டேர்ட்டி பிக்சர்- தமிழில் 'கில்மா படம்'?

டேர்ட்டி பிக்சர் படத்தை தமிழில் எடுக்கப் போகிறார்கள் என்று கேட்டதும் ஒரு கணம் பகீர் என்றது. காரணம், வித்யா பாலன் செய்த அந்த அருமையான கரக்டரை இங்குள்ள கொழுக் மொளுக் நடிகைகளை வைத்து கடித்துக் குதறி விடுவார்களே என்ற மரண பயம் தான். ஹன்சிகா, தாப்சி மற்றும் நமீதா, நயன்தாரா, அனுஷ்கா  போன்ற நடிகைகளை வித்யாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் ஒரு உருவமில்லா உருண்டை உருள்வதைத் தவிர்க்க முடியவில்லை. 

வித்யா பாலன்: நெருங்க முடியாத தூரம் 
 
தமிழில் நடிப்பது தெரியாமல் இயல்பாக நடிக்கும் நடிகைகளின் காலம் சரிதாவுடன் முடிந்து விட்டதோ என்று தோன்றுகிறது. கீழ்வானம் சிவக்கும் படத்தில் சரிதாவைப் பார்த்தபோது அது ஒரு நடிப்பு என்பதே மறந்து விட்டிருந்தது. ஒரு நடிகை நன்றாக நடிக்கிறார் என்பது வேறு. வித்யாவை  இப்போது பார்க்கும் போது எல்லாம் சில்க் வேறு அவர் வேறு என்று பிரித்துணர முடிவதில்லை. சரிதாவுக்குப் பிறகு வந்த நடிகைகள் நன்றாக நடித்தார்கள். ஆனால் அந்த உயிரோட்டம் காணக் கிடைக்கவில்லை. (உ.ம்: ராதிகா) அதற்கும் பிறகு வந்த காலங்களில் அந்த நல்ல நடிப்பைக் கூடக் காண முடியவில்லை. ஓரளவுக்கு நன்றாக நடித்த நடிகைகளின்  வரிசையும்  சிம்ரனோடு நின்று விட்டது.

வித்யா இன் டேர்ட்டி பிக்சர் 


ஒரு நடிகை கொஞ்சம் நன்றாக நடித்தாலே அவர் நன்றாக நடிக்கிறார், நடிப்பில் பிச்சு உதறிவிட்டார் என்று தூக்கி வைத்துக் கொண்டாடியதில், அந்த நடிகைகளும் பிறகு பிறகு ஓவர் ஆக்ட் செய்யத் தொடங்கி விடுகிறார்கள். ( உ.ம்: சங்கீதா) சிம்ரன், ஜோதிகா எல்லாம் ஆலையில்லா கோடம்பாக்கத்துக்கு கிடைத்த இலுப்பைப் பூ சக்கரை. சிம்ரனைக் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்காகவும் ஜோதிகாவை சந்திரமுகி படத்துக்காகவும் தூக்கி வைத்துக் கொண்டாடியதைப் பார்க்கும் போது அரங்கேற்றம் படத்துக்காக பிரமிளாவுக்கு பத்மஸ்ரீயே கொடுத்திருக்கலாம் போலத் தோன்றுகிறது. என்ன தான் வெட்டி வீழ்த்தினாலும் கண்கள் அது செயற்கைத்தனம் என்பதை காட்டிக் கொடுத்துவிடும். கண்கள் பொய் சொல்லாத நடிகைகள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் கதாநாயகிகளை விட, ஊர்வசி, வடிவுக்கரசி, காந்திமதி  போன்ற குணச்சித்திர நடிகைகளே அதிகம்.

அரங்கேற்றம் படத்தில் பிரமிளா 


திறமையான நடிகைகள் குறைந்து போனதற்கு, அல்லது இல்லாமலேயே போனதற்கு தமிழ் சினிமாவின் போக்கும் காரணம் என்று சொல்லலாம். முழுக்க முழுக்க ஹீரோவை வணங்கும் படங்களே திரைகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் போது, சரிதா, ஷோபா  போல நடிக்கும் நடிகைகளுக்கு இங்கே என்ன வேலை. வெண்ணெய்க்கட்டி, குல்பி, நாட்டுக்கட்டை போன்ற உவமானங்களை  ஈடுசெய்யக் கூடியவராகவும் ஹீரோ வந்து ரிலாக்ஸ் ஆகும் இடமாகவும் இருந்தாலே போதுமே.

