பேரூந்தின் யன்னலில் ஒரு நிலவு

நகரப் பேரூந்துகளில் ஏறிப் பயணித்திருக்கிறீர்களா? அதில் தினமும் பயணிப்பவரா நீங்கள்? அப்படி என்றால் உங்களுக்கும் வித விதமான அனுபவங்கள் கிடைத்திருக்கக் கூடும். பொதுவாக பேரூந்துப் பயணங்கள் சுவை மிக்கவை. எல்லாப் பயணங்களுமே சுகம் தான் என்றாலும் நீண்ட பேரூந்துப் பயணங்கள் இன்னும் ரசிக்கத் தக்கவை .

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புவிற்கு நீங்கள் 3 விதமாக பயணம் செய்து வந்திருக்க கூடும். City of trinco என்ற கப்பலில் வரும் போது கப்பல் மேல் தளத்தில் டைட்டானிக் ஜாக் ரோஸ் கணக்கில் நின்று கொண்டு கடல் காற்றை ரசித்து கொண்டும் வந்திருக்கலாம். கப்பல் திருக்கோணமலையை நெருங்கும் போது மலைகள் கடலின் நடுவே தென்படத் தொடங்கும் அழகையும் ரசிக்க முடியும். விமானத்தில் வந்திருந்தால் யாழ் நகர மத்தியில் இருக்கும் பாழடைந்த புகையிரத நிலையத்திற்கு வந்து விமான கம்பனியின் பேரூந்தில் ஏறி புன்னாலைக்கட்டுவானுக்கு வந்து பொதிகளை இறக்கி வைத்தால் அழகிய, முடி எல்லாம் பளபளக்கும் லாப்ரடோர் ஒன்று வரும். அது ஆடி அசைந்து வந்து முகர்ந்து பார்த்து விட்டு சென்ற பிறகு பொதிகளை எடுத்துக் கொண்டு விரையலாம். ஒருமுறை அந்த லாப்ரடோர் ஒருவரின் பொதியை முகர்ந்து பார்த்து விட்டு அந்த இடத்தை விட்டு நகராமல் பிடிவாதம் பிடித்தது.உடனே அந்த பொதி உரிமையாளரை அவசர அவசரமாக கூப்பிட்ட போது, பயணிகள் எல்லாம் முகத்தில் ஆடாமல் காத்திருக்க , அவர் ஐயா, அந்த பாக் இல கருவாடு இருக்கு என்று அசடு வழிந்தபடி ஓடி வந்தார்! பிறகு ராணுவ வாகனத்தில் பலாலி வந்து சேர்ந்து விமானத்தில் ஏறினால் ஒன்றரை மணித்தியாலத்துக்குள் கொழும்பு வந்து விடும். நீங்களும் சில வேளைகளில் ராமர் பாலத்தை பார்க்க முயன்று தோற்றிருக்கலாம்.

இப்போது தரை மார்க்கமாக கொழும்புக்கு வருபவர்கள் சாவகாசமாக பேரூந்தில் வரலாம். குளிரூட்டிய, குளிரூட்டாத வாகனங்களில் இருந்து சாதாரண அரச பேரூந்து வரை சகல விதமான பேரூந்துகளில் இருந்தும் விரும்பியதை தேர்வு செய்யலாம். சொகுசுப் பேரூந்துகளில் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக திரைக்கு வந்து சில வாரங்களேயான புத்தம் புதிய தமிழ் திரைப்படங்களை கண்டுகளிக்கலாம். எந்திரன் கூட விதிவிலக்கல்ல.

பயணச் சீட்டை சில நாட்களுக்கு முன்பே பெற்றுக் கொண்டாலும் நீங்கள் வரும் போது அந்த இருக்கையில் வேறு யாராவது உட்கார்ந்திருக்கலாம். அந்த குளறுபடிகளை எல்லாம் சரி செய்து இருக்கையில் சாய்ந்து கொண்டால் ஜன்னல் ஓரம் கூடவே பயணிக்கும் நிலவை நீங்களும் கவனித்திருக்கக் கூடும். பக்கத்து இருக்கைப் பயணியை கடவுள் தான் அனுப்பி வைக்கிறார், ஆத்திக வாதிகளின் பார்வையில். இனிய சுபாவம் கொண்டவராக இருந்தால் உங்கள் பயணமும் இனிதாக அமையும். குறட்டை விடுபவராகவோ, முறிகண்டியில் கச்சான் வாங்கி உங்களுக்கு சத்தம் கேட்கும் படியாக பல்லால் உடைத்துச் சாப்பிட்டு விட்டு கோதுகளை தயவு தாட்சண்யம் இல்லது பேரூந்து எங்கும் இறைப்பவராகவோ, பெரிய பொதியை கொண்டு வந்து உங்களின் கால்களுக்கு இடையில் தள்ளி விடுபவராகவோ இருந்து விட்டால், அந்தப் பயணம் உங்களுக்கு நரகம்.

