சங்கக்கார- நிஜத்திலும் ஒரு அதிரடி இன்னிங்க்ஸ்?

சங்கக்கார என்றால் எல்லோருக்கும் தெரியும். இலங்கை அணிக்கு சில மாதங்கள் முன்பு வரை கப்டனாக இருந்தவர். இந்த தடவை இலங்கை அணி இரண்டாம் இடம் பிடித்த உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியவர். நல்ல விக்கெட் காப்பாளர். ஒரு நாள் போட்டிகளில் பத்து செஞ்சரிகளும் டெஸ்ட் இல் இருபத்து நான்கு செஞ்சரிகளும் அடித்திருப்பவர். இரண்டாயிரத்து ஏழாம் ஆண்டில் ICC இன் தலை சிறந்த டெஸ்ட் ஆட்டக்காரருக்குரிய விருதை வென்றவர். டெஸ்ட் இல் அதிகபட்சமாக 287 ஓட்டங்களைப் பெற்றவர். ஆனால் அவர் இப்போது சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது மேற்கூறிய எந்த விடயங்களுக்காகவும் அல்ல. பழமையான கிரிக்கெட் பாரம்பரியத்தைக் கொண்ட Marylebone கிரிக்கெட் கிளப் இற்காக புகழ் பெற்ற லோட்ஸ் அரங்கில் வைத்து அவர் ஆற்றிய உரை தான் சமீபத்தில் அவரை ஒரு சர்ச்சைக்குரிய வீரராக அடையாளம் காட்டியிருக்கிறது.

அந்த உரையில் அவர் பல விடயங்களைக் குறிப்பிட்டிருந்தாலும், இலங்கைக் கிரிக்கட் சபையில் நிலவும் அரசியல் பற்றி அவர் வெளிப்படையாக குறிப்பிட்டது தான் இலங்கையிலுள்ள அரசியல் வாதிகளுக்கு மூக்கின் மேல் கோவத்தை வரவழைத்திருக்கிறது. கிட்டத்தட்ட வளர்த்த கடா மார்பில் பாய்ந்த்தது போல எரிச்சலை அது அவர்களுக்கு ஏற்படுத்தி விட்டிருப்பது புரிகிறது. வரிந்து கட்டிக் கொண்டு விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே விசாரணைக்கு உத்தரவிட்டது வரை பல கூத்துக்கள் அரங்கேறி இருக்கின்றன.உரை ஆற்றிய பிறகு இலங்கையிலுள்ள அனைத்து மொழிப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் இடம் பிடித்தார் சங்கக்கார.பல துறைகளில் அரசியல் தலையீடுகள், தனி நபர் அரசியல் இடம் பெறுவது ஒன்றும் புதிதல்ல. அதற்கு இலங்கையோ, அதன் கிரிக்கெட் துறையோ விதி விலக்கல்ல. ஆனாலும், ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் துறையில் அரசியல் புகுந்து அதை சீரழித்தால் அதைக்கொட சகித்துக் கொள்ளலாம், ஏனென்றால் ஆஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட்டை விட ஏகப்பட்ட அடையாளங்கள் இருக்கன்றன. இலங்கை போன்ற ஒரு வறிய, சாபக்கேடு பிடித்த நாட்டுக்கு உலக அரங்கில் இருக்கும் ஒரே ஒரு புகழ், அடையாளம் என்றால் அது கிரிக்கெட் தான். அதில் மட்டும் தான் no.1 இடத்தை ஒரு முறையாவது பெற முடிந்தது. இப்போதும் no.2 தான். அப்படி இருக்கும் ஒரு விளையாட்டிலும் ஊழல், அடியாள் சண்டைகள் என்று இருந்தால் எப்படி இருக்கும்?

அந்த ஆதங்கத்தைத் தான் சங்கக்கார வெளிப்படுத்தி இருந்தார். 1996 இல் உலகக் கோப்பைக்குள் இருந்த போது உரிய அடையாளத்தை பெறுவதே சிரமமாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார். கிரிக்கட் சபையில் இருக்கின்ற பிரச்சனைகள் விளையாட்டு வீரர்களைக் கூட கெடுத்து விடுவதால் வீரர்களை ஒருங்கிணைத்து விளையாடுவதும், மாறி மாறி வந்து போகும் சபைகளோடு ஒரு சமநிலையைப் பேணுவதும் எவ்வளவு கடினமானது என்று கூறியிருக்கும் அவர், அரசியலாக்கப்பட்ட தெரிவுகளால் 1999 இல் முதல் சுற்றிலேயே வெளியேற நேர்ந்தது என்றும் வருத்தப் பட்டிருக்கிறார். கை கலப்புகள் கூட இடம் பெறும் கிரிக்கெட் சபையின் வருடாந்தக் கூட்டங்களை பற்றி அவர் விமர்சித்ததும் பலருக்கும் உச்சக் கட்ட ஆத்திரத்தைக் கிளப்பியிருக்கலாம்.

