கிறீஸ்மனிதர்கள்-முனி- பார்ட்- 3?


துட்டகைமுனு மன்னனின் ஆவி கிறீஸ் மனிதர்களில் உடலில்!
இலங்கையை கலக்கி அடித்த மர்ம மனிதன் விவகாரம் ( கிறீஸ் மனிதன் ) ஒருவாறு முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடங்கிய நாள் முதலாக சும்மா எக்ஸ் மென், spider man ரேஞ்சுக்கு பப்ளிசிட்டியுடன் இலங்கையிலிருந்து வெளியாகும் அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கங்களில் வரும் அத்தனை செய்திகளிலும் இடம்பிடித்து மக்களின் நெஞ்சை (?) விட்டு நீங்காத இடம் பிடித்து விட்டான் இந்த கிறீஸ் மனிதன். ( செல்லமாக கிறீஸ் பூதம் மற்றும் கிறீஸ் யக்கோ!)

ஒருபடியாக இந்த கி.பூ. இன் அட்டகாசங்கள் கொஞ்சம் ஓய்ந்து விட்டாலும், அதைச் சுற்றியுள்ள மர்மங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. வந்தான், வென்றான் என்ற போதிலும், ஏன் வந்தான் எதற்கு வந்தான் என்ற கேள்விகள் இன்னும் விடை அளிக்கப்படாமலேயே இருக்கின்றன. கி.பூ. பற்றிய ஒரு சின்ன மீள்பார்வை இப்போது பார்ப்போம்.

1. முதலில் மலையகப் பகுதிகளில் ஆங்காங்கே தென்பட்டான். பெண்களின் நெஞ்சில் கீறி இரத்தக் காயம் ஏற்படுத்தி விட்டு ஓடி மறைந்தான். அமைச்சர் கிறீஸ் பூதம் அல்ல கிறீஸ் ஆசாமிகளின் வேலையே இது என்று சாதித்தார். உடம்பு முழுவதிலும் பூசப்பட்ட கிறீஸ். இது தான் அவன் அடையாளம்.மக்கள் ஒருவனை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொழுதிலும் போலிஸ் அவனை விடுவித்தது.

2. பிறகு கிழக்கு நோக்கி நகர்ந்தான். ஊரணி பகுதி, மற்றும் பல இடங்களில் தோன்றினான். பொதுவாக பெண்களை காயப்படுத்தினான்.

3. மெல்ல மெல்ல மன்னார், புத்தளம் போன்ற இடங்களிலும் தரிசனம் தந்தான். இருட்டில் மறைந்திருப்பது, வெளியில் வரும் பெண்களைக் கூரிய உலோகத்தால் கீறி காயப் படுத்துவது தொடர்ந்தது.

4. இறுதியாக, யாழ்ப்பாணத்தில் தன் உச்சக்கட்ட திறமையுடன் தரிசனம் தந்து, மக்கள் இரவில் உறங்கவே முடியாத நிலையை ஏற்படுத்தினான். குடாநாடு முழுவதும் கொந்தளித்தது. இறுதியில் 102 பொதுமக்கள் கைது செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

5. கிழக்கில் 54 வயது மனிதர் நேரடியாக கிறீஸ் பூதத்துடன் கட்டிப் புரண்டார். அவர் சொன்ன அடையாளம்: உடம்பு முழுவதையும் இறுக்கிப் பிடித்த கருப்பு உடை, காலில் ஸ்ப்ரிங் போன்ற ஒன்று இணைக்கப்பட்ட பூட்ஸ், வலது கையை நீட்டினால் விரியும் கூரிய நீண்ட உலோக நகங்கள். சடுதியாக ஓடி மறையக் கூடிய ஆற்றல். கைகலப்பின் இறுதியில் அவருக்கு உலோகத்தால் கீறிய காயங்கள்.

6. கிறீஸ் மனிதனை மக்கள் துரத்தி ஓடிய போது சிறிது தூரத்தில் தயாராக நின்ற வாகனத்தில் ஏறி தப்பிப்பது வழக்கம். அல்லது அந்த இடத்தில் பிரசன்னம் தரும் இராணுவம் அவனை காப்பாற்றும் அல்லது தங்கள் வாகனத்தில் ஏற்றிச் செல்லும்.

