சோனாக்காச்சி, தொத்தாபுரம், யாழ்ப்பாணம்



சிவாஜி படத்தில் ஒரு வசனம் வரும். US ரிடர்ன்  ரஜினி தமிழ்க் கலாச்சாரத்தைப் பின் பற்றி ஒழுகும் (இதுவும் தமிழ் வார்த்தை தாங்க ! ) ஒரு பெண்ணைத் தேடி வருவார். எப்படி? கோட் சூட் போட்டுக்கொண்டு புது மொடல் காரில் தமிழ் பெண்ணைத் தேடி அலைவார். அப்போது விவேக் சொல்லுவார் இங்கயும் பெண் கிடைக்காட்டி ஸ்ட்ரைட்டா யாழ்ப்பாணத்துக்கே போய் தேடலாம் என்று சொல்லுவார். 


இது ரஜனி, ஷங்கர், விவேக்கின் மன நிலை மட்டும் அல்ல. பெரும்பான்மையான தமிழர்களின் மன நிலை, யாழ்ப்பாணம் தான் ஒட்டு மொத்த தமிழ்க் கலாச்சாரத்தின் அத்தாரிட்டி என்பதும், அந்த ' பெருமை ' யாழ்ப்பாணத்துப் பெண்களின் கையில் தான் இருக்கிறது என்பதும். ' யாழ் ' என்ற அடைமொழியுடன் வரும் இணையத்தளங்கள் பலவற்றின் கருத்துப்படி பார்த்தால் , யாழ்ப்பாணமே ஆடைகள் அற்று தெருவில் விபச்சாரம் செய்து  கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடந்தது என்று கூறி பல செய்திகள் வந்தாலும் , லேட்டாக வந்ததில் லேட்டஸ்ட் ஆக வந்த செய்தி இது:

' விடுதி ஒன்றை போலிஸ் சுற்றி வளைத்ததில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 13  பேரும் விடுதி உரிமையாளரும் கைது'

இதைத் தொடர்ந்து வந்த செய்தி:

' அதில் இருவர் தாங்கள் நீண்ட காலக் காதலர்கள் என்று கூறியதை அடுத்து இருவரையும் திருமணம் செய்து திருமணப் பதிவுச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கூறி பிணையில் விடுவித்தார் நீதவான். '


இதற்கு சில ஊடகங்களில் வந்த அபிப்பிராயங்கள் :

' இவ்வளவு நாளும் நடவடிக்கை  எடுக்காது  இருந்த போலீசார் இப்போதாவது செயல்பட்டதில் மக்கள் பாராட்டு ' ( இதெல்லாம் கரக்டா பண்ணுவீங்க, வீரப்பனை மட்டும் விட்டுடுவீங்க..)

' ஒரு கப் டீ குடிக்க எஸ்டேட் ஐ வாங்கும் முயற்சி ' ( திருமணம் செய்ய முன்வந்ததை பகிடி பண்றாராமாம்! இதே உதாரணத்தை எத்தனை நாளைக்கு யூஸ் பண்ணுவீங்க? அதையாவது மாத்துங்கப்பா ப்ளீஸ் )

'   கள்ளத் தொடர்பு அம்பலமானதால் கல்யாணம் செய்யத் துடிக்கும் ஜோடி ' ( செய்ய முடிஞ்சவங்க செய்றாங்க - ஓ, அவனா நீயி என்று கேட்டு வேறு சிலரை  அவமானப்படுத்த விரும்பாததால் கேட்கவில்லை )

' இவங்களை எல்லாம் சுட்டுத் தள்ள ஆக்கள் இல்லை ' ( ஆங், நாட்டாமை சொம்பைத்  தூக்கிட்டு தீர்ப்பு சொல்லக் கிளம்பிட்டாரு, அப்படின்னா, கொலை, பாலியல் வல்லுறவு, ஒரு லட்சம் மக்கள் படுகொலை எல்லாம் செய்தவங்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீங்க??)