இது இன்னுமொரு சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறது. இம்முறை இரண்டாம் இடம் வரைக்கும் இலங்கை அணியை அழைத்துச் சென்ற ஒரு தலைவர், உடனடியாக, கட்டு நாயக்கா விமானத் தளத்தில் கால் வைக்காத குறையாக பதவி விலக வேண்டிய அவசியம் என்ன? அந்த அளவுக்கு அரசியலும் ஊழலும் அவரை விசனமடையச் செய்திருக்கிறதா என்றும் தோன்றுகிறது. அதைவிட , அவர் பதவி விலகியதும் எழுந்த ஒரு தகவல் தான் இன்னும் சுவாரசியமானது. டில்ஷான் இப்போது சிறப்பான போர்ம் இல் இருப்பதால் ( உலகக்கோப்பையிலும் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக இருந்தார்) அவரை அணியின் தலைவராக்க தீர்மானித்த போது டில்ஷான் ஒரு 'தூய சிங்கள பௌத்தர் ' அல்ல என்று கூறி மறுக்கப் பட்டதாம்! பிறகு ஏதோ ஒரு நல்ல வேளை, புத்தரே வந்து கனவில் கூறினாரோ என்னவோ, அவரையே தலைவராக்கி விட்டார்கள்.(பிறகு என்ன ரன்தீவ் இற்கா கொடுக்க முடியும்? பிறகு நோ-போல் போட்டு யாரையும் செஞ்சரி அடிக்க விடாமல் பண்ணி விடுவார்! ) தூய சிங்கள பௌத்தர் இல்லாத காரணத்துக்காக அவரை இனி வெள்ளாவி வைத்தா வெளுக்க முடியும்?

ஒரு பெரிய உரையின் மிகச் சில பந்திகளை மட்டும் வைத்துக் கொண்டே அவரைப் பற்றி, அவர் சொன்னது சரி என்றோ, பிழை என்றோ விவாதிக்கிறார்கள். இந்த சர்ச்சைக்குரிய பகுதியால் சில முக்கியமான பகுதிகள் அமுங்கிப் போய் விட்டன. 1983 கலவரத்தின் போது சில தமிழ்க்குடும்பங்களை கலவரக்காரர்களுக்கு ஒளித்து வீட்டில் வைத்திருந்தது பற்றியோ , லாகூர் தாக்குதலுக்கு பிறகு கொழும்பு வந்தபோது தனக்கும் ஒரு இராணுவ படைவீரனுக்கும் இடையில் நடந்த உரையாடல் ( நான் சாவதற்கு தயாராக இருக்கிறேன்- ஆனால் நீங்கள் ஒரு ஹீரோ- உங்கள் உயிர் அப்படியல்ல என்று கூறிய படைவீரனைப் பார்த்து, தன் உயிர் எந்த விதத்தில் அவனது உயிரை விட உயர்வாக முடியும் என்று தான் சிந்தித்ததாக குறிப்பிடுகிறார். ) பற்றியோ அவர் கூறியதற்காக யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இலங்கையர்கள் பொதுவாக எல்லோரும் ஒருமித்து இலங்கை அணியை ஆதரிப்பதில்லை. தமிழர்கள் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். முஸ்லிம் மக்கள் பாகிஸ்தான் அணிக்கு. அதை விட தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா என்று ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். சிங்கள மக்கள், மற்றும் பிற இனங்களில் இருந்து கொஞ்சப் பேர் மட்டுமே இலங்கை அணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவார்கள். இதே இந்தியாவில் பாகிஸ்தானை ஆதரிக்கும் முஸ்லிம்களைப் பார்க்க முடியுமா?

சங்கக்கார சொன்ன இறுதி வரிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் சொன்னது இது தான்; " நான் ஒரு தமிழன்; நான் ஒரு சிங்களவன்; நான் ஒரு முஸ்லிம்; நான் ஒரு பறங்கி; எல்லாவற்றுக்கும் மேலாக, நான் ஒரு ஸ்ரீ லங்கன் என்பதில் பெருமையடைகிறேன் ".

இந்த உரைக்காக தான் MCC வரலாற்றில் இரண்டாவது முறையாக , 1500 பேர் ஒருவருக்காக எழுந்து நின்று கைதட்டினார்கள்.
3 Responses
  1. Anonymous Says:

    superb..  2. மிகவும் திறமையான வீரர்... 50, 100 ஐ அண்மிக்கையில தான் யாரும் பக்கத்தில போயி தைரியம் கொடுக்கணும்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்


Related Posts Plugin for WordPress, Blogger...