சிம்ரன்: கடைசித் திறமைசாலி 


எம்.ஜி .ஆர்-சிவாஜி முதல் சிம்பு-தனுஷ் வரை ஒரு ஜோடி இருப்பது போல சாவித்திரி-சரோஜா தேவியில் இருந்து சிம்ரன்- ஜோதிகா வரை நடிகைகளுக்கான குறைந்த பட்ச மதிப்பு இருந்தது. இப்போது அதுவும் இல்லை. அதுவும் அமலா போல் டூயட் காட்சிகளில் முகத்தை வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தால் தலையை எங்கேயாவது கொண்டு போய் முட்டிக் கொள்ளலாம் போல இருக்கிறது. ஆனால் அவரை விட சிறந்த அழகி இப்போது யாருமில்லை.அது உண்மை. நடிகைகள் அழக் கஷ்டப் படுவார்கள். அமலா அதற்குத் தலைகீழ். இலகுவாக அழுபவர் சாதாரண  காட்சிகளில் ஏன் தடுமாறுகிறார் என்று தெரியவில்லை. ஹன்சிகாவை எல்லோரும் பேசினாலும் கீழுதட்டைக் கடித்துக் கொண்டு உதயநிதி ஸ்டாலினைப் பார்க்கும் பார்வையிலிருந்து அடுத்த படத்தில் இன்னும் தேறிவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அமலா : அழகிய பொம்மை 


தமன்னா ஆனந்தத் தாண்டவம் ஆடியதில் இருந்து அவர் ஒரு சின்ன நம்பிக்கை. டிராமா தியேட்டர் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால் இருக்கலாம். த்ரிஷா விடிவியில் பண்ணியது அருமையான அன்டர்பிளே  நடிப்பு. இருந்தாலும் தமன்னாவின் தோற்றமும் த்ரிஷாவின் இமேஜ் உம் டேர்ட்டி பிக்சர் பண்ண ஒத்துக் கொள்ளாது என்று நம்பலாம்.

இந்த லட்சணத்தில் யாரை வைத்து எடுப்பார்கள் என்று தோன்றுகிறது. அனுஷ்காவை கேட்டதாக தகவல். அனுஷ்கா தோற்றத்தில் வித்யா போல ஹோம்லி ப்ளஸ் செக்ஸி என்று இருந்தாலும் அனுஷ்கா எக்ஸ்ப்ரஷன்களில் வித்யாவுக்கு கிட்டே நெருங்ககூட  முடியாது என்று சொல்லி விடலாம். அருந்ததி படத்தில் அதிகப்படியான கண் மையும்  குங்குமப்பொட்டும் அவரது குறைவான நடிப்பை ஈடுகட்டியது. பிறகு அனுஷ்காவுக்கு டான்ஸ் சுட்டுப் போட்டாலும் வராது. நோ மணி நோ ஹனி பாட்டில் அவர் ஆடியதைப் பார்த்த போது தூக்குப் போட்டுக் கொண்டு சாகலாம் போல தோன்றியது. பிந்து மாதவிக்கு அதே கண்கள். ஆனால் அதே நடிப்பு வருமா என்று தெரியவில்லை. கவர்ச்சி நடிகை என்ற ஒரே காரணத்துக்காக நமீதாவை நடிக்க வைத்தால் சில்க்குக்கு அதை விடப் பெரிய துரோகத்தைப் பண்ண முடியாது.

அருந்ததி படத்தில் அனுஷ்கா 


வித்யா படம் முழுவதும் அவ்வளவு இயற்கையாக நடித்திருந்தார். ஆரம்ப காலத்தில் சின்னப் பெண்ணாக கடையில் இருந்து சாப்பிடுவதில்  இருந்து நஸ்ருதீன் ஷா மனைவியுடன் உறவு கொள்ளும் காட்சியை சாவித் துவாரம் வழியே பார்த்து கண்ணீர் விடுவது, துஷார்  கபூருடன் போகும் போது ' ஆனா என்னை மாதிரி பொண்ணுங்கள படுக்கைக்கு மட்டும் கூட்டி போக முடியுதில்ல?' என்று கோபத்தில் கத்துவது, கடைசியில் அந்த மாதிரிப் படம் எடுக்கும் இடத்தில் போய் மாட்டிகொண்டு போலிஸ் ரெய்ட்  வரும் போது போதையில் தள்ளாடியபடி  மாடிப்படிகளில் விழுந்து தப்பிப்பது, சற்றே முதிர்ந்த தோற்றத்தில் இம்ரான் ஹஸ்மியுடன் இருந்து தண்ணியடிப்பது என்று மீண்டும் மீண்டும் வித்யாவை  நினைவுகொள்ள எக்கச்சக்க சீன்கள். உச்சத்தில் இருந்தது முதல் தரையில் வீழ்ந்தது, பெட்ரூம் சீன் இல் இருந்து இறுதியில் தொங்கிப் போன வயிறு, அதைத்த கன்னம், கண்ணுக்கு கீழே கருவளையங்கள், தோல்வி, புறக்கணிப்பால் நடுங்கும் கரங்களுடன் தம்மடிப்பது என்று வித்யா வாழ்ந்தது சில்க்கின் வாழ்க்கையை. தேசிய விருது கிடைத்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை. இங்கே படம் எடுக்கும் போது பெட்ரூம் சீன் இல் நடிக்கிறார் என்பதும் ஒரு பெண் சிகரட் புகைப்பதா என்றும் நடிகைகளை கேவலப்படுத்துகிறதா என்பதுமே மீடியாக்களில் பிரதானப்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது.