7. யாழ்ப்பாணத்தில் கிறீஸ் மனிதன் தன் uniform அணிந்து கொள்ளக்கூட மினக்கடவில்லை போல. டி-சேர்ட் இலும் சாரத்திலும் காட்சி தந்து கலவரப்படுத்தினான். நாவாந்துறையில் மக்கள் துரத்தியபோது அருகிலிருந்த காவலரணுக்குள் புகுந்து டி-சேர்ட் கழற்றிப் போட்டு விட்டு பின்பக்கம் வழியாக கூலாக தப்பித்தனர் மர்ம மனிதர்கள். கோவத்தில் இராணுவ பொருட்களை சேதமாக்கிய மக்களை வீடு புகுந்து அடித்து இழுத்து வந்து காவலரணில் அடைத்தது இராணுவம்.

8. வதந்திகள்: நாட்டின் தனைவருக்கு வந்திருக்கும் நோயை குணப்படுத்த பரிகாரம் தேடியே இந்த இரத்த சேகரிப்பு வேலைகள் நடைபெறுவதாகக் கூறப்பட்டது. கீறிக் காயமேட்படுத்திய கிறீஸ் மனிதன் 'sponge' மூலம் அந்த இரத்தத்தை உறிஞ்சி எடுத்துச் செல்வதாகவும் சொல்லப்பட்டது. துட்டகைமுனு மன்னனின் வாள் மற்றும் கிரீடம் அடங்கிய புதையலை கைப்பற்றுவதட்காகவே இந்த இரத்தாபிஷேகம் என்றும் வதந்தி கிளம்பியது. மேலும், கிறீஸ் மனிதனாக வருவது சீனர்கள் என்றும், அதை மறைப்பதற்காகவே கிறீஸ் பூசினார்கள் என்பதும் இன்னொரு சுவாரசியமான வதந்தி. சில நாட்களுக்கு முன் தமிழ் பத்திரிக்கை ஒன்றில் வந்து ஜோக்:

" கிறீஸ் மனிதனை ஏர்போர்ட் இல கண்டவையாம்"
" ...அப்படியா?? பிறகு என்ன நடந்தது? "
" பிறகென்ன...அவன் பிளேன் இல ஏறி தன்ட நாட்டுக்கே போட்டானாம் "

9. பேஸ்புக்கில் கிறீஸ் பூதத்திற்கு 3000 இரசிகர்கள்: கூத்துக்களின் உச்சக்கட்டமாக இது நடந்தது. அந்த 3000 பேர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப் போவதாக குற்றப் புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சில கேள்விகள்:

1) மர்ம மனிதன் புகுந்த பகுதிகள் அனைத்துமே சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகள். அதே போல மர்ம மனிதனாக பிடிபட்ட அனைவருமே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்.

2) கிறீஸ் பூதம் எனத் தென்பட்டவர்கள் அனைவருக்கும் மன நோய் என்று சான்று கொடுக்கப் பட்டது. அவர்கள் அத்தனை பேருக்கும் இராணுவ முகாமிற்குள் ஓடி ஒளியும் ஒரே விதமான மன நோயா? மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்துக்கு கும்பலாக பஸ் இல் டிக்கட் எடுத்து போய் இறங்கி பெண்களின் இரத்தம் எடுக்கும் அளவுக்கு ஒரே விதமாக சிந்திக்கத் தெரிந்த மனநோயாளர்களா?

