ஒரு கை ஓசை.....

விசாக பௌர்ணமி அன்று இரவு ஒரு மணிக்கு வீதி உலா வரும் சந்தர்ப்பம் சிலவேளைகளில் உங்களுக்கும் கிடைத்திருக்க கூடும். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்து நீங்கள் விளக்குகளை மட்டும் பார்க்க கூடிய அளவுக்கு மனக்கட்டுப்பாடு உடையவராக இருந்தால் (அதாவது,மோட்டார் சைக்கிள் களில் பறந்த இளம் ஜோடிகளை பார்க்காமல்) மஞ்சள் நிற மின்விளக்குகளின் ஒளியால் மூழ்கிப் போன வீதிகளின் அழகை ரசித்திருக்க முடியும். காரணம் உங்களுக்கும் தெரிந்தது தான், அன்றைக்கு புத்த ஜெயந்தி.

அகால வேளையில் வீதியை நிறைத்த வாகனங்களையும் மக்களையும் பார்க்கும் போது ஏனோ புத்தரின் ஞாபகம் தான் வரும். புத்த மத குருமார்களை விடவும் ஜென் மத குருமார்கள் தான் சுவாரசியமானவர்கள் ( சுவாரசியம் என்ற உடனே நீங்கள் நிறைய பெண் சிஷ்யைகள், மர்ம ஆச்சிரமங்கள், வழக்குகள் என்று கற்பனை பண்ணினால், நிச்சயம் உண்மை அதுவல்ல ).ஜென் என்பது புத்தத்தின் ஒரு பிரிவு.மதங்கள் என்றாலே பிரிவுகள் இருக்கும் போல! ஆனால் வீணான தத்துவ விசாரணைகளில் இருந்து விலகி, வாழ்கையை முழு சந்தோஷத்தோடு ஒவ்வொரு கணமும் நேசித்து வாழ்வதன் மூலம் நீங்களும் புத்தராகலாம் என்கிறது ஜென் . இன்னும் கொஞ்சம் இலகுவாக சொன்னால், தேநீர் குடிக்கும் போது அதை ரசித்து குடிப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? ஒரு கையில் கோப்பையும் இன்னொரு கையில் கணணியும் இருக்கும். அந்த நேரம் தான் அலுவலகத்தில் செய்யாமல் ஒத்திப் போட்ட வேலைகள் வந்து பயமுறுத்தும்.படிக்க இருக்கும் பாடங்கள் நினைவுக்கு வரும். வீட்டுக்கு வரும் போது வாங்கி கொண்டு வரும் படி மனைவி நீட்டிய பட்டியல் ஞாபகம் வரும்.மகன் வாங்கி தர சொல்லி கேட்ட blackberry phone கண்முன் வந்து தாண்டவம் ஆடும். மூட்டு வலியால் வேதனை படும் அம்மாவின் முகம் ஒருமுறை வந்து போகும். இந்த கவலைகளுக்கு இடையில் கையில் தேநீர் இருந்தால் என்ன விஷம் இருந்தால் தான் என்ன? ஜென் ஐ பொறுத்த வரையில் நீங்கள் எதை செய்தாலும் அதை உணர்ந்து அணு அணுவாக ரசித்து செய்ய வேண்டு என்று சொல்கிறது.தேநீர் குடிக்கும் போது அந்த ஒவ்வொரு சொட்டும் நாவில் பட, ஒரு தியானத்தை போல அதை அருந்த வேண்டும் என்று போதிக்கிறது. இதனால் தனியான தியானம் என்று எதுவும் உங்களுக்கு தேவைப் பட போவதில்லை.

