துறவு என்னும் ஒரு போகம்

கடவுள் என்ற வார்த்தை எந்தளவுக்கு சர்ச்சைக்குரிய ஒன்றாக இருக்கிறதோ, அதே போல சாமியார்கள் என்ற வார்த்தையும். இந்த சாமியார்களின் வாழ்க்கைக்குள் ஒளிந்திருக்கும் மர்மத்தையும் உளவியலையும் எம்மால் புரிந்து கொள்ளவே முடிவதில்லை. பல விடயங்கள் அவர்களின் காவி அங்கிக்கு உள்ளேயே மறைந்து போய் அவர்களின் வாழ்க்கையோடு முடிந்தும் போய் விடுகின்றன. இப்போது சாமியார்கள் என்றாலே யூ ட்யூப் இல் காட்சி தருபவர்கள் என்றோ இல்லை வாரப்பத்திரிகைகளின் நகைச்சுவைத் துணுக்குகளில் இடம் பிடிப்பவர்கள் என்றோ ஆகி விட்டது.

துறவு என்று வரும் பொது ஜைன ( ஜென் அல்ல! ) அதாவது சமண மதத் துறவிகள் தான் உங்களில் சிலருக்கும் ஞாபகம் வரக் கூடும். திகம்பர சாமியார்கள் என்று ஒரு வகை. ஆடை ஏதும் இன்றி வீடு வீடாக சென்று பிச்சை எடுப்பார்கள். அதுவும் சில வேளைகளில் வாரத்துக்கு ஒரு நாள் தான் அதுவும் ஒருமுறை பிச்சை எடுக்க வரும் போது ஒரு வீட்டில் தான் கேட்கலாம். கிடைக்கா விட்டால் பட்டினி. இவர்களை பற்றிய விசேஷம் என்னவென்றால், புழு பூச்சி ஏன், பாக்டீரியாக்களுக்கு கூட தீங்கு நினைக்காத ஜென்மம். வீதியால் நடந்து போகும் போது மூச்சுக் காற்று பட்டு காற்றில் உள்ள கிருமிகள் இறந்து விடக் கூடாதே என்று முன்னாள் விசிறிக் கொண்டே செல்வார்கள். தலை முடி இருந்தால், பேன் வந்து, பிறகு சொறியும் போது அவை இறந்து விடுமே! அதற்காக தலை முடியே வளர்ப்பதில்லை! தானாக வளரும் முடியை கைகளால் பொறுமையாக ஒவ்வொன்றாக பிடுங்கிக் கொள்வார்கள்.அகிம்சையே இவர்களின் வேதம். துறவி என்னும் போது திருவண்ணாமலையில் வாழ்ந்த ரமணரும் அனிச்சையாக ஞாபகத்துக்கு வரக் கூடும். இவரும் கடைசி வரை கட்டிய கோவணத்தோடு வாழ்ந்தார்.

புத்தர் கொல்லாமைத் தத்துவத்தை கடைப்பிடித்தவர். ஆனால் புத்த துறவிகள் மாமிசம் புசிப்பவர்கள் என்னும் செய்தியை கேள்விப் படுபவர்கள் நிச்சயம் அதிர்ச்சி அடைவார்கள். விகாரைகளில் உள்ள புத்த துறவிகளுக்கு மக்கள் உணவு சமைத்து தானமாக வழங்கும் போது அதில் கட்டாயம் இறைச்சியும் இடம்பெறுகிறது. இங்கு பிரச்சனை நிச்சயம் இறைச்சி புசிப்பதல்ல. போதனையும் செயலும் வேறு படும் போது தான் பிரச்சனை எழுகிறது.


துறவு என்று வரும் போது தற்போதைய சாமியார்கள் அனைவரும் அதற்கு எதிர்மாறாக செயல்படுவது தான் உறுத்துகிறது. காவி உடை இருந்தாலும் வந்து அமர்வதற்கு தனியான விசேடமான கதிரை தேவைப்படுகிறது. சில நவீன சாமியார்கள் பட்டு ஆடைகள், அங்க வஸ்திரங்கள் அணிந்து காட்சி தருகிறார்கள். இருக்கும் இடமோ பல ஆயிரக் கணக்கான ஹெக்டையர் நிலத்தை வளைத்து பிடித்து கட்டப் பட்ட மாளிகையில். பயணம் செய்வதற்கு விலை உயர்ந்த கார், சுமோ மற்றும் பிற வாகனங்கள். சிலருக்கு குடும்பம் கூட இருக்கிறது. இப்படி இருக்கும் போது இவர்கள் எதைத் துறந்தார்கள் என்று இவர்களைத் துறவி என்று சொல்ல முடியும்?