சரி, நேரடியாகவே விடயத்துக்கு வருவோம், பாலியல் தொழில் என்பது பிழையா என்ன? அதுவும் இந்தக் கூப்பாடு போட்டுக் கதறும் அளவுக்கு பிழையா? இந்த 13 பேரில் பிடிபட்ட பாலியல் தொழிலாளிகள் சொல்லியிருக்கிறார்கள், வன்னிப் போரில் தங்கள் குடும்பம், உறவினர்கள் அனைவருமே இறந்ததால் சாப்பாடுக்கு என்ன செய்வது, வேறு வழி இல்லாமல் வந்தோம் என்று. இந்த 13 ஒரு துளி உதாரணம். வன்னியில் இதே போல் ஆயிரக்கணக்கான பெண்கள் இருக்கின்றார்கள். குடும்பமே கொத்துக் கொத்தாக மாண்டு போக தனித்து விடப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கணவன் இறந்து போக, 23 வயதில்  மூன்று குழந்தைகளோடு நடுத் தெருவில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் ஒரு கட்டத்தில் திருமணமாகாத இளைஞர்களை கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தத் தொடங்கியதால், அங்குள்ள இளைஞர்கள் பெரும்பாலும் 16  வயதில் எல்லாம் திருமணம் முடித்து, 20  வயதில் இரண்டு குழந்தைகளுடன் இருப்பது சர்வ சாதாரணம். அப்படியான குடும்பங்களில் கணவன் இறுதியுத்தத்தில் இறந்துபோக, அல்லது காணாமல் போக,  குழந்தைகளுடன் தனித்து விடப்படும் பெண்களில் பலரும் படிப்பைப் பாதியில் விட்டவர்கள். எந்த வேலைக்கும் இவர்களை எடுப்பதும் இல்லை.


கணவன் இல்லை, கையில் காசும் இல்லை, வேலையும் இல்லை, மூன்று குழந்தைகளும் பசித்து அழுதால், அவர்களின் பசி முக்கியமா அல்லது கலாச்சாரம் முக்கியமா? பட்டினியால் குழந்தைகளை சாக விடுவதா அல்லது பாலியல் தொழில் செய்து அழுத குழந்தைக்கு பால் கொடுப்பதா? இல்லை, நல்ல தங்காள் மாதிரி ஒவ்வொரு குழந்தைகளாக கிணற்றில் தூக்கிப் போட்டுவிட்டு தற்கொலை செய்யச் சொல்கிறீர்களா? கமல் சொன்னது போல நாலு பேருக்கு நல்லது நடந்தா எதுவுமே தப்பில்லை. நாலு குழந்தைகளின் பசியைப் போக்கும் என்றால் பாலியல் தொழிலும் தப்பில்லை.

இது வேலு நாயக்கர் நீதி


இரண்டாவது, அது ஏன் யாழ்ப்பாணம் என்றதும் உடனே எல்லா கலாசாரக் காவலர்களும் அலறித் துடித்துக் கொண்டு ஓடி வருகிறீர்கள்?  டைம்ஸ் ஒப் இண்டியா விளம்பரம் பார்த்திருப்பீர்கள் அல்லவா? அதில் வேறு பத்திரிக்கை படித்துத் தூங்குபவர்களை டைம்ஸ் தட்டி எழுப்புவது போல, உலகம் முழுவதும், இலங்கை முழுவதும் பல விடயங்கள், உங்கள் பாஷையில் கலாசாரச் சீரழிவுகள் இடம்பெறுகின்ற போதெல்லாம் தூங்கிக்கொண்டிருக்கும் நீங்கள்  , யாழ்ப்பாணம் கொஞ்சம் மாறுகிறது  என்றதும் ஏன் உடனே விழித்துக் கொள்கிறீர்கள்? தென்னிலங்கையில் நடக்காத பாலியல் தொழிலா? கேவலம் 200  இற்கு ஆள் கிடைக்கும். இங்கே தாஜ், சினமன் கிராண்ட், ஹில்டன் இல்  ரெய்ட்   நடத்தும் 'தில்' போலிசுக்கு இருக்கிறதா? கொழும்பில் ஒரு சிறைச்சாலையில் ஒரு பாலியல் தொழில் விடுதியின் தலைவி ' லக்சரி' வசதிகளுடன் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதே...அது ஏன் ஒரு இணையதளத்தாலும் கண்டுகொள்ளப்படவில்லை?