நிலவு தொடர்ந்து வரும் போது கூடவே பேருந்தினுள் இளையராஜா வின் பாடல்களும் ஒலிக்கும் போது அந்த சுகத்தை நீங்களும் அனுபவித்திருக்க கூடும். சில வேளைகளில் " என் கண்மணி...என் காதலி..." என்று சிவகுமாரும் இன்னொரு பெண்ணும் பேரூந்தில் இருந்து எழுந்து வந்து பாடுவார்கள் அந்த பாடல் நினைவுக்கு வரக் கூடும். இரவு நேரம் என்ற படியால் கூடுதலாக சோகப் பாடல்கள் தான் ஒலிக்கும். பொதுவாக ஜன்னல் இருக்கைக்கு அடிபடுபவர்கள் தான் அதிகம். சாய்ந்து கொண்டு, மரங்களின் இலைகள் உரச, காற்று சில்லென்று முகத்தில் அடிக்க பயணிக்க விரும்புபவர்களுக்கு ஜன்னல் ஓரம் ஒரு சொர்க்கம். பேரூந்து புறப்பட்டு கொஞ்ச நேரத்துக்குள் ஒவ்வொருவரும் பொதுவான உலகத்தில் இருந்து விடுபட்டு தனித் தனி மனதுக்குள் ஆழ்ந்து விடுவார்கள். செத்த வீட்டுக்கு போகும் சொந்தக் காரர்கள் முதல் விடுமுறைக்குப் போகும் கும்பல் வரை சமரசம் உலாவும் இடமாக காட்சியளிக்கும்.

மெல்ல மெல்ல விடியத் தொடங்கியதும் இளையராஜா போய் தேவா வந்து விடுவார். பேரூந்தின் குலுக்கலுக்கு கானா பாடல்கள் பொருத்தமாக இருப்பதாகவே தோன்றும். கொழும்பு நகர்க்குள் வந்து விட்டாலோ அல்லது யாழ் நகருக்குள் போய் விட்டாலோ ஒவ்வொரு இடங்களிலும் பொதியை வாங்கி கொள்ளத் தயாராக உறவினர்கள் நிற்பார்கள். தமக்குரிய இடங்கள் வரும்போது ஒவ்வொருவரும் அவரவர் பாட்டில் இறங்கி போய் வாகனம் பிடித்து வீடுகளில் போய் இறங்கினால், பக்கத்து இருக்கை பயணியின் முகம் கூட ஞாபகம் இருக்காது.


நகருக்குள் குறுந்தூர பேரூந்துகளில் அவ்வளவு விலாவாரியான அனுபவங்கள் கிடைப்பதில்லை. ஒரு நடுத்தர வயது ஆண் ஒருவர் ஒரு பெண்ணை உரச முற்பட்ட போது அந்தப் பேரூந்துக்குள்ளேயே நின்றிருந்த அந்தப் பெண்ணின் காதலன் வந்து அந்த ஆணின் சட்டைக் கழுத்தைப் பிடித்தான். அந்த அனுபவத்தை அந்த ஆண் மறந்திருக்க மாட்டார். மத்தபடி காலை வேளையில் அவசர கதியில் சென்று பேரூந்தில் ஏறி அங்கு பக்கத்தில் நிற்கும் அழகான வாலிபன் அல்லது பெண் பார்த்து சட்டென்று காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்ளலாமா என்று தீர்மானிக்க முதலே இறங்க வேண்டிய இடம் வந்து விடுகிறது. வாழ்க்கை என்ற பேரூந்துப் பயணத்தில் இறங்க வேண்டிய இடம் வரும் வரைக்கும் எல்லோரும் தொடர்ந்து பயணிக்க வேண்டியது தான்...! ( பக்கத்து இருக்கைப் பயணியை மட்டும் பார்த்துத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்- ஏற்கனவே தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டவர்கள், மன்னிக்கவும்)
0 Responses

Related Posts Plugin for WordPress, Blogger...