வழியெல்லாம் வாகைப் பூக்கள்



வாகை மரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா? பாண்டவர்கள் அஞ்ஞான வாசம் செய்ய வேண்டி வந்த போது தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் வாகை மரத்திலுள்ள ஒரு பொந்தில் தான் மறைத்து வைத்து விட்டு போனார்களாம். அதற்காக இந்த வலைப் பூவின் நோக்கம் பாண்டவர்களின் யுத்தத் தந்திரங்கள் பற்றி ஆராய்வதோ அவர்களை யுத்த குற்ற விசாரணைக்கு அனுப்புவதோ அல்ல. இது நிச்சயம் சில பயணங்களை பற்றியது தான்.

நாங்கள் எப்போதுமே பயணங்களுக்கான இலக்கை முன்பே வரையறை செய்து கொண்டு விடுகிறோம்.உண்மையில் இலக்கில்லாத பயணங்கள் உறைந்து போய் இருக்கும் ஆன்மாவை தட்டி எழுப்பக் கூடியவை. தமிழ் நாட்டு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் ஒவ்வொரு வாரமும் எழுதிய பயணக் கட்டுரைகள் நெஞ்சின் ஓரம் ஒரு நெருடலை தரும். அவர் சக எழுத்தாளர் ஒருவருடன் பதினைந்து வருடங்கள் பயணித்து இருக்கிறார் என்ற செய்தி ஆச்சரியத்தை தரக் கூடியது.

கொழும்பில் இருந்து திருக்கோணமலைக்கு எப்போதாவது சென்றிருக்கிறீர்களா? நீர்கொழும்பு, ஜா-எல எல்லாம் தாண்டிய பிறகு குருணாகலை வரும். அதற்கு பிறகு தம்புள்ளை. வழி எங்கிலும் வீதியின் இரு பக்கங்களிலும் வாகை மரங்கள் பூத்து சொரிந்தது பாதையின் இரண்டு பக்கமும் வாகை பூக்கள்.பார்க்கும் போது நீங்கள் சுஜாதா வி ரசிகராக இருந்தால் அவரின் கரையெல்லாம் செண்பகப்பூ என்ற தலைப்பு அரிதாக ஞாபகம் வரலாம். குருணாகலை இல் வீதியால் சென்று கொண்டு இருக்கும் போது தூரத்தே பாறை தொடர் தெரிய தொடங்குகிறது. பாறை என்றால், மலை போன்ற பாறை.யாரும் வதிய முடியாத, பயிர் செய்ய முடியாத பாறை. ஊரை சுற்றி அரண் போட்டது போல இருக்கும். ஒரு மலைத் தொடர் போல வீதியில் பேருந்து செல்லச் செல்ல அதுவும் தொடர்ந்து வரும். கருப்பு நிறத்தில் பாளம் பாளமாக பாறை தொடர். தம்புள்ளை வந்ததும் கிட்ட தட்ட முழு ஊரையும் பாது காப்பது போல பிரம்மாண்டமான பாறைத் தொடர் அரணாக படுத்து கிடக்கிறது.

அந்த பாறைத் தொடரை ஒவ்வொரு நாளும் பார்க்கும் அந்த ஊர் மக்களுக்கு எவ்விதமான எண்ணங்கள் வந்து போகும்? அமைதியாக தோன்றும் இந்த பாறைக்குள் ஒரு காலத்தில் என்னென்ன நடந்திருக்கும்? கீர்த்தி ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன் காலத்தில் ( அல்லது வேறு மன்னர்கள்) இந்த பாறைக் குன்றுகளுக்கு மேலே ஏறி நின்று ஆங்கிலேயருடன் யுத்தம் செய்திருப்பார்களா? தீப் பந்தங்கள் ஈட்டிகளை வீசி உக்கிரமான யுத்தம் ஒன்று நடந்திருக்குமா? இல்லை அதற்கு முன் ஆண்ட மன்னர்கள் பாறைக் குன்றுகளை அரணாக பயன் படுத்தி போர்த்துகேயர்களுடனும் ஒல்லாந்தர்களுடனும் மோதி இருப்பார்களா? இல்லை யுத்தத்தில் தோற்ற பின் மன்னன் தன் அந்தப்புர ராணிகளுடன் இந்த குன்றுகளுக்கிடையில் ஒளித்து இருந்திருப்பனா?