வாழ்வதற்கே போராட்டம்...இதில் எங்கே வந்தது கலாச்சாரம்


புலம் பெயர் தமிழர்கள் தமிழ்க் கலாச்சாரத்துடன் தான் வாழ்கிறார்களா? இந்தக் கேள்வி உண்மையில் கேட்கப்படவே தேவை இல்லாத ஒன்று. தமிழே தெரியாதவர்களாய் பிள்ளைகளை வளர்க்கும் குடும்பங்கள் தான் அதிகம். தமிழும் மக்சிமம்  ஒரு நாட்டிய அரங்கேற்றத்துடன் முடிந்து விடும் போல. உடை, உணவு, பழக்கவழக்கம், வீட்டில் கதைக்கும் மொழி என த. க . மருந்துக்கும் இல்லாத தமிழர்கள் அதிகம். அங்குள்ள பெண்கள் டேட்டிங் போவதில்லையா? போதை மருந்து பாவித்துவிட்டு கத்தியால் குத்துப்பட்டு இறந்த ஆளையும் தெரியும். யாழ்ப்பாணம் மட்டுமே கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது எழுதாத சட்டமா?



மூன்றாவது, புலம் பெயர் சமூகத்திலோ அல்லது கொழும்பிலோ,  பெண் பிள்ளைகள் ஆண்களுடன் கதைப்பதே இல்லையா? யாழ்ப்பாணத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கூடிக் கதைத்தால் உடனே வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றி ' சீரழியும் தமிழ்க் கலாசாரம்- அபசாரம் ' என்றோ, ' யாழில் காதலர்கள் காமக் களியாட்டம்' என்றோ ' கேப்ஷன்' உம் கொடுத்து விடுகிறார்கள். இந்த சைக்காலஜியில் பல விடயங்கள் இருக்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் சுதந்தரமாகக் கதைப்பதுக்கு தடை போட்ட சமூகங்களில் தான் ஆண் பெண் இடையான நட்புறவுக்கு சாத்தியம் இல்லாது போகிறது. அதனால் தான் இப்போதும் இளைஞர்கள் கும்பலாக கூடி நின்று பெண்களைக் கேலி செய்யும் பழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இது முன்னேறிய எந்த ஒரு சமூகத்திலும் காண முடியாத பழக்கம். ஆண்கள் முதலில் ஒரு பெண்ணை அடக்க வேண்டும், அதன் பின்பே காதல் என்பதே இங்கு சாதாரண கொள்கை. அதன் பலாபலனாக பெண்கள், குறிப்பாக அழகான பெண்கள் எங்கும் சுதந்தரமாக நடமாட முடியாமல் போனது. யாழ்ப்பாணத்தில் தனியே செல்லும் பெண்களிடம் பையன்கள் முதலில் வாய்ச் சேட்டை விடுவதும், பிறகு கைச் சேட்டை விடுவதும் தமிழ்க் கலாசாரத்தின் பிரிக்க முடியாத அம்சங்கள்.

யாழின் அந்நாளைய உயர்சாதிப் பெண்கள்-கவனிக்கவும் ' உயர் சாதி ' 


காதலர்கள் பேசுவதும் கதைப்பதும் கொலைக்குற்றம் போல சித்தரிப்பதும் ஊடகங்களின் வழக்கம். ஒரு ' யாழ் ' இணையத்தளத்தில் ஒரு வீடியோ. ஒரு பூங்காவில் காதலனின் மடி மேல் காதலி. அந்த அரவணைப்பு மட்டும் தான். அவர்களுக்குத் தெரியாமல் எடுத்த வீடியோ. உதட்டோடு உதடு முத்தம் கூட இல்லை. இதைப்போட்டு ஐயோ குய்யோ என்று ஆர்ப்பாட்டமாக எழுதி இருந்தது அந்த இணையம். காதலர்களுக்குத் தெரியாமல் அவர்கள் அந்தரங்கத்தை படம் பிடித்த நீங்கள் குற்றவாளிகளா அல்லது அவர்கள் குற்ற வாளிகளா? இப்படிப் படம் எடுப்பது Voyeurism . விடுதிகளில் கள்ளத் தனமாக காமரா பொருத்தி  போர்னோ படம் எடுப்பவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காதலர்கள் ஒரு பூங்காவில் போய் முத்தம் இட்டால் கூட அதில் என்ன தவறு இருக்கிறது? கொழும்பில் சில பூங்காக்களில் காதலர்களுக்கு என்று  தனிப்பகுதி கூட இருக்கிறது. அந்தக் காதலர்கள் திருநெல்வேலிச் சந்தையில் நின்று கொண்டு இப்படி நடந்து கொண்டிருந்தாலோ அல்லது நல்லூர் கோயில் வாசலில் முத்தமிட்டிருந்தாலோ அதை பொது மக்களுக்கு இடையூறு என்று சட்டப்படி சொல்லலாம்.  மேலும் கருணாநிதி சொன்னது போல களவொழுக்கம், பூங்காக்களில் சந்தித்துக் கொள்வது  எல்லாம் சங்க இலக்கியங்களிலேயே இருந்திருக்கிறதே! தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் சீவகன் புகுந்து விளையாடாத விளையாட்டா? அதுவும் தமிழ்க் கலாச்சாரம் தானே!?!