பிந்து மாதவி : அதே கண்கள் அதே உதடுகள் 



உள்ள நடிகைகளை சல்லடை போட்டு சலித்தால் வித்யா கரக்டருக்கு பெட்டெர் சொய்சாக தெரிபவர் ப்ரியா மணி. சில்க் போலவே கருப்பு நிறம் என்பதாலும் அந்த நீளமான கால்களும் கட்டான உடல்வாகும் என்று சில்க்கின் தோட்டத்துக்கு ஒத்துப் போகக் கூடிய நடிகை என்றால் அது ப்ரியா மட்டும் தான். இவரும் தேசிய விருது வாங்கிய நடிகை என்பதால் அந்த ஒற்றுமை வேறு. நடிப்பும் பிரச்சனை இருக்காது. வித்யா போலவே ஹோம்லி முகம் ஆனால் செக்சியான உடல் ப்ளஸ் நடிப்பு பொருத்தமாக இருக்கும்.

ப்ரியா மணி: இருப்பதில் சிறந்தது 


இன்னொரு பிரச்சனை, டேர்ட்டி பிச்சர் ஹீரோயினை மையப்படுத்தி எடுத்த படம் என்றாலும் மற்ற கரக்டர்களும் சம பலம் பொருந்தியவை. வித்யா கட்டடம் என்றால் மற்றவர்கள் தூண்கள். நஸ்ருதீன் ஷா பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் கரக்டருக்கு சூர்யகாந்தாக இங்கே ரஜினிகாந்தையே நடிக்கவைக்கலாம் என்றால் அடிக்க வருவார்கள். சிவாஜியை இந்த இடத்தில் மிஸ் பண்ணுகிறோமோ என்று தோன்றுகிறது. ' ஸ்பைஸ் இட் அப்' என்று கரகரத்த குரலில் சொல்வதற்கு தாடையில் சுருக்கங்களுடன் இங்கே யாரும் நினைவுக்கு வரவில்லை. ரவிச்சந்திரன் இருந்திருந்தால் சரியாகப் பொருந்தியிருப்பார். அந்த வயது ஹீரோக்கள் யாரும் உயிருடன், துடிப்புடன் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். கொஞ்சம் ஹீரோ இமேஜ் உம் வேண்டும். பேசாமல் கமல்ஹாசன் மேக் அப் போட்டுப் பண்ணினால் என்ன? அது சாத்தியம் இல்லை என்பதால் அரவிந்தசாமி பண்ணலாம் போல தோன்றுகிறது. துஷார் கபூர் அசப்பில் ப்ருத்வி ராஜை ஞாபகப்படுத்துகிறார். அந்த கண்கள்.  சொப்ட்டான ஒரு ஆண் கரக்டருக்கு ப்ருத்வி நல்ல பொருத்தம். இல்லாவிட்டால் பிரசன்னா.ராஜேஷ் ஷர்மாவுக்கு பதிலாக செல்வ கணேஷாக ஒரு டெல்லி கணேஷ், கோட்டா சீனிவாசராவ், பெப்சி விஜயன், அல்லது ஏதோ  ஒரு தயாரிப்பாளரே  பண்ணலாம். ஏன் வினு சக்கரவர்த்தியைக் கூடக் கேட்டுப் பார்க்கலாம்.இம்ரான் ஹஸ்மிக்காக விக்ரம் நடிக்க வேண்டும் என்பது பேராசை. கணேஷ் வெங்கட்ராமன் சரியாக இருக்கும் என்பது நம்பிக்கை.அல்லது சேரன்.

அசத்திய  நஸ்ருதீன் ஷா 

இப்படி எல்லாம் செய்து கஷ்டப்பட்டு  ஒப்பேற்றி, பிறகு  மகளிர் இயக்கங்கள் கொடி பிடிக்க, வினு மீண்டும் கோர்ட்டில் தடை உத்தரவு கேட்டு கேஸ் போட, ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் பண்ண, சென்சாரில் கட் பண்ண , தமிழில் கெட்ட படம் அல்லது கில்மாப் படம் என்று டைட்டில் வைக்க என்று கஷ்டப்படுவதைக் காட்டிலும், டேர்ட்டி பிக்சரை  ரீமேக் செய்யாமல் இருப்பதே சிறந்தது.




1 Response
  1. சிறப்பாக அலசியிருக்கிறீர்கள்.


Related Posts Plugin for WordPress, Blogger...