காடுகளின் தேசம்

கிளிநொச்சியும் முல்லைத்தீவும் வறண்டு போய் காய்ந்து கருகி இருக்கும் நகரங்கள் என்று நீங்கள் இதுவரை நினைத்திருந்தால் ஏமாந்து போவீர்கள். நீங்கள் ஏற்கனவே அதாவது யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிக்கு முதல் அங்கு சென்றவராக இருந்தால் வித்தியாசத்தை உணர முடியும். அல்லது பக்கத்தில் அவ்வாறு போய் வந்தவரை வைத்திருக்க வேண்டும்.

முல்லைத்தீவில் வீதிக்கு இரண்டு பக்கமும் பெரிய காடுகள். மணலாறுக் காட்டின் தொடர்ச்சி இந்தக் காடுகள். இங்கே தான் இந்திய அமைதிப்படையின் கடைசிச் சண்டைகள் இடம்பெற்றதாக கூறுகிறார்கள். அடர்ந்த, உயர்ந்த இந்த மரங்கள் தான் அந்த நேரங்களில் கெரில்லாப் போர் முறையின் முக்கிய காரணியாக இருந்திருக்கக் கூடும். மரங்களுக்குக் குறுக்கே வயர்களை கட்டி அதில் கண்ணிகளை வைத்திருந்தது வழி பெரிதும் பரிச்சயமில்லாத போர் வீரர்களுக்கு சவாலாக இருந்திருக்கலாம். சில இடங்களில் வீதியின் அருகாமையில் மட்டும் தேக்கு மரக் காடுகள். சரியான இடைவெளிகளை நடப்பட்டு, முறையாக பராமரித்ததில் நீண்டு வளர்ந்து நெடிதுயர்ந்து (எவ்வளவு கடினமான தமிழ் வார்த்தை!) நிற்கும் தேக்கு மரங்கள். இடையிடையில் எங்கிருந்தோ ஓடி வரும் நீரோடைகள். பாலத்துக்கு கீழே பாறைகளை வழுக்கல் பாறைகளாக்கி, மணலை குவித்து, அதன் மேலாக ஓடிச் செல்லும் மண்ணிற நீர்.

சில இடங்களுக்கு போக இப்போது அனுமதி கிடைப்பதில்லை. தூரத்தில் நந்திக் கடல் தெரிகிறது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்லுக்கு போக முடியும். ( தண்ணீரில் விளக்கெரிப்பதாக கூறிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அந்தக் கோயில் தான்! ) சில இடங்களில் வீதியின் இரு பக்கமும் களப்பு நீர் ஓடி தேங்கிப் போய் நிற்பதனால் அதில் குப்பையாக தாமரைப் பூக்கள்...வெள்ளை, சிவப்பு நிறத்தில் பச்சை இலைகளோடு ஒரு போர்வை போர்த்தியது போல் பூத்துக் கிடக்கின்றன. ஊதா நிறத்தில் அல்லிகள் வேறு.

ஊர் தான் அழகே தவிர மக்களின் வாழ்க்கை சிறிய வீடுகளுக்குள் முடங்கிப் போய் இருக்கிறது. நாலு தடி நட்டுக் கிடுகு வேய்வதை வீடு என்று நீங்கள் ஒத்துக் கொண்டால் அது வீடு. அரசாங்க வீட்டுத் திட்ட வேலைகளும் நடக்கிறது. நீங்கள் முல்லைத்தீவு வீதியில் பயணித்தவராக இருந்தால் மீண்டும் அடுத்த ஜென்மத்தில் தான் அங்கே செல்ல விரும்புவீர்கள். வீதி அமைப்பதற்காக ஜாக்கி சானின் சொந்தக் காரர்கள் ( அது தான் சீனாவைச் சேர்ந்தவர்கள்) வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடிசைகளுக்குப் பின்னும் கொஞ்ச கொஞ்ச இடங்களில் மக்கள் நட்டிருக்கும் வெண்டி, பயறு, கத்தரிச் செடிகள் பூத்திருக்கின்றன. அங்கே பூத்திருப்பது செடிகள் மட்டும் அல்ல, அவர்களின் நம்பிக்கையும் தான்.

