியமாக எனக்குத் தெரியாது. இப்போது லைப்ரரி, வாசலில் சரஸ்வதி சிலை வைத்து வரிசைக்கு குரோட்டன்கள் வைத்து வெள்ளை வெளேர் என்று பெயிண்ட் அடித்து அழகாக இருக்கிறது. ஊர்காவற்றுறையில் இருந்து டவுனுக்கு வரும்போதுதாஜ் மஹல் போல ஜம்மென்று இருக்கும். முன்னுக்குள்ள வீதியில் இரண்டு கல்லை அடுக்கி வைத்து விட்டு ஏதாவது ஒரு லேனேர்ஸ் இல் பயிலும் மாணவிகள் பழைய சாலியில் எட்டடித்துப் பழகிக்கொண்டிருப்பார்கள். பக்கத்தில்  இருக்கும் சுப்பிரமணியம்  பூங்கா கனகாலமாக சிதைந்து போய் இருந்து  சமீபத்தில்  தான்  மீளவும் திறந்து  வைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே இருக்கும் சென்ட்ரல் கொலிஜ் கிரவுண்டில் தான் பிக் மச் என்று அழைக்கப்படும் சென்ட்ரல்-செயின்ட்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் வருடந்தோறும் கிரிக்கட் போட்டி நடக்கும்.அந்த சமயங்களில் ட்ரம்ஸ் அடிகளும் மாணவர்களின் நடனங்களும் மாணவிகளின் கூச்சலுமாக மைதானத்தில் உற்சாகம் கரைபுரண்டோடு ஓடும்.பின்னுக்கு இருக்கும் துரையப்பா ஸ்டேடியத்தில் இப்போது அடிக்கடி கண்காட்சிகளும் இசைநிகழ்ச்சிகளுமாக  நடக்கிறது. யாழ்ப்பாணக் கோட்டையைக் கூட இப்போது சுற்றிப்பார்க்க அனுமதிக்கிறார்கள். முனீஸ்வரன் கோயில் மரத்தடியில் நின்று கொண்டு சுகமான காற்று வருட சைட் அடிப்பதே தனி சுகம்.

லைப்ரரி எரித்து 31  வருடங்கள் ஆகிறதாமே இன்றைக்கு. எனக்குத் தெரியாது."

இன்று...


 இன்றைக்கு சரியாக 31  வருடங்களுக்கு முதல் யாழ்.பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் மாடியில் இருந்த அறைக்குள் இருந்தார் டேவிட் பாதர். கிட்டத்தட்ட 34  மொழிகளில் பரீட்சயம் பெற்றவர். படித்தது, கேட்டது, பார்த்தது எல்லாமே பாதரின் மூளைக்குள் இருந்த பல இழுப்பரைகளில் தனியாக போட்டுப் பூட்டப்படிருக்கும். தேவையான நேரத்தில் சரியான இழுப்பறையைத் திறந்து தகவல்களை எடுப்பார். அசாத்தியமான நினைவாற்றல்.மெட்ராஸ் யூனிவேர்சிட்டியில் பி எச். டி. பரீட்சையாலராக இருந்தவர்.  அறையில் அமைதியாக இருந்த  டேவிட் பாதரைக் கீழே இருந்து சக பாதிரியார்களிடம் இருந்து வந்த அவசரமும் பதட்டமும் கலந்த அழைப்பு  எழுப்பியது.வெளியே  பால்கனிக்கு வந்த பாதர் கண்ட காட்சி அவரை உலுக்கியது. எந்த நூலகத்தில் அவர் தமது  வாழ்வின் பல பகுதியை செலவிட்டிருப்பாரோ, எந்த நூலகத்தில் உள்ள நூல்களில் அவர் தனது ஆன்மாவைக் கரைத்துக் கொண்டிருப்பாரோ, எந்த நூலகத்தைத் தனது உயிர் போல நேசித்தாரோ அந்த நூலகம், ஆசியாவின் மிகப்பெரும் நூலகம், தீயின் நாக்குகளை தனது ஒரு லட்சம் புத்தகங்களாலும்  ஓலைச்சுவடிகளாலும் உள்வாங்கிக் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஒரு கணத்தில் கண் முன்னே ஒரு தலைமுறையின் ஆத்மா, ஒரு சமூகத்தின் ஜீவன் கருகி சாம்பலாவதைக் கண்டு அதிர்ச்சியில் கனத்த மனதோடு அறைக்குள் மீண்டும் சென்றவர், திரும்பி அந்த அறையை விட்டு உயிருடன் வரவில்லை. அடுத்த நாள் காலையில் காலை உணவுக்கு பாதர் வராததை கண்ட சக அருட்தந்தை செல்வராஜா, அறைக்கு சென்று பார்த்த சமயம், டேவிட் பாதரின் உயிர் தூக்கத்திலும் துக்கத்திலும் பிரிந்திருந்தது.இன்றும் புதிக்கப்பட்ட நூலகத்திற்கு செல்லும் போது உப்பரிகைகளில் டேவிட் பாதரின் ஆத்மா அங்கே உலவிக்கொண்டு இருக்கக் கூடும் அல்லது நூலக வளாகத்தில் வீசும் மெல்லிய காற்றில் பாதரின் மென்மையான மனதும் அந்த வலியும் கலந்திருக்கக் கூடும் என்ற எண்ணம் வருவதைத் தடுக்க முடியவில்லை.

அழகு...
1 Response
  1. ஹேமா Says:

    நினைவுகளை அணையவிடாமல் தனலிட்டு வைத்திருபோம்.வரும் வரும்...நிச்சயம் வரும் ஒருநாள்.காலமெடுக்கும் ஆனால் நம்புவோம் !


Related Posts Plugin for WordPress, Blogger...