இந்தியா நிறைய சாமியார்களை கண்டிருக்கிறது. அவர்களுக்குள் சீனியரான பிரேமானந்தா லிங்கம் எடுப்பதில் தன் போது வாழ்க்கையைத் தொடங்கி பின் வல்லுறவு மற்றும் கொலை வழக்கில் கைதாகி இப்போது இறந்தும் விட்டார். பிறகு சதுர்வேதி சாமிகள் என்று ஒருவர் வந்து அவரும் அதே வல்லுறவு வழக்கில் கைதாகி இப்போது சிறையில். காஞ்சி ஜெயேந்திரர் கொலை வழக்கில் கைதாகி இப்போது வெளியில். போன அம்மா ஆட்சியில் கைதானபடியால் இம்முறையும் வழக்கு தோண்டி எடுக்கப் பட்டு புது உத்வேகத்தில் நடக்குமா என்பதை பார்க்க கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

சாய் பாபாவும் ஆரம்பத்தில் சித்து விளையாட்டுக்கள், அற்புதங்கள் மூலமாக பிரபலமானார். கையிக்குள் இருந்து லிங்கம் மற்றும் விபூதி இவரின் ஸ்பெஷல். இவர் எவ்வாறு இந்த அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதற்கான விளக்கங்களுடன் புத்தகங்கள் வெளியாகி இருந்தன. இவர் கைக்குள் இருந்து சங்கிலி எடுத்துக் கொடுத்த பக்தர்கள் பெரும்பாலும் பணக்கார வகுப்பை சேர்ந்தவர்கள். ரணில், அர்ஜுன ரணதுங்க போன்றவர்கள் நல்ல உதாரணம்.

தற்போது எல்லாவற்றிலும் நவீனமானவர் அம்மா பகவான். ஆரம்ப காலத்தில் பாதம் அசைதல் போன்ற சித்து விளையாட்டுக்கள். பின்பு வழமை போலவே யோகா வகுப்புக்கள். இப்போது இது ஒரு பாணியாகவே எல்லோராலும் கடைப்பிடிக்கப் படுக்கிறது. சென்ற வருடம் அம்மா பகவானின் இடத்தில் பக்தர்கள் போதையில் விழுந்து கிடக்கும் காட்சியை பார்த்த போது ஒரு விஷயத்தை சிலர் கவனித்திருக்கக் கூடும். பொதுவாக அங்கே ' தீட்சை' க்கு சென்று விட்டு வருபவர்கள் குறிப்பாக முதியவர்கள் சொல்லுவது என்ன என்றால், அங்கே இருக்கும் போது உடலில் வழமையாக இருந்து வந்த வலிகள் எதுவும் இருக்கவில்லை என்பது தான். அவர்கள் சொல்லி தந்த ஆசனங்களை அந்த நேரத்தில் வலி இல்லாமல் செய்ய முடிந்தது என்றும் கூறுவார்கள். அதுகூட பிரசாதத்தில் சிறிய அளவில் போதைப்பொருட்கள் கலந்து கொடுக்கப்பட்டால் அவை வலி நிவாரணியாகத் தொழிட்பட்டதாலும் இருக்கலாம் அல்லவா?