மற்ற மத குருமார்களை பொறுத்த வரையில் கூறாமல் சந்நியாசம் கொண்டு யாசகம் கேட்டு வாங்கி உண்டு ( அதாவது உணவு இலவசம்) கடவுளை காண முயலலாம். பக்தர்கள் காணிக்கையாக கொண்டு வந்து கொட்ட சிம்மாசனத்தின் மேல் அமர்ந்து வாழ்க்கையின் நிலையாமையை பற்றி போதிக்கலாம். ஆனால் ஜென் இல் இது வேலைக்காகாது. குருவாக இருந்தாலும் சரி, அவர் உணவை அவரே உழைத்து தேடிக்கொள்ள வேண்டும்.தேவையற்ற மரியாதைகளுக்கும் அங்கே இடமில்லை. ஒரு நாள் ஒரு ஜென் குரு குளிர் தாங்க முடியாமல் மடத்துக்கு உள்ளே இருந்த மரத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலைகளை எல்லாம் கொண்டு வந்து போட்டு எரித்து அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்த போது பார்த்து கொண்டிருந்த சீடன் பதறினான். குரு சொன்னார் ' இந்த சிலைகளில் மட்டும் தான் புத்தர் இருக்கிறார் என்று நினைகின்றாயா? ஒன்றுக்கும் உதவாத இந்த மரச் சிலைகளால் என்ன பயன்? அது தான் ஜென். ஆனால் இந்த காலத்தில் நீங்கள் சிலைகளை எரிக்க முன் கொஞ்சம் யோசித்து செய்வதே நல்லது.

குட்டிக் கதைகளுக்கு ஹைக்கூ கவிதைகளுக்கும் பெயர் போனது ஜென்.வாழ்கையை ரசித்து வாழ்ந்த ஜென் குருக்களிடம் இயற்கையை ரசிக்கும் கவிதைகளுக்கும் பஞ்சம் இல்லை. திருட வந்த திருடனிடம் தான் உடுத்தி இருந்த ஆடைகளை கூட கொடுத்து அனுப்பி விட்டு ஒரு ஜென் குரு பாடினார்;

" திருடன்
விட்டு சென்று விட்டான்...
ஜன்னல் வழியாக நிலா! "

கொஞ்சம் தில் இருந்தால் தான் இப்பிடி ஹைக்கூ எழுத முடியும். இன்னொரு குட்டி கதை. ஒரு பெண் ஞானம் பெற முயன்று கொண்டிருந்தாள். தண்ணீர் நிறைந்த பானையை மூங்கில் கம்பில் வைத்து சுமந்து கொண்டிருந்த போது பழைய மூங்கில் முறிந்து பானை உடைந்து சிதறியது. கூடவே அதுவரை தண்ணீரில் தெரிந்து கொண்டிருந்த நிலவின் பிம்பமும்! அந்த கணத்தில் அந்த பெண் ஞானம் பெற்றாள் என்று போகிறது கதை. தீட்சை தர சொல்லி வந்த சீடனை ஒரு கை ஓசையை கேட்டு வரும் படி சொல்லி அனுப்பினார் இன்னொரு குரு! ( உங்களுக்கு கேட்கிறதா?)


இன்னொரு அழகான ஜென் ஹைக்கூ;

" கவனமாக பார்த்தேன்
காட்டு மலர் பூத்திருக்கிறது,
வேலி ஓரத்தில்..."

இப்போதும் வேலி இருக்கிறது, அதே காட்டுப் பூக்கள் இப்போதும் பூக்கிறது. கொஞ்சம் வளர்ந்து விட்டோம், அதனால் கவனிக்க நேரம் தான் இருப்பதில்லை.


2 Responses
  1. " கவனமாக பார்த்தேன்
    காட்டு மலர் பூத்திருக்கிறது,
    வேலி ஓரத்தில்..."
    ஜென மதத்திற்கு இப்படி ஒரு ரசனையா? ஒவ்வொரு முறையும் வித்தியாசமான நடையில் எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்


  2. Vanchi Says:

    "தேநீர் குடிக்கும் போது அதை ரசித்து குடிப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?"...உண்மை தான்.. ரசனை மிக்க வரிகள்..


Related Posts Plugin for WordPress, Blogger...