அந்நாளைய ஆண்கள்-வேட்டியிலும் கம்பீரம்


இந்தக் கலாசாரம் என்பதே ஒரு கெட்டவார்த்தை. உண்மையில் யாழ்ப்பாணக் கலாச்சாரம் சாதி வெறி பிடித்த,  அடக்குமுறைக் கலாசாரம்.யாழ்ப்பாணக் கலாசாரம் பறிபோகுது, மேற்கத்திய கலாசாரம் ஊடுருவுது என்பவர்களுக்கு ஒரு கேள்வி. கலாசாரம் என்பது என்ன? சாரு நிவேதிதா சொன்னது போல, ஒருவன் இந்த சமூகத்தில் பிறந்திருப்பதனால் , வேலைக்குப் போவது, கல்யாணம் முடிப்பது, பிள்ளை பெற்றுக் கொள்வது எல்லாம் தான் ' இயற்கை'. இதே ஒருவன் ஆபிரிக்கப் பழங்குடி இனத்தில் பிறந்திருந்தால், அப்போது அவனுக்கு எது இயற்கை? மேலும், தமிழ்க் கலாசாரமே சிறந்தது என்று கூற முடியுமா? எந்தக் கலாசாரம் சிறந்தது எது தாழ்ந்து என்று தீர்ப்புக் கூற நாங்கள் என்ன கடவுளா? அல்லது அந்த அதிகாரத்தை எங்களுக்கு ஒப்படைத்தது யார்?

மிச்சமிருக்கும் சிரிப்பு


எது ஒழுக்கம் என்பதற்கான வரையறை என்ன? தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்டம். நெதர்லாந்தில் ஓரினச்சேர்க்கை சட்டப்படியானதே. இந்தியாவிலேயே ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றம் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இலங்கையில் நாளைக்கே பாலியல் தொழில் சட்டமாக்கப் பட்டால், எல்லா பா.தொழிலாளர்களும் உங்கள் பாஷையில் ஒழுக்க சீலர்களே. யார் ஒழுக்கமானவன், யார் ஒழுக்கம் கெட்டவன் என்பதை வெறும் நாட்டு எல்லைகளும், காலமும், அரசாங்கமுமே முடிவு செய்கின்றன. அன்று  கோவணம், பிறகு வேட்டி கலாசாரம்,  நேற்று பான்ட், இன்று அரைப்பக்கம் பின்புறம் தெரியும் லோ ஹிப் ஜீன்ஸ் தான் கலாசாரம். ஆனால், பெண்களுக்கு மட்டும் எங்கேயும் எப்போதும் சேலை மட்டுமே தமிழ்க் கலாசாரம். ( உபயம்- யாழ் அரசாங்க அதிபர் )

