'வானம்'- சில நேரங்களில் சில மனிதர்கள்

சினி சிற்றி தியேட்டரில் படம் பார்க்க செல்பவர்கள் ஆதவன் படத்தில் சூர்யாவின் அசத்தலான போஸ் ஒன்று இருக்கும் அந்த பெரிய போஸ்டரையும் கவனித்திருப்பீர்கள். பின்னாலேயே எந்திரனில் உலோக ஆபரணங்களை அணிந்தபடி சிட்டி-upgraded-version2 உடன் ஐஸ்வர்யாராய் பயந்தபடி நிற்கும் போஸ்டர். அங்கு இப்போது மூன்றாவது மாடியில் வானம் திரையிடப் படுகிறது. படம் தொடங்குவதற்கு முன்னால் அழகிய தமிழ் மகன் பாடல்கள் இசைக்க விடப் பட்டதில் பலர் நமீதாவையும் ஸ்ரேயாவையும் மனக்கண்களில் பாடல் காட்சிகளில் ஆடவைத்து கொண்டிருந்திருக்க கூடும்.

படம் தொடங்கிய போது பொதுவாக ஹீரோ பறந்து வந்து பலபேரை அடித்து வீழத்தியபடி மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டு ஆடும் அறிமுக காட்சிக்கு வழமையாக விசில் அடிக்கும் ரசிகர்கள் அன்று அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். காரணம், இந்த படத்தில் முதலில் அறிமுகமாகியது பரத்! கை விரல் வித்தைகளோ, பன்ச் வசனங்களோ இல்லாத சிம்பு வின் மற்றொரு படம்( விண்ணை தாண்டி வருவாயா விற்கு பிறகு).

பல வருடங்களுக்கு முதல் 'வானத்தை போல' வெளியாகி வெற்றிகரம்மாக ஓடியது உங்களுக்கும் நினைவிருக்கலாம். அந்த படத்துக்கு குமுதம் எழுதிய விமர்சனத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தது: இந்த படத்தில் இரண்டே விதமான பாத்திரங்கள் மட்டுமே. ஒன்று, நல்லவர்கள்; மற்றையது; மிக மிக நல்லவர்கள். அதேபோல வானத்திலும் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்; ஒன்று, இயல்பிலேயே நல்லவர்கள்; அல்லது, கெட்டவர்களாக இருந்து பிறகு திருந்தி நல்லவர்களாக வாழ்பவர்கள். அந்த நேர்மறையான அணுகுமுறை தான் வானம் படத்தின் விசேஷம்.

இந்தப் படத்திலும் ஐந்து பிரதான பாத்திரங்கள். பொதுவாக இப்படி ஐந்து பாத்திரங்களை கொண்ட படங்களில் ஒன்று, அந்த ஐந்து பெரும் சகோதரர்களாகவோ ( +ம்: ஆனந்தம்) அல்லது நண்பர்களாகவோ ( பாலைவனச்சோலை முதல் 4 students வரை ) அல்லது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்து அதன்பிறகு ஒன்றாக பயணத்தை தொடர்பவர்களாகவோ ( ஆய்த எழுத்து) இருப்பார்கள். ஆனால் வானத்தில் சிம்பு, பரத், அனுஷ்கா,சரண்யா, பிரகாஷ் ராஜ் ஐவருமே ஒருவரை ஒருவர் சந்தித்து பேசிக்கொள்ளும் இடங்களே இல்லை என்று சொல்லலாம் ( அந்தக் கடைசிக் காட்சியை தவிர).

ஹீரோயிசமே காட்டாமல் வெகு இயல்பாக நடித்திருக்கும் சிம்புவை கட்டி பிடித்துப் பாராட்டலாம். ' ஸ்டுடென்ட் பவர்ன்னா என்ன தெரியுமா?' என்று கலாபவன் மணியை விரலை உயர்த்தி அடித்தொண்டையில் கத்திய சிம்புவா இது என்று ஆச்சரியம் எட்டிப் பார்க்கிறது. பணத்தை முதியவரிடம் இருந்தது பறிக்கும் காட்சியில் நடக்கும் மனப் போராட்டத்திலும் பிறகு திருந்தி கண்ணீர் வடிக்கும் இடத்திலும் நடிப்பு என்று தெரியாத அளவுக்கு அவ்வளவு இயல்பு. சோகமான முக பாவங்களை காட்ட முடியாமல் சுவரில் தலை வைத்து, அல்லது கையால் முகத்தை மூடிக்கொண்டு நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சிம்புவின் அழுகை நிஜம்.எஸ். டி. ஆர். என்று டைட்டில் இல் போடுவதைத் தான் சகிக்க முடியவில்லை. மூன்று எழுத்தில் பெயர் வைத்தால் மட்டும் முதல்வர் ஆகிவிட முடியுமா?

சர்தார்ஜி யின் வாகனத்தை முந்துவதற்காக வேகமாக காரை செலுத்தி அவரின் வாகனத்தை விபத்துக்குள்ளாக்குவதிலும் பிறகு அதே சர்தார்ஜி உதவும் போது திருந்தி புன்னகைப்பதிலும் சரி பரத் மிகைப்படாத நடிப்பு. ஏழை அம்மாவாக சரண்யா. தேசிய விருது பெற்ற நடிகையின் நடிப்பைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?( 'நாயகன்' இல் கமல்ஹாசன் இடம் நன்றி சொல்லும் இள வயது சரண்யா வை தெரியுமா?)