3) கிரீஸ் பூதத்தின் தாக்குதலுக்கு உள்ளாகிய அரச திணைக்களம் ஒன்றில் வேலை புரியும் பெண் ஒருவரை மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு அவருக்கும் மன நோய் என்று சான்றிதழ் வழங்கப் பட்டது. பணியில் இருக்கும் ஒருவருக்கு இதுபோன்று பொய் சான்றிதழ் வழங்கினால் அவரின் எதிர்காலம் என்ன? கிறீஸ் பூதத்திற்கும் மன நோய், கிறீஸ் பூதத்தால் தாக்கப் பட்டவருக்கும் மன நோய் என்றால், இலங்கை மக்கள் முழுப்பேருக்கும் மன நோய் பிடித்து விட்டதா? அல்லது அங்கொடை மருத்துவமனையின் மன நோயாளிகள் அனைவரும் திறந்து விடப்பட்டிருக்கிறார்களா?

4) சரியான நேரம், சரியான இடத்தில் இராணுவ வாகனங்கள் தென்பட்டு, கி.பூ. கலைத்துச் செல்லும் மக்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு, கி. பூ. வாகனத்தில் இல் ஏற்றிச் செல்லும் மர்மம் என்ன?

5) யாழ்ப்பாணத்தில் கிறீஸ் பூதங்கள் கருப்பு உடை அணியாததன் காரணம் என்ன? அவை உண்மையிலேயே கிறீஸ் பூதங்கள் தானா??

6) யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதனாகப் பிடிபட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட தென்பகுதி இளைஞர் தனஞ்சய, மன நோயாளி அல்ல என்றும் கே.கே.எஸ். வீதியில் உள்ள கடை ஒன்றில் திருத்த வேலைக்காக வந்தவர் என்றும், குறித்த சம்பவத்துக்கு பிறகே மன நோயாளியாக மாறியுள்ளார் என்றும் அவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னால் உள்ள மர்மம் என்ன?

7) சடுதியாக மர்ம மனிதர்கள் நடமாட்டம் குறைந்து போனதன் காரணம் என்ன?

8) இருபது, முப்பது வருடங்களின் முன்னும் கிறீஸ் மனிதர்களின் கதை நடந்திருக்கிறதாம். அப்படியானால் இப்போது நடப்பது Grease Man - season 2 வா?

இந்த மர்மங்கள் உடனடியாக துலங்குவதட்கான சாத்தியங்கள் குறைவு என்ற போதிலும் நிச்சயம் வெளிவராமல் போகாது . எனவே அவை வெளிப்படும் வரை இதைப் பயன்படுத்தி நன்மை அடைவதற்கான சில ஆலோசனைகள்:
குற்றம்-நடந்தது என்ன ? போன்ற த்ரில்லர் நிகழ்ச்சிகள் தயாரித்து, ஓட்டிக் கொண்டிருக்கும் அரச தொலைக்காட்சிகளையும் மக்கள் பார்க்க வைக்கலாம் .
• " I am the Grease man" என்று அச்சிடப்பட்ட டி-சேர்ட்கள், பாக், நோட் புக், grease man மொடல் ஷூக்கள், கை உறைகள் போன்றவற்றைத் தயாரித்து விக்கலாம் .
அலுவலகம் செல்ல முடியாதவர்கள் கிறீஸ் பூதம் கடத்தியதாக நாடகமாடலாம். ( உண்மைக் கதை).
• Grease Man . Civilians கேம் ஒன்று வடிவமைக்கலாம். இந்த கேம் இல் கிறீஸ் மனிதனால் தாக்கப் படுபவர்கள் மன நோயாளியாக மாறுவார்கள். கேம் இறுதியில் கிறீஸ் மனிதனும் மன நோயாளியாகி இறுதியில் மறைந்தும் போவான் என்பது தான் இந்த கேம் இன் தனிச்சிறப்பு. ( என்ன ரெடியா? )

( பி.கு: தலைப்பு- எவ்வளவோ வதந்தி வந்திட்டுது- நாங்கள் ஒரு வதந்தி கூட பரப்பேல எண்டா எப்பிடி?!? ஹீ ஹீ...& கவனத்திற்கு :படத்தில் இருப்பவர் து.கை. மன்னன் அல்ல! )
2 Responses

  1. Anonymous Says:

    அருமையான சிரிக்க சிந்திக்க வைத்த அலசல்..!!
    -டினேஷ்-


Related Posts Plugin for WordPress, Blogger...