கொழும்பு தெருக்களில் நடந்து போகும் போது அல்லது தனிமையான இரவுகளில் அடுக்கு மாடியின் வாசலில் நின்று வானத்தை ( சிம்பு நடித்தது அல்ல) நிமிர்ந்து பார்க்கும் போது உங்களுக்கு உள்ளுக்கும் சிலவேளைகளில் 'நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்.... தனிமை தனிமையோ...என்று ரஹ்மானின் அந்த சற்று கரகரப்பான அழகான குரல் கேட்டிருக்கக்கூடும். உண்மையில் எல்லோரும் சொல்வது போல நகரங்கள் அத்தனை கொடுமையானவை அல்ல. யாழ்ப்பாண பக்கங்களில் சொல்வதுண்டு கொழும்பு ஒரு கட்டடங்களால் ஆன காடு என்று. ஆனால் நகரங்களிலும் எங்கோ ஒரு இடத்தில் ஆன்மா ஒளிந்து இருக்கத்தான் செய்கிறது.
இரு மருங்கிலும் கட்டடங்கள் உயர்ந்து நின்றாலும் வீதியின் ஓரங்களில் அவற்றை அண்ணாந்து பார்த்து கொண்டு நடப்பதிலும் சின்னதாய் ஒரு சுகம் தெரிய கூடும். எல்லா கட்டடங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித முகப்பு, ஒவ்வொரு வித வர்ணம். ஏன், பெயர் கூட உண்டு. 'Seagul Court '...கம்பீரமான் பெயர் மாதிரி இல்லையா? ருத்ரன் கோர்ட் என்று பச்சை நிறத்தில் ஒன்று உண்டு.பெயரை பார்க்கும் போது கொஞ்சம் பாலா பட effect கிடைகிறதா? white ஹவுஸ் கூட இருக்கிறது.
குடும்பங்களை விட்டு பிரிந்து இருப்பவர்களுக்கு நகரம் ஒரு போதி மரம். வேண்டாம் என்று ஒதுக்கி வைத்த பயத்தங் காய் கறி கூட ஒரு நாள் சாப்பிட வேண்டி வரலாம். அப்பிடியே பழகி பழகி கொஞ்ச நாளில் நீத்து பூசணி வெள்ளை கறி கூட சாப்பிட தயாராகி விடுவீர்கள். அம்பரலன்காய் என்று ஒரு கறி இருக்கிறது. அதை சாப்பிட்டு விட்டு கடையை விட்டு வெளியில் வரும்போது உங்களுக்கு ஞானம் சித்திக்கவும் கூடும். ( அந்த கறி பிடித்திருப்பவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்!)
கார்கில்ஸ் food city இற்கு முன்பு நெடு நாட்களாக கை விரல்களில் தொழு நோய் வந்த ஒரு வயதானவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். வேறு மொழியில் கதைப்பதால் அவர் என்ன சொல்லுகிறார் என்று விளங்குவதில்லை.இப்போது சில நாட்களாக அவரை காணவில்லை. Arpico Food City இற்கு முன்பாக நிலத்தில் இருந்தபடி, சிறுநீர் செல்வதற்கு என்று தனியாக குழாய் ஒன்றும் பை ஒன்றும் பொருத்தப்பட்ட ஒரு முதியவர் இருப்பார். யாருக்கு காசு கொடுக்காமல் போனாலும் அவருக்கு மட்டும் கொடுத்து விட்டு போகும் அளவுக்கு நிச்சயம் மனிதர்களிடம் நல்ல மனது இருந்தது. அவர் முகத்தில் இன்னும் கொஞ்சம் அழகு மிச்சம் இருப்பதாகவே தோன்றும். நடக்கவே முடியாமல் படுத்தது இருக்கும் அவர் எப்போது எப்படி அந்த இடத்துக்கு ஒவ்வொரு நாளும் வருகிறார் என்று கேள்வி எழும். இப்போது அந்த கேள்வி எழுவதில்லை ஏனெனில் இப்போது சில மாதங்களாக அவரும் வருவதில்லை.... கொழும்பில் பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்தமான இடங்கள் இருக்க கூடும். பொதுவாக கொன்கோர்ட் premier , சினி சிட்டி இரண்டுக்கும் அந்த பட்டியலில் இடம் கிடைக்கும். எந்திரன் வந்த போது கொன்கோர்ட் இல் ரஜினியின் படத்துக்கு மாலை போட்டிருந்தார்கள். " கோ" படத்துக்கு முதல் நாள் சினிசிட்டி இல் houseful ஷோ!
எப்போதாவது அரிதாக நடு இரவில் வெளியில் செல்ல கிடைத்தால் முதல் முதலாக ஒரு பாலியல் தொழிலாளியை காணும் சந்தர்பம் கிடைக்க கூடும். யாரும் அற்ற அந்த இரவில் நிலா வெளிச்சத்தில் திடும் என்று அசைந்த அந்த புடவை கடை பொம்மை போல இருந்த உருவம் ஒரு பெண் என்று தெரிந்த போது சட்டென்று ஒரு மெல்லிய அதிர்வை உணர முடியும்.நீங்களும் காண நேர்ந்தால், எந்த வித பரிதாபங்களும் அற்று கடந்து செல்வதே சரியானதாக இருக்க முடியும்.ஏன் எனில், பரிதாபம் பிறக்கும் போது நாங்கள் உயர்ந்து அவர்கள் தாழ்ந்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில் அவ்வாறு இருக்க முடியாது.
கிராமங்கள் நல்லது என்றோ, நகரங்கள் இயந்திரமயமானவை என்றோ ஒப்பிட்டால் நகரங்களை வெறுத்து ஒதுக்க கூடும். நகர பேரூந்துகளில் அடித்து பிடித்து ஏறி வேலைக்கு போய் பின்னேரங்களில் நத்தை வேகத்தில் அதே பேரூந்தில் வந்து வீட்டுக்கு வந்து பிறகு மீண்டும் ஒரு இரவு வாழ்க்கைக்கு தயாராவதிலோ அல்லது கையில் ஒரு கப் nescafe உடனும் இன்னொரு கையில் பழைய பேப்பர் ஒன்றுடனும் வந்து கட்டிலில் விழுவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. பால்கனி இல் வெளியில் வந்து தென்னை மரங்களுக்கு இடையில் அல்லது cypruss மரங்களுக்கு இடையில் தெரியும் நிலவை பார்த்து பாடுங்கள்... நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகு வர்த்தியும்.....( தூரத்தே நாய் ஊளையிடும் சத்தம் கேட்கிறதா...? பாட்டை நிறுத்தி விடுங்கள்...) ஒப்பீடுகள் இல்லாமல் தொடந்தும் வாழ்க்கையை ரசிப்போம்.....!
நானும் தலைநகரின் அழகை ரசித்திருக்கிறேன்..ரசிக்கமுடியாதவங்களும் இனி கொஞ்சம் யோசிப்பாங்க..
அம்பரலன்காய் என்னக்கு ரொம்ப பிடிக்கும்