பிரகாஷ் ராஜ் வழக்கம் போலவே மிகச் சிறந்த நடிப்பு. முஸ்லிம் என்றதால் இழைக்கப்படும் அநியாயங்களை கண்டு குமுறும் போதும் பிறகு கொந்தளிக்கும் போதும் உணர்வுகளைப் பேசும் கண்கள் அவருக்கு. ' அபியும் நானும்' அப்பாவாக இருந்தாலும், ' செல்லம், லவ் யு டா...' என்று எதிர்ப்பட்டவர்களை போட்டு தள்ளும் வில்லன் ஆக இருந்தாலும், இரண்டையுமே உண்மை போல செய்யும் வித்தையை அவரிடம் இருந்து தான் கற்க வேண்டும். ( ஹனி மூன் முடிஞ்சுதா? ) இன்னொரு தேசிய விருது நடிகர். இருந்தாலும் 'கல்கி' , ' ஆசை' போன்ற கதாபாத்திரங்களில் ஏன் நடிக்க வைக்கின்றார்கள் இல்லை என்று தான் தெரியவில்லை.

அழகுச் சிலையாக அனுஷ்கா. சிக்கலான பாத்திரமாக இருந்தாலும் கொஞ்சமும் அருவருப்பு ஏற்படாத நடிப்பு. சொந்தமாக 'கம்பனி' தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கண்கள் பளிச்சிட பேசும் போதும், ரயில் நிலையத்தில் ஒற்றை காலை மடக்கி இருந்து தாவணியை இழுத்து விட்டுக் கொண்டு பேசும் போதும் முக பாவங்கள் அவருக்கு நன்றாகவே வருகிறது. நடிக்க வந்ததில் இருந்து குழந்தை தனமாக 'பப்லி' ஆக பேசி கொண்டு, ஹீரோ வை சுற்றி வந்து லவ் பண்ணி கொண்டு என்று 10 வருடங்களுக்கும் மேலாக அதே மாதிரி நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் அனுஷ்கா ஒரு இனிய ஆச்சர்யம். முன்பு அருந்ததி இப்போது வானம். நடனத்தையும் கவனித்துக் கொண்டால் சிம்ரன் விட்ட இடத்தை பிடிக்கலாம்.

யுவனின் இசையில் ' தெய்வம் வாழ்வது எங்கே? ' பாடல் டைட்டில் ஓடும் நேரத்தில் இருந்தே மனதில் இதமான அதிர்வை ஏற்படுத்தி விடும். ( அந்த டைட்டில் மேக கூட்டங்கள் கிராபிக்ஸ் அழகு!)' நோ money' , " where இஸ் தி பார்ட்டி' ஸ்டைல் ஆட வைக்கும் பாடல். ' எவன்டி உன்னை பெத்தான்' பாடல் வரிகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் 'கோ' வில் சோனா கதைக்கும் போது காதை மூடிக் கொண்டா இருந்தார்கள்?

இந்த படத்தில் நடிப்புக்கு யாருக்கு 100 புள்ளிகள் கொடுக்கலாம் என்றால், சரண்யாவின் மாமனாராக வரும் அந்த வயதானவரைக் கவனித்தீர்களா? எங்கு, எப்படிப் பிடித்தார்களோ? அச்சு அசல் உண்மையான, கண்ணீரை வரவழைக்கும் தோற்றம். அவருக்கு கொடுக்கலாம்.

எல்லா மனிதர்களுக்குள்ளும் நிச்சயம் சுய நலம் இருக்கிறது. நமக்கும் கூட. நாம் தேவர்களாகும் கணங்கள் சில பொழுதுகளில் வாய்க்கின்றன. மொழி தெரியாத இடத்தில் நின்று கொண்டு வழி கேட்பவருக்கு சொல்லும் போது; முன்னால் சென்ற வாகனத்திலிருந்து விழுந்த தொப்பியை ஒரு கணம் நின்று எடுத்து கொடுக்கும் போது; பேருந்தில் காலை மிதித்து விட்டு மன்னிப்பு கேட்பவருக்கு பதிலாக பரவாயில்லை என்று புன்னகைக்கும் போது....உங்களுக்கு தண்ணீர் இல்லை என்று தெரிந்தும் அதை பக்கத்து இருக்கை முதியவருக்கு கொடுக்கும் போது.. ' சோறு ஒன்று சாப்பிட வாங்குங்கோ' என்று ஊதுபத்தியையோ பூச்சி மருந்து உருண்டைகளையோ நீட்டும் குழந்தையிடம் இருந்து உங்களுக்கு அது தேவை இல்லை என்ற போதும் அதை வாங்கும் போது....சில அபூர்வ கணங்களில் சாதாரண மனிதர்கள் என்ற நிலையில் இருந்து விடுபட்டு தெய்வங்கள்ளக எம்மை உணர்கிறோம். அந்த தருணங்கள் அரிதாகவே வாய்க்கின்றன. அந்த சில மனிதர்களின் சில நேரங்களை பற்றிய படம் தான் ' வானம்'!

( வலைப்பூவின் தலைப்புக்கு நன்றி, திரு. ஜெயகாந்தன் அவர்களுக்கு!)0 Responses

Related Posts Plugin for WordPress, Blogger...