முல்லைத்தீவைப் போலவே கிளிநொச்சியும் செழிப்பான மற்றுமொரு நகரம். நிறையக் குளங்கள். பெயர் தெரிந்த பெரிய குளங்களில் இருந்து பெயர் தெரியாத, அங்கங்கே தேங்கி நிற்கும் குட்டைகள் வரை தண்ணீர் தண்ணீர். ( பாலு மகேந்திரா படத்துக்கு நேர் எதிராக). இரணை மடுக் குளத்து நீர் ( இராணுவம் முன்னேறிய பொது புலிகள் அணைக்கட்டைத் திறந்து விட்டதாகக் கூறிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் குளம் தான்!) வீதியின் ஒரு பக்கத்தில் அகலமான ஒரு வாய்க்காலாக ஓடி வருகிறது. பிரதான வீதியில் இருந்து சிறு வீதி பிரியும் போது அந்தச் சிறிய வீதியின் இரு பக்கங்களிலும் மஞ்சள் நதி போல ஓடி வருகிறது. அடர்ந்த காட்டு மரங்கள், நீர்த் தாவரங்கள், என எல்லாவற்றையும் தாண்டி பச்சை வெளியாக இருக்கும் வயல்களில் போய் நெல்லின் காலை நனைக்கிறது. ஒரு பழைய படத்தில் பிரஷாந்த், சைக்கில் ஒன்றை உருட்டிய படி ' அட இங்கே பார் தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்....' என்று பாடியபடி வருவார் ஞாபகம் இருக்கிறதா? அந்த பாடல் காட்சியில் வரும் இடம் போலவே அத்தனை பசுமையும் நீரோடைகளும்.

பிரதான வீதியில் இருந்து பிரியும் அந்த சிறு வீதியில் இருக்கும் ஒரு ஒழுங்கையில் ஒரு இல்லம். அதை நடத்தி வரும் கன்னியாஸ்திரி ஒரு சிறிய உருவம். சின்ன மோட்டார் சைக்கிள் ஓடுகிறார். வயதானவர். யுத்தக் காலத்தில் கடைசி நேரம் வரையும் இருந்து பிறகு இல்லத்தில் இருக்கும் பிள்ளைகளுடன் இடம் பெயர்ந்து புனர்வாழ்வு முகாமில் இருந்து இப்போது மீண்டும் அதே பழைய இடத்தில் அதே இல்லத்தில் இன்னும் அதிக பிள்ளைகளுடன் இருக்கிறார். கிணற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுத்து குளியலறைக்கு சுமந்து செல்லும் பிள்ளைகள். ( குழாய் மற்றும் மோட்டார் வசதி இல்லாததால்) அவர்களுடைய பொது மண்டபத்தில் அத்தனை அமைதி. அப்படி ஒரு சுத்தம். உயரத்தில் ஒரு மேடையில் மேரி குழந்தை இயேசுவின் கையை பிடித்தபடி நிற்கிறார். பணப் பற்றாக் குறை இருந்தாலும் உரிய நேரத்தில் அந்த பணத்தை இறைவன் அனுப்பி வைப்பான் என்று அந்த கன்னியாஸ்திரி அம்மையார் அமைதியாக புன்னகைக்கிறார். சிறு பிள்ளை போல் ஓடியாடி வேலை பார்க்கும் இன்னொரு கன்னியாஸ்திரி, கண்ணாடி அணிந்த தலைமை கன்னியாஸ்திரி என்று அந்த இடம் ஒரு விதமான பரிசுத்தமான இடமாக இருக்கிறது. காற்றில் ஒரு மெல்லிய சோகம் பரவினது போன்ற அமைதி அந்த இடத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தக் கன்னியாஸ்திரி முன்பு இல்லத்துப் பிள்ளைகளுடன் புனர்வாழ்வு முகாமில் இருந்த போது இவருக்கு கன்னியாஸ்திரி என்ற சலுகையில் கொஞ்சம் கூடுதல் உணவு கிடைக்குமாம். அந்த நேரம் அங்கே கடும் உணவுப் பஞ்சம் இருந்தது. இவர் தனக்குக் கிடைக்கும் உணவை , உணவுக்காக அழும் மிகவும் வயது குறைந்த பிள்ளைகளுக்கு கொடுத்து விடுவாராம் என்று கூறினார்கள். கேட்கும் போது இவ்வளவு பசுமையும் தண்ணீரும் செழிப்பும் இந்த மாதிரி உள்ளங்களுக்காகத் தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

எவ்வளவு அழகான செழிப்பான இடம் என்று கூறும் போது அதற்காக தானே இத்தனை சண்டையும் என்று திருப்பிக் கேட்கிறார்கள். உண்மை தானோ?
0 Responses

Related Posts Plugin for WordPress, Blogger...