தம்புள்ளையில் இதை விட சீகிரியா என்ற குன்றும் இருப்பது பெரும்பாலும் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதை கட்டி அதனுள்ளே காலத்தால் அழியாத குகை ஓவியங்களை தீட்டச் செய்தவன் காசியப்ப மன்னன் என்று சொல்லுவார்கள்.நமக்கு அதுவல்ல முக்கியம்.இன்னொரு கிளை கதை தான் சுவாரசியமானது. அவன் தந்தை தாது சேனன் ஏதோ பெரும் செல்வத்தை புதைத்து வைத்திருக்கிறான் என்று மன்னனுக்கு சந்தேகம். சந்தேகம் வேர் விட்டு வளர மன்னனுக்கு பொறுக்க முடியாமல் போன கட்டத்தில் தந்தையை சிறையில் அடைத்து புதையலை காட்டுமாறு சித்திரவதை செய்ய உத்தரவிட்டான்! தந்தையோ ஒரு நாள் மகனின் கொடுமை தாங்க முடியாமல் வா, புதையலை காட்டுகிறேன் என்று கூறி தான் வெட்டிய கலா வாவிக்கு அழைத்து சென்று அதன் தண்ணீரை இரு கைகளாலும் அள்ளி இது தான் மகனே நான் கண்ட புதையல் என்று கூறியதாகவும், ஏற்கனவே கடுப்பில் இருந்த காசியப்பன் தந்தையின் நக்கலை தாங்க முடியாமல் அவரை வாளால் வெட்டி கொன்றதாகவும் தகவல். ஆனால் இன்னொரு புறம், குகை ஓவியங்களை இவ்வளவு பாடுபட்டு உருவாகிய கலா ரசிகனான மன்னன் தந்தையை கொள்ளும் அளவுக்கு கொலை காரனாகவா இருந்திருப்பான் என்பது இன்னொரு சாராரின் வாதம். உண்மைக்கு யார் சாட்சி? அந்த நிகழ்வை கண்டவர்கள் தான் யார்? உண்மையில் மன்னனை யார் கொன்றது, மகனா இல்லையா என்பது மௌனமாக எல்லாவற்றையும் பார்த்து கொண்டிருக்கும் அந்த பாறைக் குன்றுகளுக்கு தான் தெரிந்திருக்க கூடும்.

செடிகளும் கொடிகளும் காட்டு மரங்களுமாக அந்த குன்றுகள் ஒரு தனி உலகம். பகலில் சூரிய ஒளி பாறையில் பட்டு தகிக்கும்.போனால் வழி தெரியாது போகவும் நேரலாம். மன்னர் காலம் முடிந்து மக்கள் காலம் வந்த பிறகும் இன்னும் யார் யாரை எல்லாம் அதற்குள் வைத்து போட்டு தள்ளினார்களோ? யார் அதற்குள் ஒளித்து இருந்தார்களோ? எத்தனை காதலர்கள் முத்தமிட்டு தழுவிக் கொண்டார்களோ? அதை பார்த்த குன்றுகள் வெட்கப் பட்டிருக்குமோ? யார் எல்லாம் வாழ்ந்தது போதும் என்று நினைத்து அங்கிருந்து குதித்தர்களோ?எல்லாவற்றையும் ஒரே இடத்தில் இருந்து பார்த்துக் கொண்டு எல்லா உண்மைகளையும் புதைத்து கொண்டு மௌனமாக நிற்கின்றன அந்த பாறைத் தொடர்கள்....

0 Responses

Related Posts Plugin for WordPress, Blogger...