கமல் சொல்லுவதாக ஒரு படத்தில் வசனம் ஒன்று வருகிறது. கடவுள் இருக்கு என்று சொல்லுபவனையும் நம்பலாம் கடவுள் இல்லை என்று சொல்லுபவனையும் நம்பலாம், ஆனால், நான் தான் கடவுள் என்று சொல்லுகிறானே அவனை மட்டும் நம்பக் கூடாது என்று சொல்லுவார். உண்மையில் பழைய காலங்களில் பிச்சை எடுத்து உண்ட சாமிகள் கூட தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டதில்லை. இப்போதோ, எல்லோருமே நான் கடவுள் என்று புறப்பட்டு விட்டதால் தான் சிக்கல். சாய் பாபாவும் அவதாரம் அம்மா பகவானும் அவதாரம் என்றால், மொத்தமே பத்து அவதாரங்கள் தானே படித்திருக்கிறோம்? இப்போது மொத்த அவதாரங்களின் எண்ணிக்கை பத்தையும் தாண்டி இருக்கும்!

இதில் பாவம் நித்யானந்தா. கதவை திற காற்று வரட்டும் என்று அவர் தன்னை பற்றி எழுப்பி வைத்திருந்த தூய அறிவார்ந்த துறவி என்னும் பிம்பம் தொலைக்காட்சிகளில் அந்த வீடியோ வெளியான போது சரிந்து வீழ்ந்தது. உண்மையில் அவர் அவ்வாறு நடந்தது கொண்டது கூட பிழை அல்ல. விஸ்வ மித்திரர், கௌசிகர் என்று எல்லா புராண முனிவர்களும் பச்சிலர் களாகவா இருந்தார்கள்? நித்யானந்தா தன் சீடர்களுக்கு மட்டும் பிரம்மச்சரியத்தை வலியுறுத்தியது தான் தவறு என்று தோன்றுகிறது. இதில் மிகப்பெரும் அநியாயம் இழைக்கப் பட்டது ரஞ்சிதாவுக்குத் தான். எல்லா ஊடகங்களும் மக்களும் ஏதோ அவர் தான் பிழை செய்து விட்டது போல தூக்கிப் பிடித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் நியாயமான கருத்தை வெளியிட்டவர் பத்திரிகையாளர் ஞானி மட்டுமே. உண்மையில் ரஞ்சிதா திருமணத்துப் புறம்பாக உறவு வைத்திருந்தது நிரூபிக்கப் பட்டால் கூட அவரை எந்த சட்டத்தின் கீழ் தண்டிக்க முடியும்? அந்த நாட்டில் அதற்குரிய சட்டம் இல்லாதவரை அவர் எந்தவிதத்திலும் குற்றவாளியாக மாட்டார். உண்மையில் ஞானி அவர்கள் கூறி இருந்தது போல ரஞ்சிதா வீடியோ எடுத்தவர்கள் மற்றும் அதை வெளியிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக தனது சொந்த வாழ்க்கையில் தலையிட்டு பல நஷ்டங்களை உண்டாக்கியமைக்கு வழக்கு தொடர்ந்திருக்க முடியும். ஆனால் நடந்தது தலை கீழ்.


எத்தனை சாமியார்கள் வரிசையாக வந்தாலும் சிறைக்கு சென்றாலும் இன்றும் சாமியார்களிடம் நம்பிக்கையோடு படியேறும் மக்களின் மனங்களில் இருப்பதை தான் பலரால் படிக்க முடிவதில்லை. சாமியார் நோய் தீர்ப்பார் எனும் போது கடவுள் எதற்கு? அல்லது கடவுள்கள் பெரும் எண்ணிக்கையில் பூஜை அறையில் நிறைந்திருக்கையில் சாமியார்கள் எதற்கு? ஒருவேளை அந்த கடவுள் பேசுவதில்லை இவர் பேசுகிறாரே எனும் போது எழும் கவர்ச்சியா, அல்லது மனதில் நிறைந்திருக்கும் வெறுமைக்கு மருந்தாக ஒருவரின் காலடியில் விழுந்து, ஒத்த சிந்தனை உள்ள பல பேருடன் சேர்ந்து பஜனை பாடி, பிரசங்கம் கேட்டு கலைவதில் கிடைக்கும் பரஸ்பர நிம்மதியா அல்லது நேரமும் தனிமையும் அளவுக்கு அதிகமாக இருக்கும் போது கிடைக்கும் ஒரு வடிகாலா என்றால், அது நிறையப் பேருக்கு பிடிபடாத ரகசியம்.
0 Responses

Related Posts Plugin for WordPress, Blogger...