போகும் தூரம் போவோம் நாளை



முதலில் உண்மையாகவே யாழ்ப்பாணத்தில் பற்றி எரிகின்ற பிரச்சனைகள் இருக்கின்றன. யுத்தத்தால் தனிமரமாக நிற்கும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் என்ன செய்து தரப்போகின்றோம்? எப்படியான ஒரு வேலை வாய்ப்பை வழங்க இருக்கின்றோம்? காணமால் போன ஆயிரக்கணக்கான ஆண்களின் கதி என்ன? இறுதிச் சண்டையில் ஒரு பாதிரியார் தலைமையில் சரணடைத நூற்றுக் கணக்கான போராளிகளுக்கு நடந்தது என்ன? காணாமல் போன கணவனை மீட்டுத் தருவதாகக் கூறி, அந்தப் பெண்ணை ஒரு அரசியல் கட்சி அலுவலகத்துக்கு கூட்டிச் சென்று மூன்று நாட்கள் வைத்திருந்து விட்டு திரும்பக் கொண்டு வந்து இறக்கி விட்டுப் போன கொடூரம் யாருக்காவது தெரியுமா? இனி அந்தப் பெண்ணின் மன நிலை எவ்வாறு இருக்கும்? இன்னொரு அரசியல் கட்சி உறுப்பினர் சைப்பிரசில் வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 36  பேரிடம் கோடிகளில்  நிதி மோசடி செய்தது தெரியுமா? அதில் ஒருவரின் மனைவி கடன் தாளாது தற்கொலைக்குச் சென்றது இணையங்களில் வெளிச்சத்துக்கு வந்ததா? முள்ளி வாய்க்கால் அவலங்களுக்கு பின்னான மக்கள் வாழ்க்கையின் உண்மை நிலை பத்தில் ஒரு பங்காவது வெளி வந்ததா? ஏ  9  பாதை 2006  இல் மூடப்பட்ட பின் தலைவிரித்தாடிய அகோரப் பஞ்சத்தின் நிழல்களாவது ஊடகங்களால் வெளியே தெரிந்ததா? அப்போது கூட தமிழினத்தைக் காப்பாற்றும் பணியில் இறங்கி, தணிக்கைக்கும், எமேகேன்சிக்கும் பயப்படாது செய்திகளை வழங்கி வீரச்சாவு அடைந்திருக்கலாமே? டெங்கு நோய்க்கு சிகிச்சை அளிக்காது இறந்த பையன், நல்லூர் திருவிழாவில் காணாமல் போன ஆறு வயதுச் சிறுமி, வலிகாமத்தில் காணமல் போய் பிறகு சடலமாக கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட இளம் பெண், ஆசிரியர்களின் கவனக்குறைவால் சுற்றுலா சென்றபோது பஸ் சக்கரங்களில் நசுங்கி இறந்த  6  வயது ஏழைச் சிறுவன் எல்லோரும்  மீடியாக்களால் மறக்கப் பட்டு ஏழை பாலியல் தொழிலாளிகளும் அப்பாவிக் காதலர்களுமே முதல் பக்கங்களில் கரிசனையோடு கவனிக்கப்படுகிறார்கள்.

எதிர்காலம் - நம்பிக்கை துளிர் விடுகிறது-வாழ  விடுங்கள் 

கலாச்சாரமும் வெங்காயமும்...
4 Responses
  1. இந்த இணையங்கள் நடத்துவோருக்குத் தேவை பணம் என்னும் பேய் .அதற்காகத்தான் இந்த விடயங்களை மட்டும் சந்தையில் விற்பனைக்கு விடமுடியும் என்று குள்ளத்தனம் தெரிந்தவர்கள்.எரிகின்ற வீட்டில் புடுங்குவது லாபம் என்பது போல் இவர்களும் கலாச்சார வேடம் போடுகின்றனர். வாசகர்களும் இந்த கிளுகிளுப்பைத் தான் நாடுகின்றார்கள் என்று வேற ஒரு மிளகாய் அரைக்கின்றார்கள்.என்ன செய்வது வசதிகள் அவர்களிடம் தானே இருக்கு ஏழைகள் பற்றி அவர்களுக்கு என்ன கவலை?


  2. ஆழமான கட்டுரை. வழக்கமான ஊடகங்கள் சொல்வதை திரும்பச் சொல்லாமல் உண்மையை நேரடியாகக் கூறியுள்ளீர்கள். நன்றி.


  3. Anonymous Says:

    Brilliant!!! Very happy to see next generation comming out of the deep rooted petit mindness.


  4. >கோட் சூட் போட்டுக்கொண்டு புது மொடல் காரில் தமிழ் பெண்ணைத் தேடி அலைவார். அப்போது விவேக் சொல்லுவார் இங்கயும் பெண் கிடைக்காட்டி ஸ்ட்ரைட்டா யாழ்ப்பாணத்துக்கே போய் தேடலாம் என்று சொல்லுவார்.

    நான் நினைக்கிறேன், 'இது படத்தை இலங்கைத்(யாழ்?) தமிழர் எல்லாரும் பார்க்கவைக்கும் வியாபாரத் தந்திரம்' ; யாழ்ப்பாணம் மட்டும்தான் இலங்கையில் தமிழர் வாழுமிடம் என்று நினைத்துவிடுகிறார்கள்


Related Posts Plugin for WordPress, Blogger...